மனிதனின் ஆரோக்கியம், புலாலில் மட்டுமே கிடைக்கும் சிலவகை வைட்டமின்கள், மினரல்களை நம்பியுள்ளது. சைவ உணவுமுறைகளைப் பின்பற்றுபவர்களுக்கு அசைவர்களுக்கு வராத சில சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
புரதம்
சைவர்களின் முதல் சவாலே புரதம்தான். இந்திய அரசு அளிக்கும் புள்ளிவிவரப்படி 30% இந்தியர்கள் புரதக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த முப்பது சதவிகிதத்தில் 46% பேர் பள்ளிக் குழந்தைகள். இவர்கள் எல்லாருமே சைவர்கள் எனச் சொல்லமுடியாது. இந்தியாவில், அசைவராலுமே முட்டை, இறைச்சி போன்ற புரதம் மிகுந்த உணவுகளை அன்றாடம் உண்ண முடியாது. எனவே புரதக் குறைபாடு இந்தியா முழுவதையும் பாதிக்கும் விஷயம் என்பதை மனத்தில் கொள்ளவேண்டும்.
மற்ற வைட்டமின்களை போல புரதத்தை உடலால் தேக்கி வைக்க முடியாது. அன்றாடத் தேவைகளுக்கான புரதத்தை அன்றாட உணவின் மூலமே அடையவேண்டும். ஏதோ ஒருநாள் இரு மடங்கு புரதம் எடுத்துக்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை.
இந்திய அரசின் நெறிமுறைகளின்படி சராசரி ஆண் 60 கிராம் புரதம் எடுக்கவேண்டும். பெண்ணுக்கு 55 கிராம் புரதம் தேவை. கடும் உடற்பயிற்சி, மகப்பேறு, பாலூட்டுதல் போன்றவற்றால் புரதத் தேவைகள் இன்னமும் தேவைப்படும். இதிலும் தாவரப் புரதங்கள் முழுமையாக நம் உடலில் சேர்வது கிடையாது. மிருகப் புரதங்களே நம் உடலில் முழுமையாகச் சேர்கின்றன. உதாரணமாக முட்டையில் இருக்கும் புரதம் 100% அளவில் நம் உடலுக்குள் செல்கிறது. ஆனால், கோதுமையில் உள்ள புரதத்தில் 30% அளவே நம் உடலில் சேர்கிறது. பீன்ஸ், பருப்பு போன்ற சைவ உணவுகளில் புரதம் அதிகமாக உள்ளன. ஆனால், அவற்றில் உள்ள அமினோ அமிலங்கள் முழுமையாக இல்லாததால் பாதிக்கும் மேலான பீன்ஸின் புரதங்கள் நம் உடலில் சேராமல் கழிவாக சிறுநீரகத்தால் வெளியேற்றபடுகின்றன. (அமினோ அமிலங்கள் உடலின் மிக முக்கியமான வகை அமிலங்கள். புரதங்களைக் கட்டமைக்கும் தன்மை கொண்டவை. மொத்தம் 20 அமினோ அமிலங்கள் உள்ளன. ஆனால் இவற்றில் சில வகை அமினோ அமிலங்கள் மட்டுமே பீன்ஸ், பருப்பில் உள்ளன.)
சைவர்கள் பேலியோ உணவில் தினமும் 100 கிராம் அளவுக்குப் பாதாம் எடுத்தால் 23 கிராம் புரதம் கிடைக்கும். 500 கிராம் பனீரில் 20 கிராம் புரதம் உள்ளது. இந்த இரண்டையும் சாப்பிட்டால் மொத்தம் 43 கிராம் அளவே புரதம் உடலைச் சேரும். தேங்காய், காய்கறிகளில் உள்ள புரதத்தை குத்துமதிப்பாக ஒரு ஏழெட்டு கிராம் என்று வைத்துக்கொண்டாலும் சைவ பேலியோவால் மொத்தம் 50 - 55 கிராம் அளவே புரதம் கிடைக்கிறது. இது அரசு பரிந்துரைக்கும் அளவை விடவும் குறைவு. எனினும் உடல்நலனைப் பாதிக்கும் அளவு பிரச்னைகளை உண்டுபண்ணாது. பேலியோ அல்லாத சைவ உணவில் பலரும் இதை விட குறைந்த அளவு புரதத்தையே அடைகிறார்கள். அப்படிப் பார்க்கும்போது சைவ பேலியோ உணவுமுறை மேலானது.
வைட்டமின் ஏ
தாவர உணவு எதிலும் வைட்டமின் ஏ கிடையாது. இது பலருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். வைட்டமின் ஏ ஏராளமாக இருப்பதாகப் பலராலும் நம்பப்படும் கேரட், கீரை போன்றவற்றில் துளி கூட வைட்டமின் ஏ கிடையாது என்பதே உண்மை.
வைட்டமின் ஏ-வில் இருவகை உண்டு. ரெடினால் (Retinol) மற்றும் பீடா காரடின் (Beta carotene). இரண்டில் ரெடினாலே உடலில் சேரும் தன்மை கொண்ட வைட்டமின். இதுவே கண்பார்வைக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும் பலன் அளிக்கும் தன்மை கொண்ட வைட்டமின் ஏ ஆகும்.
