Search This Blog

Saturday, November 20, 2010

குழந்தை வளர்ப்பு குறித்த பொதுவான டிப்ஸ்


Child Care Tips for Positive Parenting - Child Care Tips and Informations in Tamil
"எந்தக் குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே-பின்பு
நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே"
எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். குழந்தை வளர்ப்பு என்பது தனிக்கலை. ஒவ்வொரு குழந்தையும் இந்த உலகத்தில் பிறக்க கடவுள் தேர்ந்தெடுத்த கருவிகள் தான் பெற்றோர். உயிராகி, கருவாகி, உருவாகி, பிள்ளைக் கனியமுதாய்ப் பிறந்து, முகம் பார்த்து சிரித்து, தவழ்ந்து, விழுந்து, எழுந்து, பிஞ்சுப் பாதத்தால் அழகு நடை நடந்து, ஓடி, சிரித்து, அழுது, பேசி ஒவ்வொரு பருவத்தைக் கடந்து வரும் குழந்தைகள் உலகமே தனி. வாழ்க்கையில் எல்லாமே அவர்களுக்குப் புதியது. நாம் தான் எல்லாம் கற்றுத் தர வேண்டும். குழந்தைகளுக்கும் மனம், உணர்வுகள், விருப்பு-வெறுப்புகள் உண்டு என்பதை நாம் மறக்கக் கூடாது. பொதுவாக நம் எண்ணங்களை செயலாகின்ற செயலே பழக்கமாகின்றப் பழக்கமே வழக்கமாகின்ற வழக்கமே ஒழுக்கம் ஆகின்றது; தனிமனித ஒழுக்கமே பண்பாடு ஆகின்றது. பண்பட்ட குழந்தைகளை உருவாக்கும் பொறுப்பு பெற்றோர்களாகிய நம்மிடம் தான் இருக்கிறது. அதுவும் குழந்தைகளின் இளமைப்பருவத்தில் நாம் விதைக்கும் விதையே விருட்சமாகி நல்ல குடிமகனாக உருவாக வாய்ப்பாகின்றது. குழந்தை தானே என்று அசட்டையாக எண்ணாமல் வளர்ப்பில் கவனம் செலுத்தினால் நம் குடும்பத்திற்கு மட்டுமில்லாமல் நாட்டிற்கே நற்பிள்ளையாகத் திகழ்வான். குழந்தைகளின் வளர்ப்பு குறித்த பொதுவான வழிமுறைகள் இதோ....
வீட்டில் குழந்தைகள்:
* எந்த வயது குழந்தையையும் திட்டவோ அடிக்கவோ கூடாது. உடல் ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தக் கூடாது.
* சிறுசிறு வேலைகளை இளமைக் காலத்திலிருந்தே குழந்தைகளுக்குப் பழக்க வேண்டும்.
* குழந்தைகள் எதிரில் பெரியவர்கள் சண்டை போடக் கூடாது. அது மனரீதியாகக் குழந்தைகளைப் பாதிக்கும்.
* எந்தக் குழந்தையுடனும் உங்கள் குழந்தையைத் தொடர்புபடுத்திப் பேசாதீர்கள். அது குழந்தைகள் மனதில் ஏக்கத்தையும் தாழ்வுமனப்பான்மையையும் விதைத்து விடும்.
* குழந்தைகள் எதிரில் பெரியவர்களை மரியாதை குறைவாகப் பேசக்கூடாது.
* எல்லாருடைய நல்ல குணங்களை மட்டுமே குழந்தைகள் எதிரில் பேச வேண்டும். யாரையும் தாழ்த்திப் பேசக் கூடாது.
* குழந்தைகளுக்கும் விருந்தோம்பலைக் கற்றுத் தர வேண்டும்.
* பிள்ளைகளின் வேலைகளை அவர்களே செய்யப் பழக்க வேண்டும். அவ்வாறு செய்தால் அவர்களுக்குப் பொறுப்புணர்ச்சி அதிகமாவதுடன் நமக்கும் வேலைப்பளு குறையும்.
* குழந்தைகளுக்கு உறவுகளின் அருமையையும் விட்டுக் கொடுத்தலையும் புரிய வைக்க வேண்டும்.
* ஆபத்தை விளைவிக்கும் எந்தப் பொருளையும் குழந்தைகள் கைக்கு எட்டும் தூரத்தில் வைக்கக் கூடாது. 

