வாழ்க வளமுடன்!

Wednesday, February 22, 2012

ஏர் பேக் இருந்தாலும் காரில் சீட் பெல்ட் அணிய வேண்டுமா?


டெல்லியில் அதிவேகத்தில் வந்த சூப்பர் கார் சாலை தடுப்புகளின் மீது மோதி விபத்துக்குள்ளானதில், அந்த காரை ஓட்டி வந்த இளம் தொழிலதிபர் எம்விஎல் நிறுவனத்தின் இயக்குனர் அனுக்குல் ரிஷி(28) சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். 


இச்சம்பவத்தில்,சாலை ஓரத்தில் இருந்த தடுப்புகளின் மீது மோதிய அந்த கார் நிலை தடுமாறி அவ்வழியே சென்ற சைக்கிள் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் இருந்த கம்பம் ஒன்றில் படு பயங்கரமாக மோதியது. சைக்கிளை ஒட்டிய நபர் படுகாயமடைந்தார். காருக்குள் இருந்து ரிஷி வெளியே தூக்கி வீசப்பட்டார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அவ்வழியே வந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். 


அனுக்குல் ரிஷி 180 கிமீ வேகத்தில் காரை ஓட்டிவந்ததாக கூறப்படுகிறது. மேலும், அனுக்குல் சீட் பெல்ட் அணியாமல் வந்ததால்தான், காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டு ரிஷி இறந்ததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது. 


விபத்தில் பலியான இளம் தொழிலதிபர் அனுக்குல் ருஷிக்கு திருமணமாகி 3 மாதங்களே ஆவதாக தகவல்கள் கூறுகின்றன. ரூ.3 கோடி மதிப்புடைய அவரது லம்போர்கினி கல்லார்டோ சூப்பர் கார் லிமிடேட் எடிசனாக வெளியிடப்பட்ட கார். வெறும் 3.9 நொடிகளில் 0-100 கிமீ வேகத்தை எட்ட வல்லது என்பது குறிப்பிடத்தக்கது.


விபத்துக்களின்போது ஏர்பேக் எனப்படும் உயிர்காக்கும் காற்றுப் பைகள் தக்க சமயத்தில் விரிந்தாலும், சீட் பெல்ட் அணியாமல் சென்றால் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கின்றனர் வல்லுனர்கள். இருசக்கர வாகனங்களில் செல்லும்போது எப்படி ஹெல்மெட் அவசியமோ அதுபோன்ற கார்களில் செல்லும்போது சீட் பெல்ட் அணிவது மிக மிக அவசியம்.


விபத்தில் சிக்கிய சூப்பர் காரில் காற்றுப் பைகள்(ஏர் பேக்) உள்ளிட்ட நவீன தொழில்நுட்ப வசதிகொண்ட கார். அந்த கார் மோதிய வேகத்தில் காற்றுப் பை சரியான சமயத்தில் விரிந்தும் அந்த தொழிலதிபர் உயிரிழந்துள்ளார்.


இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில் அவர் சீட் பெல்ட் அணியாமல் சென்றதே அவர் உயிரிழப்புக்கு ஒரே காரணமாக கூறப்படுகிறது. ஏனெனில்,சீட் பெல்ட் அணிந்து செல்லவில்லையென்றால், அதிவேகத்தில் செல்லும் கார் இதுபோன்று மோதி விபத்துக்குள்ளாகும்போது காருக்குள் இருப்பவரை வெளியே தூக்கி வீசும் நிலை இருக்கிறது.


இதனால், காற்றுப் பைகள் சரியான சமயத்தில் விரிந்து தனது எஜமானரை காப்பாற்ற முயன்றாலும் அதற்கு பிரயோஜனம் இருக்காது. எனவே, சீட் பெல்ட் அணிந்து செல்வதை கட்டாயம் மறவாதீர்கள். விபத்துக்கள் தேதி, நாள் குறித்து நடப்பவை அல்ல. 


எனவே, பக்கத்தில்தான் செல்கிறேன், அடுத்த தெருவுக்கு செல்கிறேன் என்று நினைத்து சீட் பெல்ட் அணியாமல் காரில் செல்ல வேண்டாம்.

2 comments:

  1. என்னங்க, அவ்வளவு விலை உயர்ந்த காருக்கு 150 கி.மீ. வேகம் ரொம்பக் கம்மிங்க. உயிர் போனாப் போகுதுங்க, அந்த த்ரில் வருமாங்க?

    ReplyDelete