Search This Blog

Showing posts with label food. Show all posts
Showing posts with label food. Show all posts

Friday, September 02, 2016

கலப்படத்தைக் கண்டறிவது எப்படி?

உணவுப் பொருட்களில் பல்வேறு கலப்படங்கள் செய்யப்படுகின்றன. அவற்றை கண்டறிவது எப்படி என்பதைப் பார்க்கலாம்..

டீத் துாள்:


கடைகளில் பயன்படுத்திய டீ துாள் கழிவை குறைந்த விலைக்கு வாங்கி, அதை வெயிலில் காயவைத்து, சிவப்பு நிறத்தை ஏற்றுகின்றனர். பின்னர், குறைந்த விலைக்கு மார்க்கெட்டில் கிடைக்கும் தரமற்ற மூன்றாம் தர டீ துாளை வாங்கி, இரண்டையும் கலக்கி, போலி லேபிள் கொண்ட பாக்கெட்களில் அடைத்து, டீக்கடை களுக்கு விற்றுவிடுகின்றனர். சில நேரங்களில், பிரபல பிராண்ட்கள் பெயரிலான லேபிள்களுடன் கூடிய போலி பாக்கெட்களில் அடைத்து, கடைகளுக்கும் விற்கின்றனர்.



கண்டறிவது எப்படி?

சாதாரண 'பில்டர் பேப்பரில்' சந்தேகத்துக்குரிய டீ துாளை கொட்டி, அதன் மீது சிறிது நீரை ஊற்றினால், நிறம் தனியே பிரிந்து அந்தபேப்பரில் பரவும்; இதுவே போலி டீ துாள்.

கடுகு:

சமையலறை அத்தியாவசிய உணவுப் பொருட்களில் முக்கியமானது கடுகு. கசகசா வகையைச் சேர்ந்த'அர்ஜிமோன்' விதைகள், கடுகுடன் கலக்கப்படுகின்றன. பார்ப்பதற்கு இரண்டுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் எதுவும் தெரியாது.


கண்டறிவது எப்படி? :

தரமான கடுகை, உள்ளங்கையில் வைத்து அழுத்தி தேய்த்தால், அதன் உட்புறம் மஞ்சளாக காட்சி தரும். போலி கலக்கப்பட்டிருந்தால், கைகளில் நசுங்கும்போது, விதைகளின்உட்புறம் வெள்ளையாக காட்சி தரும்.

மஞ்சள் துாள்:

மஞ்சள் துாளில், மாட்டுச்சாணப்பொடியும், 'மெட்டானில் எல்லோ' என்ற ரசாயனமும் கலக்கப்படுகின்றன.


கண்டறிவது எப்படி? 

அரை ஸ்பூன் மஞ்சள்துாளை, 20 மி.லி., இளஞ்சூடான நீரில் கலந்து, அதில் இரண்டு துளிகள் 'ஹைட்ரோ குளோரிக்' அமிலத்தைச் சேர்க்க வேண்டும். இளம் சிவப்பு, ஊதா நிறத்தில் நீர் மாறினால், அதில் 'மெட்டானில் எல்லோ' கலந்திருப்பதை உறுதி செய்யலாம். பரிசோதனைக்கூடத்தில்தான் இதை கண்டுபிடிக்க முடியும்.

பச்சை பட்டாணி

பச்சை மிளகாய், குடமிளகாய் போன்றவை அதிகப் பச்சையாகத் தெரிய, 'மாலசைட் கிரீன்' என்ற ரசாயனத்தில் முக்கி எடுக்கின்றனர். இதேபோல, உலர் பட்டாணியை ஊறவைத்து, 'மாலசைட் கிரீன்' கலந்து 'பிரஸ்'ஸாக இருப்பதுபோல் விற்கின்றனர்.


கண்டறிவது எப்படி? 

கலப்பட பச்சை மிளகாய், பட்டாணி ஆகியவற்றை, வெந்நீரில் போட்டதும் பச்சை நிறம் வெளியேறினால் அதில் 'மாலசைட் கிரீன்' கலந்திருப்பது உறுதியாகும்.