பள்ளியில் பிள்ளைகள்:
* குழந்தைகளைப் பயமுறுத்தி வளர்க்கக் கூடாது. அதிலும் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்துள்ள, குறும்புகள் அதிகம் செய்யும் குழந்தையிடம், "ரொம்ப சேட்டை பண்ணினேனா ஸ்கூல்ல கொண்டு தள்ளிடுவேன், ராகினி மிஸ்கிட்டே நல்லா நாலு அடி கொடுக்கச் சொல்றேன்" என்று கூறக் கூடாது. அப்படி செய்தால் பள்ளிக்கூடம் ஏதோ பயமுறுத்தும் இடம் போலவும், ஆசிரியர்கள் துன்புறுத்துபவர்கள் போலவும் குழந்தைகள் மனதில் பதிந்து விடும். அதற்குப் பதில் "நீ படிச்சு பெரிய ஆளாகணும், டீச்சர்ஸ் எல்லாம் ரொம்ப அன்பானவங்க, மாதா பிதா குரு தெய்வம்னு சொல்வாங்க. குருனா அது உன் டீச்சர் தான், உன்னைப் பெரிய ஆளாக்குறதுல அவங்க பங்கு தான் அதிகம்" என்று பள்ளிக்கூடத்தையும் ஆசிரியர்களையும் இனிமையானவர்களாகக் காட்ட வேண்டும்.
* பிள்ளைகள் வகுப்பில் பின்தங்கி இருந்தால் அவர்களை அன்புடன் அணுகி புரியாத பாடங்களைச் சொல்லித் தர வேண்டும். மிரட்டக்கூடாது.
* பிள்ளைகள் தங்களைத் தவிர வேற்று மனிதர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தர வேண்டும்.
* பிள்ளைகள் மற்ற சக மாணவர்களுடன் போட்டி போடும் போது அது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளவும்.
* பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அடிக்கடி ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.
* குழந்தையின் பள்ளிப் பையில் நம் வீட்டு விலாசம், தொலைபேசி எண் அடங்கிய கார்டை வைத்து விட வேண்டும். ஒருவேளை குழந்தைகள் காணாமல் போனாலும் விலாசம் இருப்பதால் குழந்தை பத்திரமாக வந்து சேரும்.
* பெற்றோரைத் தவிர வேறு முகம் தெரியாத நபர்கள் அழைத்தால் செல்லக் கூடாது என்று குழந்தைகளிடம் சொல்லி வைக்க வேண்டும்.
* பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகளுக்குத் தங்க நகைகள் அணிவித்து அனுப்பக் கூடாது.
* பிள்ளைகளுக்கு ஆபத்து ஏற்படும் போது எப்படி நடந்து கொள்ள வேண்டும், தற்காத்துக் கொள்ள வேண்டும் போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
* சக மாணவர்களுடன் அன்பும் நட்பும் பாராட்டும்படி செய்ய வேண்டும்.

