Search This Blog

Wednesday, May 18, 2011

நீரின் குண நலன்கள்!

நீரின் பண்புகளும் அதன் குணங்களும் மாறும் தன்மை உடையவை. அவைகள் நிறமற்றவை, சுவையற்றவை என்று வர்ணிக்கப்பட்டாலும் அவைகள் சூழலுக்கேற்றவாறு மாறும் தன்மை கொண்டவைகளாக உள்ளன.

நீரின் மருத்துவ தன்மைகளைப் பார்ப்போம்..... மழை நீரினால் குளிர்ச்சி, நல்லறிவு முதலியன உண்டாக்கும். பனி நீரினால் வாதகோபம், வெகுமூத்திரம், சொறி சிரங்கு முதலியன போம். மேற்கூறியது போக மற்ற நீர்கள் அவையிருக்கும் நிலத்தின் குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது ஆற்று ஜலம் திரிதோஷத்தால் ஏறபட்ட நோய்களையும் பித்தகோபத்தையும் தாகத்தையும் தணிக்கும்.

குளத்து நீர், வாதம், மது மூத்திரம், சீதளம் இவைகளை உண்டாக்கும். கிணற்று ஜலம் சரீரக் கடுப்பு, அழற்சி, வீக்கம், பித்தம் சுவாசம் முதலியவை நீக்கும். ஏரிநீர் வாதத்தை விருத்திசெய்யும். சமுத்திர ஜலமானது பீலிகம், குன்மம், குஷ்டம், உதரநோய், சுரம் முதலிய நோய்களைப் போக்கும்.

குளிர்ந்த நீர் சீதவீரியமுள்ளது இதனை வாதரோகம், கண்ட நோய், மந்தம், மலபந்தம், விக்கல் முதலிய நோய்களை உடையவர்கள் அருந்துதல் கூடாது. வெந்நீரை அருந்த, அதாவது நன்றாக காய்ச்சி அருந்துமளவு ஆற்றி அருந்த புளியேப்பம், சீதக்கட்டு, குன்மம், காசம், மந்தாக்கினி நேத்திரப்பிணிகள் முதலியவைகளை குணமாக்கும்.

இது உதரநோய், பாண்டு, சோபை, மேகம், விரணம், வாதம், அதிசாரம், கபநோய் முதலிய நோய்களை உடையவர்களுக்கு நல்லது. காய்ந்து ஆறிய நீரானது பித்தாதி திரிதோஷம், பைத்தியம், ரத்தபித்தம், சுரம், வாந்தி, மூர்ச்சை, அதிசாரம், சன்னிபாதம் முதலிய நோய்கட்குச் சிறந்தது.

உணவுக்கு முன்பு நீரை அருந்த மந்தத்தையும், உணவுக்கு பின்பு அருந்த சீரணத்தையும், உணவுக்கு இடையிடையே அருந்த பல நோய்களையும் உண்டாக்கும். மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு பின்பு அதிகமாக நீரை அருந்தக் கூடாது.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...