Search This Blog

Sunday, November 27, 2011

Rain water harvesting

ராஜஸ்தான் மாநிலம் என்றாலே, பாலைவனத்திற்கு பெயர் பெற்றது. குறைந்த அளவே மழை பெய்யும்; எப்போதும் வறட்சிதான். வீட்டு உபயோகத்திற்கு தண்ணீர் எடுக்க வேண்டும் என்றால் கூட பெண்கள் நெடுந்தூரம் செல்ல வேண்டும். இந்த மக்களின் தண்ணீர் தேடல் தொடர்கிறது. இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலத்திற்கே மரகதப் பதக்கம் வைத்தாற்போல பசுமை நிறைந்ததாக மாறி உள்ளது நேமி கிராமம். சமீபத்தில் இங்கு சென்று வந்த நண்பர் ஒருவருடன் பேசிய போது ஆச்சரியமும், சந்தோஷமும் ஏற்பட்டது. அவர் கூறினார்: நேமி கிராமம் மட்டுமல்ல... இதைச் சுற்றியுள்ள கிராமங்களும், தண்ணீர் சேமிப்பும், மழை நீர் அறுவடை போன்ற சிறந்த விஷயங்களை அறிந்து, தக்க சமயத்தில் நடவடிக்கைகளை மேற்கொண்டது தான் பசுமை அடைந்ததற்குக் காரணம். இப்போது, இந்த பகுதி மக்கள், "தண்ணீர் கஷ்டமா... அப்படீன்னா?' எனக் கேட்கின்றனர். இந்தப் பகுதிகளில் ஆர்வாரி, ரூபரேல் போன்ற ஆறுகள் ஒரு காலத்தில் ஓடின... இப்போது அவை வற்றி, அவற்றின், "தடம்' மட்டுமே காணப்படுகிறது. எப்போதோ வெட்டப்பட்ட குளங்கள், கண்மாய்கள் தூர்ந்து போய் குப்பை கொட்டும் இடங்களாகின. இந்த இடங்களை பல பொது நல தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், கிராம மக்களே சுத்தம் செய்தனர். மழை நீர் ஓடி வந்து இந்த குளங்களில் தேங்கும் அளவிற்கு கால்வாய்கள் வெட்டப்பட்டன. இந்த பகுதிகளில் பெய்யும் ஒவ்வொரு மழைத் துளியையும், சேமிக்கும் அளவிற்கு, கிணறுகள் அமைக்கப்பட்டன; மழை நீர் சேமிப்புத் தொட்டிகள் பல அமைக்கப்பட்டன. இதுபோன்ற விழிப்புணர்வை பல தொண்டு நிறுவனங்கள் கிராம மக்களுக்கு ஏற்படுத்தின. அரசாங்கத்தின் உதவி இன்றி, "நமக்கு நாமே' என்று கிராமத்தினர் செயலில் இறங்கினர். இந்த முயற்சிகளால் நேமி கிராமத்தில் நல்ல பலன் கிடைத்தது. நீர்வளம் அதிகரித்தது. காய்ந்து கிடந்த ஆற்றுப் படுகைகளில் நீர் பாய்ந்து நிலத்தின் அடித்தளம் வரை சென்றது. இதனால், நிலத்தடி நீர் அளவு உயர்ந்தது. இதை கிராமத்தினர் கண் கூடாக உணர்ந்தனர். கிணறுகளில் மிகவும் ஆழத்தில் சிறிதளவு தண்ணீரை கஷ்டப்பட்டு இழுக்கும் நிலை மாறி, கிணற்றின் மேல் மட்டத்திற்கு தண்ணீர் வந்து விட்டது; தண்ணீரும் உப்பு கரிப்பு இல்லாமல் சுவையாக இருக்கிறது. இந்த பகுதிகளில் விவசாயம் பெருகுகிறது. கோதுமை வளர்ச்சி அதிகரித்துள்ளது. பறங்கிக்காய், முள்ளங்கி, முலாம் பழங்கள் அதிக அளவில் இப்போது விளைகின்றன. தினமும் லாரிகளில் ஹரியானாவிற்கும், டில்லிக்கும் இவை விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. கிராமங்களின் பொருளாதார நிலை இதன் காரணமாக உயர்ந்து வருகிறது. இப்போது நாட்டில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நீர்வள ஆய்வாளர்கள் இந்தப் பகுதிக்கு வந்து மழை நீர் அறுவடை மற்றும் நீர் வற்றி வீணாகாமல் சேமிக்கும் முறைகள் பற்றி தெரிந்து செல்கின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களிலும், பெரிய கட்டடங்கள் கட்டும் போதும், அவற்றை சுற்றிலும் சிமென்ட்டால் பூசி விடுகின்றனர்; இது பெரும் தவறாகும். இந்த பெரிய பரப்பளவிலான கட்டடங்களில் பெய்யும் மழை நீர், தரையில் வழிந்து, சாக்கடையில் தான் கலக்கிறது. இதனால் என்ன லாபம்! இதுபோன்ற பெரிய கட்டடங்களில் மழைநீர் சேமிப்புத் தொட்டிகளை அமைக்கலாம். இதற்கு மிகவும் குறைந்த செலவே ஆகும். அந்த கட்டடங்களுக்கான கிணறுகளின் நீர் அளவும் அதிகரிக்கும். கார் நிறுத்தும் இடங்களில் நிலத்தினுள் நீர் போகாத அளவு சிமென்ட்டால் பூசி மெழுகுவதை தவிர்த்து, சிறிதளவு மண் தெரியும் அளவு கற்களைப் பதிக்கலாம். இதனால், நிலத்தினுள் மழைநீர் செல்ல வாய்ப்பு ஏற்படும்; நிலத்தடி நீர்வளம் அதிகரிக்கும். பூமியின் தாகத்திற்கு மழைநீர் செல்ல விடாமல் சிமென்ட்டால் பூசி மெழுகுபவர்களது அறியாமை போக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும். இல்லாவிட்டால், இந்த உலகமே தண்ணீர் இல்லாத கான்கிரீட் கட்டடங்களால் ஆன பாலைவனமாகி விடும் என்றார். அவர் சொல்றது முற்றிலும் சரி... அத்தோடு, வெளி மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானவர்கள் வருடா வருடம் சென்னையில் வந்து செட்டிலாவதை தடுக்க முயல வேண்டும் அரசு. அரசின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்துமே சென்னையையும், அதைச் சுற்றியுமே அமைவதால் வெளி மாவட்ட, "மைகிரேஷன்' ஒவ்வொரு நாளும் அதிகரிக்கிறது... இன்னும், 10 வருடங்களில் தார் பாலைவனமாக தமிழ்நாடு மாறுவதை தடுக்க, இப்போதே அரசு முயல வேண்டும் என்றேன்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...