Search This Blog

Saturday, March 24, 2012

ஒரு திருட்டுப் பையனும் சில கடிதங்களும்...இது ஒரு வித்தியாசமான கதை. படிச்சுப் பாருங்களேன்....
---------------------------------------------------------
ருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த அந்தத் தனி வீட்டை ஒரு மாத காலமாகக் கண்காணித்து வந்த அவனுக்கு இன்றுதான் எண்ணம் ஈடேறியது. ஆம். அவன் எதிர்பார்த்தபடியே அந்த வீட்டில் இருந்தவர்கள் அனைவரும் இன்று காலையில் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்கள். இந்தத் தருணத்துக்காகத்தானே காத்திருந்தான்? ஆனாலும் இது நேரமல்ல என்பதால், இரவு வரை பொறுமை காத்தான். தன் ஆசைகள் நிறைவேறப் போவதை எண்ணிக் களித்திருந்த அவனுக்கு அன்றைய பொழுது போனதே தெரியவில்லை.


இரவு மணி பத்து இருக்கலாம். அவன் மெல்ல அவ் வீட்டை நெருங்கினான். சுற்றிலும் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டான். நிசப்தமே நிலவியது எங்கும். முன்வாசல் கேட்டை நெருங்கியவன் மீண்டுமொரு முறை திரும்பிச் சுற்றிலும் பார்த்துவிட்டு, படாரென எகிறிக் குதித்து உள்ளே போனான். தலைவாசல் கதவை நெருங்கிப் பூட்டை ஒருமுறை உற்றுப் பார்த்தான். சரியான பழங்காலத்து திண்டுக்கல் பூட்டு. அதைத் திறப்பது அத்தனை சுலபமில்லை. இருந்தாலும் முயற்சியைக் கைவிடவில்லை. கைவசமிருந்த அத்தனை ஆயுதங்களையும் உபயோகித்து அந்த இருட்டில் அப்பூட்டைத் திறப்பதற்குள் போதும் போதுமென்றானது. வியர்த்துக் கொட்டியது. ஒருவழியாகப் பூட்டைத் திறந்து கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றவனுக்கு அதிர்ச்சி.


 "வருக! வருக! இவ்வில்லத்துக்கு அதிதியாக வருகை தந்த நண்பரை அன்புடன் வரவேற்கிறோம்!' என்ற வாசகம் தாங்கிய பலகையொன்று மின் விளக்கின் ஜொலிப்புடன் அவனை வரவேற்றது. சற்று மிரண்டு போனவன், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு திரும்பி முன்வாசற் கதவை உட்புறமாகத் தாழிட்டுவிட்டு மீண்டும் திரும்பி அப்பலகையைப் பார்த்தான்.
 அதில் மேலும் கீழ்க்காணுமாறு எழுதப்பட்டிருந்தது.
”நண்பரே, நீங்கள் வயிற்றுப் பசிக்காக இங்கு வந்தீர்கள் என்றால் சமையலறைக்குச் செல்லுங்கள்'ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வந்தீர்களென்றால் படுக்கை அறைக்குள் செல்லுங்கள்'"வாழ்க்கையில் நிரந்தரமாகச் செட்டிலாக விரும்பி வந்திருந்தால் இருப்பு அறைக்குள் செல்லுங்கள்' உங்கள் முயற்சி திருவினையாகட்டும். வாழ்த்துக்கள்' என்றிருந்தது.


மணி பதினொன்றாகப் போகிறது. நல்ல பசியும் கூடத்தான். பாழாய்ப் போன இந்தப் பூட்டைத் திறப்பதற்குள் சாப்பிட்ட புரோட்டாவே ஜீரணமாகிவிட்டது. படுக்கையறையும் இருப்பறையும் எங்கே போய்விடப் போகின்றன? பின்னர் பார்த்துக் கொள்ளலாம். முதலில் சமையலறை சென்று நன்றாகச் சாப்பிட்டு பசியாற்றிக் கொள்ளலாம். இவ்வளவு அக்கறையுடன் எழுதி வைத்து விட்டுப் போனவன் நல்ல சாப்பாடும் செய்து வைத்திருப்பான். ஒரு கை பார்த்துவிட்டுத்தான் அடுத்த வேலை! என்று எண்ணியவன் சமையலறை நோக்கி நடந்தான்.
"பசி வந்தால் பத்தும் பறந்து போகும்' என்பார்களே, அவனும் ஒரு கணம் தன் வேலையையும் வந்த சூழலையும் மறந்து சமையலறைக்குள் நுழைந்தான். கூடவே அவனுக்கு ஒரு சந்தேகமும் வந்தது. "ஒரு வேளை சாப்பாட்டில் விஷம் கலந்து வைத்திருப்பானோ? அதானே இந்தக் காலத்தில் இப்படிக் கூடவா இளித்தவாயன்கள் இருப்பார்கள்? இல்லை... இதில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது கவனமாகத்தான் இதைக் கையாள வேண்டும்' என்று எண்ணியவாறே உள்ளே நுழைந்தவன் பாத்திரங்கள் ஒவ்வொன்றாகத் திறந்து பார்த்தான்.ஏமாற்றமே மிஞ்சியது அவனுக்கு. எல்லாப் பாத்திரங்களும் சுத்தமாகத் துலக்கித் துடைத்து வைக்கப்பட்டிருந்தன. குழப்பமும் பசியும் கூடவே வெறுப்பும் சேர்ந்து அவனைக் கோபமூட்டியது. மீதமிருந்த ஒரு பாத்திரத்தைக் காலால் எட்டி உதைத்தான். அதிலிருந்து ஒரு சிறு புத்தகமும் ஒரு கடிதமும் வெளிவந்து விழுந்தன.
கடிதத்தை எடுத்துப் பிரித்துப் பார்த்தான். "நண்பரே மன்னிக்கவும். சமைத்து வைத்திருந்தால் உமக்குச் சந்தேகம் வரக் கூடும் என்பதால் அப்படிச் செய்யவில்லை. இதோ இங்கு தேவையான அத்தனை மளிகைப் பொருட்களும் உள்ளன. இந்தப் புத்தகத்தில் எளிமையான, சுவையான பலவிதமான சமையல் குறிப்புகள் உள்ளன. அதைப் பார்த்து உமக்குப் பிடித்த உணவை உமது விருப்பப்படியே சமைத்து உண்ணலாம். அதற்கான பொறுமையும் நிதானமும் நிச்சயம் உங்களிடம் உண்டு. ஒரு மணி நேரம் பொறுமையாகப் போராடி பூட்டைத் திறந்தவரல்லவா தாங்கள்'
இந்த வரியைப் படித்ததும் அவனுக்கொரு பயம் கலந்த சந்தேகம் வந்தது. "ஒரு வேளை வீட்டுக்குள் மறைந்திருந்து காண்காணிக்கிறார்களா?' என்று. ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு மேலே படிக்கத் தொடங்கினான். எந்தெந்தப் பொருட்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பது முதல் கேஸ் ஸ்டவ்வை எப்படிப் பற்ற வைப்பது என்பது வரை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டு, இறுதியாக, "அன்பரே மளிகைப் பொருட்களைச் சற்று சிக்கனமாக, தங்களின் தேவைக்கேற்றாற் போல் மட்டும் பயன்படுத்தவும். ஏனெனில் இந்தக் குடும்பத்தின் ஒரு மாதத்திற்கான பொருளாகும் இங்கிருப்பவை, என்று முடிக்கப்பட்டிருந்தது.
கிடைத்த குறிப்புகளைப் பார்த்துக் கவனமுடன் சமையல் வேலையில் இறங்கினான். முற்றிலும் புது அனுபவமாக இருந்தது அவனுக்கு. தான் எங்கிருக்கிறோம்? எதற்காக வந்தோம்? என்பதைக் கூட மறந்து சமையலில் மூழ்கினான். அதிலொரு தனிப் பரவசத்தையும் உணர்ந்தான். சமைத்து முடித்து சாவகாசமாக அமர்ந்து சாப்பிட்ட போது நினைத்துக் கொண்டான். "ஆகா... என்ன ருசி... எந்த ஹோட்டலிலும் இதற்கு முன் இப்படியொரு சுவையான உணவை நான் சாப்பிட்டதே இல்லை. ஒருவேளை நானே செய்ததால் அப்படித் தோன்றுகிறதோ? ப்ச்... ஏதோ ஒன்று. பசியாறினால் சரி' என்று நினைத்துக் கொண்டு உண்டு முடித்தான். இப்போது அவனுக்கொரு புத்துணர்ச்சியும் புதுத் தெம்பும் வந்திருந்தது. கூடவே வந்த வேலையும் நினைவுக்கு வந்தது. நிதானமாக அங்கிருந்து வெளியேறியவன் வெளிக் கதவை ஒருமுறை பார்த்துவிட்டு அப்படியே படுக்கையறைக்குள் நுழைந்தான்.
அங்கே ஒரு பெரிய கட்டில் மெத்தை, ஒரு தொலைக்காட்சிப் பெட்டி, ஒரு ஏசி மெஷின், இன்னபிற சாதனங்களுடன் மூன்று பெரிய லாக்கர்களும் இரண்டு பெரிய இரும்புப் பீரோக்களும் இருந்தன. அத்தனையும் நவீனத் தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டவை. அவற்றைப் பார்த்ததும் அவனுக்குள் ஒரு குதூகலம் பிறந்தது. அருகிலிருந்த டீபாய் மீது பேப்பர் வெயிட்டைச் சுமந்தபடி ஒரு கடிதம் அவனுடைய கண்களைக் கவர்ந்தது. அதை எடுத்துப் படித்தான்.
 "நண்பரே மன்னிக்கவும். இவற்றிற்கான சாவிக் கொத்து தொலைந்துவிட்டது. எனவே தங்களிடமுள்ள ஆயுதங்களைப் பயன்படுத்தி அதிகம் சேதப்படுத்தாமல் திறந்து கொள்ளுங்கள். தேவைப்பட்டால் இந்த மேஜையிலுள்ள உபகரணங்களையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அலுப்போ சலிப்போ அடையாதீர், முயற்சி செய்யுங்கள், உங்களால் நிச்சயம் முடியும். ஒரு மணி நேரம் போராடி வீட்டைத் திறந்து பொறுமையாகச் சமைத்துச் சாப்பிட்ட உங்களுக்கு இதுவும் சாத்தியம்தான். முயற்சியுடையான் இகழ்ச்சியடையான்'
 
