Search This Blog

Tuesday, August 23, 2011

பயிரிடும் பரப்பளவு கடந்த ஆண்டை விட அதிகரிப்பு




புதுடில்லி: நாடு முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருவதால், நெல்,பருத்தி உள்ளிட்ட பயிர்களை பயிரிடும் பரப்பளவு அதிகரித்து வருகிறது. இதனால், நடப்பு பயிர் பருவத்தில், உணவு தானியங்களின் விளைச்சல் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தேசிய வானிலை ஆய்வு மையம், அதன் முன்கூட்டிய மதிப்பீட்டில், ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில், நாட்டில் பருவமழை பொழிவு, வழக்கத்தை விட குறைவாகவே இருக்கும் என்று தெரிவித்திருந்தது. மேலும், ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை, ஒட்டுமொத்த அளவில் பருவமழை பொழிவில் சராசரியாக 4 சதவீதம் பற்றாக்குறை உண்டாகும் என்று மதிப்பிட்டிருந்தது.இந்நிலையில், கடந்த சில வாரங்களாக நாட்டில் பரவலாக நல்ல அளவில் மழை பொழிந்து வருகிறது. குறிப்பாக, பஞ்சாப், ஹரியானா, மேற்குஉத்தரபிரதேசம் ஆகிய வட மேற்கு மாநிலங்களில் வழக்கத்தை விட 74 சதவீதம்கூடுதலான மழை பொழிவு பதிவாகியுள்ளதாக, தேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், நெல், கோதுமை, கரும்பு உள்ளிட்ட முக்கிய உணவுப் பயிர்கள் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளது.சென்ற வெள்ளிக்கிழமை வரையிலுமாக, நாட்டின் மழை பொழிவு, வழக்கத்தை விட 26 சதவீதம் அதிகமாக இருந்ததாக, இம்மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், நெல்,மக்காச்சோளம் உள்ளிட்டவற்றை அதிக அளவில் பயிரிட்டு வரும் கிழக்கு பிராந்தியத்திலும், கடந்த வாரம், வழக்கத்தை விட 36 சதவீதம் அதிக மழை பொழிந்துள்ளது.
வரும் வாரங்களிலும், பருவ மழை சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நாடு முழுவதும் உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு அதிகரித்து வருகிறது.பருவமழை வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என்ற முந்தைய கணிப்பின் அடிப்படையில், விதைப்பு பணிகளில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த விவசாயிகள், தற்போது ”று”றுப்பாக வேளாண் பணிகளில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.இதனால் வரும் வாரங்களில், நாட்டின் உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு கணிசமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய வேளாண் அமைச்சகத்தின் அண்மை கால மதிப்பீட்டின்படி, பருப்பு வகைகள் தவிர, இதர உணவு தானியங்கள் பயிரிடும் பரப்பளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மதிப்பீட்டின்படி, சென்ற 19ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் நெல் பயிரிடும் பரப்பளவு 3.22 கோடி எக்டேராக உள்ளது. இது, சென்ற ஆண்டு இதே காலத்தை விட 8.36 சதவீதம் (2.99 கோடி எக்டேர்) அதிகமாகும்.எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு 2.63 சதவீதம் அதிகரித்து, 1.65 கோடி எக்டேரில் இருந்து 1.69 கோடி எக்டேராக உயர்ந்துள்ளது. நிலக்கடலையின் பங்களிப்பு குறைந்ததால், எண்ணெய் வித்துக்கள் பயிரிடும் பரப்பளவு மிகக் குறைந்த அளவிற்கே உயர்ந்துள்ளதாக வேளாண் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். மதிப்பீட்டு காலத்தில், நிலக்கடலை பயிரிடும் பரப்பளவு 40.60 லட்சம் எக்டேராக இருந்தது. இது, கடந்த ஆண்டு இதே காலத்தில் 49 லட்சம் எக்டேராக இருந்தது.அதேசமயம், கரும்பு பயிரிடும் பரப்பளவு 4.76 சதவீதம் அதிகரித்து 49.3 0 லட்சம் எக்டேரில் இருந்து 51 லட்சம் எக்டேராக உயர்ந்துள்ளது. பருத்தி பயிரிடும் பரப்பளவும் 9.37 சதவீதம் உயர்ந்து 1.06 கோடி எக்டேரில் இருந்து 1.17 கோடி எக்டேராக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும், கரும்பு மற்றும் பருத்தி பயிரிடும் பரப்பளவு கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது. எனினும் பருப்பு மற்றும் கம்பு,சோளம் போன்ற பயிர்களின் பரப்பளவு குறைந்துள்ளது. பருப்பு வகைகள் பயிரிடும் பரப்பளவு 11.03 சதவீதம் குறைந்து 1.16 கோடி எக்டேரில் இருந்து, 99 லட்சம் எக்டேராக சரிந்துள்ளது.

நடப்பாண்டு நெல் சாகுபடி பரப்பு 4.20 -4.30 கோடி எக்டேராக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த 2008-09ம் ஆண்டு இந்தியாவின் நெல் உற்பத்தி, 10 கோடி டன் என்ற சாதனை அளவைஎட்டியது. வறட்சி காரணமாக, அடுத்து வந்த ஆண்டுகளில் நெல் உற்பத்தி குறைந்திருந்தது. 2009 - 10ம் ஆண்டு நாட்டின் நெல் உற்பத்தி 8.90 கோடி டன்னாகவும், 2010-11ம் ஆண்டு 9.40 கோடி டன் என்ற அளவிலும் இருந்தது.சென்ற நிதியாண்டில், நாட்டின் வேளாண் உற்பத்தி, மதிப்பீடுகளை விஞ்சி 6.6 சதவீதம் அதிகரித்து, 23.59 கோடி டன் என்ற சாதனை அளவை எட்டியது என்பது குறிப்பிடத்தக்கது.அணைகள் நிரம்புகின்றன: கடந்த வார நிலவரப்படி, பருவ மழை பொழிவு பரவலான அளவில் உள்ளதால், நாட்டில் உள்ள 81 முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைகளில், கடந்த ஆண்டு, இதே காலத்தில் காணப்பட்டதை விட 137 சதவீதம் அதிகமாக நீர் இருப்பு உள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல அளவில் மழை பெய்து வருவதால், உபரி நீர் வரத்தால் தமிழக அணைகளிலும் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.தமிழ்நாட்டில், இவ்வாண்டு வேளாண் உற்பத்தி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...