Search This Blog

Saturday, August 22, 2015

மனதோடு விளையாlடுகுறிப்பு:
இது மனதால் இயங்கிக்கொண்டிருப்போருக்கான கட்டுரை.   மனம் கடந்து சென்றவர்களுக்கு இக்கட்டுரை தேவையேயில்லை.

மனதில் இடையறாது எண்ணங்கள் உற்பத்தியாகி ஓடிக் கொண்டேயிருக்கின்றன. விழிப்புணர்வுடன் இந்த எண்ணங்களை கவனிப்பதே ஒரு விளையாட்டுத்தான். இந்த விளையாட்டை விளையாடலாம் வாருங்கள். விளையாட்டை ஆரம்பிப்பதற்கு முன் வேதாத்திரி மகரிஷி சொல்லும் எண்ணம் என்றால் என்ன? மனதின் இரு வேலைகள் என்ன?என்பதைச் சுருக்கமாய்ப் புரிந்து கொண்டு இந்த விளையாட்டைத் தொடங்குவோம்.
முதலில் எண்ணம் என்றால் என்ன?

மனதிலே ஏற்கெனவே பெற்ற அனுபவப்பதிவுகள் தானாகவோ, நாம் விரும்பியோ, புறச்சூழ்நிலைகளாலோ தூண்டப்பட்டு மூளைச்செல்களால் விரித்துக் காட்டப்படும் நிகழ்வே எண்ணம். 

அதாவது “மிளகாய்ப் பொடி போட்டு செவச் செவன்னு மாங்காய்த் துண்டு” என்று சொன்னவுடனே வாயில் எச்சில் ஊறுகிறது. மனதிலே ஏற்கெனவே நாம் மாங்காயைச் சுவைத்துப் பெற்ற அனுபவப் பதிவு உண்டு. எனவே “மாங்காய்த்துண்டு” எனச் சொன்னவுடனே அந்தக் குறிப்பிட்ட அனுபவம் மனதிலிருந்து (கருமையம்) எடுத்துவரப்பட்டு, மூளைச் செல்களால் விரித்துக்காட்டப்பட்டது.

இப்போது நாம் “ஆப்பிள் பை” என்றொரு அமெரிக்கப் பதார்த்தத்தின் பெயரைச் சொன்னால் எந்த ஒரு இராசாயன மாற்றமும் நம்மில் நிகழ்வதில்லை. ஏனெனில் அதை நாம் இதற்குமுன்பு சுவைத்ததில்லை.  எனவே அனுபவப் பதிவு என்பது இல்லை.  விரித்துக்காட்டுவதற்கும் ஏதுமில்லை. ஆக ஏற்கெனவே பெற்ற அனுபவப் பதிவு மூளைச் செல்களால் விரித்துக்காட்டப்படுவதே எண்ணம்.

சரி.  இந்த அனுபவங்கள் நம்முள் பதிவதற்கான உள்ளீட்டுக் கருவிகள் (Input Devices) எவை?  கம்ப்யூட்டரில் கீ-போர்ட், மவுஸ், ஸ்கேனர் என பல்வேறு உள்ளிட்டுக் கருவிகள் (Input Devices) உள்ளன.  அவை மூலம் எந்தத் தகவலை உள்ளே பதித்தோமோ அதைத்தான் வெளியே எடுக்க முடியும். அதே போலத்தான் நம்மிடமும். “மாங்காய் ஊறுகாய்” யின் சுவை மனதில் அனுபவமாகப் பதியக் காரணமாய் இருந்த கருவி எது? 

நாக்கு.

ஆக விஷயங்கள், அனுபவங்கள் நம் உள்ளே சென்று பதிவதற்கான கருவிகள் நம் ஐந்து புலன்களே. அதாவது தோல், நாக்கு, மூக்கு, கண், காது இக்கருவிகள் மூலம் எவை உள்ளே சென்று பதிந்தனவோ அதுவே பிற்பாடு தானாகவோ, புறச்சூழ்நிலை காரணமாகவோ, நாம் விரும்பியோ மீண்டும் தூண்டப்படும்போது மூளைச்செல்களால் விரித்துக் காட்டப்படுகிறது. சுருக்கமாய் எது ஐந்து புலன்கள் மூலம் உள்ளே சென்றதோ அதுவே வெளியே எண்ணங்களாக மலர்கிறது.

ஆக நல்ல எண்ணங்களாக மலர வேண்டுமானால் ஐந்து புலன்கள் மூலம் நல்லனவற்றை உள்ளே பதிய வேண்டும்.  “எது உள்ள போகுதோ அதுதான் வெளிய வரணுங்கற அவசியம் இல்ல” என மிரண்டா விளம்பரத்தில் நடிகை அசின் சொல்லுவார். ஆனால் இங்கே எது உள்ளே செல்கிறதோ அதுவே வெளி வரும்.

