Search This Blog

Wednesday, February 09, 2011

குறட்டை குறைபாடா?


தூங்க ஆரம்பிக்கும்போதே மிகவும் அதிக ஓசையுடன் குறட்டையும் ஆரம்பித்துவிடுகிறதே, குறட்டை வருவது எதனால்? அது ஓர் ஆரோக்கியக் குறைபாடா? உடல் கோளாறுகளால் ஏற்படுகிறதா? மூக்கில் அறுவைச் சிகிச்சை பயன் தருமா? ஆயுர்வேத சிகிச்சை என்ன?
எஸ்.அனந்தராமன், புட்டபர்த்தி.

மூச்சுக் குழாய் மற்றும் நாக்குப் பகுதிகளில் உள்ள தசைகளின் சக்திக் குறைவினாலும், தொய்வினாலும், தூக்கத்தில் அவை தளர்வுற்று மூச்சுக் குழாயில் காற்று செல்லும்போது, அதன் பாதையில், அவை தொங்கி அங்கும் இங்கும் ஆடுவதால், குறட்டை ஒலி சத்தத்துடன் எழும்புவதாகக் கூறப்படுகிறது. அவை தளர்வுற்றுத் தொங்குவதற்கான பல காரணங்களில் முக்கியமாக உடல் பருமன் ஒரு காரணமாகலாம்.

கழுத்து மற்றும் மூச்சுக் குழாய்ப் பகுதிகளில் சேரும் அதிக தசைகள், படுக்கும்போது, உள்நோக்கி அமுங்குவதால், பிராண வாயுவிற்கு ஏற்படும் தடையினால், குறட்டை உருவாகிறது. புகை பிடிப்பவர்கள், தலையில் நீர் கோர்த்த நிலை உள்ளவர்கள், மதுபானம் அருந்தும் வழக்கமுடையவர்கள், தூக்க மாத்திரையை இரவில் சாப்பிடுபவர்களுக்கு குறட்டை ஏற்படும்.

அலர்ஜியைக் கட்டுப்படுத்த உதவும் அய்ற்ண் - ஏண்ள்ற்ஹம்ண்ய்ங் மருந்துகள், தொண்டையைச் சுற்றியுள்ள தசைநார்களைத் தளர்வுறச் செய்வதாலும், மூச்சுப் பாதையில் தடை ஏற்படுத்தி, குறட்டையை ஏற்படுத்தக்கூடும். தலையணையின் உயரம் அதிகமிருந்தால் கழுத்தில் முன்னோக்கிய அழுத்தம் கூடுவதாலும் குறட்டை ஏற்படக்கூடும். பாதிக்கப்பட்டுள்ள நபரின் முன்னோர்களுக்கும் குறட்டை விடும் பழக்கமிருந்தால், சிகிச்சை எளிதில் பலன் தருவதில்லை.

அதிக அளவிலும், அதிக நேரம் எடுத்துக் கொண்டும் இரவில் சாப்பிடுவது, பால், வெண்ணெய், தயிர் இரவில் சாப்பிடுவது, மதுபானம் அருந்துதல், தூக்க மாத்திரை, காப்பி குடித்தல் போன்றவற்றை இரவில் சாப்பிடுவதைத் தவிர்த்தால் குறட்டையையும் குறைத்துவிடலாம். மேலும் குறட்டையைத் தவிர்க்க, தொண்டையிலுள்ள தசைகளை வலுப்படுத்த வேண்டும்.

 நாக்கை இங்கும் அங்கும் சுழட்டுவதன் மூலமாகவும், எ,இ, ஐ, ஓ,யூ எனும் எழுத்துகளைச் சத்தமாக, ஒவ்வொன்றையும் மூன்றுமுறை அடிக்கடி உச்சரிப்பதாலும் நாக்கு மற்றும் தொண்டையிலுள்ள தசைகள் வலுப்பெறும். நாக்கின் நுனியை முன்பற்களின் பின்புறம் வைத்து, அப்படியே வாயின் மேற்கூரை வழியாக பின்னோக்கி மூன்று நிமிடங்கள் செலுத்தும் பயிற்சி நாக்கின் தசை வலிவைக் கூட்ட உதவும். வாயைத் திறந்து, தாடை எலும்பை வலப்புறம் அசைத்து 30 வினாடிகள் நிறுத்தவும். பிறகு இடதுபுறம் அசைத்து 30 வினாடிகள் நிறுத்தவும்.