அதைப் பார்த்த அவனுக்குதான் பூலோகத்தில்தான் இருக்கிறோமா அல்லது மாயாஜாலப் படங்களில் வருவதுபோல ஏதாவது பூதங்களின் லோகத்திலா? என்ற சந்தேகம் வந்தது. உடனே ஒருமாதிரி பயமும் குழப்பமும் வந்தாலும் மனதைத் திடப்படுத்திக் கொண்டு இரண்டில் ஒன்று பார்த்து விடுவதெனச் செயலில் இறங்கினான்.
பொறுமையாகவும் நிதானமாகவும் ஒவ்வொரு லாக்கரையும் கழற்றி எறிந்தான். உள்ளே ஒன்றுக்கும் உதவாத ஒரு சில காகிதங்களைத் தவிர வேறொன்றுமில்லை. உண்மையில் அது பெரிய ஏமாற்றமாக இருந்தாலும் அது அவனுடைய மனநிலையைப் பாதிக்கவில்லை. சலிக்காமல் மீதமிருந்த இரண்டு பீரோக்களையும் திறந்தான். அதில் விலையுயர்ந்த ஆடம்பரமான துணிவகைகள் ஏராளமிருந்தன. அவை அவனுக்கு எந்த விதத்திலும் பயன்படாதவை. கடைசிப் பீரோவின் உள்ளறையில் ஒரு மரப்பெட்டி இருந்தது. அதை வெளியே எடுத்துத் திறந்தான். முழுவதும் நகைகள். சிறிய மூக்குத்தி முதல் பெரிய ஒட்டியாணம் வரை. எப்படியும் நூறு சவரன் தேறும். அதிலும் ஒரு துண்டுச் சீட்டு இருப்பதைக் கண்டான்.


""நண்பரே, எதையும் வெளித் தோற்றத்தைப் பார்த்து நம்பிவிடாதீர்கள். கண்களால் காண்பதும் பொய், காதுகளால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்' அப்படிச் செய்வதால் பின்னால் வரும் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம் அல்லவா?''


"மின்னுவதெல்லாம் பொன்னல்லவே எல்லா இடங்களிலும் தெளிவாகவும் கவனமாகவும் அணுகுங்கள்' என்று எழுதப்பட்டிருந்தது. 
சற்று யோசித்தவன், நகைகள் ஒவ்வொன்றையும் எடுத்து உரசிப் பார்க்கத் தொடங்கினான். அத்தனையும் கவரிங் நகைகள். பெட்டி காலியானது. அடியில் ஒரு சிறிய காகிதத் துண்டு. அதையும் எடுத்துப் பார்த்தான்.

 "நண்பரே கோபித்துக் கொள்ளாதீர். ஆடம்பரம் என்பதும் இப்படித்தானிருக்கும். அதை நம்பிப் போனால் இறுதியில் மிஞ்சுவது இப்படித்தான். இந்தக் காலியான பெட்டியைப் போல' என்று அதில் எழுதப்பட்டிருந்தது. சற்று யோசித்தான். வீட்டினுள் நுழைந்தபோது தென்பட்ட அந்த வரவேற்புப் பலகை வாசகங்கள் நினைவுக்கு வந்தன. அதில் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டிருந்த "வாழ்க்கையில் நிரந்தரமாகச் செட்டிலாக வேண்டுமென்றால் இருப்பு அறைக்குள் செல்லவும்' என்ற வாசகம் அவனை உந்தித் தள்ளியது. உடனே அவன் முகத்தில் ஒரு புன்னகையும் உள்ளுக்குள் ஒரு நம்பிக்கையும் பூத்தது. எனவே வேகமாக அவ்வறையை நோக்கிச் செல்ல எத்தனித்தவனுக்கு ஏனோ வேகமாக அவற்றை அப்படியே போட்டுவிட்டுப் போக மனமில்லை. கழற்றிப் போட்ட இரும்புப் பெட்டகங்களையும் பீரோக்களையும் பொறுமையாக இணைத்துப் பொருத்தி மீண்டும் கச்சிதமாக வைத்துவிட்டு, துணிகளையும் போலி நகைகளையும் இருந்த இடத்தில் வைத்து மூடிவிட்டு பொறுமையாக அங்கிருந்து வெளியேறினான்.
அடுத்த அறைக்குச் சென்று கதவைத் திறந்தான். அங்கே நிறையத் தட்டுமுட்டுச் சாமான்களும், உடைந்த பர்னிச்சர்களும், பழைய காகிதக் கட்டுகளும் ஒழுங்கற்ற முûறையில் போடப்பட்டிருந்தன. அதை அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ற போதிலும் ஏமாற்றம் அடையவும் இல்லை. ஏனென்றால் முந்திய கடிதம் அவனை வழி நடத்த உதவிற்று. பொறுமையாகச் சுற்றிலும் பார்த்தான். வேறொன்றும் தென்படவில்லை. அங்கே ஓர் உடைந்த நாற்காலி மீது ஒரு முழு வெள்ளைத் தாளில் எழுதப்பட்ட கடிதம். எடுத்துப் பொறுமையாகப் படித்தவன் அதை அப்படியே நான்காக மடித்துத் தன் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு அவ்வறையை விட்டு வெளியேறுவதற்காகத் திரும்பினான். அங்கே நிலைப்படியில் பளிச்சென்ற நிறத்தில் ஒரு வாசகம் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. அதனருகில் சென்று படித்துப் பார்த்தான்.
"தங்களின் வருகைக்கு நன்றி' “நண்பரே நீங்கள் உங்களை முற்றிலும் இழந்துவிட்டுப் போக வேண்டும் என்றால் கழிவறைக்குள் போய்விட்டுச் செல்லுங்கள். உங்களை முழுமையாக மீட்டெடுத்துக் கொண்டு செல்ல நினைத்தால் பூஜையறைக்குள் போய்விட்டுச் செல்லுங்கள்'சற்று நின்று யோசித்தவன், "கழிவறையா? வேணாம் சாமீ' கக்கூசைக் கழுவிச் சுத்தம் செய்யவும் என்று எழுதி வைத்திருந்தாலும் வைத்திருப்பான். எதற்கு வம்பு? பேசாமல் இதோடு கிளம்பி விடுவதே மேல் என்று முடிவு செய்து அங்கிருந்து வெளியேறி தலைவாசல் கதவை நெருங்கியவனுக்கு ஏதோ ஓர் உந்துதல்! "எதற்கும் கடைசி வாய்ப்பாகப் பூஜையறையை ஒரு முறை பார்த்துவிட்டுத்தான் போவோமே!' என்று நினைத்தவன் அங்கிருந்து நேராகப் பூஜையறைக்குச் சென்று கதவைத் திறந்து உள்ளே போனான் . அதிர்ந்து நின்றான்.
அங்கே சுவரில் மாட்டப்பட்டிருந்தது ஆளுயரத்தில் அவனுடைய படம். மறுவினாடியே அதிர்ச்சியிலிருந்து மீண்டான். ஏனெனில் அது படமல்ல, ஓர் ஆளுயர நிலைக் கண்ணாடி. அதில் தெரிந்த தன் பிம்பத்தைத்தான் அவன் பார்த்தான். பின்னர் சற்று நிதானித்துக்கொண்டு, அறை முழுக்கக் கண்களை ஓட விட்டான். அங்கே பூஜைக்குத் தேவையான அனைத்துப் பொருட்களும் இருந்தன. ஆனால் எந்தவொரு சாமி படமோ, விக்ரகங்களோ, இத்யாதி அடையாளச் சின்னங்களோ ஏதும் கண்ணில் படவில்லை. ஒரே குழப்பமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது அவனுக்கு. கூடவே ஆர்வத்தைத் தூண்டுவதாகவும் இருந்தது அச்சூழல். எனவே பார்வையைக் கூர்மையாக்கி நாலா திசையிலும் தேடிப் பார்த்தான். வழக்கத்திற்கு மாறாக அங்கு எந்தக் கடிதமோ துண்டுக் காகிதமோ கண்ணில் படாதது ஆச்சர்யம் தந்தது. மீண்டுமொரு முறை அவன் அந்த நிலைக் கண்ணாடியை உற்றுப் பார்த்தான். அங்கே கீழ்காணும் வாசகம் பொறிக்கப்பட்டிருந்தது சிறிதாக ஓர் ஓரத்தில். "யாரொருவர் தன் சொல்லாலோ, செயலாலோ நினைவாலோ பிறர்க்குத் துன்பம் விளைவிக்கவில்லையோ அவரே தெய்வம். அவரே இங்கு பூஜைக்குரியவர்' என்றிருந்தது.