இதுவே தீயதைப் பார்க்காதே, தீயதை கேட்காதே, தீயதைப் பேசாதே என மூன்று குரங்குகள் மூலம் சொல்லப்பட்டது.

ஏனெனில் தீய விஷயங்களை ஒரு முறை ஐந்து புலன்கள் மூலம் உள்ளே பதித்து விட்டால் அவை மீண்டும் மீண்டும் எண்ணங்களாக மலர்ந்து அதற்குரிய ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தும். ஆக இப்போது எண்ணம் என்றால் என்ன என்றும் அது உருவாகக் காரணம் என்ன என்பது குறித்தும் தெரிந்து கொண்டோம்.  இப்போது எண்ணங்கள் தூண்டப்படுவதற்கான கருவிகள் எவை  என்பதையும் ஆராய்வோம்.

இப்போது நீங்கள் ரோட்டில் நடந்து சென்று  கொண்டிருக்கிறீர்கள்.   ஒரு வீட்டிலிருந்து கமகம வென சாம்பார் வாசனை வருகிறது. உடனே உங்கள் அனுபவப்பதிவு தூண்டப்பட்டு அதிலிருந்து எண்ணங்கள் ஓடத் தொடங்குகின்றன. 'அட…. இது அம்மா வைக்கற சாம்பார் வாசனை மாதிரியே இருக்கே.   அம்மா கையில சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சு.   இந்த வாரம் அம்மா வீட்டுக்கு போய் அம்மா கையால சாப்பிடணும்.   வண்டி வேற இல்லயே.  பஸ்சுலதான் போகணும். ஞாயிற்றுக்கிழமைகள்ள நம்ம ஊருக்கு பஸ்சுல போறதுன்னா……அப்பா……கூட்டம் தாங்க முடியாது.  கால் வைக்கவே இடம் இருக்காது.  ரொம்ப சிரமம்.  பேசாம நம்ம ஆனந்த் கிட்ட வண்டி வாங்கிட்டு போயிற வேண்டியதுதான்.' இப்படி எண்ணம் ஓடத் தொடங்குகிறது.   அம்மா, ஊர், பஸ், நண்பன் என பல்வேறு நினைவுகளைத் தூண்டி விட்டது எது? சாம்பார் வாசனை.   இதை நுகர்ந்தது மூக்கு.  ஆக மூக்குதான் வாசனையை நுகர்ந்து மேற்கண்ட எண்ண ஓட்டங்களுக்குக் காரணமானது. இதுபோல ஐந்து புலன்களுமே பல்வேறு அனுபவப் பதிவுகள் எண்ணங்களாக மாறி ஓடுவதற்குக் காரணமாகின்றன.

ஆக மனதில் அனுபவங்கள் பதிவதற்கும், பிற்பாடு அவை எண்ணங்களாக மாறி ஓடத்தொடங்குவதற்கும் ஐந்து புலன்கள்தான் காரணமாக இருக்கின்றன. (வேறு சில காரணங்களும் உள்ளன.  அவை பற்றிப் பிறகு பேசுவோம்.  இப்போதைக்கு இந்தப் புரிதல் போதும்)

இப்போது மனதின் இரண்டு வேலைகள் என்ன என்பதைக் காண்போம்.

1.  பார்த்ததை பதிவு செய்தல் (ஐந்து புலன் அனுபவங்களை)
2.  பதிவு செய்ததை விரித்துக் காட்டுதல்.

நீங்கள் பாகுபலி திரைப்படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள்.  அப்போது உங்கள் மனதில் வேறு எந்த எண்ணங்களும் தோன்றுவதில்லை.  படத்தோடு ஒன்றி விட்டீர்கள்.  பெயர், ஜாதி, மதம் என உங்களின் அனைத்து அடையாளங்களையும் மறந்து படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். இப்போது மனதின் முதல் வேலையாகிய பார்த்ததைப் பதிவு செய்தல் நடைபெறுகிறது.

பிறகு மாலையில் வீட்டில் ஓய்வாக அமர்ந்திருக்கிறீர்கள்.  இப்போது அந்தத் திரைப்படத்தில் நீங்கள் கண்ட காட்சிகளை எல்லாம் மனம் விரித்துக்காட்டுகிறது. இப்போது மனதின் இரண்டாம் வேலையாகிய பதிவு செய்ததை விரித்துக் காட்டுதல் நடைபெறுகிறது.

