Search This Blog

Friday, September 04, 2015

காமத்தைப் புரிந்துகொள்
காமம். இன்று 14 வயது தொடங்கி எல்லோர் மனதையும் ஆக்கிரமித்துக்கொண்டு பாடாய்ப் படுத்திக் கொண்டிருப்பது. இது முற்றிலும் இயற்கையானது. 

ஆனால் இது தவறு என காலங்காலமாய் நீ போதிக்கப்பட்டிருக்கிறாய். நம் மதங்கள் பிரம்மச்சர்யத்தை மிகச் சிறப்பாய் வலியுறுத்துகின்றன.

ஆதி சங்கரரின் பஜ கோவிந்தத்தில் மூன்றாவது ஸ்லோகத்தில் சிற்றின்பம் அநித்தியமானது என்று கூறுகிறார்.

நாரீ ஸ்தனபர நாபி தேசம் 
த்ருஷ்ட்வாமாகா மோஹாவேசம்
ஏதன் மாம்ஸவஸாதி விகாரம்
மன்ஸி விசிந்திய வாரம் வாரம்

விளக்கம் :
பெண்களுடைய மார்பகத்தையும், சிற்றிடையையும் பார்த்து வெறியுடன் மோகம் கொள்கிறாய். ஆனால் அவையெல்லாம் வெறும் சதையின் விகாரத்தால் தோன்றும் அநித்திய தோற்றம் மட்டுமே என்பதை மனதில்தினம் தினம் சிந்தனை கொள்,

பட்டினத்தாரும் கூட மங்கையரின் வாய், மயிர், கண், அங்கம், யோனி முதலிய அனைத்தும் துர்நாற்றம் வீசும் தன்மையுடையது என பின்வரும் பாடலில் குறிப்பிடுகிறார்.

“வாய் நாறும் ஊழல் மயிர்ச்சிக்கு நாறிடும் மைஇடும் கண் பீநாறும் அங்கம் பிணவெடி நாறும் பெருங்குழி வாய்ச்சீ நாறும் யோனி அழல்நாறும் இந்திரியப் பேறு சிந்திப்பாய்நாறும் மங்கையர்க் கோ இங்ஙனே மனம் பற்றியதே?”

பாரதியும் கூட “மோகத்தைக் கொன்றுவிடு.. அல்லாள் எந்தன் மூச்சை நிறுத்திவிடு” எனப் பாடுகிறார்.

இப்படி காமத்தோடு காலங்காலமாய் நீ போரிட்டுக் கொண்டிருந்தாலும் கூட, கோடியில் ஒருவரால் கூட ஆதிசங்கரர், பட்டினத்தார் இன்னும் பல சித்தர்கள் கூறியதுபோல காமத்தை வெல்ல முடியவே இல்லை. இந்த கசப்பான உண்மையை நீ ஏற்றக்கொள்ளத்தான் வேண்டும்.

இயற்கையை எதிர்ப்பது மிக மிக முட்டாள்தனமானது. அதனோடு போரிட்டு ஜெயிப்பது என்பது இயலாது. மேல் மனதில் நீ காமத்தைக் குறித்து ஒரு அருவருப்பை ஏற்படுத்திக் கொள்ளலாம். பிரம்மச்சர்யம் மேலானது என உன் மேல் மனதை நம்ப வைக்கலாம். ஒழுக்க விதிமுறைகளை சொல்லித்தரலாம். பிறன் மனை நோக்குதல் பாவம் என பதியவைக்கலாம்.

ஆனால் இந்த மேல்மனம் என்பது ஒட்டு மொத்த மனதில் ஒரு 10 சதவிகிதம்தான். மீதி தொன்னூறு சதவிகித அடி மனதை (Unconscious Mind) முழுக்க முழுக்க காமம் ஆட்சி செய்கிறது.

மனைவியோடு நீ காபி ஷாப் போகும்போது, எதிர் டேபிளில் ஒரு ஆழகிய பெண், தன் உடல் வடிவத்தை அப்பட்டமாய் வெளிக்காட்டும் டைட் ஜீன்ஸ், டீ சர்ட் உடை அணிந்து வந்தால் கண் அனிச்சையாய் அந்தப் பெண்ணை மேயத்தான் செய்யும். பெண்களுக்கும் அப்படித்தான். இது முழுக்க முழுக்க இயற்கையான அனிச்சை செயல். இப்படிச் செய்யா விட்டால் நீ ஒரு அசாதாரணன்.

