வாழ்க வளமுடன்!

Monday, February 13, 2012

உங்களுக்கு நிதிச் சுதந்திரம் (Financial Freedom) இருக்கிறதா?



நிதி நிர்வாகம், அது தனி மனித நிதி நிர்வாகமோ அல்லது நிறுவனத்தின் நிர்வாகமோ அவை வளர்ச்சி பெற, `கட்டுப்பாடு' மிக அவசியம். தனி மனித கட்டுப்பாடு, நிர்வாக கட்டுப்பாடு ஆகியவை வளர்ச்சி பெற `ஒழுக்கம்' மிக அவசியம். திட்டமிடுதல், திட்டமிட்டபடி செயல்படுதல் ஆகியவை அவசியம்.
கட்டுப்பாடு என்பது அடிமைத்தனம் ஆகாது. மனமுவந்து ஏற்றுக்கொண்டால், இந்த கட்டுப்பாடு ஒரு சுதந்திரம் எனத் தெரிய வரும். எனவே, நிதி சுதந்திரம் பெற (Financial Freedom) இந்த ஒழுக்கமானது அவசியம்.
நிதி சுதந்திரம் என்றால் என்ன? நம்மில் எவ்வளவு பேருக்கு இந்த நிதி சுதந்திரம் உள்ளது? இந்த நிதி சுதந்திரம் அடைய என்ன செய்ய வேண்டும்? இவற்றை சற்று விரிவாக பார்ப்போம்.
நம்மில் எத்தனை பேர், நாளைய பற்றிய கவலைகள் ஏதுமின்றி நிம்மதியாக உறங்க முடிகின்றது? இந்த கவலைகளில் பல பணம் சார்ந்ததாகவே இருக்கும். எவர் ஒருவர், தான் இல்லாவிட்டாலும், தன் குடும்பம் பணம் சார்ந்த விஷயங்களில் பாதிப்பின்றி இருக்கும் வகையில் தன் வாழ்க்கையை திட்டமிட்டு அமைத்து கொண்டுள்ளாரோ, அவருக்கே இந்த `நிதி சுதந்திரம்' உள்ளது எனக் கூறலாம்.
இந்த `நிதி சுதந்திரம்' அனைவருக்கும் சாத்தியமா! என்றால் சாத்தியமே. அதற்கு, மேலே சொன்ன `கட்டுப்பாடு நிதி ஒழுக்கம்' (Financial Discipline) மிக அவசியம். இந்த நிதி சுதந்திரம் கைகூட `நிதி திட்டமிடுதல்' (Financial Planning) அவசியமாகிறது. நிதித் திட்டமிடுதல் என்பது ஒருவருடைய வாழ்க்கையின் குறிக்கோளுக்கான, அவருடைய நிதி நிர்வாகத்தின் மூலம் அடைவதற்கான ஒரு வழிமுறையாகும். இதில், சொந்த வீடு, சொந்த வாகனம், தரமான கல்வி, உயர் கல்வி, குழந்தைகளின் திருமணம் மற்றும் ஓய்வு ஊதியம் ஆகியவை அடங்கும்.
நிதித் திட்டமிடுதல் என்பது ஒரு வழிமுறை எனப் பார்த்தோம். இப்போது அதற்கான திட்டங்கள் யாவை என்றும், அவற்றின் பயன்பாடுகளையும் வரிசைப்படுத்துவோம்.
1. ஆயுள் காப்பீடு - டேர்ம் பிளான் (Term Plan)
2. ஆயுள் காப்பீடு - யூலீப் திட்டங்கள் (Unit Linked Insurance Plan)
3. மருத்துவக் காப்பீடு - (Mediclaim Policy)
4. பரஸ்பர நிதித் திட்டங்கள் (குறிப்பாக SIP/SWO) & (Mutual Fund)
5. மனை மற்றும் வீடு
6. பங்குச்சந்தை முதலீடு - நீண்ட கால அடிப்படையில் முதலீடு.
மேற்கூறிய நிதித் திட்டங்களின் பயன்பாடுகளை சுருக்கமாக கீழே காண்போம்.
1. ஆயுள் காப்பீடு - டேர்ம் பிளான் : குறைந்த பிரிமியம் அதிக காப்பீடு.
2. ஆயுள் காப்பீடு - யூலீப் திட்டங்கள் : நீண்ட கால அடிப்படையில் (20, 25 மற்றும் 30 ஆண்டு காலம்) ஒருவரின் வருமானத்தைப் பாதுகாக்கவும், மேலும் சிறப்பான ஓய்வூதியத்திற்காகவும் பயன்படுத்தலாம்.
3. மருத்துவக் காப்பீடு: குடும்பத்திற்கான Floater Policy திட்டங்கள் - முழு குடும்பத்திற்கான Cashless facility.
4. பரஸ்பர நிதித் திட்டங்கள்: மாதம் 100 முதல் 500, 1000 ரூபாய் என நாம் சேமிக்கும் திறனைப் பொறுத்து நீண்ட கால அடிப்படையில் நல்ல லாபம் அடைந்திட சிறந்தவழி.