எப்படி மாடுகள் புல் மேய்ந்து விட்டு, ஓய்வாக இருக்கும்போது உணவை மீண்டும் வாய்க்குக் கொண்டுவந்து அசை போடுகின்றனவோ அப்படித்தான் இதுவும். நீங்கள் இந்தத் திரைப்படத்தை பார்த்திராவிட்டால் அந்தப் படத்தின் காட்சிகள் இப்போது விரித்துக் காட்டப்படுவதற்கு வாய்ப்பேயில்லை. எனவே எது உள்ளே சென்றதோ அதுவே வெளியே வருகிறது என்று ஏற்கெனவே சொன்னதை மீண்டும் நினைவு கூறுவோம்.

இதில் மனதின் இரண்டாவது வேலையாகிய, பதிவு செய்ததை விரித்துக்காட்டலை நிறுத்திவிட்டால் அதுவே மனம் கடந்த நிலை.  அதைப் பற்றி பிறகு பார்க்கலாம்.

ஆக...

எண்ணம் என்றால் என்ன?  
மனதின் 2 வேலைகள் யாவை? 
என்ற கேள்விகளுக்கு விடை கண்டு விட்டோம். இப்போது விளையாட்டைத் தொடங்குவோம். மனதின் எண்ண ஓட்டத்திற்கான ஒரு உதாரணத்தோடு இந்த விளையாட்டை ஆரம்பிப்போம்.

அருகருகே வசிக்கும் இரு குடும்பத்தலைவிகள் உரையாடிக் கொள்கின்றனர். “ஏய் புஷ்பா,  நாங்க இன்னிக்கு குடும்பத்தோட கோயமுத்தூர் போறோம். ப்ரூக் பீல்டுல ஷாப்பிங் பண்ணிட்டு அப்படியே சினிமாவுக்கு போயிட்டு வர்றோம்.  கொஞ்சம் வீட்ட பாத்துக்க” சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாள் ரோஸி. "சரி" என்று விட்டேத்தியாய்ச் சொல்லி விட்டு காம்பவுண்ட் சுவரிலிருந்து மெல்ல நடந்து வந்து தன் விட்டு வரவேற்பறையில் அமர்கிறாள் புஷ்பா. தானாய் எழுந்து ஓடும் அவளின் எண்ண ஓட்டங்களை சற்றுக் கூர்ந்து கவனிப்போம்.

“சே.  இவர்களெல்லாம் குடும்பத்தோடு கோயம்புத்தூருக்கு ஷாப்பிங் போறாங்க.  நம்ம உறவினர் ஒருத்தர் ஆபரேசன் பண்ணி கோவை மருத்துவமனையில படுத்துருக்கார்.  நம்மளும் ஒரு வாரமா அவரப் போய் பாத்துட்டு வரணும்னு நினைக்கிறோம்.  ஆனா ஏதோ ஒரு வேல இருந்துட்டே இருக்கு.  இன்னிக்கு இவங்களோடவே போனா சிரமமில்லாம கார்ல போய் எறங்கிட்டு, வரும்போது பஸ்சுல வந்துடலாம்.  ஆனா எப்படிப் போறது.  துவைக்க வேண்டிய துணி மல மாதிரி குவிஞ்சுகிடக்கு.  ஒரு வாரமா தண்ணி வராம இன்னிக்குத்தான் தண்ணி வருது.  தண்ணி வர்ற அன்னிக்கே துணி துவச்சுடனும்.  இல்லேனா அடுத்து எப்ப தண்ணி வரும்னு சொல்ல முடியாது.  பக்கத்து வீடு மாதிரி நம்ப வீட்லயும் ஒரு போர்வெல் போட்டுட்டா பிரச்சனை இருக்காது.  ஐயோ…. இத்தன துணியையும் துவைக்கறத நெனச்சாலே மலப்பா இருக்கு.  துவச்சுட்டு நிமிந்தா இடுப்பெல்லாம் பயங்கரமா வலிக்குது இந்த மனுசங்கிட்ட ஒரு ஆட்டோமாட்டிக் வாஷிங் மிஷின் வாங்கித் தரச்சொல்லி எத்தன நாளா கேக்குறேன்.  இந்தப் பணம் வரட்டும்.  போனஸ் வரட்டும்னு எதோ ஒண்ணு சொல்லி ஒப்பேத்துறார்.  ஐயய்யோ.  அவரு மத்தியானம் சாப்பிட வருவாரே.  அதுக்குள்ள சமயலயும் முடிக்கணுமே.  என்ன சமைக்க? வீட்டுல ஒரு காய்கறி இல்ல.  நேத்து இந்த மனுசன்ட படிச்சுப் படிச்சுச் சொன்னேன்.  வீட்டுக்கு வரும்போது மறக்காம மார்க்கெட்டுக்குப்போய் காய்கறி வாங்கிட்டு வாங்கன்னு.  வழக்கம்போல மறந்துட்டு வந்துட்டு பல்லிலிக்கிறார்.  என்ன செய்ய.  இப்ப இந்த வேகாத வெயில்ல அந்த முக்கு வரைக்கும் நடந்து போய் கணேஷ் கடையில காய் வாங்கிட்டு வரணும்.  வெய்யில நடந்துட்டு வந்தா தலவலி வந்துடும்.  அப்புறம் ஒரு ஒன்னவர் ரெஸ்ட் எடுத்தாதான் வேற வேலயே செய்யமுடியும்.  இந்த மனுசன்ட்ட ஒரு செகண்ட்ஸ் ஸ்கூட்டியாவது வாங்கித் தரச் சொல்லி கேக்கறேன்.  ம்.. அசைய மாட்டேங்கராரே.  சே…. நம்ம பிறந்த வீட்டுல எப்படி ராணி மாதிரி வாழ்ந்தோம். அக்கம் பக்கத்து வீட்டுக் குழந்தைகள் எல்லாம் நம்ம வீட்டுலயேதான் இருப்பாங்க.  இந்த வானதி…….நம்ம வீட்லயேதான் தூங்குவா.   அட….வானதி இப்ப எங்க இருக்கா? யாரையோ லவ் மேரேஜ் பண்ணிகிட்டு சிங்கப்பூர் போய்ட்டதா சொன்னாங்க.  அம்மா வீட்டுக்கு போகும்போது வானதியின் போன், இ-மெயில் ஏதாவது வாங்கி அவகூட பேசணும்.  அவளப் பாத்தே ரொம்ப நாளாச்சு.  முடிஞ்சா ஒருமுறை சிங்கப்பூர் போய் பாத்துட்டு வரணும்.  ம்கும்.  இந்தத் திருப்பூர விட்டே வெளியே போக முடியல.  இதுல சிங்கப்பூர் வேறயா?” இப்படியாக அவள் எண்ண ஓட்டங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது கேஸ் சிலிண்டர் ஆட்டோ வந்து நிற்கும் சப்தம் கேட்கிறது.

