Search This Blog

Tuesday, December 20, 2011

சொத்துகள் வாங்கும் போது என்ன செய்ய வேண்டும்


சொத்துகள் வாங்கும் போது என்ன என்ன பத்திரங்களைக் கவனிக்க வேண்டும்?


சொத்துகள் பற்றிய அரசு அலுவலகம் வருவாய்த்துறையின் (Revenue Department) கீழ் வரும் ரெஜிஸ்டர் அலுவலகத்தில் நிலத்திற்கான விவரங்கள் இருக்கும். அது ஐந்து வகையான பதிவேடுகளில் குறிக்கப்பட்டிருக்கும்:


1) பட்டா (Patta)
2) சிட்டா(Chitta),
3) அடங்கல் (Adangal)
4) ‘அ’பதிவேடு என்கிற ‘A’ Register
5) நிலத்திற்கான வரைபடம் (FMB)


பட்டா என்றால் என்ன?
=======================
ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதைக் காட்டுவது - பட்டா. இப்பட்டாவில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.


சிட்டா என்றால் என்ன?
======================
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா. சிட்டாவில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், என்ன வகையான நிலம் அதாவது நன்செய் அல்லது புன்செய் பயன்பாட்டில் இருக்கிறதா? என்பதும் தீர்வை (வரி) கட்டிய விவரங்கள் சிட்டாவில் இருக்கும்.


அடங்கல் என்றால் என்ன?
========================
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் 'அடங்கல்'. அடங்கலில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இருக்கும்.


'அ' பதிவேட்டில் ('A' Register) இருக்கும் விபரங்கள் 
================================================
1.பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2.ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ), .நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு
3.பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்
4.நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.


வரைபடம் அல்லது FMB ஸ்கெட்ச் என்றால் என்ன?
===============================================


நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபரின் இடம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் குறிக்கப்படும் சர்வே எண்ணும் அப்படத்தில் குறிக்கப்பட்டிருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகள் நீள அகலங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இப்படத்தினை வைத்து நிலத்தின் வடிவம், நீள அகலங்களை அறிந்து கொள்ளலாம்.


ஓகே. பதிவேடுகள் குறித்து அறிந்தாயிற்று. இனி வாங்கும்போது என்னன்ன கவனிக்கவேண்டும்?



நிலத்தின் உரிமையாளர் உயிரோடு இல்லையென்றால், அனைத்து வாரிசுதாரர்களின் சம்மதத்தோடு நிலம் விற்கபடுகிறதா? என்று தெரிந்து கொள்ள வேண்டும். முக்கியமான விஷயம், யாரெல்லாம் வாரிசுதாரர்கள் என்று வாரிசு சான்றிதழ் மூலம் தெரிந்து கொள்வது.உரிமையுள்ள வாரிசுகளில் யாரேனும் மைனராக இருந்தால், உயர்நீதிமன்றம் நியமிக்கும் காப்பாளர் (Guardian) மூலம்தான் சொத்து விற்கப்படவேண்டும்.


அதிகாரம் பெற்ற முகவர் (Power of Attorney Holder) மூலம் சொத்து வாங்கும்போது, முகவருக்கு சொத்தை விற்கும் அதிகாரம் இருக்கிறதா என்பதை அதிகார ஆவணத்தை தெளிவாக படித்து தெரிந்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், விற்பனை ஒப்பந்தம் செய்வதற்கு மட்டும் கூட அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கலாம். அப்படிபட்டவரிடம் இருந்து விற்பனை ஆவணம் பதிவு செய்துக்கொள்ள முடியாது. அதிகாரம் கொடுத்தவர் உயிரோடு இருக்கிறாரா? என்று தெரிந்துக்கொள்ளவும். இல்லையென்றால், அதிகாரமும் இல்லை.


மனநலம் பாதிக்கப்பட்டவரின் சொத்தை வாங்குவதற்கும் நீதிமன்றத்தின் அனுமதியை பெற்றாக வேண்டும். நிறுவனங்களிடம் இருந்து சொத்து வாங்கும் போது, உரிமை, உடமைகளுடன், அந்த நிறுவனத்தின் விதிமுறைகளை பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும்.


