Search This Blog

Saturday, August 22, 2015

நடைமுறை வாழ்வில் விளம்பரங்களின் தாக்கம்

அம்மா, இன்னிக்கு எங்க ஸ்கூல்ல இந்தியாவின் ரொம்பப்பெரிய சயின்டிஸ்ட்லாம் வர்றாங்க. அவங்கல நாந்தான் இண்டர்வியூ பண்றேன். ஏன்னா…..

உன்னோட ப்ராஜக்ட்தான் பெஸ்டா இருந்திருக்கும்….

என் ரோகன்.   இன்னிக்கு இவன் இண்டர்வியூ பண்றான். நாளைக்கு இவன எல்லோரும் இண்டர்வியூ பண்ணணும்.  

அதுக்கு ஹார்லிக்ஸ் குடுங்க ன்னு ஒரு விளம்பரம்.

பார்ப்பதற்கு இதுல என்ன தப்பு?  இது எல்லா அம்மாக்களும் நினைக்கறதுதான…… என்பது போல இருந்தாலும் இது போன்ற விளம்பரங்கள் மிக மிக ஆபத்தானவை.

நம்பர் 1 பைத்தியத்தை உங்களில் விதைப்பது மட்டுமின்றி, உங்களிடமிருந்து உங்கள் குழந்தைக்கும் அந்தப் பைத்திய மனநிலையை தொற்றிக் கொள்ளச் செய்து, குழந்தையைப் பந்தயக்குதிரையாக்கும் மட்டமான வியாபாரம்.

உங்களிடமுள்ள “நான்” என்ற அகங்காரம் தான் இவர்களின் வெற்றி. அம்மாக்களிடமுள்ள இந்த அகங்காரத்தை அவர்கள் மிகச் சரியாய்ப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

எல்லாவற்றிலும் நம்பர் 1 இடத்தை பெற வேண்டும் என்ற வெறி ஒரு குழந்தையின் மனதில் தொற்றிக்கொண்டவுடனே அது சக மாணவர்களை எதிரியாகப் பார்க்கத் தொடங்குகிறது.  

பொறாமை, கோபம், வஞ்சம் ஆகிய குணங்கள் குழந்தையைத் தொற்றிக் கொள்கின்றன.  இது மிக மிக ஆபத்தான மன நோய்.  குழந்தை மெல்ல மெல்ல தன் வாழ்க்கையை இழந்து விடுகிறது.

குழந்தை குழந்தையாக இருக்கட்டும்.  அது யாராகவும் ஆக வேண்டாம்.  இந்த வாழ்க்கை என்பது உணர்வு பூர்வமாய் வாழ்வதற்கே.

எல்லோரும் பாராட்டக்கூடிய ஒரு நிலைக்கு உயர வேண்டும் என்பதே இந்த உலகில் மிகப்பெரும்பான்மையான மனிதர்களுக்கு உள்ள ஒரு மனோ வியாதி.

அந்த வியாதி உங்கள் வாழ்க்கையை வாழ விடாது. உங்களை இயந்திரமாக மாற்றிவிடும் தன்மை கொண்டது.

தயவு செய்து உங்கள் நடைப்பிணமான உயிர்ப்பற்ற வாழ்க்கையை உங்கள் குழந்தைகளுக்குள் ஊடுருவச் செய்துவிடாதீர்கள்.

குழந்தைகளை இயல்பாய் விட்டுவிட்டாலே அவர்கள் எதுவாக ஆகவேண்டுமோ அதுவாக ஆகிவிடுவர்.
நீ நீயாக இரு.  யாரும் உன்னை கொண்டாட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நீ விருப்பபட்டு எதை செய்கிறாயோ அதைச் செய் என்பதே குழந்தைகளுக்கு நாம் சொல்லித்தரவேண்டியது.

நாளைக்கு எல்லோரும் உன்னை இண்டர்வியூ எடுக்கணும் எனச் சொல்லித் தருவதெல்லாம் அவர்களைப் பரபரப்பாக்கி வாழ்க்கையை வாழவிடாமல் செய்து, அவர்களுக்குள் உள்ள ஆன்மாவைக் கொலை செய்வதாகும்.

#ராகவேந்தர்.

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...