ஜன்னல் வழியாக வெளியே பார்க்கிறாள் புஷ்பா. எதிர் வீட்டிற்கு கேஸ் சிலிண்டர் வந்துள்ளது.

“அட… இவங்க வீட்டுக்கு சிலிண்டர் வந்துடுச்சா?  ரெண்டு பேரும் ஒண்ணாதானே புக் பண்ணினோம்.  இவங்களுக்கு மட்டும் வந்துடுச்சு.  நம்ம சிலிண்டர் வேற தீர்ற கண்டிஷன்ல இருக்கு.  எப்பத் தீரும்னு தெரியல.   பாதி சமயல்ல தீந்துட்டா வம்பு.  இவருக்குப் போன் பண்ணி வரும்போது கேஸ் ஆபிசுக்கு போய் செக் பண்ணிட்டு வரச்சொல்வோம்.”

பழைய எண்ண ஓட்டங்கள் துண்டிக்கப்பட்டு, புதிய எண்ண ஓட்டங்கள்  ஆரம்பிக்கின்றன. கணவரின்  மொபைலுக்கு அழைக்கிறாள்.   “முன்பே வா…என் அன்பே வா…..” என காலர் ட்யூன் ஒலிக்கிறது. வெகு நேரம் ஒலித்தும் அவர் போனை எடுக்கவேயில்லை.  கால் கட்டாகி விடுகிறது. 'சே…. இது எப்பவுமே ஒரு ஆத்திரம் அவசரம்னு கூப்டா கூட போன எடுக்காது 'என சலித்துக் கொண்டே போனை ஷோபாவில் தூக்கிப்போடுகிறாள். முன்பே வா என்ற காலர் ட்யூனை அவள் மனம் பிடித்துக் கொள்கிறது.  அவளை அறியாமல் அந்தப் பாட்டை முணுமுணுக்கத் தொடங்குகிறாள்.

எண்ண ஓட்டம் தொடருகிறது.

“அட இந்தப் படம் சூப்பர் படமாச்சே.  சூர்யா அவ்ளோ அழகு.  காலேஜ் மேட் கவிதா சூர்யாவோட தீவிர பேன்.  அவளும் நானும் காலேஜ் படிக்கறப்போ கட் அடிச்சுட்டு இந்தப் படத்துக்கு போய் வீட்ல மாட்னோம்.  அப்பா இரண்டு நாளா எங்கிட்ட பேசவே இல்லை.  ஒரு வழியா அவர சமாதானம் பண்றதுக்குள்ள போது போதுன்னு ஆயிடுச்சு.“ இப்படியாக அவள் எண்ண ஓட்டம் தொடருகிறது.  இவையெல்லாமே அவளுடைய கட்டுப்பாடின்றி தானாகவே எழுந்து அலையும் எண்ணங்கள்.   

