பல லட்சம் ஆண்டுகளாகப் பரிணாமரீதியாக வளர்ந்து மாற்றம் அடைந்து வந்த மனிதன் செய்த ஒரு விஷயம், அவனை மற்ற மிருகங்களில் இருந்து பரிணாமரீதியாக வித்தியாசப்படுத்தி, தன்னை உலகின் தலைவன் ஆக்கியது. அது என்ன மாற்றம்? சமைத்த உணவை அவன் உண்ணத் தொடங்கியதே. உணவுச்சங்கிலியில் சிங்கம், புலி போன்ற மிருகங்களைத் தாண்டி நாம் புலிப்பாய்ச்சலில் முன்னேறக் காரணம் - சமைத்த உணவை உண்ணத் தொடங்கியதே என பரிணாமவியல் ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள்.
பச்சை உணவு ஜீரணமாக ரொம்ப நேரம் பிடிக்கும். ஆனால் சமைத்த உணவு எளிதில் ஜீரணமாவதுடன், அதிக அளவில் உண்ணவும் முடியும். இதனால் நம் மூளைக்கு திடீரென அதிக கலோரிகளும், அதிக அளவில் புரதமும் வைட்டமின், மினரல் முதலான ஊட்டச்சத்துகளும் கிடைத்தன. இதை ஆராயும் பரிணாமவியலாளர்கள் மனித மூளையின் ஆற்றல் அதன்பின்னர் பெருமளவில் அதிகரித்ததாக கூறுகிறார்கள். மூளையின் ஆற்றல் அதிகரிக்க, அதிகரிக்கச் சிந்திக்கும் திறன் வளர்ந்து உலகின் மற்ற எந்த மிருகங்களையும் விடவும் பரிணாமரீதியில் மனிதன் முன்னேறிவிட்டான். ஆக, சமைத்த உணவை உண்ணும்முன் மனிதனும் மற்ற மிருகங்களைப்போன்ற இன்னொரு மிருகமே; சமைத்த உணவே நம்மை மற்ற மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்தி மனிதனாக மாற்றியது.
இவ்வாறு நம்மை மனிதனாக மாற்றிய சமையலைப் போற்றுவோம். அதை நமக்கு அன்புடன் அளிக்கும் நம் இல்லத்தரசிகளை மனதார வாழ்த்துவோம். ஏனெனில் திருமூலர்
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேர மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தோர்
உடம்பை வளர்த்தே உயிர் வளர்த்தோனே”
என்று உணவின் முக்கியத்துவத்தைப் போற்றியிருக்கிறார். அவ்வாறு உயிரை வளர்க்கும் சமையலைப் போற்றுவோம்.
No comments:
Post a Comment