Search This Blog

Thursday, September 24, 2015

A/c (Air conditioner) எளிமையான விளக்கங்கள்


புதிதாக ஏ.சி. வாங்குபவராக இருந்தால் உங்கள் வீட்டில் ஏ.சி. பொருத்தப்படவிருக்கும் அறையின் அளவை மனதில் வைத்துக் கொண்டு தேர்வு செய்யுங்கள். 1.5 டன், 2 டன், 3 டன் என்று நம் பயன்பாட்டுக்கு ஏற்ற ஏ.சி. மெஷின்கள் உள்ளன. 150 சதுர அடி கொண்ட அறையாக இருந்தால் 1.5 டன் அளவுள்ள ஏ.சி. போதுமானது. பெரிய ஹால் என்றால் 3 டன் தேவைப்படும்.ஏ.சி. வாங்கியதும், அதற்கேற்ற தரமான 'ஃப்யூஸ் ஒயர்', 'டிரிப்பர்' போன்றவற்றை பொருத்தவேண்டும். ஸ்பிளிட் ஏ.சி. 1.5 டன் எனில், 20 ஆம்ப்ஸ் ஒயரினால் ஆன ஃப்யூஸை பொருத்துங்கள்.இதேபோல் டிரிப்பரும் 20 ஆம்ப்ஸ் கொண்டதாக இருக்க வேண்டும். அப்போதுதான் மின் சப்ளையில் கோளாறு எற்பட்டாலும் டிரிப்பர் தானாக ஆஃப் ஆகி ஏ.சி-யைக் காப்பாற்றி விடும்.எல்லா ஏ.சி. நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சொல்லும் அட்வைஸ்... ஏ.சி. வாங்கி பொருத்தியதும், அது எப்போதும் 23 டிகிரிக்கு கீழ் வைக்கக்கூடாது. அதற்கும் குறைவாகக் கொண்டு போகும்போது ஏ.சி. அதிக பயன்பாட்டுக்கு உட்படுத்தப்படும். அப்போது கம்ப்ரஸர், காயில், ஏ.சி-க்கு செல்லும் ஒயர் என எல்லாப் பகுதியும் சூடாகிவிடும்.வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏ.சி-க்களை முன்று மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் சர்வீஸ் செய்யவேண்டும்.ஸ்பிளிட் ஏ.சி. எனில் 15 நாட்களுக்கு ஒரு முறை ஃபில்டரை கழற்றி தண்ணீரில் நன்கு சுத்தம் செய்து மாட்டுங்கள். இதனால், எந்தவித இடையூறும் இல்லாமல் குளுமையாக காற்று வரும்.

 • ஏ.சி. ஓடிக் கொண்டிருக்கும்போதே ரூம் ஸ்ப்ரே அடிப்பது மிகவும் தவறு. பெர்ஃப்யூம்கள் ஏ.சி.யின் உள்ளே இருக்கும் காயிலை பழுதாக்கிவிடும்,
 • நல்ல குளுமை வேண்டும் என்பதற்காக ஏ.சி. ஓடிக்காண்டிருக்கும்போதே ஃபேனை போடாதீர்கள்

Tuesday, September 22, 2015

அறநெறி வாழ்க்கை என்றால் என்ன?

