இப்போது எல்லாருடைய வீடுகளிலும் பெரும்பாலும் சமையலுக்குப் பயன்படுத்துவது ரீஃபைன்டு ஆயில் என அழைக்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள்தான். ஒருமுறை அல்ல, இரண்டு முறை சுத்திகரிக்கப்பட்ட ஆயில்கள் கூட பயன்படுத்தப்படுகின்றன.
எண்ணெய்களைச் சுத்திகரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வேதிப் பொருள்கள் உடல்நலத்திற்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்துபவை.
இன்றைய காலத்தில் பரவலாக இருக்கும் புற்றுநோய், மூட்டுவலி போன்றவற்றிற்கு இந்தச் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களைப் பயன்படுத்துவதும் ஒரு காரணம்" என்கிறார் ஈரோடு சத்தியம் ஏஜென்சி மற்றும் என்விரோ ஈகோ சிஸ்டஸ்டம்ஸைச் சேர்ந்த எஸ்.மூர்த்தி சத்யராஜ். டெக்ஸ்டைல் டெக்னாலஜி கற்ற அவர் மூலிகை ஆராய்ச்சியிலும் நிபுணர். மூலிகைகளைக் கொண்டு சமையல் எண்ணெய்களைச் சுத்திகரிக்கும் முறையைக் கண்டுபிடித்துள்ள அவரிடம் பேசினோம்.
இப்போது எல்லாரும் ரீஃபைன்ட் ஆயிலையே பயன்படுத்துகிறார்கள். அப்படியிருக்க அதைப் பயன்படுத்தக் கூடாது என்று சொல்கிறீர்களே?
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு நமது நாட்டில் அல்சர், புற்றுநோய் போன்ற நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. இந்தியாவில் 40 சதம் பேருக்கு மூட்டுவலி உள்ளது. இதற்குக் காரணம் நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் ரீஃபைன்ட் ஆயில்கள்தாம்.
சமையல் எண்ணெயை எப்படிச் சுத்திகரிக்கிறார்கள் என்று பார்த்தால் நான் சொன்னதில் உள்ள உண்மை தெரியவரும்.
இயற்கையாகக் கிடைக்கும் எண்ணெயில் உள்ள நிறத்தையும், அதன் கொழகொழப்புத் தன்மையையும், கொழுப்புச் சத்தையும் நீக்குவதையே சுத்திகரிப்பது என்கிறார்கள்.
இதற்கு அவர்கள் சோப்புத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் காஸ்டிக் சோடா என்ற சோடியம் ஹைடிராக்ஸைடு, அடர் கந்தக அமிலம், பிளிச்சிங் பவுடர் போன்றவற்றை எண்ணெயில் சேர்க்கிறார்கள்.
காஸ்டிக் சோடா எண்ணெயில் உள்ள கொழுப்பைப் பிரித்து சோப் ஆயிலாக மாற்றிவிடுகிறது. அந்த சோப் ஆயிலைத் தனியே நீக்கிவிடுவார்கள். எண்ணெயின் நிறத்தைப் போக்கவே பிளிச்சிங் பவுடர்.
இந்த வேதிப் பொருள்களையெல்லாம் நாங்கள் எண்ணெயில் இருந்து முற்றிலும் நீக்கிவிடுவோம் என்று ரீஃபைன்ட் ஆயில் தயாரிப்பவர்கள் சொன்னாலும், சிறிது வேதிப் பொருள்கள் நிச்சயம் தங்கி இருக்கவே செய்யும்.
அதுமட்டுமல்ல, உடலுக்கு நல்லது செய்யும் கொழுப்பையும் இந்தச் சுத்திகரிப்பு எண்ணெயிலிருந்து நீக்கிவிடும்.
சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயில் தங்கியுள்ள கந்தக அமிலம் மனித உடலில் உள்ள எலும்பைப் பலவீனம் அடையச் செய்துவிடும். நமது முன்னோர்களுடைய எலும்பின் வலுவை விட நமது எலும்புகள் வலுக்குறைவானவை. உடலில் கலக்கும் இந்த அமிலம் உடலின் திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் அல்சர், புற்றுநோய் ஏற்படுகிறது. இப்போது பதினைந்து வயதுள்ள ஒருவரின் முடி நரைத்து விடுகிறது. முடியின் இயற்கை நிறம் மாறிவிடுகிறது.
மூட்டுகளில் தேய்மானம் ஏற்படுகிறது. மூட்டுவலி ஏற்படுகிறது.