இப்போது உன் ஒழுக்க விதிகள் எல்லாம் காற்றில் பறந்துவிடும். ஆனால் நீ அந்தப் பெண்ணைப் பார்க்காதது போல கபட நாடகம் ஆடுவாய். நீ ஒரு வேடதாரி. உன்னை நீயே ஏமாற்றிக் கொள்கிறாய்.

இப்போது உன் மேல் மனதின் ஒழுக்க விதிகள் உன்னை குற்ற மனப்பான்மையில் ஆழ்த்தி விடும். அதற்காய் உன்னையே நீ வருத்திக்கொள்வாய்.

ஆக காமத்தைப் புரிந்து கொண்டு கடந்து சென்று விடுதலே நன்று.

ஒரு ஜீவனில் அதன் உயிரோட்டத்திற்கு அடிப்படையாக உள்ள ஜீவவித்துக் குழம்பு, இன்னொரு ஜீவனை உருவாக்க எத்தனிக்கிறது. இந்த எத்தனிப்பு உணர்வே காமம். இதைப் பற்றி உளநலவியல் நிபுணர் டாக்டர் ஷாலினி “அர்த்தமுள்ள அந்தரங்கம்” என்ற தன் புத்தகத்தில் பின்வருமாறு கூறுகிறார்.

“என்னதான் மனித சமுதாயத்தின் வாழ்வியல் தேவைக்காக ஆணும், பெண்ணும் பாலியல் ஒழுக்கங்களைக் கடைபிடித்தாலும், மரபணுக்களைப் பொறுத்தவரை ஒழுக்கம் என்ற சமாச்சாரமே அதற்குத் தெரியாது. மரபணுவிற்குத் தெரிந்ததெல்லாம் தன்னைத் தானே முடிந்தமட்டும் அதிகமாக மறுமைக்கு கொண்டு போவதுதான். இதனால் அவை ஆண்களில் கூடுமானவரை அதிகப் பெண்களோடு கூடி வேகவேகமாக இனத்தைப் பெருக்கிவிடும் உத்வேகத்தைத் தூண்டுகின்றன. இதுவே பெண்களில் முடிந்த மட்டும் விதம்விதமான ஆண்களோடு கூடி மரபணுக்களை அபிவிருத்தி செய்து, தரத்தைத் தக்கவைத்துக் கொள்ளத் தூண்டுகின்றன. இந்த மரபணுவின் வேக இனப்பெருக்கம், தரமான இனப்பெருக்கம் ஆகிய இரண்டு தூண்டுதல்களும் ஆணையும், பெண்ணையும் திருமணத்திற்கு வெளியே உறவு மேற்கொள்ளவும் உந்தின.” ஆக காமம் மரபணு சம்பந்தப்பட்டது.

இத்தகைய காமத்தோடு காலங்காலமாய் போரிட்டு நீ கண்ட பலன் என்னவென்றால் நீ ஒரு கபட வேடதாரியாக மாறியதுதான். ஒரு சமுதாயம் முழுக்க பொய் முக மூடி போட்டுக்கொண்டே அலைகிறது. உன்னை ஒழுக்கமானவனாகக் காட்டிக் கொள்ள நீ பற்பல முயற்சிகளை மேற்கொள்கிறாய். அன்றாட வாழ்வில் சமுதாயத்தில் நடக்கும் சின்னச் சின்னப் பிரச்சனைகளுக்கும், மனிதனின் காமத்திற்கு எதிரான போருக்கும் மிகப்பெரிய தொடர்பிருக்கிறது.

உதாரணமாய்…….
இன்று தெருவில் யாரோ ஒரு ஆணும், பெண்ணும் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக என் அருகில் நின்ற இரு பெண்கள் வதந்தி பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாத போதும் ஏன் இப்படி வாய் கூசாமல் பேசுகின்றனர்? இது எப்படி சாத்தியமாகிறது? காலங்காலமாய் காமத்தை தவறு என செய்த போதனையின் விளைவுதான் இந்த வதந்திப் பேச்சு.

