Search This Blog

Showing posts with label சித்தர்கள். Show all posts
Showing posts with label சித்தர்கள். Show all posts

Monday, July 30, 2012

நலமுடன் வாழ சித்தர் அருளிய எளிய 10 வழிகள்


உணவு:
1) சாப்பிடும் போது காய்ச்சிய நீரை அருந்துவது கூடுதல் நன்மை பயக்கும்.
2) பசுவின் பால், மோரையே அருந்த வேண்டும்; புளித்த தயிரை உண்ணலாம்
3) நெய்யை உருக்கி பின் சாப்பிட வேண்டும்
4) முதல் நாள் சமைத்த கறியை உண்ண வேண்டாம்
5) சாயங்கால நேரங்களில் உணவு உண்ண வேண்டாம்

பிற:
6) மலசலங்களை அடக்க வேண்டாம்
7) அடிக்கடியில்லாமல் மாதமொரு முறை மட்டுமே சுக்கிலத்தினை வெளியேற்றுவது நன்மை தரும்.
8) உணவு உட்கொண்ட உடனே உறவு கொள்ள வேண்டாம்
9) எண்ணெய் பதார்த்தங்களைச் சாப்பிட்டால் அந்நாளில் வெந்நீரில் குளிக்கவும்
10) இடது கையை தலைக்கு கீழாக வைத்து வடக்கு திசையைத் தவிர்த்து ஒருக்களித்து உறங்கவும்


Tuesday, July 03, 2012

என்றும் இளமை - திருமூலர்



ன்றும் இளமையுடன் வாழ கடுக்காய் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.  ஒருவனுடைய உடல், மனம், ஆன்மா ஆகிய மூன்றையும் தூய்மை செய்யும் வல்லமை கடுக்காய்க்கு உண்டு என்று குறிப்பிடுகிறார் திருமூலர்.

கடுக்காயின் தாயகம் இந்தியா. இது மிகவும் பழமையான மரம். புராணங்களில் இம்மரத்தைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. கடுக்காயானது முட்டை வடிவிலோ அல்லது நீண்ட முட்டை வடிவத்துடனோ காணப்படும். கடுக்காயில் ஏழு வகைகள் உள்ளதென நமது சித்த மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன. அவை முறையே அபயன், விசயன், பிரிதிவி, சிவந்தி, அமுர்தம், ரோகினி, திருவிருதுதம் என்பதாகும். மேலும் மரங்கள், இடம், காயின் வடிவம், தன்மை இவற்றைப் பொறுத்து கருங்கடுக்காய், செங்கடுக்காய், வரிக்கடுக்காய், பால் கடுக்காய் எனப் பல வகைகள் உள்ளன.

அறு சுவையில் ஒரு சுவையான உப்பு தவிர்த்து துவர்ப்பு, இனிப்பு, புளிப்பு, கசப்பு, எரிப்பு ஆகிய ஐந்து சுவை நிறைந்த கடுக்காயில் வாத-பித்த-கப தன்மையை சீர்படுத்தும் சக்தி இருக்கிறது.  இதன் ஓங்கி நிற்கும்சுவை துவர்ப்பாகும். நமது உடம்புக்கு அறுசுவைகளும் சரிவரத் தரப்பட வேண்டும். எச்சுவை குறைந்தாலும் கூடினாலும் நோய் வரும். நமது அன்றாட உணவில் துவர்ப்பின் ஆதிக்கம் மிகவும் குறைவு. துவர்ப்பு சுவையே ரத்தத்தை விருத்தி செய்வதாகும். ஆனால் உணவில் வாழைப்பூவைத் தவிர்த்து பிற உணவுப் பொருட்கள் துவர்ப்புச் சுவையற்றதாகும்

கடுக்காய் அனைத்து நாட்டு மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். இரவு படுக்கச் செல்வதற்கு முன்பு 5 கிராம் கடுக்காய் தூள் எடுத்து சூடான நீரில் கலந்து பருகவேண்டும். இஞ்சி, சுக்கு, கடுக்காயை ஒரு மண்டலம் எனப்படும் 48 நாட்கள் காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் மேலே குறிப்பிட்டதுபோல் உட்கொண்டால் நன்றாக ஜீரணமாகும். ஜீரணம் ஆன பின்பு மலமும் நன்றாக வெளியேறும்.

கடுக்காயின் விதைப் பகுதி நஞ்சு போல் பாவிக்கப்படுவதால் அதை நீக்கிவிட்டு பயன்படுத்த வேண்டும்.