நமது மக்கள் ரீஃபைன்ட் ஆயில்களைப் பயன்படுத்திப் பழகிவிட்டார்கள். ரீஃபைன்ட் ஆயில் என்றால் அது சுத்திகரிக்கப்பட்ட ஆயில்; சுத்திகரிக்கப்பட்ட ஆயில் என்றால் அது சுத்தமான ஆயில் என்று நினைக்கிறார்கள். அதனால் மனித உடலுக்கு இந்த ஆயில்கள் செய்யும் கேடுகள் பற்றித் தெரிவதில்லை. கவலைப்படுவதுமில்லை.
சுத்திகரிக்கப்படாத எண்ணெய்களில் நிறைய கொழுப்புச் சத்து இருக்கிறது. உடலுழைப்புக் குறைந்துவிட்ட இக்காலத்தில் சுத்திகரிக்கப்படாத எண்ணெய்களைப் பயன்படுத்தினால் இதய நோய்கள் வந்துவிடாதா?
சுத்திகரிக்கப்படாத இயற்கைமுறையில் எடுக்கப்பட்ட சமையல் எண்ணெய்களால் மனித உடலுக்குக் கேடு எதுவும் இல்லை. நமது முன்னோர்கள் காலங்காலமாக இந்த எண்ணெய்களைப் பயன்படுத்தி நல்ல உடல் ஆரோக்கியத்தோடு இருந்தார்கள். "முன்னோர்கள் கடுமையான உடல் உழைப்பாளிகள்; எனவே அவர்களுக்கு இயற்கை முறை எண்ணெய் எதுவும் செய்யாது" என்று பலர் நினைக்கிறார்கள்.
இன்றைய நாளுடன் ஒப்பிடும் போது முன்பு உடல் உழைப்பு அதிகம்தான். உடல் உழைப்புக் குறைவு என்பதற்காக இப்போது இயற்கையான சமையல் எண்ணெய்களைப் பயன்படுத்த முடியாது என்று சொல்ல முடியாது.
உதாரணமாக கடலை எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள்.
கடலை எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் அது உடலுக்குத் தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைக்கிறது.
உடலுக்குத் தேவையான கொழுப்பைத் தருகிறது. உடல் எடை அதிகரிப்பதில்லை. புற்றுநோய், புற்றுநோய்க் கட்டி போன்றவற்றை வரவிடாமல் தடுக்கிறது. நல்ல ஆரோக்கியம் உள்ள ஒருவர் ஒரு நாளைக்கு 15 - 20 மி.லி. கடலை எண்ணெயைப் பயன்படுத்தலாம். அதேபோல் நல்லெண்ணையும் உடலுக்கு மிகவும் உகந்தது.
ரீஃபைன்ட் ஆயிலில் உள்ள லினோலிக் ஒமேகா 6 என்கிற பொருள் உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புச் சத்தை அழித்துவிடுகிறது. இதனால் பல்வேறு உடல்நலக் கேடுகள் உருவாகின்றன.
கடலை எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தினால் கொழுப்பு அதிகரிக்கும் என்று பயப்படத் தேவையில்லை. கடலை எண்ணையில் தயாரிக்கும் உணவுப் பொருள்களில் புளி சேர்த்துக் கொண்டால் அது கொழுப்பைக் கரைத்துவிடும். புளியை அளவாகச் சேர்த்துக் கொள்வதால் எந்தக் கெடுதலும் இல்லை. புளிப்புச் சுவையும் உடலுக்குத் தேவைதானே? உதாரணமாக புளிக்குழம்பு வைக்கும் போது வெந்தயம் போடுவார்கள். வெந்தயம் கசப்புச் சுவையுள்ளது. புளியின் தீமைகளை வெந்தயம் எடுத்துவிடும்.
அப்படியானால் பெரும்பாலான மக்கள் ரீஃபைன்ட் ஆயிலைப் பயன்படுத்துவது ஏன்?
இதற்கு என்ன சொல்வது? மக்கள் ரீஃபைன்ட் ஆயிலுக்குப் பழகிவிட்டதால்தான் அதைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். தெளிவாக, கொழகொழப்பாக இல்லாமல், வண்ணம் குறைந்து இருப்பதுதான் நல்ல எண்ணெய் என்று கருதுவது தவறு. எண்ணெய் என்றால் அதற்குரிய நிறம், குணம், மணத்துடன் இருக்க வேண்டும்.
நல்ல பதிவு.
ReplyDeleteஎண்ணெய் அதன் குணம் மணத்துடன் இருக்க வேண்டும் என்று சொல்வது மிகச் சரி.
Good, I shared the link in my blog...........Thanks.
ReplyDeletemigavum nandri nanbare
Delete