Search This Blog

Friday, March 12, 2021

இந்துக் கோவில்களின் நிர்வாகம்

 

 பகுதி 1 - கிழக்கிந்திய கம்பெனி முதல் காமராஜர் வரை.

மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்துக்குப் பிறகு, தமிழ்நாட்டில் கோவில்களை நிர்வகிக்கும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தத் துறையையே தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவாக்கி, பிறகு மு.க. ஸ்டாலினும் அதற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினும் ரேஞ்ச் ரோவர் காரில் வந்து கொள்ளையடித்துச் செல்வதைப் போல சமூகவலைதளங்களில் கருத்துகள் பரப்பப்படுகின்றன. ஆனால், உண்மை நிலை என்ன?

பல மகத்தான நிர்வாக விதிகள் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டன என்றாலும் இந்தச் சட்டம் அவர் முதல்வராவதற்கு முன்பாகவே உருவாக்கப்பட்டுவிட்டது. அதனால், கருணாநிதி வெறுப்பை ஒதுக்கிவைத்துவிட்டு இந்து சமய அறநிலையத் துறை எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை எப்படி வந்தது, அது எப்படி கோவில்களை நிர்வகிக்கிறது, கிறிஸ்தவ, இஸ்லாமியக் கோவில்களை அவர்களே நிர்வாகம் செய்யும்போது இந்துக் கோவில்களை ஏன் இந்துக்கள் நிர்வாகம் செய்யக்கூடாது, கோவில் வருமானத்தை எடுத்து அரசு செலவழிக்கிறதா, கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள் கோவில் சொத்தைக் கொள்ளையடிக்கிறார்களே என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்லும் வகையில்தான் இந்தப் பதிவு.

முதலாவதாக இந்து சமய அறநிலையத் துறை எப்படி உருவானது என்று பார்க்கலாம். மன்னர்களின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு, இந்துக் கோவில்களும் அவற்றின் சொத்துக்களும் ஒரு சிலரின் வசமே இருந்தன. இந்தக் கோவில்களை நிர்வகிப்பதிலும் ஊழல் இருந்ததோடு, கோவில் நகைகள், நிலங்கள் இஷ்டத்திற்கு விற்கப்படுவதும் தொடர்ந்து நடந்துவந்தது. இந்த நிலையில்தான் மெட்ராஸ் பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த கிழக்கிந்தியக் கம்பெனிடம் மக்கள் முறையிட ஆரம்பித்தனர். இதையடுத்துதான் மதராஸ் நிலைக்கொடைகள் மற்றும் வாரிசு இன்மையால் அரசுப் பொருட்கள் ஒழுங்குறுத்தும் சட்டம் 1817ல் உருவாக்கப்பட்டது. சட்டம் எண் VII/1817. இந்தச் சட்டம் 1817 செப்டம்பர் 30ஆம் தேதி அமலுக்கு வந்தது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 15ல் ஒரு விஷயம் மிகவும் குறிப்பாகச் சுட்டிக்காட்டப்பட்டது. அதாவது இந்தச் சட்டத்தின் நோக்கம், கொடைகளை, கோவில் சொத்துகளை பராமரிப்பதுதான் இந்தச் சட்டத்தின் நோக்கமே தவிர, அவற்றிலிருந்து வரும் வருவாயை அரசுக்கு பயன்படுத்துவதல்ல என்று குறிப்பிடப்பட்டது.

இந்தச் சட்டத்தின்படி இந்துக் கோவில்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி முதலான கொடைகள் முறையாகப் பயன்படுத்தப்படுகின்றனவா என்பதைக் கண்காணிக்கும் வேலை அப்போதைய வருவாய் வாரியத்திடம் அதாவது Board of Revenueவிடம் வழங்கப்பட்டது. இந்த வேலைகளைச் செய்ய உள்ளூர் அளவில் முகவர்களை நியமிக்கும்

ஆனால், இந்த உள்ளூர் முகவர்கள் சரியாக செயல்படாத நிலையில், 1863ல், அதாவது விக்டோரியா மகாராணி இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு புதிய சட்டம் இயற்றப்பட்டது. உள்ளூர் முகவர்களைக் கண்காணிக்க உள்ளூர் கோவில் குழுக்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், இந்தக் குழுக்கள் கோவில்களை நிர்வகிப்பதிலும் பிரச்சனைகள் இருந்தன.

ஆனால், மதப் பழக்க - வழக்கங்களில் தலையிடுவதில்லை என்ற விக்டோரியா அரசியின் கொள்கைகளின் காரணமாக, உள்ளூர்காரர்களின் கொள்ளைகள் தொடர்ந்தன. மன்னர்களும் பிரிட்டிஷ் அரசும் கோவில்களுக்கு அளித்த சொத்துக்கள் கொள்ளை போயின. கோவில்களை நிர்வகித்தவர்கள், கோவில் சொத்துகளை தங்கள் சொத்துகளைப் போல அவற்றை கருதினர். கோவில் நகைகளுக்கு எந்தப் பட்டியலும் இல்லை (சிதம்பரம் நடராஜர் கோவிலைப் போல). இது தொடர்பாக யாராவது நீதி மன்றங்களை அணுகினால், கோவில் தரப்பில் ஸ்கீம் சூட் எனப்படும் வழக்குகள் தொடரப்ப்பட்டு, விரும்பிய ஸ்கீம்களுக்கு நீதிமன்றத்தின் அங்கீகாரம் பெறப்பட்டது.

ஆகவே, 1926ல் நீதிக் கட்சி ஆட்சியின்போது மெட்ராஸ் இந்து சமய அறநிலையங்கள் சட்டம் II/1927 இயற்றப்பட்டு இந்து சமய அறநிலைய வாரியம் அமைக்கப்பட்டது. நிர்வாகம் சரியாக இல்லாத கோவில்களுக்கு நிர்வாக அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை இந்தச் சட்டம் அரசுக்கு வழங்கியது. ஆனால், இந்தச் சட்டத்திற்கு உயர் வகுப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அரசு மதத்தில் தலையிடுவதாக அவர்கள் குற்றம்சாட்டினர். சுதேசமித்திரன் போன்ற பத்திரிகைகள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தலையங்கம் எழுதின. வழக்கம்போல காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தியும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். இதையடுத்து அப்போதை வைசிராயாக இருந்த இர்வினடம் முதலமைச்சர் பனகல் அரசர் விளக்கமளித்து இந்தச் சட்டத்திற்கு ஒப்புதலைப் பெற்றார்.

இந்தியா சுதந்திரமடைந்த பிறகு, இந்தச் சட்டம் மேம்படுத்தப்பட்டது. இதையடுத்து 1951ல் மெட்ராஸ் இந்து சமயம் மற்றும் அறக்கொடைகள் சட்டம் XIX 1951 இயற்றப்பட்டது. முதன்முதலாக கீழிருந்து மேலாக அதிகார மட்டங்கள் இந்தச் சட்டத்தின் மூலம் நிர்ணயிக்கப்பட்டன. அதிகாரிகளின் நிர்வாக எல்லைகள் வரையறுக்கப்பட்டன. பாரம்பரிய அறங்காவலர் முறை ஒழிக்கப்பட்டது.

ஆனால், இந்தச் சட்டத்திலும் சில குறைகள் இருந்தன. இவை களையப்பட்டு 1959ல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 1959 இயற்றப்பட்டது. இதன்படி கோவில்களையும் சமய நிறுவனங்களையும் நிர்வகிக்க புதிய அரசுத் துறை உருவாக்கப்பட்டது. இந்தச் சட்டத்தின்படி, இந்து அறநிலையைத் துறை ஆணையர் தன் கட்டுப்பாட்டில் உள்ள எந்த ஒரு கோவிலின் துணை, இணை ஆணையர்களையோ, அறங்காவலர்களையோ அழைத்து கணக்கு வழக்குகளைக் கேட்க முடியும். கோவில்களுக்கு, மத நிறுவனங்களுக்குச் சொந்தமான சொத்தை ஐந்து வருடங்களுக்கு மேல் குத்தகைக்கு விடுக்கவும் விற்கவும் ஆணையரின் அனுமதி அறங்காவலருக்குத் தேவை. இஷ்டப்படி ஏதும் செய்ய முடியாது. இங்கு ஆணையர் என்பது அரசைக் குறிக்கும். இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டபோது முதலமைச்சராக இருந்தவர் காமராஜர். கருணாநிதி அல்ல. கிட்டத்தட்ட 140 வருடங்களாகப் படிப்படியாக உருவாக்கப்பட்ட சட்டம் இது.

ஒரு வகையில் இந்தியாவிலேயே மிகவும் முன்னோடிச் சட்டம் இது. தமிழக மக்களின், பக்தர்களின் நீண்ட காலக் கோரிக்கையின் விளைவாக உருவாக்கப்பட்ட சட்டம் இது. ஆந்திர மாநிலத்தில் 2000களுக்குப் பிறகுதான் இதுபோன்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. வட இந்தியாவில் பல மாநிலங்களில் இதுவரை இதுபோன்ற சட்டம் கிடையாது. இந்தச் சட்டத்தின் காரணமாக மட்டுமே வர்ணாசிரம ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களும்கூட கோவிலின் நிர்வாகத்தில் தற்போது ஈடுகின்றனர். இதுதான் பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்துகிறது.

பகுதி 2 - இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து இலவச கலர் டிவியும் ஸ்கூட்டியும் கொடுக்கிறதா தமிழக அரசு?

இந்து சமய அறநிலையத் குறித்து எழுப்பப்படும் ஒரு முக்கியமான குற்றச்சாட்டு, அந்தத் துறையின் பணத்தை எடுத்து பிற துறைகளுக்கு செலவழிக்கிறார்கள் என்பது. இது இந்துத்துவவாதிகளால் தொடர்ந்து சொல்லப்படும் பொய். கட்டுக்கதை.

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. ஆகவே, எந்த ஒரு மதத்திற்காகவும் தன் நிதியை அரசு செலவுசெய்ய முடியாது. இது ஒரு அடிப்படையான விஷயம். ஆகவே, இந்து சமய அறநிலையத் துறையின் நிதியை மாநில அரசு பயன்படுத்துவதும் இல்லை. மாநில அரசின் நிதியை கோவில்களுக்கென செலவழிப்பதும் இல்லை. இதைப் புரிந்துகொள்ள கோவில்கள் எப்படி நிர்வகிக்கப்படுகின்றன என்பதைத் தெரிந்துகொள்வது முக்கியம்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் தற்போது 38,635 கோவில்கள் உள்ளன. இவற்றில் திருக்கோவில்கள் 36,595. திருமடங்கள் 56. திருமடத்துடன் இணைந்த திருக்கோவில்கள் 57. Specified அறக்கட்டளைகள் 1,721. அறக்கட்டளைகள் 189. அரசியல்சாஸனத்தைப் பொறுத்தவரை, சமணர்களும் இந்துக்கள் என்பதால், சமணக் கோவில்களையும் இந்து சமய அறநிலையத் துறையே நிர்வகிக்கிறது. அப்படி 17 சமணக் கோவில்கள் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. மொத்தமாக 38635.

இந்தக் கோவில்கள் பிறகு Non - Listed Temples (பட்டியலைச் சாராத கோவில்கள்) , Listed Temples (பட்டியலிடப்பட்ட கோவில்கள்) என்று பிரிக்கப்படுகின்றன. இதற்கு அந்தக் கோவில்களின் வருமானமே அடிப்படையாக அமைகிறது. கோவில்களுக்கு உண்டியல், வாடகை என ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ள கோவில்கள் Non - listed கோவில்கள். அந்த வகையில் 34,082 கோவில்கள் இருக்கின்றன.

ஆண்டு வருமானம் பத்தாயிரம் ரூபாய்க்கு மேலே உள்ள கோவில்கள் மூன்றாகப் பிரிக்கப்படுகின்றன. முதல் பிரிவு, ஆண்டு வருமானம் 10,000 முதல் இரண்டு லட்ச ரூபாய் வரை உள்ள கோவில்கள். இவற்றின் எண்ணிக்கை 3,550. இரண்டாவது பிரிவு, ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் முதல் பத்து லட்சம் வரை உள்ளவை. இவற்றின் எண்ணிக்கை 672. மூன்றாவதாக ஆண்டு வருவாய் பத்து லட்ச ரூபாய்க்கு மேற்பட்டவை. இவற்றின் எண்ணிக்கை 331.ஆக, கிட்டத்தட்ட 85 சதவீதக் கோவில்கள் ஆண்டு வருவாய் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழே உள்ளவைதான்.

இத்தனை ஆயிரம் கோவில்களையும் நிர்வகிக்க மிகப் பெரிய கட்டமைப்பை தமிழக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது. இந்த கட்டமைப்பின் ஒட்டுமொத்த தலைவர் ஆணையர். அவருக்குக் கீழே, கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள், தனி அலுவலர்கள், கண்காணிப்புப் பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், முதுநிலை வரைநிலை அலுவலர்கள், கணக்கு அலுவலர்கள், தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் என இந்தக் கட்டமைப்பு செயல்படுகிறது. இவை தவிர, கோவிலை நிர்வகிக்கும் அந்தந்த கோவில்களின் ஊழியர்கள் தனி.