தசைகள் வலுப்பெறும். வாயைத் திறந்து, தொண்டையின் பின்புறத்திலுள்ள தசைகளைத் தொடர்ந்து சுருக்கி விரிக்கவும். கண்ணாடியில் உள்நாக்கு மேலும் கீழுமாக ஆடுவதைக் காணலாம்.  பாட்டுப் பாடுவதன் மூலமாகவும், தொண்டைத் தசையை வலுப்படுத்தலாம். இவை அனைத்தும் குறட்டையைக் குறைக்க உதவும் உபாயங்களாகும். குறட்டையைக் கட்டுப்படுத்த மூக்கில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை நிறைவான பலனைத் தருவதில்லை. தசை நார்களை வலுப்படுத்துவதுதான் சிறந்த சிகிச்சை முறையாகும்.

குறட்டைக்கான ஏற்படுவது எதனால் என்பதற்கு ஆயுர்வேதம் கூறும்  ஒரு முக்கியக் காரணம், நெய்ப்பு எனப்படும் எண்ணெய்ப் பசை மூக்கு மற்றும் மூச்சுக் குழாய்ப் பகுதிகளில் குறையும் போது, அந்தப் பகுதிகளில் வறட்சியின் தன்மை கூடுகிறது. வறண்ட பாதையில் பிராண வாயு செல்லும் போது, அங்குள்ள சுவர்களில் மோதிச் செல்கிறது. இதனால் ஏற்படும் உரசல் குறட்டை ஒலியை எழுப்புகிறது.

இந்த நெய்ப்பைச் சம்பாதித்துக் கொள்வதற்கான சிறந்த வழி, காலையில் குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக இரும்புக் கரண்டியில்  வெதுவெதுப்பாக சூடாக்கிய நல்லெண்ணெய்யை ஊற்றி நிரப்பி, மூக்கினுள்ள 3-4 சொட்டுகள் விட்டுக் கொண்டு, வாயினுள்ளே நல்லெண்ணெய்யை நிரப்பிச் சிறிது நேரம் வைத்திருந்து துப்பி, கண்களின் புருவம், ரப்பைகளில் இளஞ்சூடான விளக்கெண்ணையைத் தடவி, நீவி விட்டு, முகத்தில் தேங்காய் எண்ணெய்யை இதமாகப் பூசி, கழுத்துகளின் மென்னிப் பகுதிகளில் வெதுவெதுப்பாக நல்லெண்ணெயைத் தேய்த்து, ஊறிய பிறகு இதமான வெந்நீரில் குளித்து, தலைப் பகுதியிலுள்ள பிசுக்கை அகற்ற, பச்சைப் பயறு மாவுடன் அரிசி வடித்த கஞ்சியைக் குழைத்து தேய்த்துக் குளிக்க வேண்டும். இது தோலிலுள்ள பிசுக்கை அகற்றி, உட்பகுதிகளில் உள்ள நெய்ப்பின் சேமிப்பை மிச்சப்படுத்தும்.

இப்படி எண்ணெய் தேய்ப்பதால், வேறு ஏதேனும் நன்மை உண்டா? என்றால் உண்டு. முகத்தின் வசீகரம் கூடும். தலையிலுள்ள ஐம்புலன்களும் தத்தம் தொழில்களில் திறம்பட வேலை செய்யும். முடி நன்றாகத் தலையில் வளரும். சிந்தனை எனும் சக்தியானது செயல் ஏற்றம் பெற்றுப் புத்தியைக் கூர்மையாக்கும். உறக்கம் இரவில்தானே வரும். விடியற்காலையில்தானே விலகும். குறட்டைச் சத்தம் எழுப்பாமல் இருக்க இது சிறந்த வழியாகும்.

பேராசிரியர் எஸ். சுவாமிநாதன், ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி, நசரத்பேட்டை } 600 123 (பூந்தமல்லி அருகே)
செல் : 9444441771No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...