பாராளுமன்றத்தில் மீண்டும் கூக்குரல். எலியும் பூனையும் கைகோர்த்து நின்றன. இந்த முறை விலைவாசி உயர்ந்துபோனதாக குற்றச்சாட்டு.
"வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா...." என்கிறார் நிதியமைச்சர்.
"விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது சிரமம். அதற்கெல்லாம் மந்திரக்கோல் எதுவும் இல்லை," என்கிறார் பிரதமர்.
வர்த்தக அமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் மோதல் என்றெல்லாம் பத்திரிக்கை செய்தி.
பாராளுமன்றத்தில் எழுந்த கூக்குரல் சாதாரணமென்று அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. வெங்காயம் விலையேறிப் போனதற்காக ஆட்சியைப் பறிகொடுத்தவர்களும், அந்த தேர்தலில் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற பெரு மூச்சுடன் இன்றைய பாராளுமன்றத்தில் நின்றுகொண்டோ உட்கார்ந்து கொண்டோ இருப்பதை தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
தற்போதைய ஆளும் கட்சி இதற்கு பொருத்தமான விலையை வரப்போகும் தேர்தல்களில் கொடுத்தாக வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்து போயிற்று. வசதி படைத்த இந்தியர்களைக் காட்டிலும் அன்றாடங் காய்ச்சிகள் தான் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு செல்கிறார்கள் என்பதால் ஆளும் கட்சியின் வயிற்றிலும், கூட்டணிக் கட்சிகளின் அடிவயிற்றிலும் புளி கரைக்கத் தொடங்கிவிட்டது.
விளைவு கூட்டணிக் கட்சிகள் பிரிந்து மறுபடியும் கூட வாய்ப்பு இருக்கிறது. புதிய வடிவத்தில்.
ஆக்கப்பூர்வமாக செயல்பட மறந்துபோன அரசு இன்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. மத்தியதர வகுப்பினருக்கு வரிச்சலுகைகள், ஆறாவது ஊதியக்கமிஷன், விவசாயக்கடன் தள்ளுபடி, சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் என்றெல்லாம் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடப்பாரையை விழுங்கி விட்டு இஞ்சிக் கஷாயம் குடித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு.
மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட விலைவாசி உயர்வு அளவு கடந்த 13 மாதங்களில் இல்லாத 6.68 சதவீதத்தை எட்டியிருக்கிறது. உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பால்பொருட்கள், இரும்பு, உருக்கு என்று விலைவாசி உயர்வின் கொடுங்கரங்களில் சிக்கிய பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.
இப்போதைய விலைவாசி உயர்வில் கவலைதரக்கூடிய விஷயம் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இருக்கும் அதிகமான இடைவெளிதான். மொத்த விற்பனையாளர்கள் பொருட்களைப் பதுக்கிவைத்து செயற்கையான விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறார்கள்.
பதுக்கல்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும், தனக்கு அந்த அதிகாரம் இருந்தால் நாளைக்கே நடவடிக்கை எடுப்பேன் என்றும் நிதியமைச்சர் கூறுகிறார் பிரதமரின் முன்னிலையில்.
டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சி குடிமகனுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் அதிகாரம் கிடைக்கிறது. நாளைக்கே அவனுக்கு அதிகாரம் கிடைத்தால் அவனும் உடனடியாக நடவடிக்கை எடுப்பான்.
இரு நபர்களுக்கிடையே அல்லது இரண்டு நிறுவனங்கிளுக்கிடையே ஒரு பொருளை ஊக விலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இணையதளம் மூலம் செய்து கொள்ளப்படுகின்ற ஓர் ஒப்பந்தம் தான் ஆன்லைன் வர்த்தகம். அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் தங்கம் வரை 150க்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது இணையதள விற்பனைக்குள் வந்துள்ளன. ஊக வணிகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், பதுக்கலுக்கும், கள்ளச்சந்தைக்கும், விலையேற்றத்துக்குமான ஒரு ஏற்பாடுதான் ஆன்லைன் வர்த்தகம் என்பது. இதனுடைய இன்னொரு முகம் ரூபாயின் மதிப்பை உள்நாட்டில் செல்லாக்காசாக்கும் முயற்சி.
பொதுவாக விலையை தீர்மானம் செய்யும் காரணிகள் பொருட்களின் தேவை (DEMAND) எவ்வளவு என்பதும், சந்தைக்கு எவ்வளவு பொருட்கள் வந்திருக்கின்றன (SUPPLY) என்பவையும்தான்.
ஒரு பருப்பு வியாபாரி தன்னிடம் இருக்கும் 5 டன் உளுத்தம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கு விற்க இரண்டாவது வியாபாரியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். வெறும் ஒப்பந்தம் மட்டும்தான். சரக்கு இடம் மாறுவதில்லை.
ஒரு மூன்றாவது வியாபாரி கிலோ ஐம்பது ரூபாயானாலும் பரவாயில்லை என்று கேட்கும்போது 30 ரூபாய்க்கு தான் விற்ற அதே பருப்பை 40 ரூபாய்க்கு ஒப்பந்தம்போட்டு வாங்கி 50 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்.
ஆன்லைன் வர்த்தகம் என்றபெயரில் உணவுப்பொருட்கள் முன்கூட்டியே வாங்கப்பட்டுவிடுவதால், அரசின் உணவுப்பொருள் வர்த்தகக் கழகம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கமுடியாமல் முடக்கப்பட்டு விடுகிறது.