சரி, இவர்களுக்கான சம்பளத்தை யார் வழங்குவது, அரசா, கோவில்களா? கோவில் ஊழியர்களைத் தவிர்த்த அனைவருக்கும் தமிழக அரசுதான் சம்பளத்தைத் தருகிறது. ஆணையரில் துவங்கி, தணிக்கை அலுவலர், துணை இயக்குனர் வரை அனைவரும் அரசு ஊழியர்கள். சரி, ஒரு மதச்சார்பற்ற அரசு எப்படி இந்துக் கோவில்களின் நிர்வாகத்திற்காக தன் பணத்தை செலவிட முடியும் என கேள்வியெழுப்பலாம்.

அதற்கும் ஒரு ஏற்பாடு இருக்கிறது. அதாவது கோவில் வருவாயில் Assessible income என்று சொல்லக்கூடிய வரி செலுத்தக்கூடிய வருவாயில் 14 சதவீதம் அரசுக்குச் செல்லும். இந்த 14 சதவீதத்தை கோவில்களில் இருந்து பெற்று, இந்தக் கட்டமைப்பை நிர்வக்கிறது தமிழக அரசு. கோவிலின் நேரடி ஊழியர்கள், அந்தக் கோவிலின் நிதி நிலைக்கு ஏற்ப ஊதியம் பெறுவார்கள்.

இந்த 14 சதவீதத்தைத் தவிர, இந்துக் கோவில்களின் வருவாய் எதையும் அரசு எடுப்பதில்லை. உண்மையில் ஒரு கோவிலின் வருவாயை எடுத்து இன்னொரு கோவிலுக்குக்கூட செலவழிக்க முடியாது. அந்தந்தக் கோவில்களின் திருப்பணி அந்தந்தக் கோவில்களின் வருவாய் மூலமே நடத்தப்படுகிறது. ஆனால், மிகக் குறைவாக வருவாய் உள்ள கோவில்கள் என்ன செய்யும்?

இதற்கு மற்றொரு ஏற்பாட்டை அரசு செய்திருக்கிறது. அதாவது Commissioner Common Good Fund என்று இதற்குப் பெயர். அதிக வருவாய் உள்ள கோவில்கள் இந்த நிதிக்கென ஒரு குறிப்பிட்ட அளவு வருவாயைச் செலுத்த வேண்டும். இந்த நிதியிலிருந்துதான் வருவாய் கிடைக்காத கோவில்களின் திருப்பணிகளும் பிற செலவுகளும் சமாளிக்கப்படுகின்றன.

உண்மையில், ஒரு கோவிலில் கிடைக்கும் வருவாயை வங்கியில் போட்டுவைக்கவே பல விதிமுறைகளை அரசு வகுத்திருக்கிறது. முதலாவதாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். இரண்டாவதாக கூட்டுறவு வங்கிகளில் ஒரு குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். மூன்றாவதாக, அதிக வட்டி கிடைக்கும் வங்கியில் குறிப்பிட்ட அளவை டெபாசிட் செய்ய வேண்டும். அரசு குறிப்பிட்ட அளவு மாறினால், தணிக்கையின்போது அது கவனிக்கப்பட்டு, கோவிலின் நிர்வாக அதிகாரிக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.

கோவிலின் நிதி என்பது இவ்வளவு கட்டுப்பாட்டுடன் நிர்வகிக்கப்படுகிறது. ஆனால், ஏதோ இந்துக் கோவில்களின் பணத்தை எடுத்து இலவசத் திட்டங்களுக்கு அரசு செலவுசெய்வதைப்போல ஒரு பொய்ப் பிரச்சாரம் தீவிரமாகச் செய்யப்படுகிறது.

இந்த ஆண்டில் இந்தியாவிலேயே மிகச் சுத்தமாக நிர்வகிக்கப்படும் கோவிலுக்கான விருதை மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பெற்றது. அதற்குத் தகுதியான கோவில்தான் அது என்பதை அங்கு செல்பவர்கள் உடனடியாக உணர முடியும். இதற்கு முன்பாக இந்த விருதை திருப்பதி ஏழுமலையான் கோவில் பெற்றது. அந்தக் கோவிலின் வருவாய்க்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் வருவாய்க்கும் ஏணி வைத்தால்கூட எட்டாது. சிறந்த நிர்வாகத்தின் மூலம் மட்டுமே இதைச் சாதித்திருக்கிறது மதுரைக் கோவில்.

இருந்தும் இந்தத் திருக்கோவிலை முன்வைத்து, தற்போது நாஜிக்கள் இந்தப் பிரச்சாரத்தைத் துவங்கியிருப்பது பெரும் வேதனை.

பகுதி 3 - கோஹினூர் வைரமும் பாண்டிய நாட்டின் முத்துக்களும்

இங்கிலாந்தின் Crown Jewels எனப்படும் அரச குடும்ப நகைகளில் கோஹினூர் வைரமும் ஒன்று. இந்தியாவிலிருந்து பிரிட்டனுக்குச் சென்ற இந்த வைரம், உலகின் மிகப் பெரிய வைரங்களில் ஒன்று. அதன் மதிப்பை இப்போதைய சூழலில் குத்துமதிப்பாகத்தான் அளவிட முடியும். அவ்வளவு விலை உயர்ந்தது. "நம்ம நாட்டு வைரம், இப்போது இந்தியாவில் இருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்?" என்று அங்கலாய்ப்பவர்கள் உண்டு.

ஆனால், கிட்டத்தட்ட அதே அளவுக்கு விலை மதிக்க முடியாத சில முத்துகள் நம்மிடம் உண்டு. பாண்டிய மன்னர்கள் மதுரையை ஆட்சி செய்தபோது, தங்களுக்குக் கிடைத்த அரிய முத்துகளை அன்னை மீனாட்சிக்கே காணிக்கையாக அளித்தனர். சில முத்துகள் கோழி முட்டை அளவுக்குப் பெரியவை. இந்த முத்துகள் இன்னமும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் பொக்கிஷங்களை வைக்கும் நிலவறையில் பாதுகாக்கப்படுகின்றன.

கோவிலின் அறங்காவலர், அறநிலையத் துறையின் ஆணையர், இந்த முத்துகள் இருக்கும் அறையைத் திறக்கும் உரிமை கொண்ட குடும்பம் ஆகிய மூவர் மட்டுமே இதனைப் பார்க்கும் பாக்கியம் பெற்றவர்கள். வருடம் ஒரு முறை அந்த அறை திறக்கப்பட்டு, பொக்கிஷம் சரிபார்க்கப்பட்டு, அறை மீண்டும் மூடி சீல்வைக்கப்படுகிறது. விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரே இந்த முத்தை கண்ணால் கண்டவர்கள். வெகு சிலரே இது குறித்து அறிந்தவர்கள்.

மதுரையின் ஆட்சியராக ரௌஸ் பீட்டர் என்பவர் (ஆகஸ்ட் 24, 1785 - ஆகஸ்ட் 6, 1828) இருந்துவந்தார். மதுரை மக்கள் மீது பெரும் அன்புகொண்டவர். இதனால் அவர் பீட்டர் பாண்டியன் என்றே அழைக்கப்பட்டார். ஒரு பெரும் மழைக் காலத்தில் அவர் தன் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது, வீட்டிற்கு வெளியில் சிறுமி ஒருவர் அழைப்பது கேட்டது. இந்த மழையில் யார் நம்மை அழைப்பது என்று எண்ணியவாறே வெளியில் வந்தார். அதே நேரத்தில் மழையில் ஊறிப்போயிருந்த அவரது வீடு இடிந்து விழுந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோனார் பீட்டர். திரும்பிப் பார்த்தபோது சிறுமியைக் காணவில்லை. தன்னைக் காப்பாற்றிய அந்தச் சிறுமி மீனாட்சி என்றே நம்பினார் பீட்டர். ஆகவே குதிரை வாகனத்தில் மீனாட்சி வரும்போது, குதிரை மீது ஏறுவதற்காக மாணிக்கக் கற்கள் பதித்த தங்க அங்கவடிகளை (குதிரைச் சேணத்திலிருந்து தொங்கும் பாதந்தாங்கிகள்) செய்து கோவிலுக்கு அளித்தார் பீட்டர். சித்திரைத் திருவிழாவின் ஐந்தாவது நாளில் அம்மன் தங்கக்குதிரையில் வீதியுலா வரும்போது, இன்னமும் அந்த பாதக் கொளுவிகளையே அணிகிறார்.

இது போன்ற அரிய பொக்கிஷங்கள் தமிழகத்தின் பல்லாயிரக்கணக்கான கோவில்களில் இன்னமும் பாதுகாக்கப்படுவதற்கு, அறநிலையத் துறை மட்டுமே காரணம்.

ஒவ்வொரு கோவிலையையும் அறநிலையத் துறை கையகப்படுத்தும்போது, அந்தக் கோவிலுக்கென உள்ள நகைகள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு பதிவுசெய்யப்படுகின்றன. ஒரு நகை இந்தப் பட்டியலுக்குள் இடம்பெற்றுவிட்டால், அந்த நகை காலாகாலத்திற்கும் பாதுகாக்கப்படும். வருடந்தோறும் இந்த நகைகள் எடுத்து, பரிசோதிக்கப்பட்டு, தணிக்கை செய்யப்படும். அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒவ்வொரு கோவிலிலும் இந்த நடைமுறை வழக்கத்தில் உள்ளது.

இதைப்போலத்தான் ஒவ்வொரு கோவிலிலும் உள்ள இறைவன் - இறைவியின் திருமேனிகள் பட்டியலிடப்பட்டுப் பாதுகாக்கப்படுகின்றன. கோவில்களுக்குச் சொந்தமான உலோகத் திருமேனிகள், ஆபரணங்கள், விலை உயர்ந்த பொருட்களைப் பாதுகாத்திட, களவு எச்சரிக்கை மணி, தொட்டிப் பூட்டு, இரும்பு வாயிற்கதவுகள், சிசிடிவி ஆகியவை 8371 கோவில்களில் உள்ளன. இதுதவிர, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறைவாக உள்ள கோவில்களில் இருக்கும் திருமேனிகளைப் பாதுகாக்க தமிழகம் முழுவதும் 19 பெரிய கோவில்களில் உலோகத் திருமேனிகள் பாதுகாப்பு மையம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பாதுகாப்பற்ற கோவில்களில் உள்ள திருமேனிகள், திருவிழாக் காலங்களில் மட்டும் எடுத்துச் செல்லப்பட்டு, விழா முடிந்ததும் மீண்டும் இந்த மையங்களில் வைத்து பாதுகாக்கப்படும். இந்த பாதுகாப்பு மையங்களிலேயே பூஜைகளும் நடைபெறும்.

இதையெல்லாம் மீறி ஒரு சிலை திருட்டுப்போனால், அந்தக் கோவிலின் நிர்வாக அதிகாரி, அறங்காவலர்கள், பாதுகாவலர்கள், ஊழியர்கள் என பல தரப்பினரும் விசாரணக்கு உள்ளாக்கப்படுவதோடு, வழக்கையும் எதிர்கொள்வார்கள். அப்படியானால், சிலை திருட்டுகள் நடப்பதில்லையா என்றால், நடக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால், அவை விதிவிலக்குகள். இம்மாதிரி திருட்டில் ஈடுபடுபவர்கள் கடும் தண்டனைக்கு உரியவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

அதை விடுத்துவிட்டு, அறநிலையத் துறை என்ற அமைப்பையே கலைத்துவிட வேண்டும் என்று கோருவது முட்டாள்தனமானது? இவ்வளவு பெரிய அமைப்பைக் கலைத்துவிட்டு, சட்டங்களை நீக்கிவிட்டு, இந்த நிர்வாகத்தை யாரிடம் கொடுப்பது? எச். ராஜாவிடமா?

பகுதி 4 - கோவில் சட்டங்கள் தொடர்பான பொய்ப் பிரச்சாரங்கள், பக்தாள்களின் பரவசம். 

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து ஏற்பட்ட பிறகு, ஒரு தரப்பிலிருந்து வேகமாக பொய்ப் பிரச்சாரங்கள் அவிழ்த்துவிடப்பட்டன. அந்தப் பிரச்சாரங்களின் தொனி இதுதான்: அறநிலையத் துறை வருவதற்கு முன்பாக மடாதிபதிகளும் தர்ம சிந்தை உடையவர்களும் கோவிலை நிர்வகித்து வந்தார்கள்; அறநிலையத் துறை வந்த பிறகு கோவில்களை கைப்பற்றி, அதற்கு உரிய நிலங்களை விற்று, சொத்துக்களை விற்றுவிட்டது. இதில் அரசியல்வாதிகள் லாபம் பெறுகிறார்கள். இது முழுக்க முழுக்கப் பொய் என்பது எழுதுபவர்களுக்கே தெரியும். இருந்தபோதும் இந்தப் பிரச்சாரம் இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதில் சில நாளிதழ்களும் ஈடுபட்டுவருகின்றன.