இவற்றால் ஒரு பிரயோஜனமும் இல்லை. ஒரு அரை மணி நேரத்தை இந்த எண்ண ஓட்டங்கள் தின்றிருக்கும்.  அந்த அரை மணி நேரமும் இவள் குயிலோசையை, தென்றலை, பாடலை என எதையும் அனுபவிக்கவே இல்லை.  நேரத்தை தவற விட்டது விட்டதுதான்.  அதைத் திரும்பப் பெற முடியாது.  இந்த அரை மணி நேரத்தை எண்ணங்களே ஆக்ரமித்துக் கொண்டதால் அதை அவள் வாழவே இல்லை.

"எண்ணம் தானாக எழுந்து அலையாமல் எண்ணத்தில் எண்ணமாய் இருப்பதே யோகம். எண்ணத்தை ஆராய்ச்சியிலும், தூய்மையிலும் வைத்திருப்பவன் ஞானி" என்கிறார் வேதாத்திரி மகரிஷி.

நமது எண்ணம் சி.டி ப்ளேயர் போல இருக்க வேண்டும்.  ஆனால் அது எப். எம் ரேடியோவைப் போல இருக்கிறது.   சி.டி .பளேயரில் நாம் விரும்பும் பாடலைக் கேட்கலாம்.  ஒரு பாடல் பிடிக்கவில்லை எனில் ஸ்கிப் செய்துவிட்டு அடுத்த பாடலுக்குச் சென்று விடலாம்.   ஆனால் எப்.எம் ரேடியோவில் ஒலிபரப்பப்படும் பாடலைத்தான் நாம் கேட்க வேண்டும்.  நம் விருப்பத்தேர்வு கிடையாது.

சி.டி ப்ளேயரைப்போல் நம் மனதிலும் நாம் விரும்பும் எண்ணங்கள்தான் ஓட வேண்டும்.  ஆனால் எப். எம் ரேடியோவைப் போல அதுவே எண்ணங்களை உற்பத்தி செய்து ஒலிபரப்பிக்கொண்டே இருக்கிறது. மனதை எப். எம் ரேடியோவிலிருந்து சி.டி ப்ளேயராக எப்படி மாற்றுவது?

உங்கள் செல் போனில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் அடிக்குமாறு அலாரம் வைத்துக் கொள்ளுங்கள்.  இந்த அலாரத்திற்குப் பெயர் விழிப்புணர்வு அலாரம். இந்த அலாரம் அடித்தவுடன், விழிப்புணர்வுக்கு வந்து விடுங்கள். விழிப்புணர்வுக்கு வந்த அந்த விநாடியில் உங்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என நினைவு கூறுங்கள்.  

இப்போது புஷ்பாவின் எண்ண ஓட்டத்தை உதாரணமாக்க் கொண்டு ஆராய்வோம். புஷ்பாவின் எண்ண ஓட்டங்களை இரண்டு பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்:

அ)  சிலிண்டர் வருவதற்கு முன் ஓடிக்கொண்டிருந்த ஒரு பகுதி. 
ஆ) சிலிண்டர் வந்த பின் ஓடிய ஒரு பகுதி.

அலாரம் அடித்து விழிப்புணர்வுக்கு நீங்கள் வந்த போது, சிங்கப்பூர் வானதியைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தீர்கள் என வைத்துக் கொள்வோம். இப்போது சிங்கப்பூர் வானதியின் நினைவு ஏன் வந்தது என பின்னோக்கிச் சென்று சிந்தியுங்கள்.

அம்மா வீடு – ஸ்கூட்டி – காய்கறி – சமையல் – வீட்டுக்காரர் – வாஷிங் மெஷின் – போர்வெல் – தண்ணீர் – உறவினர் – கோயமுத்தூர் – பக்கத்துவிட்டு ரோஸி.  ஆக இந்த எண்ண ஓட்டம் துவங்கிய புலன் காது.

இப்போது இந்த எண்ண ஓட்டத்திற்கான மூலத்தை கண்டு பிடித்தாயிற்று.  கோயமுத்தூர் போகிறோம் என பக்கத்துவீட்டு ரோஸி சொன்னது நம்மை சிங்கப்பூர் வரை இழுத்துச் சென்றிருக்கிறது. இப்போது அந்த எண்ணத்தை பிறந்த இடத்திற்கே கொண்டு வந்தாயிற்று.