இந்த சமுதாயத்தை மதித்து வாழ வேண்டும் என்ற அற நெறி 3 அம்சங்களைக் கொண்டதாக வேதாத்திரி மகரிஷி குறிப்பிடுகிறார்.
அ) ஒழுக்கம் - தனக்கோ, பிறருக்கோ, உடலுக்கோ மனதுக்கோ எக்காலத்திலும் எண்ணத்தாலும், சொல்லலும், செயலாலும் துன்பம் தராமல் இருப்பது
ஆ) கடமை -    மனிதர்கள் வாழும் காலத்தில் ஒவ்வொருவரும் சமுதாயத்திற்கு கடன்பட்டவர்களேயாவர். விவசாயி பயிர் விளைவிக்கவில்லையெனில் நமக்கு உணவில்லை. நெசவாளியில்லையெனில் நம்மை அழகுபடுத்த ஆடையில்லை; கணணிப் பொறியாளர் இல்லையெனில்
சொகுசான வாழ்க்கைமுறை நமக்கு இல்லை. இவ்வாறாக சமுதாயத்திற்குக் கடன் பட்டுள்ளோம். இக் கடனை நேர்மையான முறையில் தன் உழைப்பு, அறிவு இவற்றால் தீர்க்க வேண்டும். இதுவே கடமை எனப்படுகிறது.
இ) ஈகை - இது என்னவென்றால் பிறர் துன்பத்தினைப் போக்குவது 


Sunday, September 13, 2015

குழந்தைப் பிறப்பு ரகசியங்கள்

ஒரு பெண் கருத்தரிக்க மாதத்தில் 3 நாட்கள் உகந்தவை. அவர்களுக்கு பொதுவாக 28 நாட்கள் மாத சுழற்சி [Monthly Period] வரும். இதில் முதல் 4 நாட்கள் மாத விலக்கு. 

5ம் நாளிலிருந்து 14ம் நாள் வரை சினைப் பையிலிருந்து [Ovary] ஒரு முட்டை வளரத் தொடங்கும். நன்கு வளர்ச்சியடைந்த முட்டை சினைபையிலிருந்து பெல்லொபியன் குழாய் [Fallopian Tube] வழியாக கருப்பைக்கு [Uterus] வரும். இவ்வாறு வரும் நாள்தான் Ovulation day எனப்படுகின்றது. [சிலருக்கு மாத சுழற்சி நாள் அதிகமாக இருப்பின் வளர்ச்சியடைந்த முட்டை கருப்பைக்கு வரும் நாள் மாறுபடும்]  

இம் முட்டை 2 / 3 நாட்களுக்கு கருத்தரிக்க ஏதுவாக இருக்கும். கருத்தரிக்க முடியாவிட்டால் முட்டை தளர்ச்சியடைந்து 28 நாட்களான பின் கலைந்து மாத விலக்காக வெளியேறி விடும். இம்மூன்று நாட்களில்  தந்தை தாயின் விந்து நாதத்தின் தூய்மை மற்றும் சக்தியைப் பொறுத்து நல்ல அறிவான, ஆரோக்கியமான குழந்தை பிறக்கிறது. மேலும் தாய், தந்தை எண்ணிய எண்ணங்கள், செயல்கள், அனுபவங்கள் அனைத்தும் வித்தின் மூலம் கருவுக்குச் செல்கிறது. இத்தருணத்தில்தான் உயிர் வாழ்க்கை தொடங்குகிறது; ஒரு செல் பல செல்களாக பரிணமிக்கிறது.

கருத்தரிக்கக்கூடிய அந்த 3 நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இதுவரை அப்பெண் என்ன செய்திருந்தாலும் அம்மூன்று நாட்களின் செயல்கள் முக்கியத்துவம் பெறுகின்றது. கருப்பையில் விந்து நாதக் கலப்பு ஏற்பட்டு குழந்தை 10 மாதம் வளர்கிறது


 • முதல் மாதம் | போல் கம்பமாகவும்
 • 2வது மாதத்தில் தலையும்
 • 3வது மாதத்தில் கால்களும்
 • 4வது மாதத்தில் மூக்கு, முகம் மற்ற உறுப்புகளும்
 • 5வது மாத்தில் காது, நாக்கு கண்களும்
 • 6வது மாதத்தில் நகமும்
 • 7வது மாதத்தில் நரம்பு, எலும்பு, மூத்திரப்பை, சுவாசப்பை, இதயம் ஆகியவை உருவாகின்றன. மேலும் மூச்சும் விட ஆரம்பிக்கிறது
 • 8வது மாதத்தில் கரு முழுமையடைகிறது
 • 9வது மாதத்தில் குழந்தை வெளியேற வசதியாக திரும்பும்
 • 10வது மாதத்தில் குழந்தை வேறு, கருப்பை வேறாகப் பிரியும். பின்பு குழந்தை பிறக்கும்


மனம் என்றால் என்ன?

