ஷேக்ஸ்பியரின் `ஹாம்லட்' நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரமான பொலோனியஸ், தனது மகனுக்கு அறிவுரை கூறுவார், ``ஒருபோதும் கடன் கொடுப்பவனாகவோ, கடன் பெறுபவனாகவோ இராதே.''
ஆனால் இன்றைய வாழ்க்கையில் இது சாத்தியமில்லை. நாம் கடன் கொடுக்காவிட்டாலும், வாங்கித்தான் ஆக வேண்டும் என்ற நிலையில் இருக்கிறோம்.
பல்வேறு கடன்களுடன், `கன்ஸ்யூமர் கிரெடிட்' எனப்படும் `நுகர்வோர் கடன் முறை'யையும் நாம் பயன்படுத்தி வருகிறோம். இதன் மூலம், பொருட்களையோ, சேவையையோ இன்று பெற்றுக்கொண்டு, வருங்காலத்தில் அதற்கான தொகையைச் செலுத்துகிறோம்.
உதாரணமாக மின்சாரம், குடிநீர் இணைப்பு, போஸ்ட் பெய்டு செல்போன் சேவை போன்றவற்றைக் கூறலாம். இந்த `கிரெடிட்'கள் எல்லாம் பிரச்சினையைத் தராது. ஆனால் வேறு பல நுகர்வோர் `கிரெடிட்' வாய்ப்புகளில் நாமë கவனமாக இருக்க வேண்டும். அதாவது கிரெடிட் கார்டுகள், கடனில் அல்லது `எளிதான பைனான்ஸ்' உதவியில் பொருட்கள் வாங்குவது போன்றவை.
`கிரெடிட்'டை சரியாகப் பயன்படுத்துவதும், தவறாகப் பயன்படுத்துவதும்
`கிரெடிட்', தேவையான நேரத்தில் மிகப் பெரிய உதவியாக அமையும். ஆனால் அலட்சியமாகப் பயன்படுத்தினால் உங்களின் நிதி நம்பகத்தன்மையைப் பாதிக்கும்.
கடனுக்கு இரண்டு முகங்கள் உண்டு. உற்பத்தித்திறனை அதிகரிக்கக் கடன் வாங்குவது, வசதி அல்லது `சும்மா' செலவழிக்கும் திருப்தி போன்றவற்றுக்காகக் கடன் வாங்குவது. ஆனால் இதற்குப் பொருளாதாரரீதியாகவும், மனோரீதியாகவும் `விலை' உண்டு. கடன் வாங்குவதால் ஏற்படும் பலன்கள் அதன் வட்டியைவிட அதிகமாக இருக்கும்போது மட்டும் அந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்.
`கிரெடிட்' வாய்ப்பின் பயன்கள் அனேகம். அதாவது, திடீர் மருத்துவ உதவி, கல்வித் தேவைகள் முதல், அவசரப் பயணங்கள் வரை. இதுபோன்ற சூழ்நிலைகளில் கிரெடிட் கார்டுகள் அவசரத்துக்குக் கைகொடுக்கின்றன.
இன்றைக்கு, விமான, ரெயில் பயணம், ஓட்டல்கள் போன்றவற்றுக்கு முன்பதிவு செய்வதற்கு கிரெடிட் கார்டுகள் உதவுகின்றன. உற்பத்தித் திறனை அதிகரிப்பது, அவசர மருத்துவச் சிகிச்சை, உயர்கல்விக் கட்டணங்கள் போன்றவற்றுக்கு `கிரெடிட்' உதவும் அதேநேரம், இம்முறையைத் தவறாகப் பயன்படுத்துவது உங்களின் நிதிநிலையைச் சீர்குலைக்கும். உங்களைத் திவாலாக்கி, கடன் பெறுவதற்கான நம்பகத்தன்மையை அழிக்கும்.
கிரெடிட் கார்டுகளின் செலவு `லிமிட்' அதிகமாக இருப்பதாலேயே பலரும் அதிகமாகச் செலவழிக்கும் உந்துதலுக்கு உள்ளாகிறார்கள். `0' சதவீத வட்டியில் கிடைக்கிறது என்பதற்காகவே தேவையில்லாத பொருட்களை வாங்குவோரும் இருக்கிறார்கள்.