மீனாட்சி அம்மன் கோவில் தீ விபத்து ஏற்பட்ட சில நாட்களில் நாளிதழ் ஒன்றில், கட்டுரை ஒன்று வெளிவந்தது. "தீயில் என்ன ஆச்சரியம்: அனைத்தும் சட்டவிரோதம்" என்ற அந்தக் கட்டுரைப் படித்த பக்தாள் அனைவரும், அதில் உள்ள தகவல்களைச் சரிபார்க்காமல், சமூக வலைதளங்களில் கொண்டாட்டத்துடன் பகிர்ந்துவருகிறார்கள்.

அதற்கு அடுத்த நாள் அதே நாளிதழில் ஒரு குறிப்பு. அதாவது 1965லேயே மதுரை மீனாட்சி அம்மன் கோவில், நெல்லையப்பர் கோவில் உள்ளிட்ட 45 கோவில்களிலிருந்து அரசு வெளியேற வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாகவும் ஆனால், அந்தத் தீர்ப்பு ரகசியமாக இருப்பதாகவும் அந்தக் குறிப்பு கூறியது. அந்த 45 கோவில்களின் பட்டியல் வேறு. இதுவும் வேக வேகமாக பரப்பப்பட்டது.

இதில் உள்ள தகவல்கள் ஒவ்வொன்றும் எப்படிப் பொய்யானவை என்று பார்க்கலாம்.

1. மீனாட்சியம்மன் கோவிலை தனியார் வசம் அரசென்ன மாற்றுவது, அதை அரசு நிர்வகிப்பதே செல்லாது.

உண்மை: மீனாட்சி அம்மன் கோவில் ஒருபோதும் தனியாரால், தனி நபரால் நிர்வகிக்கப்பட்ட கோவில் அல்ல. குலசேகர பாண்டியன் காலத்திலிருந்தே மதுரை மன்னர்களால், கிழக்கிந்தியக் கம்பனி நிர்வாகிகளால், பிரிட்ஷ் அரசால், குறுகிய காலத்திற்கு மதுரை ஆதீனத்தால், மாநில அரசால் நிர்வகிக்கப்பட்ட கோவில். எப்போதுமே அரசின் வசமே இருந்த கோவில் அது. தனியார் வசம் மாற்றுவதென்றால், யார் அந்த தனியார்?

2. 1920 முதல் 1937 வரை பதிமூன்று ஆண்டுகள் பிரிட்டிஷ் அரசுடன் இணைந்து தமிழகத்தை ஆண்ட நீதிக் கட்சி, கொள்கைகளுக்காக இந்து சமய அறக்கட்டளைச் சட்டத்தை நிறைவேற்றியது.

உண்மை: 1927ஆம் வருடச் சட்டத்திற்கு முன்பாக 1817ல் துவங்கி பல கட்டங்களாக இது தொடர்பான சட்டங்கள் அப்போதைய கிழக்கிந்தியக் கம்பனி நிர்வாகத்தாலும் பிரிட்டிஷ் அரசாலும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. இந்த உண்மையை மறைத்து, ஏதோ நீதிக் கட்சி ஆட்சி சதி செய்து கோவில் நிர்வாகத்தை பிடுங்குவதற்காக இந்தச் சட்டத்தை கொண்டுவந்ததாக நம்ப வைக்கவே இந்தப் பொய்த் தகவல்.

3. இதன் மூலம் தெப்பக்குளங்களின் மீன் குத்தகைக்கு விடப்பட்டது. கோவில் நிலங்கள் கேள்விக்குறியாகத் துவங்கின. சிலர் மட்டும் வருமானம் பார்க்கும் இடங்களாக கோவில்கள் மாறின.

உண்மை: கோவில் தொடர்பாக வருவாய் அளிக்கக் கூடிய இடங்களை குத்தகைக்கு விடுவதற்கு சட்டத்தில் இடம் இல்லாததது போலவும், திராவிடக் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் இம்மாதிரி குத்தகைக்கு விட்டு, வருமானம் பார்ப்பது போலவும் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் தகவல் இது. ஆனால், உண்மை வேறு மாதிரியானது. கோவில்கள் முறைப்படி அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ்வந்த பிறகுதான், ஒவ்வொரு கோவிலுக்கும் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பது முறைப்படி கணக்கிடப்பட்டு பட்டியலிடப்பட்டது.

இதற்காக அறநிலையத் துறை அலுவலர்கள் பட்டபாடு சொல்லிமாளாது. ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திற்கும் சென்று மணிக்கணக்கில் அமர்ந்து, அங்குள்ள மூலப் பத்திரங்களைப் பார்த்து, அவை கோவிலுக்குச் சொந்தமானவையாக இருந்தால் வழக்குத் தொடர்ந்து அந்த நிலங்களை மீட்டனர். அதற்கு முன்பாக எந்தக் கோவிலுக்கு எங்கே நிலங்கள் இருந்தன என்பது குறித்து எந்தத் தகவலும் முறைப்படி இருந்ததில்லை. கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறிய திராவிடக் கட்சிகளின் ஆட்சியே இந்த நிலங்களை மீட்டது. தற்போது அறநிலையறையின் கீழ் 4 லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. இது அறநிலையத் துறையின் மகத்தான சாதனைகளில் ஒன்று.

இது தவிர, இந்து சமய நிறுவனங்களுக்குச் சொந்தமாக 22,600 கட்டடங்களும் 33665 மனைகளும் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. இந்தக் கட்டடங்களை யார் கட்டியது? மன்னர்கள் கட்டினார்களா, இவர்கள் தனியார் தனியார் என்று சொல்பவர்கள் கட்டியதா? இவை அனைத்தும் அறநிலையத் துறையால் கட்டப்பட்டவை. இதன் மூலம் இந்தத் துறைக்கு 2017-18ல் மட்டும் 141 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. இந்த மனைகளிலும் கட்டடங்களிலும் குடியிருப்பவர்களை வெளியேற்றி, அந்த இடங்களை பாழடைந்த இடங்களாகப் போட்டுவைத்தால், இவ்வளவு பணத்தையும் "தனியார்" கொடுப்பார்களா?

4. 1950ல் அரசியல் சாஸனம் அமலுக்கு வந்த பிறகு, எல்லா மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்பட்டது. மத உரிமை என்றால் வழிபாட்டுத் தலங்களின் நிர்வாக உரிமையும் அடங்கும்.

உண்மை: அரசியல் சாஸனத்தின் பிரிவு இருபத்தியாறு, மத நிறுவங்களை நிர்வகிப்பது பற்றிக் கூறுகிறது. அதாவது,  

Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right to establish and maintain institutions for religious and charitable purposes;

a) to manage its own affairs in matters of religion;

b) to own and acquire movable and immovable property; and

c) to administer such property in accordance with law.

இதில் எங்கேயாவது அரசு நிர்வகித்துவரும் சமய நிறுவனங்களை தனியாரிடம் கொடுக்க வேண்டுமெனவோ, அரசு நிர்வகிக்கக்கூடாது எனவோ இருக்கிறதா? பிரிவு 26ன் படி, சமய நிறுவங்களை உருவாக்கி ஒருவர் நிர்வகிக்க உரிமை இருக்கிறது. அவ்வளவுதான்.

5. 1951ஆம் வருட சட்டத்தின் மூலம் கோவில்களை எல்லாம் அரசு ஆளுகைக்குள் எடுத்துக் கொண்டது. இதை எதிர்த்து தருமபுர ஆதீனம் உச்ச நீதிமன்றத்தில் போராடி 1965 பிப்ரவரி 10ஆம் தேதி ஒரு தீர்ப்பைப் பெற்றார். அதன்படி, மதுரை, ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட45 கோவில்கள் மீதான அரசின் உரிமை ரத்தானது.

உண்மை: திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் சுவாமி கோவிலை அரசாணைகள் மூலம் நிர்வகித்துவந்தது. அந்த அரசாணைகள் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட்டன. 1951ல் வெளியிடப்பட்ட அரசாணையின் காலம் 1956ல் முடிவுக்கு வரவே, புதிய அரசாணையை வெளியிட்ட தமிழக அரசு 1961ஆம் ஆண்டுவரை கோவிலை தங்கள் வசம் வைத்திருக்கப்போவதாகத் தெரிவித்தது. இதனை எதிர்த்து தருமபுர ஆதீனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். அவரது வாதம், தங்களைக் கேட்காமல் இந்த அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது; ஆகவே இது செல்லாது என அறிவிக்க வேண்டும் என்பதுதான். இதனை உயர் நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும்போது 1961 ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது. இந்த அரசாணையின் காலமே 1961 செப்டம்பரில் முடியும் நிலையில், இதில் தீர்ப்பளிப்பது தேவையில்லாதது என்று கூறி அந்த ரிட் மனுவைத் தள்ளுபடி செய்தது.

இதனை எதிர்த்து, ஆதினகர்த்தர் உச்ச நீதிமன்றம் சென்றார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆதீனகர்த்தாவின் முறையீட்டை ஏற்றது. அவரது தரப்பையும் கேட்டே அரசு அதனைச் செய்திருக்க வேண்டும் என்று கூறியது. இந்தத் தீர்ப்புதான் 1965 பிப்ரவி 10ல் வெளியானது. இதில் எங்கே மீனாட்சி அம்மன் கோவில் உட்பட 45 கோவில்கள் வருகின்றன?  

http://sci.gov.in/jonew/judis/3045.pdf

6. இதுதான் இருப்பதிலேயே காமெடி. "இந்த உண்மை, தமிழக மக்களுக்கும் இந்து அமைப்புகளுக்கும் தமிழக வழக்கறிஞர்களுக்கும் தெரியாத ரகசியமாக இன்றளவும் இருந்துவருவது பேராச்சரியம்."

உண்மை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை யாராவது ரகசியமாக வைத்திருக்க முடியுமா? யாருக்கும் தெரியாத ரகசியம் இவருக்கு மட்டும் எப்படித் தெரிந்ததாம்? அப்படியே யாருக்கும் தெரியவில்லை என்று வைத்துக்கொள்வோம், வழக்கில் ஜெயித்த ஆதீனகர்த்தரும் தனக்கு சாதகமாக வந்த தீர்ப்பை ரகசியமாக வைத்துக்கொண்டாரா?

7. நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்றாமல் இருக்க 1965ல் புதிய சட்டங்களை உருவாக்கி கோவில்களின் கட்டுப்பாட்டை தானே வைத்துக்கொண்டது.

உண்மை: தனக்குத் தேவையான சட்டங்களை இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்திற்கு உண்டு அல்லவா? அதில் என்ன தவறு?

8. 3 மாதங்களுக்கு மேல் இருக்க முடியாத தக்கார் பதவியில் நிரந்தமாக ஆட்களை வைத்துள்ளனர்.

உண்மை: அறங்காவலர்கள் இல்லாத காலகட்டத்தில், தக்கார் என்பவர் நியமிக்கப்பட்டு கோவில்கள் நிர்வகிக்கப்படும் என இந்துசமய அறநிலையத் துறை விதிகள் கூறுகின்றன. அறங்காவலர் குழு இருப்பதுதான் சரியானது. அப்போதுதான் பொதுமக்களுடன் பேச முடியும். தி.மு.க. ஆட்சியில் இருந்த 2011 வரை எல்லாக் கோவில்களிலும் அறங்காவலர் குழுக்கள் இருந்தன. 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, கோவில்களுக்கு தக்கார்களை நியமித்ததோடு நிறுத்திக்கொண்டார். கடைசிவரை அறங்காவலர் குழுக்களை நியமிக்கவில்லை. உடனடியாக அதைச் செய்ய வேண்டும். ஒவ்வொரு குழுவிலும் விதிப்படி, தாழ்த்தப்பட்டவர்களை நியமித்து கோவில்களை நிர்வகிக்க வேண்டும். அப்போதுதான் நிலைமை மேம்படும்.

பகுதி 5 - 1985ல் எம்.ஜி.ஆர். நியமித்த 'மர்ம' கமிட்டி.

14.02.2018ஆம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் பா.ஜ.கவின் தேசியச் செயலர் திரு. எச். ராஜா அவர்களின் பேட்டி வெளியாகியுள்ளது. "அதர்மத் துறையாக செயல்படுகிறது அறநிலையத் துறை" என்பது தலைப்பு. கோவில்கள் ஏன் இந்து சமய அறநிலையத் துறை வசம் இருக்கக்கூடாது என்பதற்கு பல்வேறு புள்ளிவிவரங்களை அடுக்கியிருக்கிறார். வழக்கம்போல அவை எவ்வளவு தவறானவை என்பதை வரிசையாகப் பார்க்கலாம்.

தகவல் 1: தமிழக அரசின் கொள்கை விளக்கக் குறிப்பேட்டில் 38,635 கோவில்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவற்றில் பல கோவில்கள் காணாமல் போய்விட்டன.

