வாழ்க வளமுடன்!

Saturday, February 04, 2012

கூடங்குளம் மின்திட்டம்: மாற்று சிந்தனை + எரிபொருள்


கூடங்குளம் அணுஉலையை மூடுவதால் சுமார் 13500 கோடி ரூபாய்கள் மக்களின் வரிப்பணம் வீணாகிவிடும் என்று அரசு தரப்பும், அரசுத் தரப்பின் ஆதரவாளர்களும் கூறி வருகின்றனர். கூடங்குளம் போன்றே மக்கள் எதிர்ப்பு காரணமாக அமெரிக்காவிலும் சில அணுமின் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. அதற்குப் பதிலாக அதே மின்உலையில் வேறு எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் புத்திசாலித்தனமான முடிவை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

மின்சாரத்தை தயாரிப்பதில் அணுசக்தி நேரடியாக பயன்படுத்தப் படுவதில்லை. மின் உற்பத்தியை எளிதில் விளக்குவதற்கு நாம் சைக்கிளில் பயன்படுத்தும் டைனமோவின் எளிமையான இயக்கத்தை புரிந்து கொண்டாலே போதும். மின்சாரத்தை கடத்தக்கூடிய உலோகச் சுருளின் இடையே ஒரு காந்தத்தை சுற்றும்போது மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே காந்தம் சுழல்வதற்கு சைக்கிளின் டயர் பயன்படுகிறது.


இதே சைக்கிள் டைனமோவை மிகப்பெரிய அளவில் ஜெனரேட்டர் என்ற பெயரில் செய்து அதன் மையத்தில் உள்ள காந்தத்தை சுழற்றுவதற்காகவே பலவிதமான ஆற்றல் மூலங்கள் பயன்படுத்தப்படுகின்றன. உதாரணமாக காற்றாலைகளில் உள்ள மிகப்பெரிய இறக்கைகள் சுழல்வதால் ஜெனரேட்டரின் மையத்தண்டு எனப்படும் டர்பைன் சுழன்று மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

நீர் மின் நிலையங்களில் மேலிருந்து கீழே  விழும் நீரின் விசையால் ஜெனரேட்டரின் டர்பைன் சுழற்றப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனல்மின் நிலையங்கள் மிகப்பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இந்த மின்நிலையங்களில் நிலக்கரியை பயன்படுத்தி நீர் கொதிக்கவைக்கப்படுகிறது. இதன்மூலம் உற்பத்தி செய்யப்படும் நீராவியைக் கொண்டு ஜெனரேட்டரின் டர்பைன் சுழல்கிறது. இதன் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

மேற்கண்ட உதாரணங்களில் இருந்து ஜெனரேட்டரின் டர்பைனை சுழல்வதற்கு ஆற்றல் தேவை என்பதை உணர முடியும். இதற்கான ஆற்றலாக பரவலாக நீரை கொதிக்க வைப்பதன் மூலம் உருவாகும் நீராவியே பயன்படுத்தப்படுகிறது. நீரை கொதிக்க வைப்பதற்கு ஒரு எரிபொருள் தேவை. அது நிலக்கரியாகவோ, இயற்கை எரிவாயுவாகவோ இருக்கலாம். அல்லது உயிர்ம எரிபொருள் எனப்படும் பயோமாஸ் போன்ற மற்ற எரிபொருளாகவும் இருக்கலாம்.

கூடங்குளத்தில் அணுஉலையை மூடவேண்டும் என்று கூறும் யாரும், அதே கூடங்குளத்தில் மாற்று எரிபொருளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதை எதிர்க்க மாட்டார்கள்.

