Search This Blog

Saturday, August 22, 2015

அவன் ஒரு சரியான லூசு

"அவன் ஒரு சரியான லூசு"

இன்று பெரும்பான்மையோர் சர்வ சாதாரணமாய் உபயோகிக்கும் வார்த்தைகள் இவை. சாட்சிபாவமாய் உற்று நோக்கினால் கணக்கேயின்றி எண்ணங்களை உற்பத்தி செய்து வெளியிட்டுக்கொண்டேயிருக்கும் நம் மனதை விட பைத்தியக்காரன் வேறு யாரும் இல்லை. "பூப்பிளக்க வரும் பூற்றீசல் போல" என்ற பட்டினத்தாரின் வரிகளைப் போல....

மழைக்காலத்தில் பூமியிலுள்ள துளையிலிருந்து ஒன்றின் பின் ஒன்றாக வரிசையாக வந்துகொண்டேயிருக்கும் ஈசல் பூச்சிகளைப் போல மனம் அடுத்தடுத்து எண்ணங்களை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கிறது. உடலின் ஆற்றலில் பெரும்பகுதியை மனமே எடுத்துக்கொள்கிறது.... இல்லை...இல்லை.... திருடிக்கொள்கிறது. உடல் இயக்கத்தை வேகமாக்கினால் மனதிற்கு ஆற்றல் செல்வது தடுக்கப்பட்டு விழிப்புணர்விற்கு முழு ஆற்றலும் மடைமாற்றம் செய்யப்படும்.

ரஷ்ய ஞானி குர்ஜிஃப் (gurdjieff)    இதற்கென சில உடல் அசைவு நடனங்களை வகுத்துக் கொடுத்திருக்கிறார்.  Gurdjieff movements என இதற்குப் பெயர். இந்த அசைவுகளை மேற்கொள்ளும் போது ஆற்றல் முழுவதும் விழிப்புணர்வுக்குத் திருப்பி விடப்படும்.  நீங்கள் கடந்த காலத்திலோ எதிர்காலத்திலோ சஞ்சரிப்பதற்கான எல்லா சாத்தியக்கூறுகளையும் இந்த அசைவுகள் அடைத்துவிடும்.

இங்கு இப்போது மட்டுமே நீங்கள் இருக்கமுடியும். அதாவது மனமற்ற நிலை.

தீராத தாகம் இருந்தால் மட்டுமே இதை நாம் கற்றுக்கொள்ள முடியும். ஆனால் இதைச் சொல்லித் தருவதற்கான ஆசிரியர்கள் இங்கு மிக மிகக் குறைவு. குழந்தைப் பருவத்திலிருந்தே குர்ஜிஃப் அசைவுகள், சூஃபி நடனம், டைனமிக் தியானம் போன்றவற்றைக் கற்றுக்கொடுத்துவிட்டால்.... அந்தக் குழந்தை ஆசிர்வதிக்கப்பட்ட குழந்தையாய் மாறும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் கொள்ளத் தேவையேயில்லை.

ஆரம்பத்தில் உடலின் வேகமான அசைவுகளின்போது மட்டுமே சாத்தியமாகும் மனமற்ற நிலை, தொடர்ந்த பயிற்சியில் அசையாது அமர்ந்திருக்கும் நிலையிலும் கைகூடும்.

நண்பர்களே, பிரபஞ்சத்திலேயே மிகப்பெரிய சாதனையாக எல்லா ஞானிகளும் கருதுவது மனமற்ற நிலையைத்தான். இதை அடைந்து விட்டவனுக்கு உலக வாழ்க்கையின் வெற்றிகளெல்லாம் வெறும் குப்பைகளே.

அயராத விழிப்புணர்வே நம் தாகமாக இருக்கட்டும்.

#ராகவேந்தர்

2 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...