பதில்: உண்மையில் அறநிலையத் துறை வசம் உள்ள கோவில்கள் என்பவை, 36,441 இந்துக் கோவில்கள். 17 சமணக் கோவில்கள். மீதமுள்ளவை மடங்களுக்குக் கீழே உள்ளவை. ஆனால், அறநிலையத் துறையின் கண்காணிப்பில் இருப்பவை.

அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களின் பட்டியல் பின்வரும் இரு சுட்டிகளில் இடம்பெற்றுள்ளன. http://www.tnhrce.org/pdf/Moolavar_NonListed.pdf

http://www.tnhrce.org/pdf/Moolavar_Listed.pdf இவற்றில் காணாமல் போன பத்தாயிரம் கோவில்கள் எவை என ராஜா சொல்ல வேண்டும்.

தகவல் 2: உண்டியல் இல்லாத கோவில்களை ஒரு நாளும் நிர்வாகத்திற்குள் கொண்டுவந்ததில்லை.

பதில்: இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில்களில் 34,082 கோவில்கள் வருடத்திற்கு 10,000 ரூபாய் வருவாய்க்கும் கீழே உள்ளவை. அதாவது மாத வருவாய் சுமார் 850 ரூபாய் மட்டுமே. இது சராசரி அளவுமட்டுமே. பல கோவில்களில் வருவாய் இதற்கும் கீழே.

பல கோவில்களில் பூஜை செய்வதற்கான தாம்பாளத் தட்டுகளே கிடையாது. அரசு கையகப்படுத்திய பிறகுதான் அவற்றிற்கான பூஜை பொருட்கள் படிப்படியாக வாங்கப்பட்டு, ஒரு நேரமாவது பூஜை நடப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. 12745 கோவில்கள் இப்படி ஒரு கால பூஜையில்தான் இயங்கிவருகின்றன. இதற்கென ஒவ்வொரு கோவிலின் பெயரிலும் ஒரு லட்ச ரூபாய் வைப்பு நிதி செலுத்தப்பட்டு, அதன் வட்டியில் இந்த பூஜைகள் நடத்தப்பட்டுவருகின்றன.

தாம்பாளம், தூபக்கால், மணி, கார்த்திகை விளக்கு, தொங்கும் விளக்கு ஆகியவை இல்லாத கோவில்களில் அவற்றை வாங்குவதற்காக வருடத்திற்கு இரண்டரைக் கோடி ரூபாய் என இரு வருடங்களாக 20,000 கோவில்களுக்கு இந்தப் பொருட்கள் வாங்கி அளிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பொருட்களே இல்லாத கோவில்களில், உண்டியல் எப்படி இருக்கும்? இருந்தும் அறநிலையத் துறை பராமரித்துத்தானே வருகிறது?

தகவல் 3: கோவில் சொத்துகளை மீட்க மாட்டார்கள், ஆக்கிரமிப்புகளை அகற்ற மாட்டார்கள், சட்டம் இருந்தும் செயல்படாத அறநிலையத்துறை..

பதில்: நீதிமன்றங்களில் நிலம் தொடர்பாக தொடர்ந்து வழக்குகளைத் தொடர்ந்து போராடிவரும் அரசுத் துறைகளில் ஒன்று இந்து சமய அறநிலையத் துறை. இந்த வழக்குகளையும் மீறி, சொத்துக்களை ஆக்கிரமித்து வைத்திருப்பது, வேற்று மதத்தினர் அல்ல. இந்துக்கள்தான். தவிர, தற்போது கோவில்களுக்குச் சொந்தமாக உள்ள 4.78 லட்சம் ஏக்கர் நிலமும் இந்து சமய அறநிலையத் துறை அடையாளம் கண்டு கையகப்படுத்தியதுதான். யாரோ ஒரு மடாதிபதி எழுதிவைத்துவிட்டுப் போனதல்ல.

தகவல்4: அறநிலையத் துறை வசம் உள்ள கோவில்களை இந்து ஆன்றோர் சான்றோர் அடங்கிய தனித்து இயங்கும் அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டுமென 1985ல் எம்.ஜி.ஆர் அரசால் உருவாக்கப்பட்ட கமிஷன் பரிந்துரைத்தது.

பதில். எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கோவில்கள் தொடர்பாக இரு கமிஷன்கள் நியமிக்கப்பட்டன. ஒன்று நீதியரசர் மகராஜன் கமிஷன். இதன் அறிக்கை 1982ல் தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆணையமானது, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக அனுமதிப்பது தொடர்பானது. நீதியரசர் மகராஜன் ஆணையம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதை அனுமதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இரண்டாவது கமிஷன், திருச்செந்தூர் முருகன் கோவிலில் வேல் திருட்டுப்போனது தொடர்பானது. 1980 நவம்பர் 26ஆம் தேதி திருச்சந்தூர் கோவிலின் நிர்வாக அதிகாரி சி. சுப்பிரமணியம் பிள்ளை தற்கொலைசெய்துகொண்டார். இந்த விவகாரம் மிகப் பெரிதாக உருவெடுத்தது. டிசம்பர் 2ஆம் தேதி திருச்செந்தூரில் முழு அடைப்பே நடைபெற்றது. இதையடுத்து இந்த விவகாரத்தை விசாரிக்க நீதிபதி பால் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், விசாரணையத் துவங்கும் முன்பாகவே அ.தி.மு.கவினர் மட்டும் அடங்கிய கோவில் அறங்காவலர் குழுவைக் கலைக்க வேண்டும் என்றது. நீதிபதி பால், தனது விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பித்த பிறகும், அது சட்டப்பேரவையில் தாக்கல்செய்யப்பட்டாத நிலையில், 1982ல் தி.மு.க. தலைவர் கருணாநிதி அதனை வெளியிட, அவர் மீதே வழக்குத் தொடரப்பட்டது.

மேலே சொன்ன இரண்டு கமிஷன்களுமே அறநிலையத் துறையின் நிர்வாகம் தொடர்பானவையல்ல. யாருக்கும் தெரியாமல் வேறு எந்த கமிட்டி அல்லது கமிஷனை எம்.ஜி.ஆர். நியமித்தார்? தவிர, ஒரு கமிட்டி என்பது சட்டப்பேரவையைவிட மிக உயர்ந்த அமைப்பா?

தகவல் 5: கோவில்களின் நிர்வாகத்தில் தவறு நடந்தால் அதை எடுத்து சரிசெய்து, மீண்டும் அறங்காவலர்களிடமே ஒப்படைக்க வேண்டும் என அறநிலையத் துறையின் சட்டம் சொல்கிறது.

பதில்: http://www.tnhrce.org/hrce_act_1959.html இது அறநிலையத் துறையின் 1959ஆம் வருடச் சட்டத்தின் சுட்டி. இதுதான் திருத்தங்களோடு இன்றுவரை தொடர்ந்து வருகிறது. இதில் எங்கே அப்படிச் சொல்லியிருக்கிறது?

தகவல் 6: கோவில்களின் பெயரில் நான்கு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் இருப்பதாக கொள்கை விளக்கக் குறிப்பு சொல்கிறது. அத்தனை நிலங்களும் அறநிலையத் துறையிடம் இருக்கின்றனவா? பட்டா யார் பெயரில் இருக்கிறது?

பதில்: கோவில்களின் பெயரில் நான்கு லட்சத்து 78 ஆயிரம் ஏக்கர் நிலம் இருக்கிறது என்று அரசு சொல்கிறது என கூறிவிட்டு, அறநிலையத் துறையிடம் இருக்கிறதா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது. இருக்கிறது என்று அவர்கள் சொல்வதையே எடுத்துப்போட்டு, இருக்கிறதா என்றால் என்ன செய்வது?

தகவல்: கோடிக் கணக்கில் நிலுவையில் உள்ள வாடகை பாக்கியை முறையாக வசூலிக்கவில்லை. கோவில் நிலங்களுக்கான வாடகை நிர்ணயம் மிக மோசமாக இருக்கிறது. பணம் வாங்கிக்கொண்டு யார் யாருக்கோ கோவில் நிலங்களை மாற்றித் தருவது நடக்கிறது. ஒரு ஏக்கருக்கு 245 காசுகள் வாடகையாக வாங்கப்படுகிறது.

பதில்: கடந்த ஆறு வருடங்களில் தனியார் பெயரில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட, 789 கோவில்களுக்குச் சொந்தமான 5559.08 ஏக்கர் பரப்பு நிலங்களைக் கண்டறிந்து கோவில்களின் பெயரில் பட்டா மாற்றியிருக்கிறது அறநிலையத் துறை. கடந்த ஆண்டில் மட்டுமே சுமார் 1120 ஏக்கர் நிலம் இப்படி மீட்கப்பட்டிருக்கிறது. இந்த வேலையைச் செய்ய ஓய்வுபெற்ற துணை ஆட்சியர்கள், வட்டாட்சியர்கள், ஓய்வுபெற்ற நில அளவையர்கள், ஓய்வு பெற்ற வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்களை தொகுப்பூதியத்திற்கு பணிக்கு அமர்த்தியிருக்கிறது அறநிலையத் துறை. கோவில்களையெல்லாம் தூக்கி, மடாதிபதிகளிடம் கொடுத்துவிட்டால் என்ன நடக்கும் என்று யோசித்துக்கொள்ளுங்கள்.

வாடகை நிர்ணயத்தைப் பொறுத்தவரை, மண்டல இணை ஆணையர், திருக்கோவில் செயல் அலுவலர், அறங்காவலர், மாவட்டப் பதிவாளர் ஆகியோர் அடங்கிய குழுதான் கோவிலுக்குச் சொந்தமான இடத்தின் வாடகையை முடிவுசெய்கிறது. இதற்கும் பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

நிலங்களைப் பொறுத்தவரை, நஞ்சை விவசாய நிலங்களுக்கான குத்தகை 75:25 என்ற விகிதத்தில் உள்ளது. ஏக்கருக்கு 5 குவிண்டால் குத்தகை என்ற விகிதத்தில் ( ஏக்கருக்கு ஐந்து குவிண்டால் என்பது நல்ல விளைச்சல் உள்ள காலகட்டங்களில் மட்டுமே கிடைக்கும்) குத்தகை உள்ளது. இதன் இன்றைய விலை நிலவரம் 8000 ரூபாய் வரும். ராஜா சொல்வதைப்போல 245 காசுகள் அல்ல. தவிர, எல்லா நிலங்களும் நஞ்சை நிலங்கள் அல்ல.

குத்தகைத் தொகையை சரியாகச் செலுத்தாத குத்தகைதாரர்களை வெளியேற்ற தமிழ்நாடு பொது பொறுப்புரிமை - விவசாய நிலங்கள் ஒழுங்குபடுத்துதல் மற்றும் மேலாண்மை - சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்கென 10 இடங்களில் வருவாய் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. 2016-17ஆம் ஆண்டுகளில் நடந்த 16511 வழக்குகளில், 9629 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு 17 கோடியே 83 லட்ச ரூபாய் குத்தகையாக வசூலிக்கப்பட்டிருக்கிறது.

ஆக்கிரமிப்பு விவகாரத்தைப் பொறுத்தவரை, கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 2315 ஏக்கர் விவசாய நிலமும் 468 கிரவுண்ட் பரப்பளவுள்ள மனையும் 179 கிரவுண்ட் பரப்பளவுள்ள கட்டடங்களும் மீட்கப்பட்டுள்ளன. இவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு 2887 கோடிகள்.  இந்தத் தகவல்களை யாரொருவரும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சரிபார்த்துக்கொள்ளலாம்.

இதுபோல இன்னும் பல தகவல்கள் அந்த பேட்டியில் தவறாக அளிக்கப்பட்டுள்ளன. அவற்றிற்கான பதில்கள் அடுத்த பாகத்தில். ஆனால், இப்படி தவறான தகவல்களைத் தருவதன் மூலம் இவர்கள் சாதிக்க நினைப்பது என்ன? இவ்வளவு பெரிய அமைப்பைக் குலைத்துவிட்டு, நாம் அடையப்போவது என்ன? திருக்கோவில்களை உண்மையிலேயே நேசிக்கும் பக்தன், இதனை குலைக்க உண்மையிலேயே விரும்புவானா? மனசாட்சியுடன் பதில் சொல்லுங்கள்

பகுதி 6 - மதுரைக் கோவில் நிர்வாகத்தை ஆதீனம் கவனித்தாரா?  

இந்து சமய அறநிலையத் துறை இருக்கக்கூடாது; முன்பைப் போலவே கோவில்கள் சமயப் பெரியார்களின் நிர்வாகத்தில் இருக்க வேண்டும் என்றும் சொல்பவர்களிடம், யார் அந்த சமயப் பெரியார்கள் என்று கேட்டால் பதில் இருக்காது. நெருக்கிக் கேட்டால் ஆதீனங்கள், மடாதிபதிகளைச் சொல்வார்கள்.