அதனைப் பார்த்த அவனுக்குள் மனம் ஏதோ செய்தது. கண்களை மூடிச் சற்று நேரம் அங்கே அமைதியாக அமர்ந்துவிட்டான். பின்னர் நிதானமாக எழுந்து சென்று தலைவாசற் கதவைத்திறந்தான். அங்கே பொழுது புலர்ந்து வெளிச்சம் பரவத் தொடங்கியிருந்தது. கதவைப் பூட்டிவிட்டு விடுவிடுவென நடந்து முன் வாசல் கேட் தாண்டிக் குதித்து சாலை வழியே நடந்து ஊருக்குள் நுழைந்து ஜன சந்தடியில் ஐக்கியமாகிக் காணாமல் போனான்.

மூன்றாம் நாள் அந்தக் குடும்பம், வெளியூர் பயணத்தை முடித்துக் கொண்டு வீடு திரும்பிற்று. வீட்டைத் திறந்து ஒவ்வொரு அறையாகச் சென்று ஆர்வமாகப் பார்த்தனர். எல்லா அறையிலுமே யாரோ ஆள் வந்து போனதற்கான அறிகுறிகள் தென்பட்டனவேயன்றி வேறெந்த மாற்றமும் இல்லை. இறுதியாகக் கழிவறைக்குச் சென்று நிதானமாகப் பார்த்தனர். அங்கே அப்படியே வைத்தது வைத்தபடியே இருந்தன அத்தனை நகைகளும், பணமும். மாதமொன்று கடந்த பின் அந்த வீட்டின் தலைவருக்கு ஒரு கடிதம் வந்தது. ஆவலுடன் எடுத்துப் பிரித்துப் பார்த்தார்.

அன்பரே வணக்கம்,
தாங்கள் குறிப்பிட்டிருந்த விலாசத்திற்கு தங்களின் கடிதத்துடன் சென்றேன். உடனே எனக்கு அங்கே வேலை கிடைத்தது. அது ஒரு நவீன இரும்பு லாக்கர் மற்றும் பீரோக்கள் செய்யும் தொழிற்சாலை. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இந்த வேலை. என் திறமைகளையும் உழைப்பையும் ஆக்கபூர்வமான வழியில் செலவிடுகிறேன் எனும் போது ஒரு மனநிறைவும் ஆத்ம திருப்தியும் ஏற்படுகிறது. இதுவரை இப்படியொரு வாய்ப்பு என் வாழ்க்கையில் அமைந்ததே இல்லை. என் திறமைக்கும் உழைப்பிற்கும் உரிய அங்கீகாரம் கிடைத்ததும் என்னால் வேறெதையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. முழு கவனத்தையும் வேலையிலேயே செலுத்தத் தொடங்கினேன். புதுப் புது உத்திகளை யோசித்து செயல் வடிவம் கொடுத்ததைப் பார்த்த முதலாளிக்கு என்னை மிகவும் பிடித்துவிட்டது. நல்ல சம்பளமும் கொடுத்து அவரது கெஸ்ட் ஹவுஸிலேயே தங்க வைத்துள்ளார். இப்போதெல்லாம் அங்கு நானே சமைத்துத்தான் சாப்பிடுகிறேன் சிக்கனமாக. நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் எதிர்காலம் பற்றிய ஒரு பிடிப்பும் நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது எனக்குள்.


இத்தனைக்கும் காரணமான உங்களைத் தெய்வம் என்று சொன்னால் கூடப் போதாது. அதற்கும் மேல் என்னவென்று சொல்லத் தெரியவில்லை. கோடி முறை நன்றி சொன்னாலும் போதாது. திருட்டுப் பையனாக வந்த என்னைத் திருமகனாக மாற்றி அனுப்பியது அந்தக் கடிதங்களே! குறிப்பாக அந்தப் பூஜையறை வாசகம் எனக்கொரு மனத்தெளிவைக் கொடுத்தது. அந்தக் கடிதங்களை எழுதிய உங்களை நேரில் தரிசிக்க விரைவில் வருகிறேன்.

இப்படிக்கு
தங்கள் உண்மையுள்ள
திரு(ட்டுப்)ந்திய பையன்
 
நன்றி: தினமணி

Tuesday, March 20, 2012

இந்த அடிமைத்தனத்திலிருந்து நமக்கு எப்போது விடுதலை?நிகழ்வு - 1:

2011’ல் கொல்கத்தாவில் 10-வது படிக்கும் ஒரு மாணவி தண்டவாளத்தைக் கடக்கும்போது ரயில் மோதிய தில் அவளது உடல் கூழாகிவிட்டது. அலைபேசியைக் காதில் வைத்தபடி மூடப்பட்டிருந்த ரயில்வே கேட்டைக் கடந்து சென்ற அச்சிறுமி, 100 மீட்டர் தூரத்தில் வேகமாக ஒரு ரயில் வந்து கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை. மற்றவர்கள் போட்ட சத்தமும் அவள் காதில் விழவில்லை. 