குழந்தைகளும் கல்வியும்:
* பிள்ளைகள் பள்ளிக்கூடப்பாடம் செய்து கொண்டிருக்கும் வேளைகளில் கண்டிப்பாக தொலைக்காட்சி பார்க்கக் கூடாது.
* பிள்ளைகள் படிக்கும் போது நாமும் அவர்களோடு அமர்ந்து ஏதேனும் புத்தகங்கள் படிக்க வேண்டும். இப்படிச் செய்வதால் குழந்தைகளின் கவனமும் சிதறாது. படிக்கும் ஆர்வமும் அதிகமாகும்.
* பிள்ளைகளை அதிக நேரம் தொலைக்காட்சியைப் பார்க்க விடக் கூடாது. அதற்குப் பதில் அருகில் உள்ள நூலகத்திற்கு அழைத்துச் சென்று நூல்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.
* கோடை விடுமுறையில் குழந்தைகளைச் சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புவது சரிதான். ஆனால் ஒரே நேரத்தில் கராத்தே, பாட்டு, நடனம், யோகா என்று பலவித வகுப்புகளுக்கு அனுப்பும் போது குழந்தைகள் எதிலும் ஜொலிக்காமல் சோர்வடையக் கூடும். எனவே, குழந்தைகளுக்குப் பிடித்த ஏதேனும் ஒரு சில வகுப்புகளில் மட்டும் சேர்த்து விடலாம்.
* "காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுதும் விளையாட்டு" என்ற மகாகவி பாரதியின் வரிகளுக்கேற்ப மாலை வேளைகளிலே குழந்தைகளை விளையாடவும் விட வேண்டும்.
* அழகான ரோஜாவில் முட்களா? என்று சிந்திப்பது எதிர்மறை சிந்தனை, முட்களில் இத்தனை அழகான ரோஜாவா? என்பது ஆக்கப்பூர்வமான சிந்தனை. எனவே ஆக்கப்பூர்வமான சிந்தனைகளைக் குழந்தைகளிடம் வளர்க்க வேண்டும்.
* பிள்ளைகளை ஒரு பொருளை எடுத்தால் எடுத்த இடத்தில் வைக்கப் பழக்க வேண்டும். காலை நேரப் பரபரப்பில், "சீ எங்கே பாக்ஸ்" என்று பதட்டப்படத் தேவையில்லை.
* மனிதாபிமானம், அடுத்தவருக்கு உதவும் குணம் போன்றவற்றைப் பிள்ளைகளுக்குச் சொல்லித்தர வேண்டும். நாட்டுப்பற்றை ஊட்ட வேண்டும்.
* நம் கோபம், அவசரம், பதட்டம் என்று எதனையும் குழந்தைகளிடம் காட்டக் கூடாது.
* குழந்தைகளிடம் பொறுமையும் கனிவும் மிகவும் முக்கியம்.

குழந்தைகளின் உணவும் ஆரோக்கியமும்:
* சுத்தம், சுகாதாரம், சத்துள்ள ஆகாரம் ஆகிய மூன்றும் உடல் ஆரோக்கியத்தின் அடிப்படை என்பதைப் பிள்ளைகளுக்கு உணர்த்த வேண்டும்.
* பிள்ளைகள் தங்கள் அறையைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பழக்க வேண்டும்.
* சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைகளைக் கத்தியோ துன்புறுத்தியோ உண்ண வைக்காமல் சிறிது விட்டுப் பிடிக்கலாம்.
* ஒரே மாதிரி சமைக்காமல் குழந்தைகளுக்கு கேரட், பீட்ரூட் போன்ற விதவித வண்ண உணவுகளைச் சமைத்துத் தர வேண்டும். உணவை அவர்களுக்குப் பிடித்ததாக்க வேண்டும். உதாரணத்திற்கு ஏ, பி, சி போன்ற வடிவங்களில் தோசை வார்த்துத் தரலாம்.
* பாதாம்பருப்பைப் பொடித்து பாலில் கலந்து வாரத்திற்கு மூன்று முறை பிள்ளைகளுக்குக் கொடுத்து வர, அவர்களின் நினைவாற்றல் அதிகரிக்கும். கேரட்டைத் துருவி தேனில் கலந்து கொடுத்தாலும் புத்திக்கூர்மை ஏற்படும்.
* தினம் ஒரு காய், ஒரு பழம் உண்ணும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.
* கொழுப்புச் சத்து அதிகம் இருக்கும் உணவுகள், செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட குளிர்பானங்கள், உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நொறுக்குத் தீனிகளைக் குழந்தைகளுக்குக் கொடுத்துப் பழக்கக் கூடாது.
* தொலைக்காட்சி பார்த்துக் கொண்டே குழந்தைகள் உணவு உண்ணும் பழக்கத்தை ஊக்கப்படுத்தக்கூடாது.
* உணவின் அருமையைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்களுக்குச் சத்துள்ள ஆகாரங்களைக் கண்டிப்பாகத் தர வேண்டும். உண்ண மறுத்தாலும் கொஞ்சம் கொஞ்சமாகப் பழக்க வேண்டும்.
* குழந்தைகளுக்கு எந்த விதமான உடல்-மன ரீதியான பிரச்சினைகள் ஏற்படின் அதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளும் சேமிப்புப்பழக்கமும்:
* பிள்ளைகளுக்குப் பணத்தின் அருமையை இளம் வயதிலிருந்தே உணர்த்த வேண்டும்.
* பிள்ளைகளுக்குச் சேமிக்கும் பழக்கத்தைச் சிறு வயதிலேயே ஏற்படுத்த வேண்டும்.
* பெரியவர்கள் குழந்தைகளுக்குப் பண்டிகை காலங்களில் தரும் பணத்தை உண்டியலில் அவர்கள் கையாலேயே போட்டு வரச் செய்ய வேண்டும், பணம் சேர்ந்தவுடன் அவர்கள் நீண்ட நாட்களாக ஆசைப்பட்ட பொருளை வாங்கித் தரலாம். அவர்களுக்குச் சேமிப்பின் அருமை தெரிவதுடன் தன் உழைப்பில் வாங்கிய பொருள் என்று மகிழ்ச்சியாக இருக்கும்.
* குழந்தை ஆசைப்படுகின்ற எல்லாப் பொருளையும் வாங்கித் தர வேண்டிய அவசியமில்லை. எது தேவையோ அதைத் தவிர மற்றவற்றைக் குழந்தையின் பிடிவாதத்திற்காக வாங்கித் தரக் கூடாது. குழந்தைக்குச் சிறு சிறு ஏமாற்றங்களும் கிடைத்தால் தான் பிற்காலத்தில் எதையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவமும் பணத்தின் மதிப்பும் தெரியும்.
* செலவிற்குப் பணம் என்று தனியாகப் பிள்ளைகள் கையில் பணத்தைப் புரள விடக் கூடாது.