பட்டை

பட்டையில், கேசியா, சுருள் பட்டை என்ற இரு வகைகள் உள்ளன. இதில், சுருள் பட்டையில்தான் சத்துக்கள் உள்ளன. கேசியா பட்டையில் சாதாரண மரப்பட்டைகளும், நிறம் சேர்த்துக் கலக்கப்படுகின்றன.


கண்டறிவது எப்படி?


சந்தேகத்துக்குரிய பட்டைகளில் ஒன்றிரண்டை, கைகளில் வைத்து நன்றாக கசக்கினால், கையில் எவ்விதமான நிறமும் ஒட்டக்கூடாது. அவ்வாறு ஒட்டினால் அது கலப்படம்.
மல்லி

மாட்டுச் சாணம் கலக்கப்படுகிறது.


கண்டறிவது எப்படி?

கலப்பட மல்லியை தண்ணீரில் போட்டால்,மாட்டுச்சாணம் கரைந்து, நீரின் நிறத்தை மாற்றி, சாணத்தின் நாற்றம் எழும்.

மிளகு

பப்பாளி விதைகளைக் காயவைத்தால் மிளகு போலத் தெரியும். அதை, மிளகில் சேர்த்து விற்கின்றனர். அதேபோல, பழைய மிளகில், 'மினரல் ஆயில்' எனப்படும் பெட்ரோலியப் பொருள் கலக்கப்பட்டு, மெருகேற்றப்படுகிறது.


கண்டறிவது எப்படி?

மிளகு பார்ப்பதற்குப் பளபளப்புடன் மின்னக் கூடாது. முகர்ந்துபார்த்தால் கெரசின் வாடை அடிக்கக் கூடாது. கண்ணாடி டம்ளரில்,50 மி.லி., தண்ணீரை ஊற்றி, அதில் மிளகைப் போட்டால், மிளகு மூழ்கினால் அது உண்மையான மிளகு, மிதந்தால் அது பப்பாளி விதை.

சீரகம்

சீரகத்தில், குதிரைச் சாணமும், அடுப்புக் கரியும் சேர்க்கப்படுகிறது.


கண்டறிவது எப்படி?

சீரகத்தைத் தண்ணீரில் போட்டால் சாணம் கரைந்துவிடும். சீரகத்தைக் கையில் வைத்துத் தேய்க்கும்போது, கறுப்பாக மாறினால், அதில் அடுப்புக் கரி சேர்க்கப்பட்டிருக்கிறது.

பால்

பால் 'சில்லிங்' சென்டருக்கு போகும் வரை, கெட்டுப்போகாமல் இருக்க, யூரியா, காஸ்டிக் சோடா, டிடர்ஜென்ட் போன்றவை சேர்க்கப்படுகின்றன.


கண்டறிவது எப்படி?

பாலையும், தண்ணீரையும், 10 மி.லி., அளவில் சமமாகக் கலக்கும்போது நுரை வந்தால், அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கலாம்.

மிளகாய்த் துாள்

கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்படும் செங்கல் துாள் கலக்கின்றனர். அதுமட்டுமின்றி, கலப்பட மிளகாய்த் துாளுக்கு கவர்ச்சியான நிறத்தை ஏற்ற, புற்றுநோயை உண்டாக்கும் 'சூடான் டை' என்ற ரசாயனத்தை கலக்குகின்றனர்.


கண்டறிவது எப்படி?

ஒரு கிளாஸ் நீரில், ஒரு ஸ்பூன் மிளகாய்த் துாளைக் கலக்கும்போது, பளீர் சிவப்பு கலர் வெளிவந்தால் அதில் கலப்படம் உள்ளது.

தேன்

தேனில், வெல்லப்பாகு கலந்து நிறமேற்றுகின்றனர்.


கண்டறிவது எப்படி?

பஞ்சு எடுத்து, அதை தேனில் நனைத்து நெருப்பில் காட்டும்போது, பஞ்சு எரிந்தால் நல்ல தேன். எரியும்போது சடசடவென சத்தம் வந்தால், அது கலப்படத் தேன். தேனை தண்ணீரில் விட்டால், கரையாமல் அடி வரை சென்று தங்கும்; அவ்வாறின்றி கரைந்தால்,அது வெல்லப்பாகு.