அமெரிக்காவின் முக்கிய நகரான நியூயார்க் அருகே உள்ள ஷோர்ஹாம் என்ற இடத்தில் லாங் ஐலேண்ட் லைட்டிங் கம்பெனி (லில்கோ) சார்பில் 1973 முதல் 1984 ஆண்டுக்குள் அணு உலை ஒன்று கட்டப்பட்டது. 1979ம் ஆண்டு மூன்று மைல் அணுஉலையில் ஏற்பட்ட விபத்து மற்றும் 1986ம் ஆண்டு ஏற்பட்ட செர்னோபில் விபத்து காரணமாக எச்சரிக்கை அடைந்த அமெரிக்க மக்கள் ஷோர்ஹாமில் அமையவிருந்த அணுஉலைக்கு எதிராக தொடர்ச்சியாக போராடினர்.

இதனிடையே இந்த அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் அப்பகுதி மக்களை வெளியேற்றுவதற்கான திட்டம் திருப்தி அளிப்பதாக இல்லை என்று கூறி அப்பகுதியிலுள்ள சஃபோல்க் உள்ளாட்சி அமைப்பு 1984ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. அதே ஆண்டில் லில்கோ நிறுவனம் அணுஉலை கட்டுமானத்தை நிறைவு செய்தது. எனினும் மக்களின் கடும் எதிர்ப்பால் இந்த அணுஉலையில் பணிகள் தொடங்கப்படவில்லை.

அணுஉலை கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்த நிலையிலும், மக்களின் போராட்டம் ஓயவில்லை. எனவே இந்த அணுஉலையை இயக்கப்போவதில்லை என்று லில்கோ நிர்வாகம் 1989, மே 19 அன்று அறிவித்தது.

ஷோர்ஹாமில் நிறுவப்பட்டிருந்த  அணுஉலை உபகரணங்கள் வேறு அணுஉலைகளுக்கு அனுப்பப்பட்டன. 2002, ஆகஸ்ட் மாதத்தில் அதே இடத்தில் இயற்கை வாயுவால் இயங்கும் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் காற்றாலைகளும் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்படுகின்றன.

அடுத்து ஓஹியோ மாகாணம் மாஸ்கோ கிராமத்தில் அமைந்த வில்லியம் ஹெச். ஜிம்மர் மின் திட்டத்தின் கதையை பார்க்கலாம். சின்சினாட்டி எரிவாயு மற்றும் மின்நிறுவனத் தலைவரின் பெயரில் அமைந்த இந்த மின்திட்டம் 1969இல் திட்டமிடப்பட்டது. இந்த மின்திட்டத்தின் பணிகள் ஏறத்தாழ 97 சதவீதம் நிறைவடைந்த நிலையில்  இதன் கட்டுமானத்திலும், இயந்திரங்கள் நிறுவப்பட்டதிலும் கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. எனவே 1982ம் ஆண்டில் இந்த மின்திட்டப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.

வில்லியம் ஹெச். ஜிம்மர் அணுஉலைப் பணிகள் நிறுத்தப்பட்டாலும் அதே உலையில் வேறு ஆற்றல் மூலங்களை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக அந்த மின் உற்பத்தி நிலையத்தை நிலக்கரி மூலமாக இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் 1987ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1991ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 

மேற்கூறப்பட்ட இரு அணுஉலைகளும் ஆரம்பிக்கப்பட்ட 1967ம் ஆண்டிலேயே மிச்சிகன் மாகாணத்தில் உள்ள மிட்லாண்ட் பகுதியிலும் ஒரு அணுஉலை திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் பணிகள் சுமார் 85 சதவீதம் நிறைவடைந்த நிலையில், 1984ம் ஆண்டில் இந்த அணுமின் நிலையத்தின் நிலத்தேர்வு, கட்டுமானம், இயந்திரங்கள் ஆகியவற்றில் குறைகள் கண்டறியப்பட்டன.