இந்த மடாதிபதிகளும் ஆதீனங்களும் தங்கள் மடங்களையும் ஆதீனங்களையும் எப்படி நிர்வாகம் செய்தார்கள், செய்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். மதுரை ஆதீனம் அதற்கு ஒரு நல்ல உதாரணம். திருஞானசம்பந்தர் துவங்கிய ஆதீனம் இதைவிடப் பெரிய சீரழிவைச் சந்தித்துவிட முடியாது. நிலைமை இப்படி இருக்கும்போதுதான், கூச்சமே இல்லாமல் ஒரு கும்பல், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தை ஆதீனங்களிடம் விடவேண்டும் என்கிறது.

ஏற்கனவே ஆதீனங்கள்தான் மதுரைக் கோவிலைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள்; அரசு அநியாயமாக அந்தச் சொத்தைப் பிடுங்கிக்கொண்டுவிட்டது. மீண்டும் சமயப் பெரியார்களிடம் அதை ஒப்படைப்பதே முறை என்கிறது இந்தக் கும்பல். ஆனால், உண்மை என்ன? மீனாட்சி அம்மன் கோவில் ஆதீனத்தின் சொத்தா? அவர்கள் எப்போதாவது நிர்வாகம் செய்திருக்கிறார்களா? பார்க்கலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் துவக்கம் குலசேகர பாண்டியனது காலத்தில் ஆரம்பிக்கிறது.அந்த மன்னன், கோவில் வழிபாடுகளை நடத்த சில கௌட பிராமணர்களை நியமித்தார். ஆனால், கோவில் நிர்வாகம் நேரடியாக மன்னனின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது. இந்த நிலை 14ஆம் நூற்றாண்டில் மதுரையை ஆட்சி செய்த பராக்கிரம பாண்டியன் காலம் வரை நீடித்தது.

1310ல் மாலிக் காஃபூர் மதுரை மீது படையெடுத்துவந்து, கோவிலைச் சூறையாடினான். பாண்டியர்கள் மதுரையை நீங்கினர். பிறகு குமார கம்பன்னர்கள் 1378ல் மதுரையை மீட்டு, கோவிலில் வழிபாடுகளைத் தொடரச் செய்தனர். அப்போது துவங்கி நாயக்கர் ஆட்சி முடிவுக்கு வரும்வரை மீண்டும் மன்னர்கள் கட்டுப்பாட்டிலேயே மதுரைக் கோவில் இருந்தது. குறிப்பாக திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மதுரையும் மீனாட்சி அம்மன் கோவிலும் பெரும் வளர்ச்சியை அடைந்தன. கடைசி அரசி மீனாட்சி சாந்தா சாகிபால் கொல்லப்பட்ட பிறகு உற்சவ மூர்த்திகள் மானாமதுரைக்கு கொண்டுசெல்லப்பட்டன. கோவிலில் அரச ஆதரவின்மையால் வழிபாடுகள் குன்றின. பிறகு கிழக்கிந்திய கம்பனி மதுரையின் நிர்வாகத்தைக் கைப்பற்றியது.

இதற்கிடையில் மதுரையை சில காலம் ஆண்ட யூசுப் கான் கோவில் சொத்துக்களை எடுத்துக்கொண்டு ஆறாயிரம் சக்கரங்களை கோவில் நிர்வாகத்திற்காக வழங்கினார்.

கிழக்கிந்தியக் கம்பெனியைப் பொறுத்தவரை, மீனாட்சி அம்மன் கோவில், கள்ளழகர் திருக்கோவில், கூடல் அழகர் கோவில், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவில், தென்கரைக் கோவில், திருவேடகம் கோவில், குருவித் துறை கோவில் ஆகிய ஏழு கோவில்களையும் ஹஃப்தா தேவஸ்தானம் என்ற பெயரில் நிர்வகித்தது.

1801ல் மதுரை ஆட்சியராக உர்திஸ் பதவியேற்றார். அப்போது முதல் 1841 வரை மாவட்ட ஆட்சியர் வசமே கோவில் நிர்வாகம் இருந்தது. ஆனால், இந்துக் கோவில்களை ஏன் கிறிஸ்தவர்கள் நிர்வகிக்க வேண்டும் என பாதிரிமார்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். கவனிக்கவும், இந்துக்கள் கிளர்ச்சி செய்யவில்லை. கிறிஸ்தவர்களே கிளர்ச்சி செய்தனர். இதனால் கோவில் நிர்வாகம் முத்து செல்லத் தேவர் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீது ஊழல் புகார்கள் எழவே, தனசிங் என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் மீதும் புகார்கள் எழுந்தன.

அப்போதுதான் முதன்முதலாக கோவில் நிர்வாகம் 1859ல் மதுரை ஆதீனம் எனப்படும் திருஞானசம்பந்தர் மடத்தின் தலைவரிடம் கொடுக்கப்பட்டது. ஆனால், நிர்வாகம் சரியில்லையென புகார்கள் எழுந்தன. இதையடுத்து 1864ல் ஆதினகர்த்தர் தலைமையில் ஐவர் குழு அமைக்கப்பட்டது. இருந்தபோதும் தினசரி நிர்வாகத்தை தாசில்தார் கவனித்துவந்தார்.

ஆனால், இதிலும் நிலைமை சரியில்லாத நிலையில் மீண்டும் கோவில் நிர்வாகம் பிரிட்டிஷ் அரசின் வசம் சென்றது. அவர்கள் முத்து கரு.வெ. அழகப்பச் செட்டியாரை ரிசீவராக வைத்து கோவிலை நிர்வகித்தனர். அதற்குப் பிறகு தொடர்ச்சியாக பிரிட்டிஷ் அரசுதான் கோவில் நிர்வாகத்தைக் கவனித்துவந்தது.

1937ல் கோவிலின் நிர்வாக அதிகாரியாக இருந்த ஆர்.எஸ். நாயுடுதான் தமிழகத்திலேயே முதன் முறையாக தாழ்த்தப்பட்டவர்களை கோவிலுக்குள் அழைத்துச்சென்றார். தனிநபர்களின் வசம் கோவில் இருந்திருந்தால், குறிப்பாக மதுரை ஆதீனம் வசம் கோவில் இருந்திருந்தால் நித்யானந்தாவிற்கு வரவேற்பு கிடைத்திருக்குமே தவிர, எளிய மக்கள் உள்ளேயே நுழைந்திருக்க முடியாது.

ஆக, ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் நீளும் வரலாற்றில் ஆதீனம் கோவிலை நிர்வாகம் செய்தது வெறும் 5 ஆண்டுகள்தான். அதிலும் ஆயிரம் புகார்கள்.

உண்மையில் திருமலை நாயக்கர் காலத்திற்குப் பிறகு, மதுரைக் கோவில் தன் மகோன்னத நிலையை எட்டியிருப்பது இப்போதுதான். ஒரு தீ விபத்தால் எல்லாம் மாறிவிடாது.

நமது திருக்கோவில்கள் வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமல்ல. அவை நமது வாழ்வின் அங்கம். அவற்றை ஒருபோதும் தனிநபர்களால் நிர்வகிக்க முடியாது.

தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுவரும் சமூக நீதி செயல்பாடுகளால் தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள் எனப் பலரும் அறநிலையத் துறையில் பணியாற்றிவருகின்றனர். அறங்காவலர் குழுவில் நிச்சயமாக ஒரு தாழ்த்தப்பட்டவர் இடம்பெற வேண்டுமென்கிறது சட்டம். இதைப் பலரால் சகிக்க முடியவில்லை. ஆகவேதான் மீண்டும் தங்களது தனியுரிமை கோலோச்ச வேண்டும் என்கிறார்கள்.

"ஆலந்தரித்த லிங்கம் ஆலவாய்ச் சொக்கலிங்கம்

மூலமாய் எங்கும் முளைத்தலிங்கம் - பாலொளியாம்

மத்தனே கூடல் மதுரா புரிஉ மையாள்

அத்தனே ஆலவாயா"

பகுதி 7 - கோவில்களை நிர்வகிக்கும் அரசு, தேவாலயங்களை, மசூதிகளை விட்டுவைப்பது சரியா?

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை குறித்து பேசும்போது ஒரு கேள்வி திரும்பத் திரும்ப கேட்கப்படும். அதாவது இஸ்லாமிய வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளை இஸ்லாமியர்களும் கிறிஸ்தவ வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளை கிறிஸ்தவர்களும் நிர்வகிக்கும்போது, இந்து வழிபாட்டுத் தலங்களின் சொத்துகளை மட்டும் அரசு நிர்வகிப்பது ஏன் என்பதுதான் அந்தக் கேள்வி. மேல் பார்வைக்கு மிகவும் நியாயமான கேள்வியாக இது தோன்றும். இதற்கு பதிலைப் பார்ப்போம்.
முதலாவதாக, கோவில்கள் தோன்றிய காலத்திலிருந்தே அரசின் கட்டுப்பாட்டில் ஏதோ ஒரு வகையில்தான் அவை இருந்துவருகின்றன. மன்னர்களே கோவில்களைக் கட்டி அவை இயங்குவதற்கென இறையிலி நிலங்களைக் கொடுத்திருக்கிறார்கள். கோவில்கள் மீதும் சொத்துக்கள் மீதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அவர்கள் தொடர்ந்து கட்டுப்பாடுகளைச் செலுத்தியே வந்திருக்கிறார்கள். தவிர, கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கம் வந்த பிறகும், பிரிட்டிஷார் நேரடியாக ஆட்சி செய்ய ஆரம்பித்த பிறகும் கோவில் சொத்துகள் கணக்கு வழக்கில்லாமல் கொள்ளை போவது குறித்து அரசிடம் பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்தே அரசு இதில் தலையிட ஆரம்பித்தது. விக்டோரியா அரசின் ஆட்சியின்போது இந்தியா வந்த ஒவ்வொரு சட்ட கமிஷன் முன்பாகவும் பொதுமக்கள் கோவில்கள் நிர்வகிக்கப்படுவது குறித்து புகார் தெரிவித்தனர்.
ஆகவே, இப்படி சுருக்கமாகப் புரிந்துகொள்ளலாம்: இந்துக் கோவில்களை அரசுகளே கட்டின. ஆகவே அரசுகளே அவற்றைப் பராமரிக்கின்றன. தேவாலயங்களையும் பள்ளிவாசல்களையும்
முறையே கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்கள் கட்டினார்கள். அதனால், அவர்கள் பராமரிக்கிறார்கள். தவிர, இந்துக்கள் தங்கள் கோவில்களும் நிலங்களும் சூறையாடப்படாமல் தடுக்க வேண்டுமென்று அரசிடம் கேட்டார்கள். கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் கேட்கவில்லை.
அப்படியானால், பிரிட்டிஷ் அரசாலும் முகலாய அரசாலும் கட்டப்பட்ட தேவாலயங்களையும் மசூதிகளையும் அரசு பராமரிக்கிறதா? கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் ஏற்கனவே தங்கள் வழிபாட்டுத் தலங்களைப் பராமரிக்க ஒரு அமைப்பை உருவாக்கிக்கொண்டுவிட்ட நிலையில், அவற்றின் பராமரிப்பில் அந்தத் தேவாலயங்களும் மசூதிகளும் இல்லாமல், அவற்றை மட்டும் அரசின்வசம் எப்படிக் கொண்டுவர முடியும்? தனியாரால் கட்டப்பட்ட லட்சக்கணக்கான கோவில்கள் இப்போதும் அவர்களால்தானே பராமரிக்கப்பட்டுவருகின்றன. அதற்கு ஏதாவது கணக்கு வழக்கு உண்டா?


தவிர, இந்து கோவில் சொத்துக்களோடு ஒப்பிட்டால் கிறிஸ்தவ, இஸ்லாமிய கோவில் சொத்துக்களின் அளவு மிகவும் சிறியது. தவிர, இந்தியாவில் இந்து மதம் பெரும்பான்மை மதம். இஸ்லாமும் கிறிஸ்தவமும் சிறுபான்மை மதங்கள். கிறிஸ்தவ, இஸ்லாமியக் கோவில்களை அரசே நிர்வகிக்கிறதென வைத்துக்கொள்ளலாம். அப்போது இம்மாதிரி ஒரு தீ விபத்து ஒரு மசூதியிலோ, தேவாலயத்திலோ ஏற்பட்டால், அது எம்மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்? அங்கு நடக்கும் ஒரு சிறிய திருட்டு எவ்வளவு பெரிய வகுப்புக் கலவரத்தை ஏற்படுத்தும்?
இதற்கெனவே காத்திருக்கும் இந்துத்துவர்கள், ஆட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த அவர்களே அம்மாதிரி செயல்களில் ஈடுபட்டு கலவரங்களை ஏற்படுத்தவும்கூடும். தவிர, ஒட்டுமொத்தமாக ஒரு துறையை ஏற்படுத்தி எல்லா வழிபாட்டுத் தலங்களையும் நிர்வகித்தால், கோவில் பணத்தை மசூதிக்கு செலவழிக்கிறார்கள் என்று கிளப்பிவிடவும் அதை நம்பவும் இங்கே ஆட்கள் உண்டு. (குறிப்பாக கருணாநிதி 2014லிலிருந்து இதே வேலையாகத்தான் இருக்கிறார் என்று யாராவது சொன்னால், அப்போது யார் முதல்வர் என்றுகூட கேட்காமல் நம்பவும் அதைப் பரப்பவும் ஆட்கள் உண்டு.) ஆகவேதான் கிறிஸ்தவ, இஸ்லாமிய கோவில்களின் சொத்துக்களை அரசு நிர்வகிப்பது பற்றிய கேள்வியே ஏழவில்லை.