 நம் உடலில் உயிர் ஓடிக் கொண்டிருக்கிறது. எப்படி கடல் நீர் காற்றால் அசைவதால் அலை உருவாகிறதோ அதுபோல் உயிரின் ஓட்டத்தால் ஓர் அலை எழுகின்றது. இதையே வேதாத்திரி மகரிஷி சீவ காந்த அலை என்கிறார். 

இச் சீவ காந்தம் ஐம்புலன்களின் (தோல், கண், காது,  வாய், மூக்கு) வழியே செல்லும் போது 5 உணர்வுகளாக (அழுத்தம், ஒளி, ஒலி,  சுவை, மணம்) தன் மாற்றம் அடைகின்றது. இவற்றை உணர மனம் தேவைப் படுகின்றது. இச்சீவகாந்தம் மூளை வழியே செல்லும் போது மனமாக தன் மாற்றம் அடைகின்றது. இம்மனம் இரண்டு செயல்களை செய்கின்றது. அவை: 

அ) சுருக்கி வைத்தல்: ஐம்புலன்களின் மூலம் பெற்ற  நமது அனுபவங்களை கருமையத்தில் பதிவுகளாக சுருக்கி வைத்தல் 

ஆ) விரித்துக் காட்டல்: அவற்றை தேவை, பழக்கம், சூழ் நிலைக்கேற்ப எண்ணங்களாக விரித்துக் காட்டல். 

 

முன் ஜென்ம வினைகள்

மது முன்னோர்களின் பாவ புண்ணியங்கள் நமக்கு கருத்தொடராக வந்து விடுகின்றன. வேதாத்திரி மகரிஷி மனிதர்களின் ஒவ்வொரு செயல்களும் அவர்களின் கருமையத்தில் பதிவு பெறும் என்கிறார்.  நம் முன்னோர்களின் பாவப்பதிவுகளால்  நாம் துன்பமடைவதை இளங்கோவடிகள்  ஊழ்வினை  உருத்து வந்து ஊட்டும் என்கிறார்.
 இந்த மாதிரியான முன்னோர்களின் பதிவுகளை நாம் கருவமைப்புப் பதிவுகள் [சஞ்தித கர்மம்] என்கிறோம்

நம் பிறப்பிற்குப் பிறகு நமது செயல்களால் பெறும் பதிகளை மேலடுக்குப் பதிவுகள் [பிராப்த கர்மம்] என்கிறோம். இவ்விரண்டு பதிவுகளும் சேர்ந்து ஒரு மனிதனின் அறிவாட்சித்தரமாக [Personality] அமைகிறது.  

கருவமைப்புப் பதிவுகளும், மேலடுக்குப் பதிவுகளும் இணைந்து நாம் விருப்பப்பட்டு புதிய செயல்களை செய்கொண்டிருப்பது  ஆகாம்ய கர்மம் எனப்படுகின்றது 


Saturday, September 12, 2015

தேர்ந்தெடுக்கும் திறன்தெரு நாய் ஒன்றை சிறிது நேரம் ஊன்றி கவனித்தேன்.   அது உறங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடங்களே ஆபத்து நிறைந்தவைகளாகவே இருந்தன.

நடு ரோடு,  காருக்கு அடியில், வீட்டு வாசல் போன்ற இடங்களையே அது தேர்ந்தெடுக்கிறது.

இது போன்ற இடங்களில் ஆழ்ந்த உறக்கம் கொள்வது இயலாது.  ஒவ்வொரு சப்தத்திற்கும் தலை உயர்த்திப் பார்க்க வேண்டியிருக்கிறது.  நீண்ட நிம்மதியான தூக்கம் என்பது அந்த நாய்க்குக் கிடையாது.  