சுமார் 17 ஆண்டுகால பணியும்,   400 கோடி அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 20 ஆயிரம் கோடி ரூபாய்களும்  செலவழிக்கப்பட்ட நிலையில் 1984ம் ஆண்டில் இந்த அணுஉலைத் திட்டம் கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இதே உலையை இயற்கை எரிவாயு மூலமாக இயக்க திட்டமிடப்பட்டு 1986ம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன. 1991 ஆம் ஆண்டு இந்த அனல் மின் நிலையம் இயங்கத் தொடங்கி சுமார் 1560 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்கிறது.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் சுமார் 5900 துணை மாவட்டங்கள் இருக்கின்றன. இவற்றில் சுமார் 80 சதவீதம் துணை மாவட்டங்களுக்கு 15 முதல் 20 மெகா வாட் மின்சாரம் மட்டுமே தேவை. மிகக்குறைந்த அளவிலான இந்த மின்சாரத்தை அந்தந்த பகுதிகளிலேயே நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்களிலிருந்து தயாரிக்க முடியும்.

இந்தியாவில் முன்னர் பயன்படுத்தப்பட்ட காற்றாலைகள் சுமார் 200 கிலோ வாட் மின் உற்பத்தி திறனைக் கொண்டிருந்தன. தற்போது சுமார் 2 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட காற்றாலைகள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. எனவே தற்போது பயன்பாட்டில் உள்ள உற்பத்தித் திறன் குறைந்த காற்றாலைகளின் திறனை அதிகரிக்க (Repowering) வேண்டும். இவ்வாறு உற்பத்தித் திறன் மேம்பட்ட காற்றாலைகளை துணை மாவட்டம் ஒன்றுக்கு சுமார் 10 வீதம் பொருத்தினாலே அப்பகுதியின் மின்சார தேவையை நிறைவு செய்ய முடியும்.

டெல்லி போன்ற பெருநகரங்களுக்கு வற்றாத ஆற்றல் மூலம் சூரியன்தான்! டெல்லி மாநகரத்தில் உள்ள கட்டிடங்களில் சூரிய ஒளி மூலம் மின்சாரத்தை தயாரிக்கும் இயந்திரங்களை முழுமையாக நிறுவினால், அம்மாநகரத்தின் தேவையில் சுமார் 48 சதவீதம் மின்சாரத்தை தயாரிக்க முடியும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆண்டுக்கு சுமார் 300 நாட்களுக்கும் மேல் மேகம் மறைக்காத சூரிய ஒளி கிடைக்கும் நாட்களே! தார் பாலைவனத்தில் சுமார் 1 லட்சம் சதுர கிலோ மீட்டரை முறையாக பயன்படுத்தினால் மட்டும் சுமார் 35 லட்சம் மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.

இந்தியாவில் சுமார் 7200 கிலோ மீட்டர் கடற்கரைப் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் காற்று, கடல் அலை, கடல் நீர் மின்சாரம் ஆகியவற்றின் மூலமாகவும் கணிசமான மின்சாரத்தை தயாரிக்க முடியும்.

மேலே கண்ட உதாரணங்களின் உதவியோடு கூடங்குளம் அணுஉலை குறித்தும் மறுபரிசீலனை செய்யலாம். கூடங்குளம் மின்திட்டத்தையும் நிலக்கரி மூலமோ, இயற்கை எரிவாயு மூலமோ இயக்க முடியும்.

மேலும் கூடங்குளத்தின் அருகே உள்ள கயத்தாறு, ஆரல்வாய்மொழி, காவல்கிணறு, உப்பந்தல் உள்ளிட்ட இடங்களில் காற்றாலைகள் இயங்கி வருகின்றன. இப்பகுதியில் சுமார் 4,100  மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் சுமார் 3,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே மத்திய மின் தொகுப்பில் இணைக்கப் படுகிறது.  மீதியுள்ள சுமார் 1,100 மெகாவாட் மின்சாரம் சரியான திட்டமிடாமையால் வீணாகிறது.