நிகழ்வு - 2: 

ஹெளராவில் 10-வது படித்துக் கொண்டிருந்த நெருங்கிய நண்பர்களான இரு சிறுமிகளும் செல்போனைக் காதில் வைத்தபடி தண்டவாளத்தைக் கடந்தபோது வேகமாக நெருங்கிக் கொண்டிருந்த ரயிலையோ, அருகிலிருந்த வர்கள் எச்சரிக்கை செய்து போட்ட கூச்சலையோ கவனிக்கும் நிலையில் இல்லை. 


நிகழ்வு - 3:

  
சிங்கப்பூரில் ஒரு சிறு பெண் குழந் தையின் பெற்றோர்கள் கணினித் திரையில் மூழ்கியிருந்தபோது, பசியால் துடித்த அக்குழந்தை இறந்தே போய்விட்டது. 

நிகழ்வு - 4:
 
தென் கொரியாவில் கணினி விளையாட்டிலேயே நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருந்ததற்காகத் திட்டிய அம்மாவை ஒரு சிறுவன் கொலை செய்துவிட்டுப் பின்னர் தற்கொலையும் செய்து கொண்டான். 

உலகெங்கிலும் வயது வித்தியாசமின்றி பல ரைப் பிடித்து ஆட்டும் இந்த மோகத்திற்கு ‘தொழில்நுட்ப அடிமைத்தனம்’ என்ற பெயர் கூட வைக்கப்பட்டுவிட்டது.

மின்னணுக் கருவிகள் நுகர்வோர் பற்றிய ரிட்ரீவோ என்ற இணையதளம் நடத்திய ஓர் ஆய்வில் ஃபேஸ்புக் அல்லது டிவிட்டரில் மூழ்குவதைக் கட்டுப்படுத்த இயலாத பல பெற்றோர்கள் தங்களது கடமைகளைப் புறக்கணிப்பதாக ஒத்துக் கொண்டனர்.

தொழில்நுட்பக் கருவிகளுக்கு அடிமைகளாவது பெரும்பாலும் இளைஞர் கள்தாம். தங்களுடைய சமூக வலைத் தளங்களுக்குள் 15 நிமிடங்களுக்கொரு முறை செல்வதென்பது பலருக்கு பழக்க மாகிவிட்டது. சிறிது நேரம் அந்த வலைத் தளங்கள் செயலிழந்து போனாலும் அவர் களால் பொறுக்க முடிவதில்லை. உண வையும் உறக்கத்தையும் கூட இதற்காக மறப்பவர்கள் இருக்கிறார்கள். ஆன்லைன் உரையாடல்களிலோ செல்போன் விளை யாட்டுகளிலோ ஈடுபட்டிருக்கும்போது, கழிப்பறைக்குச் செல்ல வேண்டிய அவ சரத் தேவையைக் கூட தள்ளிப் போடக் கூடிய அளவு சிலர் கிறுக்குப் பிடித்தவர் களாக இருப்பது கவலைக்குரியது.

இத்தகைய அளவுகடந்த தீவிரமான ஈடுபாட்டை உடற்கூறு வல்லுநர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாவ தோடு ஒப்பிடுகின்றனர். தொழில்நுட்ப அடிமைகளை சிறிது நேரம் அவர்களுக் குப் பிரியமான கருவிகளிலிருந்து பிரித்து வைத்தபோது, போதைப் பொருள் கிடைக் காத போதைப் பொருள் அடிமைகள் படும் பாட்டினை ஒத்ததாக அவர்கள் நிலை இருந்ததாக வல்லுநர்கள் அந்த ஆய்வில் கண்டுபிடித்தனர். 

மேரிலாண்ட் பல்கலைக்கழகத்தில் ஊடகங்கள் பற்றிய சர்வ தேச மையம் 10 நாடுகளைச் சேர்ந்த 1000 பல்கலைக்கழக மாணவர்களிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. கணினிகள், தொலைக்காட்சிப் பெட்டிகள், செல்போன் கள், எம்.பி.3 பிளேயர்கள் போன்ற சாத னங்களிலிருந்து 24 மணி நேரத்திற்கு விலகியிருக்குமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர். அவர்களில் பெரும்பாலானோரால் அது இயலவில்லை. துக்கம். தனிமை, கவலை போன்ற மன அழுத்தங்களுக்கும் இதயப் படபடப்பு போன்ற உடல்நலப் பாதிப்புக ளுக்கும் ஆளானதாக பல மாணவர்கள் தெரிவித்தனர். செல்போன் அருகில் இல்லாவிட்டாலும், செல்போன் ஒலி கேட்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டதாகக் கூட ஒரு மாணவன் தன் அனுபவத்தை விவரித்தான்! அன்றாடம் தொழில்நுட்பக் கரு விகளோடு இருக்கும் தீவிரப் பிணைப்பு காரணமாக குடும்ப உறவுகள் சீர்கெட்டு வருவதாக பிரபல உளவியல் நிபுணர் ஆண்டனி கிட்மேன் தெரிவிக்கிறார்.

தொழில்நுட்பமும், தொழில்நுட்பக் கருவிகளும் உலகில் பல அதிசயங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, அவற்றின் அடிமை களாக நாம் மாறிவிடக் கூடாது. அப்படி மாறினால் நம்முடைய உடல்நலம், சமூக உறவுகள், ஏன், சமயத்தில் உயிரையே கூட அதற்கு விலையாகத் தர வேண்டி யிருக்கும். 

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் விஷம் என்ற முதுமொழி நம் வாழ்வின் ஒவ்வோர் அம்சத்திற்கும் பொருந்தி வருவதை நாம் கவனத்தில் கொள்வது நல்லது.

இதிலிருந்து விடுபடுவது எப்படி?

* முதலில் உங்களுக்கு இந்தப் பிரச்சனை உண்டென்று ஒத்துக் கொள்ளுங்கள். அப்பொழுதுதான் அதிலிருந்து விடுபட முடியும்

* எவ்வளவு நேரம் இந்தக் கருவிகளில் (Facebook, Twitter, Tablet, Computer, MP3 Players, Games etc) உங்கள் நேரத்தினைச் செலவிடுகிறீர்கள் என்று எழுதிக் கணக்கிடுங்கள்

* உங்களுக்குள்ளாகவே ஒரு நேரத்தினை விதித்துக் கொள்ளுங்கள். இந்த நேரங்களில் மட்டுமே இந்தக் கருவிகளில் நான் என்னை ஈடுபடுத்துவேன் மற்ற சமயங்களில் மாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ளுங்கள். (அதாவது 15 நிமிடம் மட்டுமே. அதற்கு மேல் நேரம் செலவிட மாட்டேன் என்று உங்களுக்குள் உறுதி செய்து கொள்ளுங்கள்

* எல்லாவிதமான நோடிவிகேஷனையும் (Notifications) அகற்றி விடுங்கள் 

* எப்பொதெல்லாம் கருவிகளை அந்த 15 நிமிடம் தாண்டி இயக்க மனம் எண்ணுகிறதோ அப்பொதெல்லாம் தியானம் செய்யுங்கள். அப்போது அந்த எண்ணத்தினை (கருவிகளை இயக்கும் நினைவு) சும்மா, அதாவது வெறுமனே கவனியுங்கள். பதட்டப்பட வேண்டாம்.