கேட்டைத் திறந்தால், காரை ஸ்டார்ட் செய்தால், ஏதாவது வண்டிகள் வந்தால், எல்லாவற்றிற்கும் மேலாக ஏதாவது வாண்டுகள் கல்லெடுத்து அடித்தால் என எப்போதும் ஏதாவது ஒரு ஆபத்து அதற்குக் காத்துக்கொண்டிருக்கிறது.

ஆனாலும் நாய் அதுபோன்ற இடங்களையே தேர்ந்தெடுக்கிறது.   இங்கு தெரு நாய்களைப் போன்ற பாவப்பட்ட ஜீவன்கள் வேறெதுவும் கிடையாது.

“நாய அடிக்கற மாதிரி அடிச்சுப்போட்டுடுவேன்” என்பது சொல் வழக்கு.  இன்று தேசிய நெடுஞ்சாலைகளில் அடிபட்டுச் சாகும் பிராணிகளில் நாய்தான் முதலிடத்தில் உள்ளது.  அதை அடித்தால் கேட்பதற்கு யாருமே இல்லை.   

குடல் சிதறி, மூளை சிதறி இரத்த வெள்ளத்தில் இறந்து கிடக்கும் நாயின் உடல் மேல் அடுத்தடுத்து வாகனங்கள் ஏறி, பனிரண்டாம் வகுப்பில் ஹெர்பேரியத்திற்காக செம்பருத்தி போன்ற சில பூக்களைப் பறித்து, நோட்டுப் புத்தகத்தில் வைத்து அழுத்தி தட்டையாக்கி விடுவதைப் போல, அந்த நாயின் உடல் தரையோடு தரையாக தட்டையாக்கப்பட்டு தார் ரோட்டில் ஒட்டிக் கிடக்கும் காட்சிகள் நாம் அன்றாடம் காண்பவை.

இதற்குக் காரணம் நாயிடம் தேர்வு செய்யும் திறன் இல்லாததே.  எந்த இடத்தைத் தேர்வு செய்தால் யாருடைய தொந்தரவும் இன்றி நிம்மதியாக உறங்கலாம் என அதற்குத் தேர்ந்தெடுக்கத் தெரிவதில்லை.

நாம் மட்டும் என்ன? இளைத்தவர்களா?

மனிதர்களில் கூட பலருக்கு தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போவதால் அந்த நாயைப் போலவே நிம்மதியின்றி அலைகின்றனர்.

அந்தத் திறன் இல்லையானால் அது கிட்டத்தட்ட நாய் வாழ்க்கைதான்.   கடந்தகால அனுபவம், தற்கால சூழ்நிலை இவற்றைக் கொண்டு எதிர்கால விளைவு இப்படித்தான் இருக்கும் என்பதைக் கணித்து சரியானவற்றை தேர்ந்தெடுத்தால் அந்த நாயைப் போல துன்பப்பட வேண்டிய அவசியமில்லை.

இந்தத் திறன் இல்லாததால் மனிதன் செய்யும் தவறுகள் ஏராளம். வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் மிகப்பெரிய தவறு செய்கிறான்.  பின்பு வாழ்க்கையையே போர்க்களமாய் மாற்றிக் கொள்கிறான்.  

காதலின் போது இது தெரிவதில்லை.  ஒரு சாத்வீக குணம் கொண்டவன் ரஜோ குணப்பெண்ணை காதலித்து மணந்து கொள்கிறான்.  ஆண்-பெண் கவர்ச்சி மறைந்தவுடன் அங்கு உண்மை முகம் வெளிப்படத் தொடங்குகிறது.  வாழ்வு நரகமாகிறது.
ஒரு தொழில் துவங்கும்போது யாரோடு பார்ட்னர் சேரலாம் என்பதைத் தேர்ந்தெடுக்கத் தெரியாமல் பார்னர்ஷிப் தொழில் செய்து பின்னர் ஏமாந்துபோய் புலம்புகிறான்.

