Search This Blog

Sunday, December 15, 2013

மற்றவர் தொல்லைகளை சமாளிக்க என்ன செய்வது?


வேதாத்திரி மகரிஷியிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவரது பதிலும்!

கேள்வி : சுவாமிஜி, என்னைச் சூழ்ந்துள்ளவர்களுடைய பொறாமையை வென்று அவர்கள் தரும் தொல்லைகளை எதிர்த்து வாழ்வில் வெற்றியும் மேன்மையும் அடைய உரிய வழியினை அருள் கூர்ந்து சொல்லித் தரும்படி வேண்டுகிறேன்?

மகரிஷியின் பதில் : நீங்கள் முதலில் பிறரிடமிருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது. இயற்கையிலேயே உங்களிடம் அபரிமிதமான ஆற்றல்களும் திறமைகளும் அமைந்திருக்கின்றன. இதை உணருங்கள். அவற்றைப் பெருக்கி நீங்களும் பயன் பெற்று, பிறருக்கும் தாராளமாக உதவமுடியும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அமைதியாக உட்கார்ந்து நீங்கள் 'எங்கு, எவ்வாறு, என்னவாக இருக்கிறீர்கள்?" என்று கணித்துக் கொள்ளுங்கள். அதாவது - வயதில், உடல் வலுவில், உடல் நலத்தில், கல்வியில், தொழில் திறனில், அறிவு வளர்ச்சியில், அதிகாரத்தில், செல்வ நிலையில் சூழ்நிலையமைப்பில் - நீங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள் என்று கூர்ந்த அறிவோடு கணித்துக் கொள்ளுங்கள். இவ்வளவு இருப்பையும் வைத்துக் கொண்டு நீங்கள் ஏன் பிறரிடமிருந்து எதையோ எதிர்பார்க்க வேண்டும்? 

தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம் என்ற அளவில் ஒவ்வொருவருக்கும் ஐவகைக் கடமைகள் உள்ளன. உங்களிடமுள்ள இருப்பை வைத்துக் கொண்டு, எந்த அளவில் எவ்வாறு இக்கடமைகளைச் செய்து, பிறர்க்கு எப்பொழுதும் உதவி செய்து கொண்டே இருக்க முடியும் என்னும் பெருந்தன்மையை மனதில் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். கடமைகளைச் சிறப்பாகச் செய்வதற்காக எந்தத் திறமை அல்லது இருப்பை வளர்த்துக் கொள்ள முடியுமோ அந்த அளவு அதற்காகவும், ஆற்றலைச் செலவிட வேண்டும்.

இந்த மாதிரியான உயர்ந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள ஒரு மாத காலம் இன்று முதல் பழகிக் கொள்ளுங்கள். இந்த தன்னிறைவுத் திட்டத்தைத் தான் நமது மன்றத்தைச் சேர்ந்த அன்பர்களுக்கு வலியுறுத்தி வருகிறேன். இந்தத் திட்டத்தில் மனச் சோர்வுக்கோ, சினத்திற்கோ, கவலைக்கோ இடமில்லை. தன் முயற்சியில், செயலில் விளைவைக் காணும் "கர்ம யோகம்" இதில் அடங்கியிருக்கிறது. 

மேலும் கர்மயோகம் பற்றி எளிமையாக விளக்குகிறார்: தனக்கு எல்லா வசதிகளையும் அளித்துக் காத்து வருகின்ற சமுதாயத்திற்கு தனது கடனையாற்ற அறிவாலோ, உடலாலோ உழைப்பதுதான் கர்மயோகம்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...