நெய்


டால்டா மற்றும் வேக வைத்து நன்றாக மசித்த உருளைக்கிழங்கை கலக்கின்றனர்.


கண்டறிவது எப்படி? 

வாணலியில் இட்டு சூடாக்கினால், நெய் கரைந்து, மற்ற சேர்மானங்கள் தனியாக நிற்கும்.

சமையல் எண்ணெய்

எண்ணெயை ரீபைண்ட் செய்ய, பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. இந்த எண்ணெயை பயன்படுத்துவது உடல்நலத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெய் வாங்கிப் பயன்படுத்தலாம்.

புகார் தெரிவிக்க:

கமிஷனர், தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை
(உணவுப்பிரிவு), 359. அண்ணா சாலை, மருத்துவ பணிகள் இயக்குனரகம்
அலுவலக வளாகம், தேனாம்பேட்டை, சென்னை - 600 006.
தொலைபேசி எண்: 044 - 243 50 983.
ஹெல்ப் லைன்: 94440 42322.
இணைய தள முகவரி: commrfssa@gmail.com 

Monday, January 25, 2016

சமையல்


பல லட்சம் ஆண்டுகளாகப் பரிணாமரீதியாக வளர்ந்து மாற்றம் அடைந்து வந்த மனிதன் செய்த ஒரு விஷயம், அவனை மற்ற மிருகங்களில் இருந்து பரிணாமரீதியாக வித்தியாசப்படுத்தி, தன்னை உலகின் தலைவன் ஆக்கியது. அது என்ன மாற்றம்? சமைத்த  உணவை அவன் உண்ணத் தொடங்கியதே. உணவுச்சங்கிலியில் சிங்கம், புலி போன்ற மிருகங்களைத் தாண்டி நாம் புலிப்பாய்ச்சலில் முன்னேறக் காரணம் - சமைத்த உணவை உண்ணத் தொடங்கியதே என பரிணாமவியல் ஆய்வாளர்கள் விளக்குகிறார்கள்.
பச்சை உணவு ஜீரணமாக ரொம்ப நேரம் பிடிக்கும். ஆனால் சமைத்த உணவு எளிதில் ஜீரணமாவதுடன், அதிக அளவில் உண்ணவும் முடியும். இதனால் நம் மூளைக்கு திடீரென அதிக கலோரிகளும், அதிக அளவில் புரதமும் வைட்டமின், மினரல் முதலான ஊட்டச்சத்துகளும் கிடைத்தன. இதை ஆராயும் பரிணாமவியலாளர்கள் மனித மூளையின் ஆற்றல் அதன்பின்னர் பெருமளவில் அதிகரித்ததாக கூறுகிறார்கள். மூளையின் ஆற்றல் அதிகரிக்க, அதிகரிக்கச் சிந்திக்கும் திறன் வளர்ந்து உலகின் மற்ற எந்த மிருகங்களையும் விடவும் பரிணாமரீதியில் மனிதன் முன்னேறிவிட்டான். ஆக, சமைத்த  உணவை உண்ணும்முன் மனிதனும் மற்ற மிருகங்களைப்போன்ற இன்னொரு மிருகமே; சமைத்த உணவே நம்மை மற்ற மிருகங்களிடம் இருந்து வேறுபடுத்தி மனிதனாக மாற்றியது.

இவ்வாறு நம்மை மனிதனாக மாற்றிய சமையலைப் போற்றுவோம். அதை நமக்கு அன்புடன் அளிக்கும் நம் இல்லத்தரசிகளை மனதார வாழ்த்துவோம். ஏனெனில் திருமூலர் 
“உடம்பார் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேர மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தோர்
உடம்பை வளர்த்தே உயிர் வளர்த்தோனே”
என்று உணவின் முக்கியத்துவத்தைப் போற்றியிருக்கிறார். அவ்வாறு உயிரை வளர்க்கும் சமையலைப் போற்றுவோம்.

Related Posts Plugin for WordPress, Blogger...