 பகுதி 8 - கோவில் நிலங்கள் எப்படி பறிபோயின?

தமிழ்நாட்டுக் கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் கொள்ளை போகின்றன என்பது நீண்டகாலமாக சொல்லப்பட்டுவரும் ஒரு குற்றச்சாட்டு. தமிழகக் கோவில்களுக்கு நிலங்கள் எப்படி வந்தன, அவை எப்படி பராமரிக்கப்பட்டன, பறிபோன நிலங்கள் எப்படி பறிபோயின, மீட்கும் முயற்சிகள் எப்படி நடக்கின்றன என்னபதெல்லாம் குறித்து இப்போது பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் கோவில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் மட்டும் அல்ல. கோவிலைச் சுற்றி வழிபாடு தவிர்த்து மிகப் பெரிய வாழ்க்கை இருந்தது. இலக்கியம், இசை, நடனம், பழக்க வழக்கங்கள், சடங்குகள் எல்லாமே அந்தந்த ஊரின் கோவில்களைச் சார்ந்தவை. இப்போதும் மதுரை மக்களின் ஆழ்மனதில் மீனாட்சி அம்மன் கோவில் என்பது எப்போதும் நிலைகொண்டிருக்கும், அவர் எந்த மதத்தவராயினும் சரி. மீனாட்சி கோவிலின் திருவிழாக்களை ஒட்டியே, மக்கள் தங்கள் திட்டங்களை, நல்லது - கெட்டதுகளை வகுத்துக்கொள்வார்கள்.

ஆகவே, இம்மாதிரி கோவில்கள் நல்ல முறையில் செயல்பட, அவை தோன்றிய காலம்தொட்டே மன்னர்களும் ஆட்சியாளர்களும் அந்தக் கோவில்களுக்கு நிலங்களையும் செல்வங்களையும் பெரும் அளவில் அளித்தனர். அப்படி அளிக்கப்பட்ட நிலங்களுக்கு வரி கிடையாது. ஆகவே அவை 'இறையிலி நிலங்கள்' என்று அழைக்கப்பட்டன. மன்னர்கள் இப்படி கோவில்களுக்கு வழங்கிய நிலங்களும் செல்வங்களும் மக்களின் வரிப்பணத்தில் இருந்து வந்தவை. ஆகவே இந்தச் செல்வங்களை மக்கள் தந்ததாகவே கொள்ள வேண்டும்.

தமிழகத்தை மாலிக்காஃபூர் சூறையாடியபோது, பெரும்பாலான கோவில்களின் செல்வங்கள் முற்றிலுமாக கொள்ளைபோயின. நிலங்கள் மட்டும் தப்பின. இந்தத் தாக்குதலில் இருந்து தமிழகம் மீள பல ஆண்டுகள் பிடித்தன. நாயக்க மன்னர்களின் ஆதிக்கம் தமிழகத்தில் பரவியபோது, இந்த இறையிலி நிலங்களைத் தேடிக் கண்டுபிடித்தனர். அப்போது இந்த நிலங்கள் மானிய நிலங்கள் என சமஸ்கிருதப் பெயரில் அழைக்கப்பட்டன.

இப்படி வழங்கப்பட்ட நிலங்கள் இரண்டு வகைப்படும். ஒன்று, கோவில் பெயரிலேயே முற்றிலுமாக இறைவனுக்கு எழுதிவைக்கப்பட்ட இறையிலி நிலங்கள். இரண்டாவது, 'குடி நீங்கா தேவதான' நிலங்கள். முதல் வகை நிலத்தைப் பொறுத்தவரை, அது முற்றிலுமாக கோவிலுக்குச் சொந்தமான நிலம். அதன் பயன்பாடு கோவிலைச் சார்ந்தது.

இரண்டாவது வகை நிலத்தைப் பொறுத்தவரை, அந்த நிலம் குடியானவருக்குச் சொந்தமாக இருக்கும். ஆனால், அந்த நிலத்தில் விளையும் விளைச்சலில் ஆறில் ஒரு பங்கை கோவிலுக்குச் செலுத்த வேண்டும். இந்த நிலங்களை குடியானவர்கள் விற்கலாம், குத்தகைக்கு விடலாம், வாடகைக்கு விடலாம். ஆனால், இறைவனுக்கு விதிக்கப்பட்டதை தந்துவிட வேண்டும். மதுரையில் சிறிய கோவில்களுக்குக்கூட இப்படி 'குடி நீங்கா தேவதான' நிலங்கள், வீடுகள் இப்போதும் உண்டு.

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி நீங்கி, இஸ்லாமியர் ஆட்சி வந்தபோதும் இந்த நிலங்களுக்கு வரி வசூலிக்கப்படவில்லை. அவை அப்போது 'இனாம் நிலங்கள்' என்று அழைக்கப்பட்டன. இந்த இனாம் நிலங்கள் பல்வேறு வகையாக இருந்தன. கோவிலுக்கு எழுதிவைக்கப்பட்ட நிலங்கள் 'தேவதான இனாம் நிலங்கள்' என்றும் அந்தணர்களுக்கு வழங்கப்பட்டவை, 'பிரமதானம்' அல்லது 'பிரமதாயம்' என்றும் தர்மகாரியங்களுக்கு வழங்கப்பட்டவை 'தர்மதானம், தர்மதாயம்' என்றும் அழைக்கப்பட்டன.

தமிழகத்தில் ஆங்கில ஆட்சி வந்த பிறகு, மாநிலத்தின் பல பகுதிகளில் உள்ள நிலங்களுக்கு வரி வருவதில்லை என்று கண்டுபிடித்தனர். அப்படி எந்தெந்த நிலங்கள் வரி விதிக்கப்படாமல் இருக்கின்றன என்பதைக் கண்டறிய ஒரு ஆணையம் ஒன்றை அமைத்தனர். அந்த ஆணையத்தின் பெயர் Inam Commission. இந்த ஆணயத்தின் அலுவலர்கள் ஒவ்வொரு கிராமமாகச் சென்று, நிலங்களை அளந்து, இனாம் நிலங்களைக் கண்டறிந்து அவற்றை உறுதிப்படுத்தினர். அந்த நிலங்களை யாரெல்லாம் பயன்படுத்திவந்தார்களோ அவர்களுக்கு Title deed என்ற உரிமைப் பத்திரம் வழங்கப்பட்டது. பிறகு இந்த விவரம் இனாம் சுத்த நகல் பதிவேட்டில் - Inam fair register- பதிவுசெய்யப்பட்டது. இந்தப் பதிவேடு இரு பிரதிகளாக உருவாக்கப்பட்டது. ஒரு பிரதி மாவட்ட தலைமையகத்தில் வைக்கப்பட்டது. இரண்டாவது பிரதி சென்னை ஆவணக் காப்பகத்தில் வைக்கப்பட்டது. தமிழக ஆலயங்களுக்கு கிறிஸ்தவர்களான ஆங்கிலேயர்கள் செய்த மிகப் பெரிய சேவை இது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, இனாம் நிலங்கள், ஜமீன்தாரி நிலங்களை ஒழித்து அவற்றை வரி விதிக்கும் முறைக்குள் -ரயத்வாரி- கொண்டுவருவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்பட்டன. அப்போதுதான் தமிழக கோவில் நிலங்களுக்கு மிகப் பெரிய அநீதி நிகழ்ந்தது.

அதாவது, 1960ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியன்று யாரெல்லாம் ஜமீன் நிலங்கள், கோவில் நிலங்கள், புறம்போக்கு நிலங்களை 12 ஆண்டுகளாக பயன்படுத்திவந்திருக்கிறார்களோ, அவர்களுக்கு நிலங்கள் பட்டா போட்டுத்தரப்பட்டன. 12 ஆண்டுக்குக் குறைவான காலத்திற்கு நிலத்தைப் பயன்படுத்தியவர்கள் குறிப்பிட்ட தொகையை கொடுத்த பிறகு, நிலத்தை வைத்துக்கொள்ளலாம் என்று சட்டம் கூறியது.

கோவில்களுக்கு சொந்தமான நிலம் இவ்வாறு தனிநபர்களுக்கு வழங்கப்பட்டால், அதற்கான இழப்பீட்டை தமிழக அரசு அந்தக் கோவில்களுக்கு தரும் என்று கூறப்பட்டது. அப்போதுவரை இப்போதுவரை இந்த இழப்பீடு வந்து சேரவில்லை.

இந்தச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு, 1963. அது தொடர்பான சட்டங்கள் The Tamil Nadu Minor Inams (Abolition and Conversion into Ryotwari) Act, 1963, The Tamil Nadu Lease-Holds (Abolition and Conversion into Ryotwari) Act, 1963, The Tamil Nadu Inam Estates (Abolition and Conversion into Ryotwari) Act, 1963, The Tamil Nadu Inams (Supplementary) Act, 1963.

இப்படி நிலங்களை அப்போது அனுபவித்துவந்தவர்கள், பா.ஜ.ககாரர்கள் சொல்வதைப் போல தி.மு.கவினர் அல்ல. கோவில் அர்ச்சகர்கள், ஊழியர்கள், ஆளும் கட்சியின் செல்வாக்கைப் பெற்றவர்கள்தான். பல லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள், சர்வ மானிய கிராமங்கள் இந்தச் சட்டத்தினால் தனியாருக்கு தாரைவார்க்கப்பட்டன. இந்தக் காரியத்தைச் செய்தது எம். பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் அரசு. இப்படி பறிபோனது போக எஞ்சியிருப்பதே தற்போதுள்ள கோவில் நிலங்கள்.

அந்தக் காலகட்டத்தில் இதிலும் ஒரு திருட்டுத்தனம் நடந்தது. அதாவது, பொதுவாக கோவிலுக்கு நிலங்களை எழுதிவைப்பவர்கள், கோவில் பெயரில் எழுதிவைக்க மாட்டார்கள். அந்தக் கோவிலில் உறையும் இறைவனின் பெயருக்கே எழுதிவைப்பார்கள். உதாரணமாக, கபாலீஸ்வரர் கோவிலுக்கு எழுதப்பட்ட நிலங்கள், அந்த கோவிலுக்குள் உள்ள பல்வேறு தெய்வங்களின் பெயரில் எழுதப்பட்டிருக்கும். இதுபோலத்தான் தமிழ்நாடு முழுவதும் இறைவனின் பெயரிலேயே கோவில் நிலங்கள் இருக்கும். ஆகவே, பதிவாளர்கள், உள்ளூர் வட்டாட்சியர்களைக் கைக்குள்போட்டுக்கொண்டு, இறைவனின் பெயரைக் கொண்டிருந்தவர்கள், தங்கள் பெயரில்தான் அந்த நிலங்கள் இருக்கின்றன என்று பட்டா போட்டுக்கொண்டார்கள்.

ரொம்பவும் தாமதமாக விழித்துக்கொண்ட தமிழக அரசு, இந்த நிலங்களை மீட்க இரண்டு மாவட்ட வருவாய் அலுவலர்களை நியமித்துள்ளது. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் இந்தப் பணிகள் தொடர்ந்து நடந்துவருகின்றன. பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பல ஆயிரக்கணக்கான நிலங்கள் தொடர்பாக வழக்குகள் நடந்துவருகின்றன.

கோவில்களின் நிர்வாகத்தை அரசிடமிருந்து மீட்க வேண்டும் என்று சொல்லும் இந்து அமைப்புகள், திராவிட கட்சிகள்தான் கோவில் நிலங்களை, சொத்துக்களைக் கொள்ளையடித்ததாகக் குறைகூறுவார்கள். ஆனால், இந்த நில விவகாரம் தொடர்பாக தி.மு.க. அரசில் இரு முக்கியமான விஷயங்கள் நடைபெற்றன.

அதாவது, ஒரு நிலத்தை மீட்பதற்கான வழக்குத் தொடுக்கும்போது, எந்த நிலத்தை மீட்க வழக்குத் தொடுக்கிறோமோ அதன் மதிப்பில் 7.5 சதவீதத்தை நீதிமன்றத்திற்குக் கட்ட வேண்டும். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் என்றால், ஏழரை லட்ச ரூபாய் கட்ட வேண்டும். இவ்வளவு தொகையை புரட்டுவது அறநிலையத் துறைக்கு சிரமமான காரியம். ஆகவே, தி.மு.க ஆட்சிக் காலத்தில் ஒரு அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி, அறநிலையத் துறை சொத்து தொடர்பான வழக்குகளுக்கு 15 ரூபாய் நீதிமன்றக் கட்டணமாக செலுத்தினால் போதும்.