அதேபோல இரண்டாவது பகுதியில் போன் செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏன் எழுந்தது?  அப்பா, சினிமா, கவிதா, காலேஜ், முன்பே வா பாடல், ரிங் டோன், சிலிண்டர், கேஸ் சிலிண்டர் ஆட்டோ என பின்னோக்கிச் சென்று அந்த எண்ணத்திற்கான மூலத்தையும் கண்டுபிடித்தாயிற்று. ஆரம்ப சாதகர்களுக்கு ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்குள் ஊருடுவிச் செல்வது சிரமம். ஒரு எண்ணத் துண்டின் மூலம் கண்டுபிடித்தால் போதுமானது.

ஆரம்பத்தில் இது மிகக் கடினமானதாக இருக்கும். பின்னோக்கி சென்று மூலத்தைக் கண்டுபிடிக்க மூளை ஒத்துழைக்க மறுக்கும்.  தொடர்ந்த பயிற்சியில் இது எளிதாகும். அதேபோல எண்ண ஓட்டம் இருக்கும்போது விழிப்புணர்வு இருக்காது.  விழிப்புணர்வு வந்தவுடன் எண்ண ஓட்டம் நின்று போகும். பின்பு ஒரு கட்டத்தில் சிங்கப்பூர் செல்லும் வரை விழிப்புணர்வு தூங்காது.  இடையிலேயே விழித்துக் கொண்டு, தேவையில்லாத எண்ண ஓட்டத்தை மறைந்து போகச் செய்து விடும். பின்பு விழிப்புணர்வும் இருக்கும்.   எண்ண ஓட்டங்களும் இருக்கும்.  சாட்சி பாவமாய் நின்று எண்ண ஓட்டங்களை வெறுமனே கவனிக்கலாம்.  அவற்றிற்கு சக்தி தராமல் வெறுமனே மேகத்தின் ஓட்டங்களை போல ஓடச் செய்யலாம்.  

ஒரு எண்ண ஓட்டம் பிடிக்கா விட்டால், அதை நிறுத்தி விட்டு, உங்களுக்கு விருப்பமான எண்ண ஓட்டத்தைத் தேர்வு செய்யலாம்.  இப்போது உங்கள் மனம் சி.டி ப்ளேயராக மாறி விட்டது.  மெல்ல மெல்ல மனம் ஒரு கருவியாய் மாறும்.  இப்போது நீங்கள் எஜமான்.  மனம் ஒரு அடிமை. இது ஒரு அற்புதமான விளையாட்டு.

ஆக முதலில் தானாக எழுந்து அலையும் எண்ணங்களானாலும் அவை நல்ல எண்ணங்களாக இருக்க வேண்டும்.  அதற்காக ஐந்து புலன்கள் மூலம் உள்ளிடும் அனுபவங்களை நல்லதாக மாற்றுகிறோம்.  

தனக்கோ, பிறர்க்கோ, தற்காலத்திலோ, பிற்காலத்திலோ, உடலுக்கோ, மனதிற்கோ துன்பம் தராத எண்ணங்களே நல்ல எண்ணங்கள்.

இரண்டாவதாக தானாக எழுந்து அலையும் எண்ணங்கள் நல்ல எண்ணங்களாகவே இருந்தாலும், அவை நம்முடைய கட்டுப்பாடின்றி எழுந்து அலைகின்றன.  அது அவ்வளவு உயர்வானதன்று.   எனவே விழிப்புணர்வுப் பயிற்சியின் மூலம் அவற்றின் மூலத்தை கண்டுபிடித்து எண்ணங்களை பிறந்த இடத்திலேயே ஒடுக்கிப் பழகுகிறோம்.

மூன்றாவதாக அயராத விழிப்புணர்வு மூலம் எண்ண ஓட்டங்களை தொடர்ந்து கண்காணிக்கப் பழகுகிறோம்.  வேண்டுமானால் ஒரு எண்ணத்தை ஓட்டவும், நிறுத்தவும், நம் விருப்பத் தேர்வின் அடிப்படையில் மனதை ஒரு கருவியாய், அடிமையாய் மாற்றுகிறோம்.

இப்படி மாற்றியவனுக்கு உலகம் வசப்படும்.

சரி.  இப்படி மாற்றுவதால் என்ன பயன்?  அப்படியே விட்டுவிட்டாலும் வாழ்க்கை நகர்ந்து கொண்டுதான் இருக்கிறது இல்லையா? என ஒரு கேள்வி எழலாம். இப்போது மீண்டும் புஷ்பாவின் எண்ண ஓட்டங்களைக் கவனிப்போம்.

புஷ்பாவின் எண்ண ஓட்டங்களில் தேவையின் அடிப்படையில் சில எண்ணங்கள் உற்பத்தியாகின.
1. வாஷிங் மெஷின்.
2. போர்வெல்
3. ஸ்கூட்டி
4. காய்கறி வாங்கி வராத கணவர் மீதான சலிப்பு
5. போனை எடுக்காத கணவர் மீதான சலிப்பு

இந்த எண்ணங்கள் புஷ்பாவிற்கே தெரியாமல் சில அழுத்த முடிச்சுகளை அவளுக்குள் ஏற்படுத்திச் சென்றிருக்கின்றன.