பதுக்கலை ஒழிக்கவேண்டிய நடவடிக்கைகள் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்று கைவிரிக்கிறார் நிதியமைச்சர். வாக்குச்சாவடிக்கு மக்கள் போகும்போது மக்களுக்கு பிரச்சினைகள் மட்டும்தான் தெரியும். மாநில அரசு, மத்திய அரசு என்ற வேறுபாடெல்லாம் அவர்களுக்குத் தெரியவேண்டியதில்லை.
வியாபார சக்திகளை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சந்தையில் விளையாட அனுமதித்து விட்டு தற்போது விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வார்த்தைகள்.
பத்திரிக்கைகள் பணவீக்கம் என்று சுருக்கமாக தீர்ப்பு எழுதிவிடுகின்றன. பணவீக்கம் 7 சதவீதம் என்றால் பொருட்களின் விலை 7 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று பொருள். போனவருஷம் இதே மாதத்தில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை இந்த வருஷம் இதே மாதத்தில் 107 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும். பணவீக்கத்தை கணக்கிடும் பணியை இந்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. பல அத்தியாவசிய பொருட்களின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொரு வாரமும் சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்படுகிறது.
6% பணவீக்கம் இருந்த காலத்தில் வங்கிகளின் வைப்பீட்டுக்கும், கடன் பத்திரங்களுக்கும் 6% வட்டி கிடைத்தது. இது RISK FREE RETURN. பங்குச்சந்தையில் வரும் வருமானம் இதற்கு நேர்மாறானது. வங்கியைவிட பலமடங்கு வருமானம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.
வங்கி வட்டிவிகிதம் குறையத்தொடங்கியதும் பணம் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பங்குச்சந்தையை நோக்கி திருப்பி விட்டனர். இதனால் SENSEX நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்து கொண்டு போனது. நம்முடைய நிதியமைச்சர் மிகவும் சந்தோஷப்பட்டார்.
பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல் என்ற கொள்கைகளின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் பின்னடைவுகளில் இருந்து நம்முடைய பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் சுயசார்புத் தன்மையை நாம் இழந்துவிட்டோம்.
இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு என்பதையோ, விவசாயத்திற்கு அடிப்படையான மலிவான உடலுழைப்பு இந்தியாவில் நிறைய இருக்கிறது என்பதையோ நம்முடைய ஆட்சியாளர்கள் அடியோடு மறந்துபோனதுதான் இன்றைய சோகம்.
கலப்புப் பொருளாதாரத்தையும், கிராமத் தொழில்களையும் ஆதரித்த நம்முடைய பழம்பெரும் தலைவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல. தாராளமயம் என்ற பெயரில் கிராமத் தொழில்களை அழித்து, வேலையிழந்த தொழிலாளர்களை நகரங்களை நோக்கி நகரவைத்து புதுப்புது சேரிகள் உருவாக வழிசெய்ததுதான் அண்மைக்கால ஆட்சியாளர்களின் சாதனை.
நுகர்வுக்கலாச்சாரத்தை மக்களிடையே புகுத்தி அதன்மூலம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற மாயத்தோற்றத்தில் மயங்கியதும் இதே ஆட்சியாளர்கள் தான்.
நாடு முன்னேறிக் கொண்டிருந்தாலும் அதன் பயன் ஏழைமக்களைச் சென்றடையவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதும் இதே ஆட்சியாளர்கள்தான்.
நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு விளை நிலங்களை மேம்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையில்லை. ஓர் ஆண்டில் பெய்யவேண்டிய மொத்த மழையில் 80 சதவீதம் நான்கே மாதங்களில் பெய்து தீர்த்து விடுகிறது. இந்த மழைநீரை சேமிக்கவும் பகிர்ந்தளிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதிகள்தான் இன்றைய இந்தியாவின் முதல் தேவை. நமது விவசாயிகளின் துன்பம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர்களின் தற்கொலைகளின் பின்னணியே அந்தக் கதைதான்.
இந்தியாவில் உணவுப்பொருள் விநியோகத்தில்தான் குறைபாடே ஒழிய உணவு உற்பத்தியில் அல்ல. உணவு உற்பத்தியில் மிகக் குறைவான முன்னேற்றம், விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலை, உணவு தானியங்களின் சேதாரம் ஆகியவை இந்நாட்டின் தலையாய பிரச்சினைகள் ஆகும்.
இந்தியர்களின் ஆதாரத் தொழிலான வேளாண்மைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அரசு கொடுக்காதவரை எதுவுமே பலனளிக்கப் போவதில்லை.
நம்முடைய ஊரில் உளுந்து பயிரிடும் விவசாயி கிலோ 18 ரூபாய்க்கு தன்னுடைய உற்பத்திப் பொருளை விற்றுவிட்டு, அதே ஊரில் கிலோ 36 ரூபாய்க்கு உளுத்தம்பருப்பை வாங்கவேண்டிய அவலம்தான் இன்றைய பிரச்சினை.
உற்பத்தியிலோ விற்பனையிலோ எந்தவித பங்களிப்பையும் செய்யாத நிழல் தரகர்கள் ஊகவணிகத்தின் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க அரசு அனுமதிப்பதிக்கும் வரை அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கப் போவதில்லை.
- மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)
Good eye opener
ReplyDelete