தவிர, சென்னையில் அமலில் இருந்த வாடகைக் கட்டுப்பாட்டுச் சட்டம், கோவிலுக்குச் சொந்தமான வீடுகளில் இருந்து, வாடகை செலுத்தாத நபர்களை வெளியேற்றுவதில் சிக்கலை ஏற்படுத்தியது. ஆகவே, தமிழக அரசு மற்றொரு அரசாணையின் மூலமாக, கோவில் கட்டடங்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து விலக்கு அளித்தது.

இந்த இரு அரசாணைகளும் பல ஏக்கர் விஸ்தீரணமுள்ள கோவில் நிலங்களையும் பல ஆயிரம் சதுர அடி பரப்புள்ள கட்டங்களையும் மீட்க உதவியது. இந்த இரு அரசாணைகளும் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் வெளியிடப்பட்டவை.

பகுதி 9 - கோவில்களை கைப்பற்ற நினைக்கும் பிற்போக்கு சக்திகள்.  

தமிழ்நாட்டுக் கோவில் நிலங்களையும் கடைகளையும் திராவிடக் கட்சிக்காரர்கள் கைப்பற்றிக்கொண்டு வெளியேற மறுக்கிறார்கள் என்பது, அறநிலையத் துறைக்கு எதிரானவர்கள் அடிக்கடி சொல்லும் வாதம். ஆனால், உண்மையில் ஆக்கிரமிப்பாளர்கள் யார்?

தமிழ்நாட்டு அரசுத் துறையில் வருவாய்த் துறைக்கு அடுத்தபடியாக அதிக அளவில் அசையாச் சொத்துகளை வைத்திருப்பது அறநிலையத்துறைதான். கோவில்களுக்குச் சொந்தமான நிலங்கள் 60-70 வருடங்களுக்கு முன்பாக கவனிப்பாரற்றுக் கிடந்தபோது ஆக்கிரத்தவர்கள், இப்போது நிலத்தின் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும்போது வெளியேறுவார்களா?

கோவிலுக்குச் சொந்தமான மனைகளில் கட்டடங்களைக் கட்டி சுவாதீனத்தில் வைத்திருப்பவர்கள். நிலம் கோவிலுடையது என்றாலும் கட்டடம் தங்களுடையது என்பார்கள். இவர்கள், அடி மனைக்கான வாடகையை மட்டும் கோவிலுக்குச் செலுத்திவிட்டு காலம் காலமாக அந்த சொத்தை அனுபவித்துவருபவர்கள். இதை நீதிமன்றம் சென்று மீட்பதில் பெரும் சிரமமான காரியம்.

தமிழகத்தில் கிட்டத்தட்ட 38,500 கோவில்களும் அற நிறுவனங்களும் இருக்கின்றன. இவற்றை நிர்வகிக்க சுமார் 650 செயல் அலுவலர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. அவற்றிலும் கால்வாசிக்கு மேற்பட்ட இடங்கள் காலியாகவே உள்ளன. இம்மாதிரியான சூழலில் மிகுந்த சிரமத்திற்கு இடையில் நிலங்களை மீட்கும் போராட்டங்களை இந்த அலுவலர்கள் நடத்திவருகின்றனர். குறிப்பாக, பரம்பரை அறங்காவலர்கள் நிர்வகிக்கும் கோவில்களில், அறங்காவலர்கள் துணையோடு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால், அவற்றை மீட்பது என்பது கிட்டத்தட்ட நடக்காத காரியம்தான்.

இது தவிர, திருக்கோவில் நிலங்களில் குடியிருப்பவர்கள், தங்களுக்கென சங்கம் அமைத்துக்கொண்டு வழக்குகளைத் தொடுப்பது, அவற்றை மொத்தமாக நிதி திரட்டி நடத்துவது என செயல்பட்டுவருகின்றனர். கோவில்களை அறநிலையத் துறையிடமிருந்து மீட்க வேண்டும் என்று கோருபவர்கள், இந்தச் சங்கம் குறித்து பேச்சே எடுப்பதில்லை.

செயல் அலுவலர் பணியிடங்கள் மிகக் குறைவாகவே உள்ளதால், ஒரு செயல் அலுவலர் 20க்கும் மேற்பட்ட கோவில்களை நிர்வாகம் செய்யும் நிலையே இப்போது நீடிக்கிறது. இதனால், கோவில் நிர்வாகத்தையும் வழக்குகளையும் கவனிப்பது பெரிதும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறது. கோவில்களை ஒட்டியோ, அருகிலோ உள்ள கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களைக் காலிசெய்ய நடவடிக்கை எடுத்தால், அவர்கள் சம்பந்தப்பட்ட நிர்வாக அதிகாரிக்கு பகையாளியாக மாறிவிடுவர். இது தினசரி நடவடிக்கையைக் கடுமையாக பாதிக்கும்.

அறநிலையத் துறை மீது முன்வைக்கப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, பக்தர்கள் இறைவனுக்கு என்று அளிக்கும் காணிக்கையை அறநிலையத் துறை ஊழியர்கள் எடுத்து, அதை வைத்து கார்களில் பயணிக்கிறார்கள் என்பது. 20 கோவில்களை கவனிக்கும் ஒரு செயல் அலுவலர், காரில் பயணிக்காமல் வேறு எப்படிச் செல்வார்? சில தனியார் கோவில்களை தங்கள் பொறுப்பில் வைத்திருக்கும் மடாதிபதிகள், காரில் செல்வதில்லையா? ஏன் ஹெலிகாப்டர்களில்கூடச் செல்கிறார்கள். விமானங்களில் செல்கிறார்கள். அவர்களைப் பார்த்து, பக்தர்களின் காணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்படுவதில்லை ஏன்?

மற்றொரு புறம், திருக்கோவில்களின் வருவாயில் பெரும் பகுதி வங்கிகளில் புதிய முதலீடாக செய்யப்படுகிறது. அந்த முதலீடும்கூட, எப்படிச் செய்யப்பட வேண்டும், எம்மாதிரி வங்கிகளில் செய்யப்பட வேண்டும் என விதிமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. இந்துசமய அறநிலையத் துறைச் சட்டம் இந்த வருவாய், மற்றும் செலவுகளைக் கண்காணிப்பதற்கான அனைத்து வழிவகைகளையும் கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது. அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் புதிதாகக் கொண்டுவரப்படும் கோவில்களின் வருவாய், முன்பிருந்ததைவிட பல மடங்கு உயர்வதை யாரும் கண்கூடாகக் காணமுடியும். அதற்குக் காரணம், பக்தர்கள் வருகை அதிகரிப்பதல்ல. மாறாக, அந்தக் கோவில்களுக்கு வரும் வருவாய், முறையான கணக்குடன் ஒப்படைக்கப்படுவதுதான்.

கோவில்கள் என்பவை வெறும் வழிபாட்டுத் தலங்கள் அல்ல என்பதைப் பல முறை இங்கே சொல்லப்பட்டுவிட்டது. கோவில் நிர்வாகத்தைக் கைப்பற்றுபவர்கள், வெறும் கோவிலை மட்டுமல்லாமல், அதன் சொத்துக்கள், பக்தர்கள், அவர்களது நம்பிக்கைகள் அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியும். ஆகவே, கோவிலை நிர்வகிப்பது அரசாக இருந்தால் மட்டுமே, கோவிலை, அதன் சொத்துக்களை நிர்வகிப்பது என்று செல்லும். மாறாக, தனியார் அமைப்புகளோ, தனி நபர்களோ நிர்வகிக்க ஆரம்பித்தால், அவர்களை வளைக்கும் பிற்போக்கு சக்திகள், தாங்கள் விரும்பும் எதை வேண்டுமானாலும் செய்ய முடியும். நிலைமை அப்படி மாறினால், தமிழகத்தின் அமைதி என்னவாகும்?

இப்போது உலகம் முழுவதுமே பிற்போக்கு சக்திகளுக்கு ஆதரவான ஒரு போக்கு நிலவிவருகிறது. இந்தியாவிலும் தமிழகத்திலும்கூட அந்த நிலை தற்போது ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பின்னணியில்தான் தாங்கள் வலுவடைந்திருப்பதாக நினைக்கும் பிற்போக்கு சக்திகள், கோவில்களைக் கைப்பற்றி தாங்கள் விரும்பியதை சாதிக்க நினைக்கின்றன.

பகுதி 10 - அறநிலையத் துறைச் சட்டத்திற்கு ஆதரவு திரட்டிய பெரியார்; எதிர்ப்புத் தெரிவித்த சத்யமூர்த்தி அய்யர்

இந்து அறநிலையத் துறை குறித்த என்னுடைய முதல் பதிவில், நண்பர் ஒருவர் இந்தச் சட்டத்தில் பெரியாரின் பங்கு என்ன என்று கேட்டபோது, என்னுடைய அறியாமையால், ஏதும் இல்லை என்று பதிவிட்டுவிட்டேன். அதனைப் பார்த்த, ம.தி.தா. இந்துக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஆ. திருநீலகண்டன், அந்தப் பதிவிலேயே அதனை மறுத்தார்.

"சொத்துடமைமிக்க பெருங்கோயில்களில் நிலவிய பார்ப்பன-உயர்சாதி ஆதிக்கத்தை,சுரண்டலை பெருமளவுக்குத் தடுத்த அறநிலையத்துறை சட்டம் நீதிக்கட்சி காலத்தில் உருவாக்கப்பட்டது. அதற்கு சிலகாலம் முன்புதான் காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தை பெரியார் தொடங்கியிருந்தார். இந்த மசோதா சட்ட-மக்கள் மன்றங்களில் விவாதத்திற்கு வரும்போது, 'இது ஏதோ காங்கிரசுக்கு எதிரான இயக்கமான நீதிக்கட்சி கொண்டு வருகிறது என அலட்சியமாக இருந்துவிடாமல், இதன் சமூக முக்கியத்துவத்தை கருதி, இதனை எந்தவகையிலும் வெற்றி பெறச் செய்தாக வேண்டும்' எனத் தனது நெருங்கிய நண்பர்களும் அப்போது காங்கிரசின் பெருந்தலைவர் களாகவும் இருந்த வரதராஜுலு நாயுடு, திரு.வி.க ஆகியோரைத் தூண்டிவிட்டு, தனது ' குடிஅரசு' இதழின் வழி தக்க பரப்புரைகளைகளையும் மேற்கொண்டு, பார்ப்பனரின் கடும் எதிர்ப்பையும் மீறி அறநிலையத்துறை மசோதா வெற்றி பெற அடிப்படைக் காரணமாக விளங்கியவர் பெரியார்' என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தப் பதிவைப் பார்த்த, 'பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜிலு நாயுடு வரலாறு', 'சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும்' நூல்களின் ஆசிரியரும் நண்பருமான டாக்டர் பழ. அதியமானும் இதனை விளக்கமாகச் சுட்டிக்காட்டினார்.

இந்து அறநிலையத் துறை மசோதா தாக்கல்செய்யப்பட்டபோது, காங்கிரசைச் சேர்ந்தவரும், எல்லா சமூக முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் எதிர்க்கக்கூடியவருமான தீரர் சத்தியமூர்த்தி அந்த மசோதாவுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். சட்டசபையில் நிறைவேறிய அந்த மசோதாவை இந்திய சட்டசபை, வைசிராய், இங்கிலாந்து அரசு என பல மட்டங்களுக்கு எடுத்துச் சென்று தடைசெய்ய பிராமணர்களின் ஒரு பிரிவினர் முயற்சி செய்தனர். இதற்கென பல ஆயிரம் ரூபாய்கள் திரட்டப்பட்டன.

(இந்தச் சட்டத்திற்கு ஆதரவாக வரதராஜுலு நாயுடு தீவிரமாகச் செயல்பட்டார். ஆனால், பதிவு பெரியாரின் பங்களிப்பைப் பற்றியது என்பதால் அதனை விரிவாகக் குறிப்பிடவில்லை.)