இந்த காற்றாலைகள் அனைத்தும் தரையிலிருந்து சுமார் 150 மீட்டர் உயரத்தில் சுழல்கின்றன. இதையும் சற்று மாற்றி அமைத்து இரண்டு வேறு உயரங்களில் இரண்டு அடுக்கு காற்றாலைகள் அமைக்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட இடைவெளிகளிலேயே இந்த காற்றாலைகள் அமைக்கப்படுகின்றன. இதன் கீழே காலியாக இருக்கும் வெற்றிடங்களில் சூரிய சக்தி மூலம் மின்சாரம் தயாரிக்கும் பானல்களை நிறுவலாம். அல்லது இதன் இடையே உள்ள இடங்களில் மாற்று எரிபொருளாக பயன்படத்தக்க தாவரங்களை சாகுபடி செய்யமுடியும்.

மாட்டுச்சாணத்திலிருந்து கோபார் வாயு மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வது நாம் அறிந்ததுதான். மாட்டுச்சாணத்திலிருந்து மட்டுமல்ல, மனிதக்கழிவிலிருந்தும் மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதன் மூலம் மாநகரங்களில் உருவாகும் மனிதக்கழிவுகளையும் ஆற்றல் மூலமாக மாற்றி அமைக்கலாம்.

மேற்கூறப்பட்ட இந்த மாற்று ஆற்றல் மூலங்களில் பெரும்பான்மை எந்த விதமான சூழல் சீர்கேட்டுக்கும் இடமளிக்காதவை. இந்த மாற்று ஆற்றல் மூலங்கள் அனைத்தும் அணுஉலைகளைப் போல பெரும் விபத்து ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அறவே அற்றவை. மேலும் சிறப்பு தொழில்நுட்ப கல்வி அறிவு இல்லாதவர்களுக்கும் ஏராளமான வேலை வாய்ப்புகளை வழங்க வாய்ப்புள்ளவை.

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதில் சுமார் 40 சதவீத மின்சாரம் வீணாவதாக அரசுப்புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அணுஉலைகள் போன்ற மிகப்பெரும் மின் உற்பத்தி திட்டங்களால்தான் இதுபோன்ற ஆற்றல் இழப்புகள் ஏற்படுகின்றன. மின்சாரம் தேவைப்படும் இடத்திலேயே மாற்று ஆற்றல் மூலங்கள் மூலமாக மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் இத்தகைய ஆற்றல் இழப்புகளை தவிர்க்கலாம். இதன் மூலம் மாநில தேவைகளுக்கு மத்திய தொகுப்பிலிருந்து மின்சாரத்திற்காக கையேந்தி நிற்கும் நிலையையும் மாற்றி அமைக்கலாம்.

ஐக்கிய நாடுகள் அவை சார்பில் நீடித்து நிலைக்கக்கூடிய ஆற்றல் மூலங்கள் மூலமான மின்சாரத்தை மனித குலம் முழுமைக்கும் அளிப்பதற்கான இயக்கம் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதிலும் குறிப்பாக பிறந்துள்ள 2012ம் ஆண்டு, “நீடித்து நிலைக்கும் (மின்)ஆற்றலை அனைவருக்கும் அளிப்பதற்கான சர்வதேச ஆண்டா”க (International year of Sustainable Energy For All)குறிப்பிடப்பட்டுள்ளது.  
பல்வேறு பெயர்களில் சுரண்டப்படும் உலக மக்களை பாதுகாப்பதற்கான திட்டமாகவே இந்த திட்டத்தை ஐ.நா. அவை முன்னிறுத்துகிறது. மின்சாரம் தேவைப்படும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் கிடைக்கும் ஆற்றல் மூலங்களைக் கொண்டு, எளிய தொழில்நுட்பத்தின் மூலமாக அம்மக்களுக்கு தேவையான ஆற்றலை அளிப்பதே இந்த திட்டத்தின் முக்கிய அம்சம்.