குழந்தைகளின் வெற்றி-தோல்வி:
* பிள்ளைகளின் எண்ணங்கள், கருத்துக்களைச் செவி கொடுத்துக் கேளுங்கள். அவர்களின் உணர்விற்கும் மதிப்பு கொடுங்கள்.
* பிள்ளைகளின் மேல் உங்கள் தனிப்பட்ட ஆசைகளைத் திணிக்காமல் அவர்களின் ஆர்வம் எதில் இருக்கிறதோ அதைக் கண்டறிந்து ஊக்கப்படுத்துங்கள். பல்வேறு போட்டிகளில் சேரச் சொல்லுங்கள்.
* பிள்ளைகள் செய்யும் நல்ல விஷயங்களையும் மனம் திறந்து பாராட்டுங்கள். ஒவ்வொரு முறை பாராட்டு வாங்குவதற்காகவே நல்ல பழக்கங்களை மேற்கொள்வார்கள்.
* வெற்றியானாலும் சரி, தோல்வி கிடைத்தாலும் சரி, எல்லாமே வாழ்க்கையின் அங்கங்கள் என்பதைப் புரிய வையுங்கள்.
* பிள்ளைகள் நல்ல விஷயங்கள் செய்தாலும், நல்ல மதிப்பெண்கள் வாங்கினாலும், போட்டியில் வெற்றி பெற்று வந்தாலும் ஏதேனும் பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்து உங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* பிள்ளைகள் எந்த விஷயத்திலாவது தோல்வியடைந்தால் திட்டாமலும் சோகத்தை வெளிக்காட்டாமலும் அடுத்த முறை வெல்லலாம் என்று ஊக்கப்படுத்துங்கள்.
* குழந்தைகளைப் பெருமையாக மற்றவர்களிடம் கூறுங்கள். உங்கள் ஊக்கமும் உற்சாகமும் குழந்தைகள் மனதில் தன்னம்பிக்கையை விதைக்கும்.
* ஆண் என்றால் உயர்ந்தவர், பெண் என்றால் தாழ்ந்தவர் என்ற பேதத்தையோ சாதியையோ பிள்ளைகள் மனதில் விதைக்கக் கூடாது.
* நாம் எப்படி நடக்கிறோமோ அது போலவே தான் பிள்ளைகளும் நம்மைப் பின்பற்றுவார்கள். எனவே பிள்ளைகள் எதிரில் பேச்சிலும், செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.
* குழந்தை வளர்ப்பில் தந்தை-தாய் இருவருக்கும் சரி பங்கு இருக்கிறது. பிள்ளைகள் நல்ல மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் பெருமையில்லை. இளமையிலே அவர்களுக்கு ஒழுக்கத்துடன் கூடிய வாழ்க்கைக் கல்வியையும் தர வேண்டும்.

1 comment:

  1. A Good post. in Simple we can say, Set an example and be a role model for your children. They learn by themselves from you.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...