சிட்பண்ட்டில் யாரிடம் பணம் போடலாம் என்பதை தேர்ந்தெடுக்கத்தெரியாமல் யாரோ ஒருவரிடம் போட்டு ஏமாந்து போகிறான்.

சிட்பண்டில் யாரைச் சேர்க்க வேண்டும் எனத் தெரியாமல் பணத்தை எடுத்துக்கொண்டு ஊரை விட்டு ஓடி விடும் நபர்களைச் சேர்த்து அவதிப்படுகிறான்.

10 ரூபாய் வட்டி தருகிறேன் எனச் சொல்பவனிடம் பணம் கொடுக்கலாமா வேண்டாமா என முடிவெடுக்கத் தெரியாமல் பணம் கொடுத்து ஏமாறுகிறான்.

ஒருவரிடம் எந்த அளவுக்குப் பழகலாம் எனத் தெரியாமல் அளவுக்கு அதிகமாகப் பழகி முடிவில் அது விரோதத்தில் முடிகிறது.

வீட்டுக்குள் யாரை அனுமதிக்கலாம் என்பதை தேர்ந்தெடுக்கத் தெரியாமல் கயவர்களை அனுமதித்து துன்பத்தில் சிக்கிக் கொள்கிறான்.

இதுபோல இன்னும் ஏராளமாய் சொல்லிக் கொண்டே போகலாம்.

நாய் எப்படி தூங்குவதற்கு தேர்ந்தெடுக்கும் இடத்தை தவறாகத் தேர்ந்தெடுக்கிறதோ, விளைவுகளை அறியாமல் தேர்ந்தெடுக்கிறதோ, அதே போல்தான் நாமும் விளைவுகளை அறியாமல் பல விஷயங்களை செய்துவிட்டு விழிக்கிறோம்.

தேர்ந்தெடுக்கும் திறனை குழந்தைப் பருவத்திலிருந்தே வளர்த்துக்கொள்ளவேண்டும்.  நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறன் இருந்தாலே தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  

நமக்கு வரும் துன்பங்களில் பெரும்பாலானவை நாமே தேர்ந்தெடுத்துக்கொண்டவையே யொழிய இறைக்கும் அதற்கும் எந்த சம்பந்தமுமில்லை.  

எந்த அளவுக்கு நம் மனதில் பேராசை, சினம், பொறாமை, கடும்பற்று, உயர்வு-தாழ்வு மனப்பான்மை போன்ற குணங்கள் அதிகமாக உள்ளனவோ,  அந்த அளவுக்கு நம் தேர்ந்தெடுக்கும் திறன் குறைந்து போய் துன்பத்தில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு அதிகம்.  

உதாரணமாய் மிகக் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது பேராசை.  இந்தப் பேராசை பத்து ரூபாய் வட்டி தருபவனை நிச்சயமாய் உங்களிடம் ஈர்க்கும்.  மனம் முழுக்க பேராசை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்போது தேர்ந்தெடுக்கும் திறன் இல்லாமல் போய்விடும்.  பின்பு தவறான ஆளைத் தேர்ந்தெடுத்து துன்பத்தில் அகப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.  பத்து ரூபாய் வட்டி தருகிறேன் என்பவனே தவறான ஆள்தானே....

ஆகவே தியானத்தின் மூலம் நல்ல சிந்தனைத் திறனையும், நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் திறனையும் வளர்த்துக்கொண்டால், தேர்ந்தெடுத்தலில் தவறு நிகழ வாய்ப்பில்லை.  துன்பத்திற்கும் வாய்ப்பில்லை.

குழந்தைகளுக்கு இந்த நுட்பத்தை இப்போதிருந்தே கற்றுக்கொடுப்போம்.

