வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவரது பதிலும்!
கேள்வி : சுவாமிஜி, என்னைச் சூழ்ந்துள்ளவர்களுடைய பொறாமையை வென்று அவர்கள் தரும் தொல்லைகளை எதிர்த்து வாழ்வில் வெற்றியும் மேன்மையும் அடைய உரிய வழியினை அருள் கூர்ந்து சொல்லித் தரும்படி வேண்டுகிறேன்?
மகரிஷியின் பதில் : நீங்கள் முதலில் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இயற்கையிலேயே உங்களிடம் அபரிமிதமான ஆற்றல்களும் திறமைகளும் அமைந்திருக்கின்றன. இதை உணருங்கள். அவற்றைப் பெருக்கி நீங்களும் பயன் பெற்று, பிறருக்கும் தாராளமாக உதவமுடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அமைதியாக உட்கார்ந்து நீங்கள் 'எங்கு, எவ்வாறு, என்னவாக இருக்கிறீர்கள்?" என்று கணித்துக் கொள்ளுங்கள். அதாவது - வயதில், உடல் வலுவில், உடல் நலத்தில், கல்வியில், தொழில் திறனில், அறிவு வளர்ச்சியில், அதிகாரத்தில், செல்வ நிலையில் சூழ்நிலையமைப்பில் - நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கூர்ந்த அறிவோடு கணித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு இருப்பையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் பிறரிடமிருந்து எதையோ எதிர்பார்க்க வேண்டும்?
இந்த மாதிரியான உயர்ந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள ஒரு மாத காலம் இன்று முதல் பழகிக் கொள்ளுங்கள். இந்த தன்னிறைவுத் திட்டத்தைத் தான் நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இந்தத் திட்டத்தில் மனச் சோர்வுக்கோ, சினத்திற்கோ, கவலைக்கோ இடமில்லை. தன் முயற்சியில், செயலில் விளைவைக் காணும் "கர்ம யோகம்" இதில் அடங்கியிருக்கிறது.
மேலும் கர்மயோகம் பற்றி எளிமையாக விளக்குகிறார்: தனக்கு எல்லா வசதிகளையும் அளித்துக் காத்து வருகின்ற சமுதாயத்திற்கு தனது கடனையாற்ற அறிவாலோ, உடலாலோ உழைப்பதுதான் கர்மயோகம்
No comments:
Post a Comment