முன்பணம் கொடுப்பதற்கு முன் கண்டிப்பாக மூல ஆவணத்தை பார்க்க வேண்டும். மூல ஆவணம் இல்லையென்றால், சொத்து அடமானத்தில் இருக்கலாம்.உங்களிடம் கொடுக்கப்பட்ட விற்பனை ஆவணம், மூல ஆவணமா (Original Deed) அல்லது படி ஆவணமா (Duplicate copy) என்று தெரிந்துக்கொள்ள வேண்டும். மூல ஆவணம் தான் தேவை.


மூல ஆவணம் நமக்கென்று கிடைக்க வாய்ப்பில்லாத அபார்ட்மெண்ட் ப்ளாட் விற்பனையின் போது, மூல ஆவணத்தை பார்வையிடுவது அவசியம்.அபார்ட்மெண்ட்டில் வீடு வாங்கும் போது, மூல ஆவணம் அடமானத்தில் இருந்தாலும், நீங்கள் வாங்கும் வீட்டின் மீது வங்கிக்கு எந்த உரிமையும் இல்லையென்று சான்றிதழ் பெற்றுக்கொள்ள வேண்டும்.அபார்ட்மெண்ட் கட்ட அனுமதி, திட்டத்தின் அனுமதி, வரைபடத்தின் அனுமதி என்று அனைத்து அனுமதியையும் பார்க்க வேண்டும்.அனுமதி பெற்ற வரைப்படத்தை மீறி கட்டிடம் கட்டப்பட்டிருக்க கூடாது.


விற்பனை ஆவண பதிவிற்கு கால அவகாசம் தேவைப்படும் பட்சத்தில், விற்பனை ஒப்பந்தம் செய்துக்கொள்வது நல்லது.
விற்பனை ஒப்பந்தத்தில், முன்பணம், விற்பனைத் தொகை, கால அவகாசம், நீட்டிப்புக்கான நிபந்தனைகள், விற்பனை தவறும் பட்சத்தில் தரப்பட வேண்டிய இழப்பீடு ஆகிய அனைத்தும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட வேண்டும்.


பொதுவாக ஒரு சொத்து வாங்குவதற்கு முன், அதன் உரிமையாளரிடம் வாங்க வேண்டியவை:
1) விற்பனை ஆவணம்
2) தாய் ஆவணங்கள்
3) வில்லங்க சான்றிதழ்
13 ஆண்டுகள் வில்லங்க சான்றிதழ் போதும். 30 ஆண்டுகள் ரொம்ப நல்லது.
4) பட்டா, சொத்து வரி ரசீதுகள்
சொத்தின் உரிமையை (Ownership) ஆராய்ந்து தெரிந்துக்கொள்வது போல், உடமை (Possession) பற்றியும் தெரிந்துக்கொள்ள வேண்டும். பட்டா பார்த்து, உடமையை தெரிந்துக்கொள்ளலாம். விவசாய நிலமென்றால், சிட்டா.


நிலத்தை பொறுத்து, உரிமையாளரை பொறுத்து  தேவைப்படும் ஆவணங்கள் கூடும்


3 comments:

  1. நல்ல தகவல்கள், நீங்கள் சொன்னதுப்போல பார்த்துத்தான் வாங்குவது வழக்கம்.

    //நிலத்திற்கான வரைபடம் FMB என்பது குறிப்பிட்ட நபரின் இடம் எவ்வாறு இருக்கிறது என்பதைக் காட்டும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட நபருக்குச் சொந்தமான சொத்தாய் குறிக்கப்படும் சர்வே எண்ணும் அப்படத்தில் குறிக்கப்பட்டிருக்கும். கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு எல்லைகள் நீள அகலங்கள் குறிக்கப்பட்டிருக்கும். இப்படத்தினை வைத்து நிலத்தின் வடிவம், நீள அகலங்களை அறிந்து கொள்ளலாம்.//

    இதுவும் கசறாப்பிளாண் என்பதும் ஒன்று என நினைக்கிறேன். நாங்கள் அதில் தான் இடம் எங்கே இருக்கிறது எனப்பார்த்தோம்.

    ReplyDelete
  2. //இதுவும் கசறாப்பிளாண் என்பதும் ஒன்று என நினைக்கிறேன்.//

    கசறாப்பிளாண் - இதற்கு என்ன பொருள்?

    ReplyDelete
  3. நல்ல தகவல்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...