#ராகவேந்தர்.

Friday, September 04, 2015

காமத்தைப் புரிந்துகொள்
காமம். இன்று 14 வயது தொடங்கி எல்லோர் மனதையும் ஆக்கிரமித்துக்கொண்டு பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பது. இது முற்றிலும் இயற்கையானது. 

ஆனால் இது தவறு என காலங்காலமாய் நீ போதிக்கப்பட்டிருக்கிறாய். நம் மதங்கள் பிரம்மச்சர்யத்தை மிகச் சிறப்பாய் வலியுறுத்துகின்றன.

ஆதி சங்கரரின் பஜ கோவிந்தத்தில் மூன்றாவது ஸ்லோகத்தில் சிற்றின்பம் அநித்தியமானது என்று கூறுகிறார்.

நாரீ ஸ்தனபர நாபி தேசம் 
த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸவஸாதி விகாரம்
மன்ஸி விசிந்திய வாரம் வாரம்

விளக்கம் :
பெண்களுடைய மார்பகத்தையும், சிற்றிடையையும் பார்த்து வெறியுடன் மோகம் கொள்கிறாய். ஆனால் அவையெல்லாம் வெறும் சதையின் விகாரத்தால் தோன்றும் அநித்திய தோற்றம் மட்டுமே என்பதை மனதில்தினம் தினம் சிந்தனை கொள்,

பட்டினத்தாரும் கூட மங்கையரின் வாய், மயிர், கண், அங்கம், யோனி முதலிய அனைத்தும் துர்நாற்றம் வீசும் தன்மையுடையது என பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

“வாய் நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மைஇடும் கண் பீநாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்சீ நாறும் யோனி அழல்நாறும் இந்திரியப் பேறு சிந்திப்பாய்நாறும் மங்கையர்க் கோ இங்ஙனே மனம் பற்றியதே?”

பாரதியும் கூட “மோகத்தைக் கொன்றுவிடு.. அல்லாள் எந்தன் மூச்சை நிறுத்திவிடு” எனப் பாடுகிறார்.

இப்படி காமத்தோடு காலங்காலமாய் நீ போரிட்டுக் கொண்டிருந்தாலும் கூட, கோடியில் ஒருவரால் கூட ஆதிசங்கரர், பட்டினத்தார் இன்னும் பல சித்தர்கள் கூறியதுபோல காமத்தை வெல்ல முடியவே இல்லை. இந்த கசப்பான உண்மையை நீ ஏற்றக்கொள்ளத்தான் வேண்டும்.

இயற்கையை எதிர்ப்பது மிக மிக முட்டாள்தனமானது. அதனோடு போரிட்டு ஜெயிப்பது என்பது இயலாது. மேல் மனதில் நீ காமத்தைக் குறித்து ஒரு அருவருப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். பிரம்மச்சர்யம் மேலானது என உன் மேல் மனதை நம்ப வைக்கலாம். ஒழுக்க விதிமுறைகளை சொல்லித்தரலாம். பிறன் மனை நோக்குதல் பாவம் என பதியவைக்கலாம்.

ஆனால் இந்த மேல்மனம் என்பது ஒட்டு மொத்த மனதில் ஒரு 10 சதவிகிதம்தான். மீதி தொன்னூறு சதவிகித அடி மனதை (Unconscious Mind) முழுக்க முழுக்க காமம் ஆட்சி செய்கிறது.

மனைவியோடு நீ காபி ஷாப் போகும்போது, எதிர் டேபிளில் ஒரு ஆழகிய பெண், தன் உடல் வடிவத்தை அப்பட்டமாய் வெளிக்காட்டும் டைட் ஜீன்ஸ், டீ சர்ட் உடை அணிந்து வந்தால் கண் அனிச்சையாய் அந்தப் பெண்ணை மேயத்தான் செய்யும். பெண்களுக்கும் அப்படித்தான். இது முழுக்க முழுக்க இயற்கையான அனிச்சை செயல். இப்படிச் செய்யா விட்டால் நீ ஒரு அசாதாரணன்.