காலையில் இஞ்சி...
நண்பகல் சுக்கு...
மாலையில் கடுக்காய் மண்டலம் உண்ண
கோலை ஊன்றி குழைந்து நடந்தவர்
கோலை வீசி குலாவி நடப்பரே..
                                    - சித்த மருத்துவ பாடல்

இதன் பயன்கள் :

ஜீரண சக்தி அதிகரிப்பு, இளமை பாதுகாப்பு, புத்தி சக்தி மேம்பாடு, ஐம்புலன்களுக்கும் சக்தி தருதல் ஆகியவை உள்ளன. கனமான தொடைப்பகுதியை சுருக்குதல், தோல்வியாதியை குணப்படுத்துதல், மண்ணீரல் சக்தியை மேம்படுத்துதல், உடல் வீக்கங்களை போக்குதல், சுவாசநோய்களை கட்டுப்படுத்துதல், ரத்த நாள அடைப்பை நீக்கி இதயத்தை வலுப்படுத்துதல் போன்ற பல பலன்களை கடுக்காய் தருகிறது.

நன்றி: சில பகுதிகள் சித்தர்களைப் பற்றிய வலைத்தளங்களிலிருந்தும், தினமலர் பத்திரிக்கையிலிருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளன 


Thursday, January 26, 2012

எமனை விரட்ட சித்தர் சொல்லும் வழிகள்



பதினெட்டுச் சித்தர்களில், `தேரையார்'  எமனை விரட்டுவதற்கு சில வழிகளைச் சொல்கிறார். அந்தப்பாடல்களும் பொருளும்:
பாடல் 1

`பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம்.
பகல் புணரோம்; பகல் துயிலோம்; பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;
இரண்டடக்கோம்; ஒன்றை விடோம்; இடதுகையிற் படுப்போம்.
மூலஞ்சேர் கறினுகரோம்; மூத்ததயிர் உண்போம்.
முந்நாளில் சமைத்தகறி அமுதெனினும் அருந்தோம்.
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்,
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
பொருள்
பாலுணவை உண்ணுவோம்! எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும், வாசக் குழலினை உடைய பொது மகளிரோடும் உடல் உறவு கொள்ள மாட்டோம்; காலை இளம் வெயிலில் அலைய மாட்டோம். மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம்; படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம். முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்றிருப்பினும், அதனை மறுநாள் உண்ணுதல் செய்ய மாட்டோம்; பசிக்காத போது உணவருந்தி, உலகமே பரிசாகக் கிடைப்பதெனினும் ஏற்க மாட்டோம்; பசித்த பொழுது மட்டும் உண்ணுவோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்;
பாடல் 2
`உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்;
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய காயருந்தல் செய்யோம்;
நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயில்வோம்;
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
பொருள்
ஒரு நாளைக்கு இரண்டு பொழுது மட்டும் உண்போம்; இரவில் நன்றாகத் தூங்குவோம்; பகலில் தூங்க மாட்டோம்.பெண்ணின்பால் உடலுறவை மாதம் ஒரு முறை மட்டும் வைத்துக் கொள்வோம். உணவு உண்ணும் போது தாகம் அதிகம் இருப்பினும் இடையிடையே நீரினைப் பருக மாட்டோம்; வாழைக்காயில் பிஞ்சுக்காய்களையே கறி சமைத்து உண்ணுவோம்; முற்றிய காய்களைக் கறி சமைத்து உண்ண மாட்டோம்; உண்டவுடனேயே சிறிது தூரம் நடத்தலாகிய பயிற்சியைச் செய்வோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்.
பாடல் 3
`ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருக்கால் பேதியுரை நுகர்வோம்;
தேறுமதி ஒன்றரைக்கோர் தரநசியம் பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம் சவலிவிருப் புறுவோம்;
வீறுசதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்;
விழிகளுக் கஞ்சனம்மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியில் முகரோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
பொருள்
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தை உட்கொள்வோம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தை உட்கொள்வோம்; ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய நோய் வராமல் தடுப்போம். வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்; மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இடுவோம்; மணம் வீசும் கந்தம், மலர் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகர்தலைச் செய்ய மாட்டோம். இவ்வாறு மருத்துவ விதிமுறைகளை நாம் மேற்கொண்டொழுகினால் எமன் நம்மை நெருங்க விரும்ப மாட்டான்; நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.
Related Posts Plugin for WordPress, Blogger...