5. மனை மற்றும் வீடு: வீட்டிற்கானத் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில் இவற்றில் முதலீடு செய்வது நல்ல பலனை அளிக்கும்.
6. பங்குச்சந்தை முதலீடு : இ கோல்டு (Gold ETF) மற்றும் முன்னணியில் உள்ள நல்ல நிறுவனங்களில், பங்குச்சந்தை வீழ்ச்சியடைகின்ற காலங்களில், சிறிது சிறிதாக வாங்கி, நீண்ட காலத்திற்கு (3-5 ஆண்டுகள் வரை) முதலீடு செய்வது நல்ல எதிர்பார்த்த பலனை அளிக்கும்.
இப்போது உள்ள காலக்கட்டத்தில், தனியார் மயமாக்கப்பட்ட நிலையில் மேற்கூறிய திட்டங்களில் முதலீடு என்பது மிக சுலபமான ஒரு விஷயமாகும்.
இனி, நிதித் திட்டமிடுதலில் உள்ள சில அடிப்படையான உண்மைகளைப் பார்ப்போம். இந்த உண்மைகளை புரிந்து கொள்ளாமல், நிதித் திட்டமிடுதல் என்பது முழுமை பெறாத ஒரு விஷயமாகிவிடும்.
1. வட்டி விகிதம் (Interest Rate): நாம் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேரும் போது நம் முதலீட்டிற்கு உரிய உண்மையான ஆதாயம் ஆண்டிற்கு 8 சதவீதம் வரை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. அதாவது, வருமானவரி விலக்கு Sec 80 சி மற்றும் Sec 10 (10 ஞி) படி.
2. மாதம் ரூபாய் 1500 முதல் 2000 வரை 20 வருடங்கள் சேமித்தால், 9 சதவீத கூட்டு வட்டியில் நாம் லட்சாதிபதியாகலாம்.
3. உங்களுடைய முதலீட்டின் ஆதாயமானது, பணவீக்கத்தை விட குறைவாக இருப்பின் உங்கள் முதலீடு சிறுக, சிறுக கரைந்து விடும்.
கடன் அட்டைகள் (Credit Cards): 1. உங்களுடைய (EMI : Equated Monthly Instalment) மாதத் தவணை உங்களுடைய வருமானத்தை விட 40 சதவீதம் அதிகரிக்கும் போது, எதிர் காலத்தில் உங்களால் மாதத் தவணையை செலுத்த சிக்கல் வரும்.
2. உங்களுடைய கடன் அட்டைகளின் மாதத் தவணை உங்கள் வருமானத்தில் 40 சதவீதத்தை தாண்டும்போது நீங்கள் அபாய கட்டத்தில் இருக்கின்றீர்கள் என உணர வேண்டும்.
ஆயுள் காப்பீடு: யாருடைய குடும்பம் எல்லாம் ஒருவருடைய வருமானத்தை நம்பி இருக்கின்றதோ, அவருக்கெல்லாம் அவசியம் ஆயுள் காப்பீடு தேவை. எப்போது உங்கள் முதலீட்டின் ஆதாயம் எந்த ஒரு இடர்பாடு இன்றி (Risk free Returns) உங்கள் சராசரி செலவுகளை விட, அதிகமாக வருகின்றதோ, அப்போது உங்களுக்கு ஆயுள் காப்பீட்டின் தேவை குறைகின்றது.
பொதுவாக, ஒருவரின் ஆண்டு வருமானத்தில் 10 மடங்கு ஆயுள் காப்பீடு இருத்தல் அவசியம்.
உதாரணம்: ஆண்டு வருமானம் 2 லட்சம் எனில் ஆயுள் காப்பீட்டின் தேவை 20 லட்சம் ஆகும்.
உங்களுடைய ஆண்டு பிரிமிய தவணையானது, உங்களுடைய ஆண்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கும் மேல் போகும் போது, எதிர்காலத்தில் உங்கள் தவணை செலுத்துவதில் சிரமம் ஏற்படலாம்.
திட்டமிடுதல், திட்டமிட்டபடி செயல்படுதல், தகுந்த நேரத்தில் தகுந்த ஆலோசனை படி, திட்டங்களில் சிறு சிறு மாற்றங்கள் செய்தல் ஆகியவை, நாம் மேற்கூறிய `நிதி சுதந்திரம்' அடைவதற்கான உத்திகள் ஆகும். அச்சுதந்திரம் உங்கள் கைகளில்தான் உள்ளது.
`நம் முதல் செலவு சேமிப்பே!

சேமிப்போம், முதலீடு செய்வோம், வளம் பெறுவோம்.

No comments:

Post a Comment