* அந்தக் கருவிகளை விட்டு விட்டு தோட்டச் செடி வளருங்கள்; நாயை கொஞ்சுங்கள், சினிமா பாருங்கள் (திரையரங்கு சென்று), குடும்பத்துடன் மனம் விட்டுப் பேசுங்கள். குழந்தையை கொஞ்சுங்கள்

* இந்த அடிமைத்தனத்திற்கு முன்பு நான் என்னென்ன செய்தேன் என்று வரிசைப்படுத்தி எழுதி அதை தொடருங்கள்

* Facebook, Twitter, Games அல்லது அது போன்ற இணையத்தினை ப்ளாக் செய்யுங்கள்

(உதவி: சயன்ஸ் ரிப்போர்ட்டர்)

Saturday, March 17, 2012

கோடை- ஆடை


கோடைக்கும் நாம் அணியும் ஆடைகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. சில வகை ஆடைகளை நாம் கோடையில் தேர்ந்தெடுத்து அணிவதின் மூலம் வெப்பத்தினால் ஏற்படும் தீங்கிலிருந்து தப்பிக்கலாம்.
இறுக்கமான ஆடைகள்: கோடையில் இறுக்கமான பேண்ட், உள்ளாடைகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். இறுக்கமான உடைகள் காற்றோட்டத்தை முழுவதுமாக தடைசெய்துவிடும்; வியர்வை எளிதில் ஆவியாக வாய்ப்பில்லை. இதனால் உடலில் உப்பு படிந்து, அரிப்பு ஏற்படும். கோடைக்காலத்தில் ஜீன்ஸ் போன்ற உடைகளைத் தவிர்க்க வேண்டும்.
செயற்கை இழை ஆடைகள்: பாலிஸ்டர் போன்ற செயற்கை இழை ஆடைகள் நமது உடலுக்கு ஏற்றதல்ல. இவ்வகை ஆடைகள் எளிதில் சூடாவதுடன், நமது தோலையும் சூடாக்கிவிடும். இதனால் தோலின் நிறம் மாறுவதும், ஒவ்வாமையும் ஏற்படும்.
கெட்டியான நிற ஆடைகள்: ஆடைகளின் நிறத்தையும் கவனிக்க வேண்டும். காரணம் சிவப்பு, கருப்பு மற்றும் கெட்டியான பச்சை போன்ற நிறங்கள் கோடையில் மேலும் வெம்மையை கூட்டுகின்றன. இந்நிறங்கள் சூரிய ஒளியின் உக்கிரத்தைக்கூட்டி கண்களை உறுத்தும். அதிக ஒளியில் கண்களை உறுத்துவதால் கண் தசைகள் எளிதில் களைப்படையும். பெரிய டிசைன் போட்ட ஆடைகளையும் தவிர்த்தல் நல்லது. வெண்ணிற ஆடைகளும், சிறிய டிசைன் போட்ட ஆடைகளும் சரியான தேர்வு.
ஆபரணங்கள்: அதிக ஆபரணங்களை உடலுக்கு நெருக்கமாக அணிவதால் வேர்வை ஆவியாகாமல் அரிப்பு ஏற்பட்டு நோய்கள் வர ஏதுவாகிவிடும்.
கைப்பைகள், செருப்புகள்: கெட்டியான கண்களை உறுத்தும் நிறங்களைக் கொண்ட கைப்பைகள், பிளாஸ்டிக் செருப்புகளை தவிர்த்தல் மிக நல்லது. பிளாஸ்டிக் செருப்புகள் வெயில் காலங்களில் விரைவாகச் சூடாகி, தோலின் மென்மையைப் பாதிக்கும். தோல், ரப்பர் செருப்புகளே சிறந்தது. குழந்தைகளுக்கும் வெண்மையான ஆடைகளே சிறந்தது. குழந்தைகளின் மென்மையான தோலுக்கு தளர்வான உடைகள் மற்றும் பருத்தியிலான சாக்ஸ், கையுறைகளைப் பயன்படுத்துதல் சிறந்தது. 

Source: Dinamani

Monday, March 12, 2012

தெரிஞ்சிட்டு சாப்பிடலாமா?

இந்தப் பதிவு எப்படி சாப்பிடுவது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள: ஓகே. எப்படி சாப்பிடுவது?

* பசி வந்த பின்புதான் சாப்பிட வேண்டும். உடலில் உள்ள செல்களுக்குச் சத்துகள் தேவை என்னும்போதுதான் நமக்குப் பசி எடுக்கிறது. எனவே பசிக்காமல் சாப்பிடக் கூடாது.


* அடுத்து சாப்பிடும் உணவு நல்லபடியாகச் செரித்து அதிலுள்ள சத்துகள் உடலில் சேர வேண்டும். அதற்கு வாயைத் திறந்து, திறந்து அவசர அவசரமாக உணவை விழுங்குவதைத் தவிர்க்க வேண்டும். வாயைத் திறந்து மூடுவதன் காரணமாக உணவுடன் காற்றும் வயிற்றுக்குள் செல்கிறது. அதனால்  உணவை வாயில் போட்டவுடன், உதட்டை மூடிக் கொண்டு, உணவு கூழ் போல் ஆகும்வரை மென்று, உணவின் சுவையை நாக்கு உணருமாறு செய்து அதற்குப் பின்பு விழுங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நாக்கில் ஊறும் உமிழ்நீருடன் உணவு கலந்து வயிற்றுக்குள் செல்கிறது. உமிழ்நீர் உணவை நன்கு செரிக்கச் செய்கிறது. எனவே அவசரமாகச் சாப்பிடக் கூடாது.


* சாப்பிடுவதற்கு முன்பும், சாப்பிடும்போது, சாப்பிட்ட பின்பும் நிறையத் தண்ணீர் குடிப்போம். நல்ல பசி உள்ள வேளையில் வயிற்றில் ஜீரண நீர்கள் சுரக்கின்றன. நாம் தண்ணீர் குடிக்கும்போது, ஜீரண நீர்கள் நீர்த்துப் போகின்றன. இதனால் செரிப்பதில் பிரச்னை ஏற்படுகிறது. அதாவது, நாம் உண்ணும் உணவில் உள்ள சத்துகள் உடலில் முழுமையாகச் சேர்வதில்லை.

* குளித்தவுடனேயே சாப்பிடக் கூடாது. நீங்கள் வெந்நீரிலோ, தண்ணீரிலோ குளிக்கும்போது நமது உடலின் வெப்பநிலை மாறுபடுகிறது. அப்படி மாறும் வெப்பநிலையை - உடலின் வெப்பநிலைக்கு - அதாவது 37 டிகிரி சென்டிகிரேடு அளவுக்குக் - கொண்டு வர நமது உடலில் உள்ள செல்கள் முழுக்க முயற்சி செய்கின்றன. குளித்து முடித்தவுடன் உடலில் ஏற்பட்ட வெப்பநிலை மாறுதலை சரி செய்வதற்காக, உடலின் செல்கள் செயற்பட்டுக் கொண்டு இருக்கும்போது, நாம் சாப்பிட்டால் உணவு ஜீரணமாவதில் பிரச்னை ஏற்படும். அதேபோன்று சாப்பிட்டதும் குளிக்கக் கூடாது.


* தண்ணீர் குடிப்பதிலும் நமக்குச் சரியான தெளிவில்லாமல் இருக்கிறோம். எவ்வளவு தண்ணீர் குடிப்பது? உடலுக்குத் தண்ணீர் தேவையென்றால் தாகம் எடுக்கும். தாகம் எடுத்தவுடன் தேவைப்படும் அளவுக்குத் தண்ணீர் குடித்தால் போதுமானது.* தேவையான அளவுக்குத் தூங்க வேண்டும். தேவையான அளவு தூக்கம் என்பது மனிதருக்கு மனிதர் மாறுபடும். கடுமையான உடல் உழைப்பாளிக்கு அதிகத் தூக்கம் தேவைப்படும். ஏஸி அறையில் கம்ப்யூட்டர் முன்பு உட்கார்ந்து மூளை உழைப்புச் செய்பவருக்கு அதிகத் தூக்கம் தேவைப்படாது. எனவே தூக்கம் வரவில்லை என்று தூக்க மாத்திரைகளை விழுங்குவதில் அர்த்தமில்லை. தூக்கம் வரவில்லை என்றால் கண்ணை மூடிக் கொண்டு படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தூக்கம் வரும்போது தூங்கிக் கொள்ள வேண்டும். போதுமான அளவு தூங்கினால்தான் செல்கள் உடலில் நன்கு செயல்பட முடியும். 

* செல்லுக்கு அறிவு உண்டு. தேவையான சத்துப் பொருட்கள் உரிய அளவில் இருந்தால் கெட்டுப் போன செல்கள் தம்மைத் தாமே சரி செய்து கொள்ளும்.* எவற்றைச் சாப்பிடுவது?
                1)  உணவு வகைகளில் சமைக்காமல் அப்படியே சாப்பிடும் சுவையுள்ள பழங்கள், வெள்ளரி போன்ற காய்கள் போன்றவற்றுக்கு நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். 
                2)  முளைவிட்ட தானியங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
                3) சமைத்த சைவ உணவுக்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 
                4) அசைவ உணவு வகைகளுக்கு அதற்கு அடுத்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். 
                5) டீ, காப்பி, மது போன்றவற்றைச் சாப்பிடக் கூடாது.