ஐ.நா. அவையின் இந்த கொள்கைகளுக்கும் திட்டங்களுக்கும் மாறாக அணுமின் உலை போன்ற மிகப்பெரிய திட்டங்களை வளர்த்தெடுப்பது அதிகாரத்தை குவிப்பதற்கும், அந்த அதிகாரத்தை அறநெறிகளுக்கு புறம்பாக, மக்களுக்கு எதிராக பயன்படுத்த மட்டுமே உதவி செய்யும். இதைத்தான் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் செய்து வருகின்றன. அணுஉலை போன்ற சிக்கலான தொழில்நுட்பங்கள் மூலம் இந்தியா போன்ற ஏழை நாடுகளை தங்கள் பொருளாதார அடிமைகளாக வைத்திருக்க இந்த நாடுகள் விரும்புகின்றன.

இதேபோல இந்தியாவை ஆளும் மத்திய அரசும், மாநிலங்கள் எந்த வகையிலும் தன்னிறைவு அடைவதை விரும்புவதில்லை. மாறாக மாநில அரசுகள் மின்சாரம் உட்பட அனைத்து அம்சங்களுக்கும், மத்திய அரசை எதிர்பார்த்து கையேந்தி இருப்பதையே மத்தியில் ஆட்சிக்கு வரும் அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன.

இந்த அடிப்படையான அரசியல் உண்மைகளை புரிந்து கொண்டால் மட்டுமே, கூடங்குளம் அணுமின் திட்டம் போன்றவை குறித்து தெளிவான முடிவை எட்ட முடியும்.

இந்தியாவில் தற்போது உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தில் இந்தியாவின் குடிமக்களுக்கோ, இந்தியத் தொழில் அதிபர்களுக்கோ எந்த முன்னுரிமையும் இல்லை என்ற உண்மையையும் மறந்துவிட முடியாது. அதே நேரத்தில் இந்தியாவில் முதலீடு செய்துள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு முன்னுரிமையுடன் தடையற்ற மின்சாரம் வழங்குவதை மத்திய அரசு ஒரு கொள்கையாகவே வைத்திருப்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும். இந்நிலையில் கூடங்குளத்தில் அனுமின்உலை இயங்க ஆரம்பித்தால், இந்தியர்களுக்கும் – இந்தியர்களின் நிறுவனங்களுக்கும் தேவையான மின்சாரம் முழுமையாக கிடைக்கும் என்பதற்கும் எந்த உத்தரவாதமும் இல்லை என்பதையும் மறந்துவிட முடியாது.

மனித வாழ்க்கைக்கு மின்சாரம் தேவை என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. ஆனால் மின்சாரத்திற்காக வெளியார் யாரையும் நம்பியிருக்க தேவையில்லாமல், சுயச்சார்புடன், பாதுகாப்பான, மலிவான, வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய, தூய்மையான, நீடித்த ஆற்றல் மூலங்கள் இருக்கும்போது அவற்றிற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

மனித குலத்தை அனைத்து தளைகளிலிருந்தும் விடுவிப்பதை நோக்கமாக்க் கொண்ட ஐ.நா. அவை இந்த ஆண்டை “நீடித்து நிலைக்கும் (மின்)ஆற்றலை அனைவருக்கும் அளிப்பதற்கான சர்வதேச ஆண்டா”க(International year of Sustainable Energy For All) கொண்டாடும் நிலையில் இந்தியா தனது இறையாண்மையை ஆதிக்க நாடுகளிடம் சமர்ப்பிக்கும் விதத்தில் அணுமின் உலைகளை தேர்வு செய்வதை கைவிட வேண்டும். அமெரிக்காவை முன் மாதிரியாகக் கொண்டு கூடங்குளம் மின்திட்டத்தை அணுசக்தி பயன்படுத்தாத பாதுகாப்பான மாற்று எரிபொருள் மின்திட்டமாக செயல்படுத்த முன்வர வேண்டும். 

(நன்றி: தினமணி)


No comments:

Post a Comment