இப்போது உன் ஒழுக்க விதிகள் எல்லாம் காற்றில் பறந்துவிடும். ஆனால் நீ அந்தப் பெண்ணைப் பார்க்காதது போல கபட நாடகம் ஆடுவாய். நீ ஒரு வேடதாரி. உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்.

இப்போது உன் மேல் மனதின் ஒழுக்க விதிகள் உன்னை குற்ற மனப்பான்மையில் ஆழ்த்தி விடும். அதற்காய் உன்னையே நீ வருத்திக்கொள்வாய்.

ஆக காமத்தைப் புரிந்து கொண்டு கடந்து சென்று விடுதலே நன்று.

ஒரு ஜீவனில் அதன் உயிரோட்டத்திற்கு அடிப்படையாக உள்ள ஜீவவித்துக் குழம்பு, இன்னொரு ஜீவனை உருவாக்க எத்தனிக்கிறது. இந்த எத்தனிப்பு உணர்வே காமம். இதைப் பற்றி உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி “அர்த்தமுள்ள அந்தரங்கம்” என்ற தன் புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

“என்னதான் மனித சமுதாயத்தின் வாழ்வியல் தேவைக்காக ஆணும், பெண்ணும் பாலியல் ஒழுக்கங்களைக் கடைபிடித்தாலும், மரபணுக்களைப் பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சமாச்சாரமே அதற்குத் தெரியாது. மரபணுவிற்குத் தெரிந்ததெல்லாம் தன்னைத் தானே முடிந்தமட்டும் அதிகமாக மறுமைக்கு கொண்டு போவதுதான். இதனால் அவை ஆண்களில் கூடுமானவரை அதிகப் பெண்களோடு கூடி வேகவேகமாக இனத்தைப் பெருக்கிவிடும் உத்வேகத்தைத் தூண்டுகின்றன. இதுவே பெண்களில் முடிந்த மட்டும் விதம்விதமான ஆண்களோடு கூடி மரபணுக்களை அபிவிருத்தி செய்து, தரத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தூண்டுகின்றன. இந்த மரபணுவின் வேக இனப்பெருக்கம், தரமான இனப்பெருக்கம் ஆகிய இரண்டு தூண்டுதல்களும் ஆணையும், பெண்ணையும் திருமணத்திற்கு வெளியே உறவு மேற்கொள்ளவும் உந்தின.” ஆக காமம் மரபணு சம்பந்தப்பட்டது.

இத்தகைய காமத்தோடு காலங்காலமாய் போரிட்டு நீ கண்ட பலன் என்னவென்றால் நீ ஒரு கபட வேடதாரியாக மாறியதுதான். ஒரு சமுதாயம் முழுக்க பொய் முக மூடி போட்டுக்கொண்டே அலைகிறது. உன்னை ஒழுக்கமானவனாகக் காட்டிக் கொள்ள நீ பற்பல முயற்சிகளை மேற்கொள்கிறாய். அன்றாட வாழ்வில் சமுதாயத்தில் நடக்கும் சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கும், மனிதனின் காமத்திற்கு எதிரான போருக்கும் மிகப்பெரிய தொடர்பிருக்கிறது.

உதாரணமாய்…….
இன்று தெருவில் யாரோ ஒரு ஆணும், பெண்ணும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக என் அருகில் நின்ற இரு பெண்கள் வதந்தி பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாத போதும் ஏன் இப்படி வாய் கூசாமல் பேசுகின்றனர்? இது எப்படி சாத்தியமாகிறது? காலங்காலமாய் காமத்தை தவறு என செய்த போதனையின் விளைவுதான் இந்த வதந்திப் பேச்சு.

ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தாலே “அவங்க ரெண்டுபேருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கு” என இருட்டுக்கடை திருநெல்வேலி அல்வா இலவசமாய் கிடைத்தது போல வதந்தி பேசி இன்புறுகிறாய். உண்மையில் இப்படி வதந்தி பேசுவதென்பது உன் மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வக்கிரக் காமத்தின் வெளிப்பாடு.

நீ சொல்வது உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. அது அவர்கள் பிரச்சனை. உனக்கு என்ன நஷ்டம்? அதனால் வரும் விளைவுகளுக்கு அவர்கள் தானே பொறுப்பு. அதை நீ ஏன் பெரிதுபடுத்திப் பேசுகிறாய்? சற்று யோசித்துப் பார். உன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தின், பொறாமையின் வெளிப்பாடுதான் இது. உண்மையில் உன் அடிமனதில் பற்பல வக்கிரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவை உனக்கு ஒரு குற்ற உணர்வைத் தருகின்றன. நீ வெளிப்பட்டு விடுவாயோ என்ற பயம் உன்னை ஆக்கிரமித்துக் கொள்கிறது. உன் குட்டு உடைந்து விடுமோ என அஞ்சுகிறாய். அடுத்தவனை இப்படிப் பேசுவதன் மூலம் உன் அசிங்கங்களை மறைக்க முயலுகிறாய்.

நீ ஒழுக்கமானவன் என காட்டிக் கொள்ள கடும் முயற்சி செய்கிறாய். உண்மையில் உன் மனதில் யாருக்கும் தெரியாமல் நடந்த கற்பழிப்புகள் எத்தனை எத்தனை? உடலளவில் இல்லையெனினும் மனதளவில் நீ எத்தனை பேரோடு உறவு கொண்டிருக்கிறாய்? இந்த உண்மைகளை உன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. உடனே, “நான் ஒரு ஏக பத்தினி விரதன்/விரதி. இந்த இப்பிறவிக்கு இரு மாதரை/ஆடவரை சிந்தையாலும் தொடேன்” என வசனம் பேசுவாய். காமத்தில் நிறைவு அடையாத ஒருவரால் தான் இப்படி யாரைப் பார்த்தாலும் தவறாகப் பேச இயலும்.

இது போல சமுதாயத்தின் பற்பல பிரச்சனைகளுக்கும் மிகப்பெரும்பாலும் அடிப்படைக் காரணமாய் இருப்பது காமமே

காமம் கடந்து விட்ட ஒருவனுக்கு, இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவன் யாரையும் தவறாகக் கருதுவதேயில்லை. காமத்தை இயற்கையானது என ஏற்றுக்கொள்ளாமல், அதை எதிர்த்துப் போரிடுவதால், கபட நாடகமாடும் இத்தகைய மிக இழிவான மனநிலையைத்தான் நீ பெற்றிருக்கிறாய். இதுவே பன்நெடுங்கால போதனையின் விளைவு.

ஓஷோ இத்தகைய கபட வேடதாரிகளைப் பற்றியும், அவர்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், “காமத்திலிருந்து கடவுளுக்கு” என்ற புத்தகத்தில் மிக விரிவாகப் பேசுகிறார்.

நான் இப்போது உன்னைக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். முதலில் உன்னை நீ முழுமையாக ஏற்றுக்கொள். என்னுள் காமம் இருக்கிறது என ஒத்துக்கொள். அது இயற்கையானது என உணர்ந்துகொள். அந்த வக்கிரக் காமத்தோடு உன்னை நீயே அங்கீகரித்துக் கொள். கபட வேடம் போடுவதை நிறுத்து. உன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் முட்டாள் தனமான முயற்சியைக் கைவிடு. பிறகு காமத்தை கடப்பது இலகுவாகும். அதற்கான வழி உன்னுள்ளேயே ஒளிரத் தொடங்கும். உன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்.


Related Posts Plugin for WordPress, Blogger...