எவற்றை மட்டும் சாப்பிட்டு நாம் மூன்றுநாட்களுக்கு மேல் உயிரோடு இருக்க முடியுமோ, அவையெல்லாம் உணவு. எவற்றை மட்டும் சாப்பிட்டு மூன்று நாட்களுக்கும் மேல் உயிரோடு இருக்க முடியாதோ, அவையெல்லாம் உணவு அல்ல. எடுத்துக்காட்டாக மது போன்றவை உணவல்ல.


உடல் உழைப்பு உள்ளவர்களைத் தவிர, பிறர் உடற் பயிற்சி, நடைப் பயிற்சி, யோகாசனம் போன்றவற்றைச் செய்து வந்தால் நோயின்றி வாழலாம். வந்த நோயையும் சரிப்படுத்திவிடாலாம். 

நன்றி: பாஸ்கர், கோவை

Friday, March 09, 2012

கோலங்கள் - தெரிந்ததும் தெரியாததும்


அதிகாலையில் வீட்டுமுன் சாணம் தெளித்து கோலம் போடுவதில் அர்த்தம் உள்ளது. சாணம் கிருமி நாசினி வீட்டுக்குள் கிருமிகளை நுழையவிடாது. மார்கழி பனிக் காற்றில் மருத்துவ குணமுள்ள ஓசோன் இருப்பதால் அதிகாலையில் கோலம் போடும் பெண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.   
நம் மூதாதையர்கள் அரிசி மாவில்தான் கோலம் போட்டனர். அது அன்னதானத்துக்கு சமமாக கருதப்பட்டது. 

கோலம் போடுவதற்கான சில வழிமுறைகள்:

* சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும். வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.

* தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது.

*  கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், கோல மாவின் வெண்மை பிரம்மாவையும் காவியின் செம்மை சிவனையும் குறிக்கிறது.

* கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும்.

* பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு.* விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும்.* ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை (அ) சூரிய கோலம் நல்லது. திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் போடுவது நல்லது. செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் போடவேண்டும்.  வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் போடுவது நல்லது. சனிக்கிழமை பவளமல்லி கோலம் போட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

* வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.

* கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

* இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது.

* இடது கையால் கோலம் போடக்கூடாது. ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும்.

* பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும் உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.

* கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.

* கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.
Monday, March 05, 2012

இன்சூரன்ஸ் கம்பனிகளை 2011ல் ரூ.30000 கோடி ஏமாற்றியிருக்கிறார்கள்

இன்ஸுரன்ஸ் என்பது ஒருவரின் அசம்பாவித சம்பவ இழப்பீட்டை பகிர்ந்தளிப்பதன் மூலமாக மற்ற அனைவரும் ஏற்பது. அதாவது உங்களுடைய இழப்பை ஒரு சமுதாயத்திலுள்ள மற்ற அனைவரும் ஏற்பது. சுருக்கமாக எளிய முறையில் சொன்னால்  ஒரு அலுவலகத்தில் யாருக்கேனும் மருத்துவ செலவு அவசரமாக ஏற்பட்டால் அங்கு பணிபுரியும் அனைவரும் சிறு சிறு தொகையைச் செலுத்தி மொத்தமாக பாதிக்கப்பட்ட நபரிடம் வழங்குவோம். அதுபோல்தான் இன்ஸுரன்ஸும். இன்சூரன்ஸ் கம்பனி ஒரு முகவராக இதில் செயல்படுகிறது. 

ஆனால் இதில் சிந்திக்க வேண்டிய விஷயம் ரூ.30000 கோடி கடந்த வருடத்தில் இந்தக் கம்பெனிகள் இழந்திருக்கின்றன. குறிப்படத்தகுந்த செய்தி என்ன எனில் அந்தக் கம்பெனியில் வேலை செய்வோரும் இன்ஸூரன்ஸ் கிளைம் வாங்குவோரும் போர்ஜரி டாகுமெண்ட்களைக் கொடுத்து கிளைம் வாங்கியிருக்கிறார்கள். கிளைமுக்கு போலி சாவும் மிக முக்கிய ஒரு காரணம். இந்த 30000 கோடி என்பது இன்சூரன்ஸ் இண்டஸ்டிரியின் மொத்த மதிப்பில் 9% . அதாவது வருட வசூலாகும் ரூ.3.50 லட்சம் பிரிமியத்தில் இது 9%. (IRDA மதிப்பீட்டின்படி) இதில் 86% லைஃப் இன்ஸுரன்ஸ் பிரிவிலும் மீதி பொதுக் காப்பீட்டுப் பிரிவிலும் நடந்திருக்கிறது.

இதன் விளைவுகள்:

1) கிளைம்களின் நம்பகத்தன்மை குறையும்
2) மிகவும் கடினமான நிபந்தனைகள் அமலுக்கு வரும்
3) மிக மிக முக்கியமாக பிரிமியம் தொகை உயரும். அதாவது யாரோ ஏமாற்ற நாம் நமது பாக்கெட்டிலிருந்து அதிகத் தொகை செலவழிப்போம்.
4) சில பிரிவு கிளைமுகளுக்கு இனிமேல் இன்சூரன்ஸே கிடையாது என அறிவிக்கலாம்
5) நமது நாட்டில் பிற இன்சூரன்ஸ் கம்பனிகள் முதலீடு செய்யத் தயங்கலாம். எனவே போட்டி குறையும். இது பிரிமீயம் உயர்வுக்கு வழிவகுக்கும்.

எனவே, உண்மையான இழப்புக்கு காப்பீட்டுத் தொகை கிளைம் செய்யுங்கள்.; மற்றவர்கள் பிரிமியத் தொகையை உயர்த்தாதீர்கள்

Saturday, March 03, 2012

இந்திய வாகனங்கள் தான் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் : ஒபாமா

இந்தச் செய்தி மார்ச் 2ம் நாளைய தினகரனில் வந்துள்ளது. செய்தி கீழே:

வாஷிங்டன்: சர்வதேச அளவிலான கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளில் அதிகரித்து வரும் வாகனங்களே காரணம் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்காவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு ஒபாமா அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலளித்துள்ள ஒபாமா, இந்தியா, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் கட்டுக்கடாங்காமல் அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கையே எண்ணெய் விலை உயர்வுக்கு காரணம் என்று கூறினார். இந்தியா மற்றும் சீனாவில், தனி நபர் வருமானம் அதிகரித்துள்ளதால் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதனால் கச்சா எண்ணெயின் விலை மேலும் அதிகரிக்க வாய்பிருப்பதாகவும் ஒபாமா எச்சரித்துள்ளார்.


ஏன் உலகின் போலி போலிஸ்காரன் இந்த மாதிரி சொல்கிறார் என்றும் அதன் விளைவுகள் என்ன என்றும் கீழே காணலாம்:


1. அவர் நாட்டில் அவருக்கு எதிரான கருத்தில் சரியான விளக்கம் அவரிடம் இல்லை. எனவே சாதாரண மனிதர்கள் பக்கத்து வீட்டினர் மீது பொறாமைப் பட்டு குற்றம் சாட்டுவது போல் உளறியிருக்கிறார்.


2. அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்கிற பதட்டத்தில் வந்த வார்த்தைகள். ஏனெனில் அவரின் பதவிக்காலத்தில் அவர் எடுத்த பொருளாதார நடவடிக்கைகள் எந்த விதமான குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தையும் கொடுக்கவில்லை


3. அமெரிக்க நிதிநிலை கவலைக்கிடமாக உள்ளது. மேலும் மாணவர்களிடம் உரையாற்றும் போது பிரன்ச், ஜெர்மன் போன்ற மொழிகளை படித்தால் அந்தந்த நாடுகளில் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறியிருக்கிறார். மற்ற நாடுகளிலிருந்து அமெரிக்கா செல்வதற்குப்பதிலாக இங்கிருந்து மற்ற நாடுகளுக்கு வேலைக்காக செல்லும் நிலைக்கு இன்று அமெரிக்கா உள்ளது.