ஆட்டு ஈரல், மீன் தலை, முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை உண்ணும்போது அதில் உள்ள ரெடினால் எளிதில் நம் உடலில் சேர்ந்து விடுகிறது. பதிலாக கேரட், கீரையைச் சாப்பிட்டால் அதில் உள்ள பீடா காரடினை ரெடினால் ஆக மாற்றியபிறகே நம் ஈரலால் அதை வைட்டமின் ஏ-வாகப் பயன்படுத்தி உடலுக்கு நன்மையளிக்க முடியும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள், தைராய்டு சுரப்பியில் பிரச்னை உள்ளவர்கள் போன்றோருக்கு பீடா காரடினை ரெடினாலாக மாற்றுவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. அதனால் அவர்கள் கிலோ கணக்கில் கேரட்டைச் சாப்பிட்டாலும் அவர்களது ஈரலால் அதை ரெடினால் ஆக மாற்ற முடியாது. இதனால் மாலைக்கண் வியாதி, கண்பார்வை குறைபாடுகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாகின்றன.
ரெடினால் உள்ள உணவுகளான நெய், பால், சீஸ், பனீர் போன்றவை சைவர்களுக்கு உதவும். ஆனால் பாலில் உள்ள கொழுப்பில் மட்டுமே ரெடினால் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளவேண்டும். ஆனால் நம் மக்கள் கொழுப்பு இல்லாத பாலை வாங்குவதில்தான் ஆர்வம் செலுத்துகிறார்கள். பாலில் உள்ள கொழுப்பை அகற்றினால் அதில் உள்ள ரெடினாலையும் நாம் சேர்த்தே அகற்றிவிடுகிறோம். பிறகு பாலில் என்ன சத்து இருக்கும்?
நெய், வெண்ணெய் போன்ற பேலியோ உணவுகளை அதிகம் உண்ணுவதால் அதில் உள்ள ரெடினாலின் பயனை சைவர்கள் அடைகிறார்கள். அவர்களின் வைட்டமின் ஏ அளவுகள் அதிகரிக்கின்றன. எனவே சைவ பேலியோவைப் பின்பற்ற எண்ணுபவர்கள் தினமும் அரை லிட்டர் பால் அல்லது பனீரை தவறாமல் எடுத்துக்கொள்வதுடன் தினமும் அதிக அளவிலான நெய், வெண்ணெய் போன்றவற்றையும் சமையலில் பயன்படுத்தவேண்டும்.
பி12 வைட்டமின்
பி12 என்பது முக்கியமான பி வைட்டமின்களில் ஒன்றாகும். பி12 வைட்டமின் குறைபாட்டால் நமக்கு மாரடைப்பு, ஆஸ்துமா, மலட்டுத்தன்மை, மன அழுத்தம் போன்ற பலவகை வியாதிகள் ஏற்படுகின்றன.
துரதிர்ஷ்டவசமாக பி12 வைட்டமின் எந்தத் தாவர உணவிலும் இல்லை. பி12 - புலால், மீன், முட்டை, பால் போன்ற மிருகங்களிடமிருந்து கிடைக்கும் உணவுகளிலேயே காணப்படுகிறது. சைவர்கள் பால், பனீர் போன்றவற்றை உண்பதன் மூலம் பி12 தட்டுப்பாடு ஏற்படாமல் காத்துக்கொள்ளமுடியும். அதே சமயம் ஒரு நாளுக்கு தேவையான பி12-ஐ அடையவேண்டும் என்றால் தினமும் ஒன்றே கால் லிட்டர் பாலை அருந்தவேண்டும். இது நம்மால் முடியாது அல்லவா! இதன்படி, பால் மட்டுமே உண்ணும் சைவர்களுக்கு பி12 தட்டுப்பாடு உண்டாகும் வாய்ப்பு மிக அதிகம்.
முட்டை சாப்பிடும் சைவர்களால் இதைச் சமாளிக்க இயலும். அவர்களின் புரதத் தேவையும் முட்டை உண்பதால் பூர்த்தி அடையும். ஆனால் பெரும்பாலான சைவர்கள் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வதில்லை. அவர்கள் பி12 அளவுகளை மருத்துவப் பரிசோதனை மூலம் அறிந்துகொள்ளவேண்டும். பி12 அளவுகள் உடலில் குறைவாக இருந்தால் ஒவ்வொரு மாதமும் பி12 ஊசி போட்டுக்கொள்ளவேண்டும்.
பதிலாக பி12 அளவை அதிகரிக்க பி காம்ப்ளக்ஸ் மாத்திரைகளையோ, வைட்டமின் மாத்திரைகளையோ உண்பதால் எந்தப் பலனும் இல்லை. ஏனெனில் மாத்திரைகளில் உள்ள வைட்டமின்கள் செயற்கையாக தொழிற்சாலைகளில் தயாராகுபவை. முட்டை, பாலில் உள்ளதுபோல தரமாகவும், எளிதில் ஜீரணிக்கப்படும் வைட்டமின்களாகவும் அவை இருப்பதில்லை. ஊசி வடிவில் பி12 எடுத்துக்கொண்டால் ஓரளவு அந்த வைட்டமின் உடலில் சேரும் வாய்ப்பு உள்ளது. அது நேரடியாக ரத்தத்தில் கலக்கும் என்பதால்.