தனக்குக் கிடைத்த வாழ்க்கைத் துணையைப் பற்றி தம்பதிகளில் யாருக்கும் குறை இருக்கத் தேவையில்லை. உங்கள் வாழ்க்கைத் துணையை நீங்களேதான் தேடிக் கொண்டீர்கள். அது எப்படி?
எத்தகு தகப்பனுக்கும் தாய்க்கும் கருவாக அமைந்து.
தன் வாழ்க்கையில் எத்தகு இன்ப துன்பத்தை அனுபோகிக்க வேண்டும் என்ற கரு அமைப்பு இருக்கிறதோ, அத்தகு உடலைத்தான் உங்கள் தாய் வயிற்றில் உங்கள் உயிரானது அடிமன நிலையில் இருந்து கட்டிக் கொண்டது.
அதேபோல, கருமைப்பைக் கொண்டும், பிறந்த பின்னர் இதுவரை நீங்கள் அமைத்துக் கொண்டுள்ள மனத்தின் தரத்தைக் கொண்டும், உங்களுக்கு வாழ்நாளில் என்ன இன்ப துன்பம் வரவேண்டுமோ, அதற்கேற்ப உங்கள் வாழ்க்கைத் துணைவர் வருகிறார்.
அவரை உங்கள் உயிரே - அடிமனமே தேர்ந்தெடுத்து, அது பல பேர் மனத்தில் பிரதிபலித்து, அவர்கள் என்னவோ முயற்சி எடுப்பது போல் சில நடவடிக்கைகள் நடந்தேறி, உங்களுக்கேற்ற அந்த வாழ்க்கைத் துணைவர் வருகிறார்.
எனவே, உங்கள் வாழ்க்கைத் துணைவர் மீது குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை. அவரிடம் உள்ள குற்றங்களுக்காக நீங்கள் யார் மீதாவது குறைபட்டுக் கொள்ள வேண்டுமானால் அது உங்கள் மீதேதான்.
எனவே, இந்தத் தத்துவத்தை நீங்கள் தெரிந்து கொண்டு, உங்கள் வாழ்க்கைத் துணைக்குத் தகுந்த மதிப்பளித்து வாழ வேண்டும். அதை விடுத்து, கணவன் மனைவியர் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டிருந்தால், அந்தச் சூழ்நிலையில் வளரும் குழந்தைகளின் குணமும் ஊனமுற்று அவர்கள் வாழ்க்கையில் பல குறைகள் தோன்ற ஏதுவாகும்.
வாழ்க்கைத்துணை குற்றத்தை
பெரிதுபடுத்தாமையும்,
பொறுத்தலும்,
மறத்தலும் அமைதிக்கு வழிகளாகும்.
அதேபோல், கடுஞ்சொற்களையும் அவை சொல்லப்படாதது போல் பாவித்து, ஒதுக்கி விட வேண்டும். அப்போதுதான் அமைதி பிறக்கும்.
தன் கருத்து சரியேயாயினும், உயர்வேயாயினும், வாழ்க்கைத் துணை ஒத்துக் கொள்ள வில்லையேன்றால் அது எவ்வளவு அவசியமான கருத்தானாலும் - ஞானமேயானாலும் - சிறிது காலத்திற்கு, அவர்கள் ஒத்துக்கொள்ளும் வரை, தள்ளி வைக்க வேண்டியதுதான்.
குடும்ப அமைதியை இழந்து பெறுவது - அது ஞானமேயாயினும் - அதனால் ஒரு பயனும் வராது.
- வேதாத்திரி மகரிஷி
No comments:
Post a Comment