4. சமீத்தில் இந்தியா வந்த போது இந்தியாவிடமிருந்து வேலைவாய்ப்புகளும், முதலீடும் அமெரிக்காவுக்கு வேண்டும் என்ற கோரிக்கையினை விடுத்தார். அதாவது வளரும் நாட்டினரிடமிருந்து வளர்ந்த (?) நாட்டுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தில் கூறியுள்ளார்.


5.எண்ணெய் விலை உயர்வுக்கு ஆன்லைன் டிரேடிங்கும், அமெரிக்கா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் மீது பொருளாதார அழுத்தை கொடுப்பதுமே முக்கியக் காரணம். ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த உலக நாடுகளை அமெரிக்க நிர்பந்தித்து வருகிறது. மேலும் பணபரிவர்த்தனை நடவடிக்கைகளை முடக்கியுள்ளது.


6. இது மாதிரியான உண்மைகளை மறைத்து பிரச்சனையை திசைதிருப்பி இக்கருத்தின் மூலம் சாதரண மன நிலையான பொறாமை, வயிற்றெரிச்சல், இயலாமை, தன் மீதான அவநம்பிக்கை என கீழ்த்தரமான அரசியல்(வியா)வாதியாகப் பேசியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே இணக்கமின்மையை, பகையை உருவாக்குகிறார்


7. எனவே இந்தியர்களே நமது நாட்டில் சம்பள விகிதம் மற்ற வளர்ந்த நாடுகளை விட 12% உயர்ந்திருக்கிறது. தொழில் வளர்ச்சி விகிதமும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளை விட குறிப்பிட்டுச் சொல்லும் வீதத்தில் முன்னேறி வருகிறது. அமெரிக்கா கடனாளியாகி சமீபத்தில் பொருளாதாரம் வீழ்ந்த போது நமது நாட்டில் பெரிய அளவில் பொருளாதாரம் வீழ்ச்சியடையவில்லை என்பதை நினைவு கூறலாம். 


8. ஆகவே நம் நாட்டினை மேலும் உயர்த்த நமது திறமைகளை இந்தியாவிற்கு செலவிடுவோம். இந்தியா, சீனா நட்புறவை வலுப்படுத்த முயலுவோம். ஏனெனில் இனி அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் ஆதிக்கம் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆசிய நாடுகளே பொருளாதாரத்தில் வல்லமை செலுத்தும் நிலையில் உள்ளது.

Thursday, March 01, 2012

ஆன்லைன் வியாபாரமும் அன்றாடங் காய்ச்சிகளும்...


பாராளுமன்றத்தில் மீண்டும் கூக்குரல். எலியும் பூனையும் கைகோர்த்து நின்றன. இந்த முறை விலைவாசி உயர்ந்துபோனதாக குற்றச்சாட்டு.

"வளர்ந்துவரும் பொருளாதாரத்தில் இதெல்லாம் சகஜமப்பா...." என்கிறார் நிதியமைச்சர்.

"விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது சிரமம். அதற்கெல்லாம் மந்திரக்கோல் எதுவும் இல்லை," என்கிறார் பிரதமர்.

வர்த்தக அமைச்சருக்கும் நிதியமைச்சருக்கும் மோதல் என்றெல்லாம் பத்திரிக்கை செய்தி.

பாராளுமன்றத்தில் எழுந்த கூக்குரல் சாதாரணமென்று அலட்சியப்படுத்தக்கூடியதல்ல. வெங்காயம் விலையேறிப் போனதற்காக ஆட்சியைப் பறிகொடுத்தவர்களும், அந்த தேர்தலில் தலைதப்பியது தம்பிரான் புண்ணியம் என்ற பெரு மூச்சுடன் இன்றைய பாராளுமன்றத்தில் நின்றுகொண்டோ உட்கார்ந்து கொண்டோ இருப்பதை தொலைக்காட்சியில் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய ஆளும் கட்சி இதற்கு பொருத்தமான விலையை வரப்போகும் தேர்தல்களில் கொடுத்தாக வேண்டும் என்பது எல்லோருக்கும் தெரிந்து போயிற்று. வசதி படைத்த இந்தியர்களைக் காட்டிலும் அன்றாடங் காய்ச்சிகள் தான் அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு செல்கிறார்கள் என்பதால் ஆளும் கட்சியின் வயிற்றிலும், கூட்டணிக் கட்சிகளின் அடிவயிற்றிலும் புளி கரைக்கத் தொடங்கிவிட்டது.

விளைவு கூட்டணிக் கட்சிகள் பிரிந்து மறுபடியும் கூட வாய்ப்பு இருக்கிறது. புதிய வடிவத்தில்.

ஆக்கப்பூர்வமாக செயல்பட மறந்துபோன அரசு இன்று கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது. மத்தியதர வகுப்பினருக்கு வரிச்சலுகைகள், ஆறாவது ஊதியக்கமிஷன், விவசாயக்கடன் தள்ளுபடி, சிறுபான்மையினருக்கு சிறப்பு சலுகைகள் என்றெல்லாம் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறது. கடப்பாரையை விழுங்கி விட்டு இஞ்சிக் கஷாயம் குடித்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு.

மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட்ட விலைவாசி உயர்வு அளவு கடந்த 13 மாதங்களில் இல்லாத 6.68 சதவீதத்தை எட்டியிருக்கிறது. உணவு தானியங்கள், சமையல் எண்ணெய், பால்பொருட்கள், இரும்பு, உருக்கு என்று விலைவாசி உயர்வின் கொடுங்கரங்களில் சிக்கிய பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது.

இப்போதைய விலைவாசி உயர்வில் கவலைதரக்கூடிய விஷயம் மொத்த விற்பனை விலைக்கும் சில்லறை விற்பனை விலைக்கும் இருக்கும் அதிகமான இடைவெளிதான். மொத்த விற்பனையாளர்கள் பொருட்களைப் பதுக்கிவைத்து செயற்கையான விலைவாசி உயர்வை ஏற்படுத்துகிறார்கள்.

பதுக்கல்காரர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே இருப்பதாகவும், தனக்கு அந்த அதிகாரம் இருந்தால் நாளைக்கே நடவடிக்கை எடுப்பேன் என்றும் நிதியமைச்சர் கூறுகிறார் பிரதமரின் முன்னிலையில்.

டீக்கடையில் பேப்பர் படித்துக்கொண்டிருக்கும் அன்றாடங்காய்ச்சி குடிமகனுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறைதான் அதிகாரம் கிடைக்கிறது. நாளைக்கே அவனுக்கு அதிகாரம் கிடைத்தால் அவனும் உடனடியாக நடவடிக்கை எடுப்பான்.

இரு நபர்களுக்கிடையே அல்லது இரண்டு நிறுவனங்கிளுக்கிடையே ஒரு பொருளை ஊக விலையின் அடிப்படையில் எதிர்காலத்தில் வாங்கவும் விற்கவும் இணையதளம் மூலம் செய்து கொள்ளப்படுகின்ற ஓர் ஒப்பந்தம் தான் ஆன்லைன் வர்த்தகம். அரிசி, பருப்பு, காய்கறிகள் முதல் தங்கம் வரை 150க்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது இணையதள விற்பனைக்குள் வந்துள்ளன. ஊக வணிகர்கள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவும், பதுக்கலுக்கும், கள்ளச்சந்தைக்கும், விலையேற்றத்துக்குமான ஒரு ஏற்பாடுதான் ஆன்லைன் வர்த்தகம் என்பது. இதனுடைய இன்னொரு முகம் ரூபாயின் மதிப்பை உள்நாட்டில் செல்லாக்காசாக்கும் முயற்சி.

பொதுவாக விலையை தீர்மானம் செய்யும் காரணிகள் பொருட்களின் தேவை (DEMAND) எவ்வளவு என்பதும், சந்தைக்கு எவ்வளவு பொருட்கள் வந்திருக்கின்றன (SUPPLY) என்பவையும்தான்.