ஒரு ஆணும் பெண்ணும் பேசிக்கொண்டிருந்தாலே “அவங்க ரெண்டுபேருக்கும் கள்ளத்தொடர்பு இருக்கு” என இருட்டுக்கடை திருநெல்வேலி அல்வா இலவசமாய் கிடைத்தது போல வதந்தி பேசி இன்புறுகிறாய். உண்மையில் இப்படி வதந்தி பேசுவதென்பது உன் மனம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் வக்கிரக் காமத்தின் வெளிப்பாடு.

நீ சொல்வது உண்மையாகவே இருந்துவிட்டுப் போகட்டுமே. அது அவர்கள் பிரச்சனை. உனக்கு என்ன நஷ்டம்? அதனால் வரும் விளைவுகளுக்கு அவர்கள் தானே பொறுப்பு. அதை நீ ஏன் பெரிதுபடுத்திப் பேசுகிறாய்? சற்று யோசித்துப் பார். உன்னால் அப்படி இருக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்தின், பொறாமையின் வெளிப்பாடுதான் இது. உண்மையில் உன் அடிமனதில் பற்பல வக்கிரங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவை உனக்கு ஒரு குற்ற உணர்வைத் தருகின்றன. நீ வெளிப்பட்டு விடுவாயோ என்ற பயம் உன்னை ஆக்கிரமித்துக் கொள்கிறது. உன் குட்டு உடைந்து விடுமோ என அஞ்சுகிறாய். அடுத்தவனை இப்படிப் பேசுவதன் மூலம் உன் அசிங்கங்களை மறைக்க முயலுகிறாய்.

நீ ஒழுக்கமானவன் என காட்டிக் கொள்ள கடும் முயற்சி செய்கிறாய். உண்மையில் உன் மனதில் யாருக்கும் தெரியாமல் நடந்த கற்பழிப்புகள் எத்தனை எத்தனை? உடலளவில் இல்லையெனினும் மனதளவில் நீ எத்தனை பேரோடு உறவு கொண்டிருக்கிறாய்? இந்த உண்மைகளை உன்னால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. உடனே, “நான் ஒரு ஏக பத்தினி விரதன்/விரதி. இந்த இப்பிறவிக்கு இரு மாதரை/ஆடவரை சிந்தையாலும் தொடேன்” என வசனம் பேசுவாய். காமத்தில் நிறைவு அடையாத ஒருவரால் தான் இப்படி யாரைப் பார்த்தாலும் தவறாகப் பேச இயலும்.

இது போல சமுதாயத்தின் பற்பல பிரச்சனைகளுக்கும் மிகப்பெரும்பாலும் அடிப்படைக் காரணமாய் இருப்பது காமமே

காமம் கடந்து விட்ட ஒருவனுக்கு, இவையெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. அவன் யாரையும் தவறாகக் கருதுவதேயில்லை. காமத்தை இயற்கையானது என ஏற்றுக்கொள்ளாமல், அதை எதிர்த்துப் போரிடுவதால், கபட நாடகமாடும் இத்தகைய மிக இழிவான மனநிலையைத்தான் நீ பெற்றிருக்கிறாய். இதுவே பன்நெடுங்கால போதனையின் விளைவு.

ஓஷோ இத்தகைய கபட வேடதாரிகளைப் பற்றியும், அவர்களால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், “காமத்திலிருந்து கடவுளுக்கு” என்ற புத்தகத்தில் மிக விரிவாகப் பேசுகிறார்.

நான் இப்போது உன்னைக் கேட்டுக் கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். முதலில் உன்னை நீ முழுமையாக ஏற்றுக்கொள். என்னுள் காமம் இருக்கிறது என ஒத்துக்கொள். அது இயற்கையானது என உணர்ந்துகொள். அந்த வக்கிரக் காமத்தோடு உன்னை நீயே அங்கீகரித்துக் கொள். கபட வேடம் போடுவதை நிறுத்து. உன்னை நல்லவனாகக் காட்டிக் கொள்ளும் முட்டாள் தனமான முயற்சியைக் கைவிடு. பிறகு காமத்தை கடப்பது இலகுவாகும். அதற்கான வழி உன்னுள்ளேயே ஒளிரத் தொடங்கும். உன் மோக நிலை கூட ஒரு யோக நிலை போலிருக்கும்.


6 comments:

Related Posts Plugin for WordPress, Blogger...