ப்ரஸர் குக்கரில் அழுத்தம் ஏற்பட்டால் அது வால்வைத் தூக்கிக் கொண்டு வெளியேறி ஆக வேண்டும்.   அப்படி வெளியேற வழி இல்லாவிட்டால் குக்கர் 
வெடித்துவிடும். அதே போலதான் மனதில் ஏற்படும் இந்த அழுத்த முடிச்சுகளும்  வெளியேறியே ஆக வேண்டும்.  இல்லா விட்டால் அது அவளுக்கு சுகர், பிரஸர், ஹார்ட் அட்டாக், சிறுநீரகச் செயலிழப்பு போன்ற பிரச்சனைகளை உருவாக்கும்.

சரி.  இந்த அழுத்த முடிச்சுக்கள் எப்படி வெளியேறி வாழ்க்கையை நரகமாய் மாற்றுகின்றன எனப் பார்ப்போம்.

அதற்கு புஷ்பாவின் கணவன் மோகனின் எண்ண ஓட்டத்தையும் சற்றுக் கவனிக்க வேண்டும்.

மோகன் அன்று காலை சீக்கிரமாகவே புறப்பட்டு (புஷ்பாவும், பக்கத்து வீட்டு ரோஸியும் பேசிக்கொண்ட அதே நாள்) தன் நெருங்கிய நண்பன் சங்கரின் திருமணத்திற்குச் சென்றிருந்தான்.  அதனால் தனக்கு காலை உணவு தேவையில்லை எனவும் மதிய உணவுக்கு வருவதாகவும் சொல்லிச் சென்றிருந்தான்.

சங்கரின் தந்தையார் மிகப்பெரிய செல்வந்தர்.  பெரிய தொழிலதிபர்.  தன் ஒரே மகனின் திருமணத்தை வெகு விமர்சையாகக் கொண்டாடத் தீர்மானித்து மிக ஆடம்பரமாகத் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தார்.

நகரிலேயே மிகப்பெரிய, முழுவதும் குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம் அது.  மிகப் பெரிய செல்வந்தர்கள் மட்டுமே அங்கு திருமணத்தை நடத்த இயலும்.

மோகன் மண்டபத்தில் நுழையும்போதே அவன் தாழ்வுமனப்பான்மை தலைதூக்கியது.  அங்கு வந்திருந்தவர்களிலேயே மிக மிக சாதாரணமான உடையணிந்து வந்தது மோகன்தான். மண்டபத்தில் நுழைந்து நூற்றுக்கணக்கான ஆடம்பர கார்கள் நின்றிருந்த பார்க்கிங்கில் தன் இரு சக்கர வாகனத்தை பார்க் செய்தான். மண்டபத்தின் உள் நுழைவாயிலில் ஒயிட் கலரில் ரிப்பன் சுற்றப்பட்டு ஒரு பென்ஸ் கார் நின்றிருந்தது.  மாப்பிள்ளைக்கான சீர் வரிசை அது.

மோகனின் மனதில், “சே… கடசி பென்ச்ல உக்காந்து டீச்சரை சைட் அடிச்சுட்டு கலாய்ச்சுட்டு இருந்த சங்கருக்கு இப்படி ஒரு அதிர்ஷ்டமா? படிக்கும்போதே எல்லா கெட்ட பழக்கங்களும் அவனுக்கு உண்டு.  ஒழுங்காப் படிக்க மாட்டான்.  ஏகப்பட்ட அரியர்ஸ்.  அவனுக்கு பென்ஸ் கார் வரதட்சிணை.   ஒழுங்கா படிச்சு சின்சியரா இருந்த எனக்கு ஒரு பைக்குக்கு கூட வழியில்ல.  சே.  நான் ஒரு அதிஷ்டக்கட்டை” என எண்ண ஓட்டங்கள் நிகழ்ந்தது. உள்ளே சென்று மணமக்களைப் பார்த்தான். அவ்வளவுதான்.  பயங்கர அதிர்ச்சி. 

“அட…. இந்த மூஞ்சிக்கு இப்படி ஒரு தேவதையா?”

சங்கர் ஒன்றும் பெரிய அழகனல்ல.   அவன் சுமார் மூஞ்சி சங்கர்தான். ஆனால் அவனுக்கு தேவதை போல, செதுக்கி வைத்த சிலை போல, பளிங்கு போல அழகு மனைவி.