ஒரு பருப்பு வியாபாரி தன்னிடம் இருக்கும் 5 டன் உளுத்தம் பருப்பை கிலோ 30 ரூபாய்க்கு விற்க இரண்டாவது வியாபாரியுடன் ஒப்பந்தம் செய்து கொள்கிறார். வெறும் ஒப்பந்தம் மட்டும்தான். சரக்கு இடம் மாறுவதில்லை.

ஒரு மூன்றாவது வியாபாரி கிலோ ஐம்பது ரூபாயானாலும் பரவாயில்லை என்று கேட்கும்போது 30 ரூபாய்க்கு தான் விற்ற அதே பருப்பை 40 ரூபாய்க்கு ஒப்பந்தம்போட்டு வாங்கி 50 ரூபாய்க்கு விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறார்.

ஆன்லைன் வர்த்தகம் என்றபெயரில் உணவுப்பொருட்கள் முன்கூட்டியே வாங்கப்பட்டுவிடுவதால், அரசின் உணவுப்பொருள் வர்த்தகக் கழகம் அத்தியாவசியப் பொருட்களை வாங்கமுடியாமல் முடக்கப்பட்டு விடுகிறது.

பதுக்கலை ஒழிக்கவேண்டிய நடவடிக்கைகள் மாநில அரசு சம்பந்தப்பட்டது என்று கைவிரிக்கிறார் நிதியமைச்சர். வாக்குச்சாவடிக்கு மக்கள் போகும்போது மக்களுக்கு பிரச்சினைகள் மட்டும்தான் தெரியும். மாநில அரசு, மத்திய அரசு என்ற வேறுபாடெல்லாம் அவர்களுக்குத் தெரியவேண்டியதில்லை.

வியாபார சக்திகளை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் சந்தையில் விளையாட அனுமதித்து விட்டு தற்போது விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம் என்று கூறுவது மக்களை ஏமாற்றும் வார்த்தைகள்.

பத்திரிக்கைகள் பணவீக்கம் என்று சுருக்கமாக தீர்ப்பு எழுதிவிடுகின்றன. பணவீக்கம் 7 சதவீதம் என்றால் பொருட்களின் விலை 7 சதவீதம் அதிகரித்திருக்கிறது என்று பொருள். போனவருஷம் இதே மாதத்தில் 100 ரூபாய்க்கு வாங்கிய பொருளை இந்த வருஷம் இதே மாதத்தில் 107 ரூபாய் கொடுத்து வாங்கவேண்டும். பணவீக்கத்தை கணக்கிடும் பணியை இந்திய ரிசர்வ் வங்கி செய்து வருகிறது. பல அத்தியாவசிய பொருட்களின் ஒட்டுமொத்த விலை குறியீட்டு எண் ஒவ்வொரு வாரமும் சென்ற ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடப்படுகிறது.

6% பணவீக்கம் இருந்த காலத்தில் வங்கிகளின் வைப்பீட்டுக்கும், கடன் பத்திரங்களுக்கும் 6% வட்டி கிடைத்தது. இது RISK FREE RETURN. பங்குச்சந்தையில் வரும் வருமானம் இதற்கு நேர்மாறானது. வங்கியைவிட பலமடங்கு வருமானம் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம்.

வங்கி வட்டிவிகிதம் குறையத்தொடங்கியதும் பணம் வைத்திருக்கும் முதலீட்டாளர்கள் தங்களுடைய பணத்தை பங்குச்சந்தையை நோக்கி திருப்பி விட்டனர். இதனால் SENSEX நாலுகால் பாய்ச்சலில் வளர்ந்து கொண்டு போனது. நம்முடைய நிதியமைச்சர் மிகவும் சந்தோஷப்பட்டார்.

பொருளாதார சீர்திருத்தம், உலகமயமாக்கல் என்ற கொள்கைகளின் விளைவாக அமெரிக்கப் பொருளாதாரத்தின் பின்னடைவுகளில் இருந்து நம்முடைய பொருளாதாரத்தை பாதுகாத்துக்கொள்ளும் சுயசார்புத் தன்மையை நாம் இழந்துவிட்டோம்.

இந்தியா அடிப்படையில் ஒரு விவசாய நாடு என்பதையோ, விவசாயத்திற்கு அடிப்படையான மலிவான உடலுழைப்பு இந்தியாவில் நிறைய இருக்கிறது என்பதையோ நம்முடைய ஆட்சியாளர்கள் அடியோடு மறந்துபோனதுதான் இன்றைய சோகம்.

கலப்புப் பொருளாதாரத்தையும், கிராமத் தொழில்களையும் ஆதரித்த நம்முடைய பழம்பெரும் தலைவர்கள் பைத்தியக்காரர்கள் அல்ல. தாராளமயம் என்ற பெயரில் கிராமத் தொழில்களை அழித்து, வேலையிழந்த தொழிலாளர்களை நகரங்களை நோக்கி நகரவைத்து புதுப்புது சேரிகள் உருவாக வழிசெய்ததுதான் அண்மைக்கால ஆட்சியாளர்களின் சாதனை.

நுகர்வுக்கலாச்சாரத்தை மக்களிடையே புகுத்தி அதன்மூலம் நாடு முன்னேறிக் கொண்டிருக்கிறது என்ற மாயத்தோற்றத்தில் மயங்கியதும் இதே ஆட்சியாளர்கள் தான்.

நாடு முன்னேறிக் கொண்டிருந்தாலும் அதன் பயன் ஏழைமக்களைச் சென்றடையவில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பதும் இதே ஆட்சியாளர்கள்தான்.

நகரங்களின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவேண்டும் என்று ஓயாமல் புலம்பிக் கொண்டிருக்கும் ஆட்சியாளர்களுக்கு விளை நிலங்களை மேம்படுத்த வேண்டும் என்பதில் அக்கறையில்லை. ஓர் ஆண்டில் பெய்யவேண்டிய மொத்த மழையில் 80 சதவீதம் நான்கே மாதங்களில் பெய்து தீர்த்து விடுகிறது. இந்த மழைநீரை சேமிக்கவும் பகிர்ந்தளிக்கவும் தேவையான கட்டமைப்பு வசதிகள்தான் இன்றைய இந்தியாவின் முதல் தேவை. நமது விவசாயிகளின் துன்பம் சொல்லித் தெரியவேண்டியதில்லை. அவர்களின் தற்கொலைகளின் பின்னணியே அந்தக் கதைதான்.

இந்தியாவில் உணவுப்பொருள் விநியோகத்தில்தான் குறைபாடே ஒழிய உணவு உற்பத்தியில் அல்ல. உணவு உற்பத்தியில் மிகக் குறைவான முன்னேற்றம், விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலை, உணவு தானியங்களின் சேதாரம் ஆகியவை இந்நாட்டின் தலையாய பிரச்சினைகள் ஆகும்.

இந்தியர்களின் ஆதாரத் தொழிலான வேளாண்மைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை அரசு கொடுக்காதவரை எதுவுமே பலனளிக்கப் போவதில்லை.

நம்முடைய ஊரில் உளுந்து பயிரிடும் விவசாயி கிலோ 18 ரூபாய்க்கு தன்னுடைய உற்பத்திப் பொருளை விற்றுவிட்டு, அதே ஊரில் கிலோ 36 ரூபாய்க்கு உளுத்தம்பருப்பை வாங்கவேண்டிய அவலம்தான் இன்றைய பிரச்சினை.

உற்பத்தியிலோ விற்பனையிலோ எந்தவித பங்களிப்பையும் செய்யாத நிழல் தரகர்கள் ஊகவணிகத்தின் மூலம் கோடிக்கணக்கில் கொள்ளையடிக்க அரசு அனுமதிப்பதிக்கும் வரை அன்றாடங் காய்ச்சிகளின் வாழ்வில் வெளிச்சம் பிறக்கப் போவதில்லை. 

- மு.குருமூர்த்தி (cauverynagarwest@gmail.com)
Related Posts Plugin for WordPress, Blogger...