கடலின் அடியில் என்ன இருக்கிறது? என்ற ஆர்வம் பலருக்கு மண்டைக் குடைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. கிரேக்கத் தத்துவ மேதையான அரிஸ்டாட்டில் கூட கடலுக்குள் பல சுவாரசியமான விஷயங்கள் இருப்பதாகக் கூறினார். அவரது சிஷ்யரான அலெக்சாண்டரும் கண்ணாடி பலூன் மாதிரி ஒன்றை உருவாக்கி, அதற்குள் உட்கார்ந்து கடலுக்குள் சிறிது தூரம் போய் பார்த்துவிட்டு வந்திருக்கிறார். அவர், பிரம்மாண்ட திமிங்கலம் ஒன்றைப் பார்த்தாராம்.
நிலத்தில் இருந்து கடலுக்குள் ஓரிரு மைல் வரை இருக்கும் பகுதியை கண்டங்களின் நிஜ எல்லை என்கிறார்கள். அதன் சராசரி ஆழம், 600 அடி. அதற்கு அப்பால்தான் நிஜக்கடல் ஆரம்பமாகிறது. `கான்டினென்டல் ஷெல்ப்' என்று சொல்லப்படும் கண்டங்களின் எல்லையில் இருப்பது வெறும் மூன்று சதவீதக் கடல்தான். அதற்கப்புறம்தான் 97 சதவீதக் கடல் இருக்கிறது. அப்பகுதியின் ஆழம் 13 ஆயிரம் அடியில் இருந்து தொடங்குகிறது. அப்பகுதியை `அவிஸ்' என்று அழைக்கிறார்கள். அங்கு கடல் சமவெளிப் பிரதேசம், ஏகப்பட்ட எரிமலைகள், படுகுழிகள், மலைத்தொடர்கள் எல்லாம் உள்ளன. கடலுக்கடியில் சூரிய ஒளி கூட 100 அடி வரைதான். அதற்குக் கீழே போகப் போக ஒளி மங்க ஆரம்பிக்கும். ஆயிரம் அடிக்கு மேல் கும்மிருட்டு ஆரம்பமாகிவிடும். அதில் ஆய்வு செய்வது சாதாரண விஷயமல்ல. எந்தவொரு உபகரணமும் இல்லாமல் மூச்சை மட்டும் அடக்கிக்கொண்டு கடலுக்கடியில் 285 அடி வரை போய் வந்திருக்கிறார் ஒருவர். அதுதான் கடலுக்குள் அதிகபட்சம் மூழ்கிய சாதனை.
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பிக்கர்ட் என்பவர், ஒரு சிறிய நீர்மூழ்கி ஒன்றைத் தயாரித்தார். அதற்குள் உட்கார்ந்துகொண்டு செங்குத்தாகக் கடலுக்குள் இறங்கினார். நான்கு மணி நேரம் தொடர்ந்து இறங்கியும் அவரால் கடலடித் தரையை எட்ட முடியவில்லை. அவர், கடலுக்குள் 5 மைல் தூரம் இறங்கியபின்னும் தரைப்பகுதி வரவில்லை. ஐந்து மணி நேரம் கழித்து, தரையைத் தொட்டுவிட்டேன் என்று அவர் வயர்லெஸ்சில் தகவல் அனுப்பினார். பசிபிக் பெருங்கடலில் அவர் இறங்கிய இடம், `மரியானா டிரெஞ்ச்'. அதன் ஆழம் சுமார் ஆறேகால் மைல்கள். அதாவது 35 ஆயிரத்து 808 அடிகள். எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 29 ஆயிரத்து 28 அடிகள்தான். அதிலிருந்தே இந்தக் கடல் பகுதி எவ்வளவு ஆழம் என்று புரிந்துகொள்ளலாம். மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட மிகவும் ஆழமான கடல் பகுதி இதுதான்.
No comments:
Post a Comment