“பொண்ணுக்கு நூறு பவுன் நக…..ஒரு பங்களா வீடு……ஒரு கார் சீதனமா கொடுத்திருக்காங்க”  

ஒரு உறவினர் பெண் யாரிடத்திலோ சொல்லிக் கொண்டிருந்தது இவன் காதில் விழந்தது. சம்பிரதாயமாய் கை குலுக்கி வாழ்த்துச் சொல்லி, சாப்பிட்டு விட்டு வெளியேறினான்.

“நூறு பவுன் நகை, பங்களா வீடு, கார்…..சே…. சங்கருக்கு எங்கேயோ மச்சம் இருக்கு.   எனக்கும் ஒண்ணு வந்து வாச்சிருக்கே.  ஒரு பைக் வாங்கித் தரக்கூட வக்கில்லே” அவன் மனம் புலம்பிக்கொண்டே இருந்தது.  பல அழுத்த முடிச்சுகள் அவனை அறியாமலேயே விழுந்தன. அலுவலகம் சென்று வேலைகளை முடித்துக்கொண்டு மதிய உணவுக்கு வீடு திரும்பினான்.

அவனுக்கும் மனைவிக்குமான உரையாடல்.

”என்ன சமையல்?”

”ம்…வத்தக் குழம்பும், வடகமும்.”

”ஏன்.  பொரியல் செய்யலையா?”

”ஆமா…..அது ஒண்ணுதான் குறச்சல்.  இத்தன துணிய துவச்சு முடிச்சு இடுப்பெலும்பு கழண்டுபோய் வலியோட இத செஞ்சதே எச்சு.”

”சே….ஒரு பொரியலோட சாப்பிடக் கூட கொடுப்பினை இல்ல.  எல்லாம் என் தலையெழுத்து.”

”ஆமா….நேத்தைக்கு காய்கறி வாங்கிட்டு வரச்சொல்லி தலதலய அடிச்சுகிட்டனே…..அப்ப  தெரியலயா?   வாங்கிட்டு வராம உட்டுட்டு இப்ப வாய்க்கு வக்கணையா பொரியல் கேக்குதோ?”

”இந்த வீட்டுக்காக நாய் மாதிரி உழச்சு கொட்டுறேன்.   வாய்க்கு ருசியா ஒரு சாப்பாடு கூட கிடைக்க மாட்டேங்குது.”

”நான் மட்டும் என்ன….பேய் மாதிரி வேல செய்யுறேன்.  என்னிக்கு உங்களுக்கு கழுத்த நீட்டுனேனோ அன்னிக்கே என்னப் புடிச்சுது சனி.”

”பேய் மாதிரி என்ன…..பேயேதான்…. உன் மூஞ்சிய கண்ணாடில பாத்ததேயில்லயா?”

”கல்யாணம் ஆன புதுசுல தேவதையாட்டம் இருக்கேன்னு குட்டி போட்ட பூன மாதிரி சுத்துனீங்களே…..அப்பத் தெரியலயா பேய்னு…..நான் பேய்னா நீங்க பிசாசு.”

”யாருடி பிசாசு.  நீ பேய்.  உங்க அம்மா பேய்….உங்க அப்பா பேய்….”

”அநாவசியமா என் குடும்பத்த இழுக்காதீங்க”

”அப்படிதான்டி பேசுவேன்… என்ன பண்ணுவ?” 

…………

இப்படியாக இன்னும் சண்டை வளர்ந்து கொண்டே செல்லும்.

இதில் பிரச்சனை சமையலோ, பொரியலோ அல்ல. வாஷிங் மெஷின், ஸகூட்டி, போர்வெல், 100 பவுன் நகை, கார், பங்களா இப்படியாக இருவரின் மனதிலும் ஓடிய ஓப்பீட்டு எண்ணங்கள் ஏற்படுத்திய அழுத்த முடிச்சுகளின் வெளியேற்றங்களே இந்தச் சண்டைகள். இவை வாழ்வையே நரகமாக்கி விடும்.  இப்படித்தான் 98 சதவிகித தம்பதியர்களின் வாழ்க்கை நரகமாக உள்ளது.  இதைப் பார்த்து வளரும் குழந்தைகளும், இப்படித்தான் குடும்பம் நடத்தவேண்டும் போலும் எனப் புரிந்து கொண்டு அதையே தங்கள் வாழ்க்கைத் துணையிடமும் தொடர்கிறார்கள்.  

இது தொட்டுத் தொடரும் ஒரு பாரம்பரியம்.

இதிலிருந்து வெளிவந்து அமைதியான, ஆனந்தமான ஒரு வாழ்க்கையை நீங்கள் வாழ விரும்பினால் மனதோடு விளையாடுவதைத் தவிர வேறு வழியேயில்லை.

எனவே மனதோடு விளையாடத் தொடங்குவோம்.

#ராகவேந்தர்

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...