குறைவான முன்தொகையைச் செலுத்திவிட்டு மீதத் தொகையை தவணையில் செலுத்திக் கொள்ளலாம் என்ற மனோபாவம் பலருக்கு உண்டு. சிறிது காலத்தில் அது சிக்கலில் ஆழ்த்தும்.கடன் விஷயத்தில் கவனமாக நடப்பதன் மூலம் நாம், நம் மீதான நம்பகத்தன்மையை வளர்க்க முடியும். அதன் மகத்துவத்தை நம்மால் சாதாரண நேரங்களில் உணர முடியாது. ஆனால் அவசர காலங்களில் உணரலாம்.
கடன் பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிவதன் மூலமும், பணத்தைத் திறமையாக நிர்வகிக்கும் கலையை வளர்த்துக்கொள்வதன் மூலமும், பிற்காலத்தில் பிறர் புத்தி சொல்லும் நிலையைத் தவிர்க்கலாம்.
நீங்கள் இப்போது கடனில் பல பொருட்களைப் பெறலாம், சேவைகளை அனுபவிக்கலாம். அவை, உங்களின் எதிர்கால வருவாயில் ஒரு பகுதியைக் காலி செய்யும், எதிர்கால அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் தடுமாற வைக்கும் என்பதை உணருங்கள். இன்றைய சொகுசான வாழ்க்கைக்காக எதிர்காலத்தைப் பலி கொடுக்காதீர்கள்.
வாழ்க்கையில் சில விஷயங்களைத் தவிர்க்க முடியாது. அதுபோல கடன் என்பது வாழ்வின் தேவைகளில் ஒன்றாகிவிட்டது என்பது நிதி நிபுணர்கள் கருத்து. எனவே கடனைத் தவிர்க்க முடியாவிட்டாலும், திறமையாக நிர்வகிப்பதன் மூலம் வரும் எதிர்கால நாட்களை நிம்மதியாக அமைத்துக்கொள்ளலாம்.
அதற்கு உதவும் சில விதிகள் இதோ...
* கிரெடிட் கார்டு பில் தொகைகளை உரிய காலத்தில் செலுத்துங்கள். அதில் தவறவே தவறாதீர்கள்.
* `கிரெடிட் ஸ்கோர்' எனப்படும் கடன் நிலைமையில் கவனமாயிருங்கள். உங்களின் கிரெடிட் கார்டு விதிகள் மீறப்பட்டிருப்பதாகத் தோன்றினால், உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கு அதைத் தெரிவியுங்கள்.
* உங்களின் மாதாந்திரத் தவணையை (ஈ.எம்.ஐ.) சரியாகச் செலுத்துங்கள். இதில் தவறுவது, உங்களின் `கிரெடிட் ஸ்கோரை'யும், உங்கள் மீதான நம்பகத்தன்மையையும் பாதிக்கும்.
* ஒரே நேரத்தில் பல கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாதீர்கள்.
* கிரெடிட் கார்டுகளை, எளிதாகச் செலழிக்கும் வாய்ப்பாகக் கருதாதீர்கள். மாதாமாதம் குறைந்தபட்சத் தொகையைத்தான் செலுத்துவது என்பதைக் கொள்கையாக வைத்திருந்தால், செலவழிக்கும் தொகைக்கு வட்டியோடு அதிகத் தொகையைச் செலுத்தப் போகிறீர்கள் என்பதை உணருங்கள்.
* குறைவான மாதாந்திரத் தவணைத் தொகை அல்லது `ஜீரோ' சதவீத வட்டியில் கிடைக்கிறது என்பதற்காக தேவையில்லாத பொருட்களை வாங்காதீர்கள்.
* கடன்களுக்கான அடிப்படைத் தொகையை அதிகமாகச் செலுத்தப் பாருங்கள். அது, மாதாந்திரத் தவணைத் தொகையானது உங்களின் சேமிப்பை அதிகம் விழுங்காமல் தவிர்க்கும்.
கடைசியாக, கடனானது உங்களின் வாங்கும் திறனை அதிகரிக்காது. அது உங்களின் எதிர்கால வாங்கும் திறனை, இன்றைக்கு கையில் கொண்டுவருகிறது. ஆனால் அது `மாயத் தோற்றமே' என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
கடன்- அது தவிர்க்கவே முடியாத நிலையில் மட்டும் என்பதில் உறுதியாக இருந்தால் கவலை உங்களுக்கில்லை!