கொல்லிமலையின் சிறப்புகள்:
மனிதனின் மாசு படாத, கோடிகளை கொட்டிக் கொடுத்தாலும் கிடைக்காத சுத்தமான காற்று, கற்கண்டு போன்ற தண்ணீர், கண்கொள்ளா பசுமை, மூலிகை சுவாசம், தாய்ப்போல் போன்ற கலப்படமில்லாத, கபடமில்லாத மக்கள் இதுதான் கொல்லிமலை.
நாமக்கல்லில் இருந்து 55 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொல்லிமலைக்கு நாமக்கல், சேலம், ராசிபுரம், சேந்தமங்கலம் போன்ற இடங்களில் இருந்து பஸ்கள் விடப்படுகின்றன. 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையில் வளைந்து, நெளிந்து, மேகம் வந்து மலை முகடுகளை தொட்டு, தொட்டு செல்லும் இயற்கை காட்சியை பார்த்தபடி சென்றால் சுமார் 2 மணி நேர பயணத்திற்குள் கொல்லிமலையை அடையலாம்.
நாமக்கல் மாவட்டதில் கிழக்கு தொடர்ச்சி மலையில் 1300 மீட்டர் உயரத்தில் 280 சதுர கி.மீட்டர் பரப்பளவில், விரிந்து, பரந்து, அடர்ந்த மூலிகை காடுகளுடன் கொல்லிமலை அமைந்துள்ளது. கடையெழுவள்ளல்களில் ஒருவரும், ஒரே அம்பில் சிங்கம், கரடி, மான், காட்டுப்பன்றி, உடும்பு ஆகியவற்றை வீழ்த்திய வீரருமான வல்வில் ஒரி கி.பி.200ல் ஆண்ட மண் இது. சிலப்பதிகாரம், மணிமேகலை, புறநானூற்றில் இடம் பெற்ற தலம். மேலும் இளங்கீரனார், அவ்வையார், பெருஞ்சித்திரனார் போன்ற சங்ககால புலவர்களாலும் பாடப் பெற்ற இடமாகும்.
இங்கு ஆகாயகங்கை அருவி உள்ளது. பெயருக்கேற்றாற்போல 180 அடி உயரத்தில் இருந்து வெண்பனிபோல அருவி ஆகாயத்தில் இருந்து விழுவது அவ்வளவு அற்புதமாக உள்ளது. இந்த அருவிக்கு செல்லும் வழியில் கோரக் சித்தர் உள்ளிட்ட சில சித்தர்கள் வாழ்ந்த குகைகள் உள்ளன. பல ஆண்டுகாலமாக பராமரிப்பு இல்லாமல் இருப்பதால் குகைக்குள் போகமுடியாத அளவிற்கு வவ்வால்களின் நெடி உள்ளது. பல படி இறங்கி ஆகாயகங்கை அருவிக்கு போக முடியாதவர்கள் அறப்பளீஸ்வரர் கோயில் அருகே ஒடும் அருவியில் குளித்து மகிழலாம். 1300 ஆண்டு கால பழமைவாய்ந்த அறப்பளீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு எட்டுக்கை அம்மனை தரிசிக்கலாம் (முன்னாளில் கொல்லிப்பாவையாக அழைக்கப்பட்டாள்).
மேலும் வாசலூர்பட்டி படகு துறையில் படகுவிடலாம். தாவரவியல் பூங்காவில் உள்ள "கிங்காங்' மனித குரங்கையும், படகு வீட்டையும் பார்த்து ரசிக்கலாம். இன்னும் சீக்குப்பாறை, வியூபாயிண்ட் போன்ற இடங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடையலாம். அரசு மூலிகை பண்ணையில் உள்ள கருநெல்லி, ஜோதிப்புல் போன்ற மூலிகையையும் பார்க்கலாம்.
இங்குள்ள மலைப்பாறைகளில் விளையும் ஆட்டுக்கால் போன்ற வடிவத்தில் இருக்கும் முடவாட்டுக்கால் சூப் சாப்பிட்டு களைப்பை போக்கிக்கொள்ளலாம். இங்கு விளையும் காபி, தேயிலை, மிளகு, பலா, அன்னாசி, வாழை, பப்பாளி போன்றவைகளை உண்டும் மகிழலாம், தேவைக்கு ஏற்ப குறைந்த விலைக்கு வாங்கிவந்து நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுத்தும் சந்தோஷப்படலாம்.
கொல்லிமலை என்பது ஒரு தொடர்ச்சியான மலை என்பதால் ஒரு குறிப்பிட்ட இடம் என்று இல்லாமல் பார்க்கவேண்டிய இடங்கள் பரந்து, விரிந்து உள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் வருகை என்பது மிக, மிகக் குறைவாகவே இருப்பதால், இங்கு வாகன வசதி கிடையாது. பஸ்சில் வந்தால் நிறைய இடங்களை பார்க்க முடியாது. ஆகவே வாடகை அல்லது சொந்த வாகனங்களில் வருவது மேலானதாகும்.
இங்கு பி.எஸ்.என்.எல்., தவிர வேறு எந்த தொடர்பும் தற்போதைக்கு கிடைக்காது என்பதையும் நினைவில் வைத்துக்கொண்டுவரவும். நல்ல சாப்பாடு கிடைக்கிறது, தங்குவதற்கு மிக சொற்பமான விடுதிகளே இருப்பதால், சொல்லிவைத்து சென்றால் கொல்லிமலையில் சுகமாய் தங்கலாம்.
படங்களும் பதிவும் அருமை கண்ணையும் கருத்தையும் கவர்ந்தது
ReplyDeleteஇதன் மூலம் தினமலர். நன்றி
DeleteOnce I been there to Kollimalai. It is really a good place to enjoy. I recommend everyone should go and smell the breeze out there.
ReplyDelete