பெரியார் குடியரசு இதழைத் துவங்கியிராத காலகட்டம். அப்போது இது சம்பந்தமாக பெரியார் விடுத்த அறிக்கையை எந்த இதழும் வெளியிடாத நிலையில், நவசக்தி அதனை வெளியிட்டது. இது தொடர்பான விவரங்கள், பழ. அதியமானின் பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜிலு நாயுடு புத்தகத்தில் விரிவாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

20.2.1925 நவசக்தி இதழில் பெரியாருடைய அறிக்கை வெளியானது. இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு பெரியார் நினைவு கூர்ந்ததை அதியமான் பதிவுசெய்திருக்கிறார். "நான் காங்கிரசில் இருந்தபோது ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் அறநிலையப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவந்தார்கள். யாரையும் கலந்துகொள்ளாமலும் கேட்காமலும் திடீரென்று காங்கிரஸ் பார்ப்பனர்களான சத்தியமூர்த்தி அய்யர், சீனிவாச அய்யங்கார் முதலியவர்களே எதிர்த்து எழுத ஆரம்பித்துவிட்டார்கள். உடனே நான் பதறி, இந்தப் பார்ப்பனர்களின் செயலை எதிர்க்க வேண்டுமெனத் தீர்மானித்தேன். உடனே நானும் வரதராஜுலுவும் திரு.வி.கவும் இராமநாதனும் சேர்ந்து யோசித்து ஒரு அறிக்கை எழுதினோம். அப்போது அதை வெளியிட எங்களுக்குச் சாதகமாக எந்த பத்திரிகையும் கிடையாது. ஆகவே அப்போதிருந்த நவசக்தி என்ற பத்திரிகையில் மட்டும்தான் வெளியிட்டோம். அதைக் கண்டதும் ராஜகோபாலாச்சாரியார் ஓடிவந்து இந்த மாதிரி இந்த மாதிரி அறிக்கை விடுவது கூடாது என்றார். அதற்கு நான் சத்தியமூர்த்தி அய்யரும் சீனிவாசய்யங்காரும் செய்தது சரியா என்று கேட்டேன். பிறகு அவர் இருவருக்கும் அமைதி ஏற்படுகின்ற தன்மையில் சமாதானம் செய்து ஒரு அறிக்கை விட்டார்" என்று பெரியார் கூறினார்.

அந்த அறிக்கையில் பெரியார் என்ன கூறினார் என்பதை, நவசக்தி இதழில் இருந்து அப்படியே தருகிறேன்.

"ஸ்ரீமான் இராமசாமி நாயக்கர் அவர்கள் கடிதம்

அன்புள்ள டாக்டர் வரதராஜுலு நாயுடுகாரு அவர்களுக்கும் ஸ்ரீமான் திரு.வி. கல்யாணசுந்தர முதலியார் அவர்களுக்கும் ஈரோடு ஈ.வெ. ராமசாமி அநேக வணக்கம்.

இந்த தேவஸ்தான சட்டம் சம்பந்தமாய் சமீபத்தில் சிலரால் நடத்தப்படும் கண்டனக் கிளர்ச்சிகளைக் கவனித்துப் பார்த்தவர்கள் இது மத சம்பந்தமான கிளர்ச்சி அல்ல என்றும் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்ட வகுப்பு சம்பந்தமான கட்சிவாதம் என்று இப்போதாவது உணர்ந்திருப்பார்கள். வகுப்பு சம்பந்தமான சுயநல்ன்களை மனதில் வைத்து மதசம்பந்தமான கிளர்ச்சி என்று போலிப்பெயரால் இந்துக்களின் பெரும்பான்மையோராய் இருக்கிற பல சமூகத்தினருக்கு இழிவும் நஷ்டமும் உண்டாகும்படி இந்துக்களில் ஒரு மிகச் சிறிய கூட்டத்தார் தங்களுடைய தந்திரத்தினாலேயும் கூடா ஒழுக்கமுள்ள மடாதிபதிகள், மகந்துகள், மதாச்சாரியார்கள் முதலானவர்களாலும் உதவப்பட்ட பணச்செருக்குகளினாலேயும் செய்துவரும் சூழ்ச்சிப் பிரச்சாரங்களினாலேயும் இந்துக்களின் மேற்கண்ட இழிவுகளுக்கும் கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் சம்பந்தப்பட்ட சமூகத்தாரில் தரித்திரத்தாலும் பேராசையினாலும் சுயநலத்திலும் அழுந்தக்கிடக்கும் ஒரு சிலரை விலைக்கு வாங்கிக்கொண்டு அவர்கள் மூலமாகவும் தங்கள் விஷமப் பிரச்சாரத்தை செய்து நம்மவர்களை ஏமாறச்செய்துகொண்டுவருவதை நாம் பார்த்துக்கொண்டு வருவது, பெரிய தேசத் துரோகமும் மதத் துரோகமும் சமூகத் துரோகமும் என்பதை நான் சொல்லாமலேயே தங்கள் போன்ற பெரியோர்களுக்கு விளங்கும்.

உண்மையிலேயே இந்து தேவஸ்தானச் சட்டம் மதவிரோதமானது என்று நினைத்து தப்பபிப்ராயத்துடன் கிளர்ச்சி செய்பவர்கள் சிலர் இருந்திருக்கலாம். எப்படியிருந்தாலும் இந்து தேவஸ்தானச் சட்டத்திற்கு விரோதமாகச் செய்யும் கிளர்ச்சிகளை, தேச, மத, சமூக, நன்மைகோரி நசுக்கப்படவேண்டியது அவசியம் என்பது வெகுஜன அபிப்பிராயம். அப்படிச்செய்வதினால் பிராமண துவேஷம் என்று சொல்லப்பட்டுவிடுமோ, பிராமணர்களின் புன்சிரிப்பு மறைந்துவிடுமோ, வைதிக உலகில் தமக்கு செல்வாக்கு குறைந்துவிடுமோ நம்மவர்களில் தக்கவர்களான அநேகருக்குக்கூட இருந்து மௌனம் சாதிக்கச் செய்துவருவது எனக்குத் தெரியும்" என்று அந்த நவசக்தி அறிக்கையில் குறிப்பிடுகிறார் பெரியார்.

இந்த அறிக்கை முழுவதையும் இது தொடர்பாக நவசக்தி இதழில் வெளிவந்த கடிதங்களையும் விரைவில் முழுமையாக இதே பதிவில் தொடர்கிறேன்.

குறிப்பிட்ட நவசக்தி இதழின் தேதியைச் சொன்ன பழ. அதியமான், பெரியாரின் அறிக்கை வெளிவந்து சரியாக 93 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த இதழைப் பார்க்க அனுமதித்த சென்னை ரோஜா முத்தைய்யா ஆராய்ச்சி நூலகம் ஆகியவற்றுக்கு நன்றி. ஆ. நீலகண்டன் அவர்களுக்கும் நன்றி.

நாம் தெரிந்துகொள்ள வேண்டியது, இந்து தேவஸ்தானச் சட்டம் வந்தபோது தீரர் சத்தியமூர்த்தி அதைத் தீவிரமாக எதிர்த்தார் என்பதையும் பெரியார் இது தொடர்பாக ஆதரவைத் திரட்டினார் என்பதையும்தான். மேலும், தெரியாத விஷயங்களில் யாராவது எதாவது கேட்டால், உடனடியாக 'ஆமாம், இல்லை" என்று பதில் சொல்லக்கூடாது என்பதையும் இந்த விவகாரத்தில் புரிந்துகொண்டேன்.

(தொடரும்)

 பகுதி 11 - மடாதிபதியின் மர்ம மரணம்; புதிய மடாதிபதியின் மகத்தான லீலைகள்

அறநிலையத் துறையும் அரசியல்வாதிகளும் இணைந்து கோவில்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று தொடர்ந்து ஒரு அவதூறு பரப்பப்பட்டுவருகிறது. மடாதிபதிகளிடமும் முக்கியப் பிரமுகர்களிடமும் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்தால் இதுபோல செய்யமாட்டார்கள்; பக்திமயமாக, பூஜைமட்டுமே நடக்கும் என்று சொல்கிறார்கள். இந்த வாதத்தைக் கேட்டால், "மடம்னா கொலை நடக்காதா?" என்ற தசாவதார படத்தின் வசனம் சிலருக்கு நியாபகம் வரலாம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சி.எம். ராமச்சந்திர செட்டியார் என்பவர் சென்னை மாகாண அறநிலையத் துறையின் ஆணையராக இருந்தார். அப்போது மாகாணம் முழுவதும் பயணம் செய்து, கோவில்களின் நிர்வாகத்தை ஒழுங்குபடுத்தினார் இவர். கோவில்களையும் மடங்களையும் நிர்வகித்துவந்த தர்மகர்த்தாக்களும் அர்ச்சகர்களும் எப்படியெல்லாம் கோவில்களை கொள்ளையடித்தார்கள் என்பதை அவர் கண்டுபிடித்தார். இவற்றில் சில சுவாரஸ்யமான திருட்டு மற்றும் கொலைகளை, சிறுகதைகளின் வடிவில் ஒரு புத்தகமாக எழுதினார். அந்தப் புத்தகத்தின் பெயர் கோவில் பூனைகள். மிகவும் பழைய அந்தப் புத்தகம் இப்போது அச்சில் இல்லை. ஆனால், அந்தக் காலத்தில் கோவில்களும் மடங்களும் எப்படியெல்லாம் கொள்ளையடிக்கப்பட்டன என்பதை தெரிந்துகொள்ள வேண்டாமா? இதோ முதல் கதை.

சிதம்பரத்தில் நடந்த கதை இது. அந்த ஊரில் உள்ள பெரிய கோவிலை ஒட்டியுள்ள மடம் அது. இப்போதைக்கு அதன் பெயரை திருஞானப் பிரகாச மூர்த்தி மடம் என்று வைத்துக்கொள்வோம். 25வது பட்டம் பெற்ற மடாதிபதியின் காலத்தில் இந்தக் கதை நடந்தது. அவர் வயது முதிர்ந்த கிழவர். உடல்நலமும் மோசமாக இருந்தது. அவர் எப்போதடா சாவார் என்று சிஷ்யகோடிகள் காத்திருந்தார்கள். சிலர் ஜோதிடம்கூட போய் பார்த்துவந்தார்கள். சிலர் மட்டும் அன்போடு அவரிடம் நடந்துகொண்டார்கள். இவர்கள், மடாதிபதியிடம் அன்போடு இருந்ததற்குக் காரணமே, அவர் சிவலோக பிராப்தி அடைவதற்கு முன்பாக, தன் காவி உடையையும் முத்திரையையும் தங்களிடம் தந்து தன்னை அடுத்த மடாதிபதியாக அறிவித்தால் மடத்துச் சொத்தை அனுபவிக்கலாமே என்ற நல்ல எண்ணம்தான்.

இந்த நிலையில், பெரும் வசீகரம் கொண்ட இளைஞர் ஒருவர் திடீரென மடத்திற்கு வந்து சேர்ந்தார். மூத்தவருக்கு அவரை ரொம்பவும் பிடித்துவிட்டது. இளைஞரும் மடத்திலேயே தங்கிவிட்டார். இதற்குப் பிறகு, திடீரென மூத்தவரின் உடல்நலம் சற்றுத் தேறியது. இதை சிஷ்யகோடிகள் விரும்பவில்லை. இயல்புதானே.

ஒரு நாள் மடத்திற்கு ஜோதிடர் ஒருவர் வந்தார். அவர் புதிதாக வந்த இளைஞருக்குத் தெரிந்தவர் போல இருந்தது. இருவரும் தனிமையில் சிறிது நேரம் பேசினர். பிறகு, மற்ற சிஷ்யர்களையும் அழைத்த ஜோதிடர், சாமியார் வெகுகாலம் உயிரோடு இருக்க மாட்டார் என்று கூறினார்.

இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, புதியவருடன் மூத்தவர் தனித்திருந்தார். அப்போது திடீரென அவரது அறையிலிருந்து 'அரகர சம்போ மகாதேவா' என்ற சத்தம் கேட்டது. உடனே சிஷ்யகோடிகள் மூத்தவரின் அறைக்கு ஓடினர். அங்கே மூத்தவர், தன் பீடத்திலேயே தூங்குபவரைப் போல இருந்தார். கண்கள் மேலே செருகியிருந்தனர். அவர் முன்பாக, புதியவர் வணங்கியபடி அமர்ந்திருந்தார். அவர் மீது காவி மேலாடையும் தாழ்வடமும் சின்முத்திரையும் இருந்தன.

புதியவருக்கு பட்டம்கட்டிவிட்டு, மூத்தவர் சிவபதவியடைந்தார் என பலரும் கருதினார்கள். ஆனாலும் சிலருக்கு மூத்தவரின் மரணம் குறித்து சந்தேகம் இருந்தது. சிலர் அரசுக்கு மொட்டைக்கடுதாசியும் போட்டார்கள். ஒரு பலனும் இல்லை. ஆகவே, சத்தமில்லாமல் இளையவருக்கு ஆதரவாக காலம்கழிக்க முடிவுசெய்தார்கள்.

புதிதாக பட்டம் பெற்ற இளைய மடாதிபதி, ரொம்பவும் கூரிய மூளையை உடையவர். மடத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்தபோது, தான் எதிர்பார்த்த அளவுக்கு மடத்திற்கு வருவாய் இல்லை என்பது புரிந்தது. நிலமெல்லாம் நீண்டகாலக் குத்தகையில் இருந்தன. குத்தகைக்காரர்கள் பத்தாண்டு பாக்கி வைத்திருந்தார்கள். நெருக்கிக் கேட்கவும் அச்சமாக இருந்தது. வழக்குத் தொடுக்கவும் தயங்கினார். ஆனால், யாரையும் பகைத்துக்கொள்ளாமல், இரண்டு ஆண்டுகளில் தன் பதவியை நிலைப்படுத்திக்கொண்டார் புதியவர்.

அதன் பிறகு, வருமானத்திற்கு புதிய வழியைத் திட்டமிட்டார் புதியவர். சில சிறந்த பொற்கொல்லர்களை வேலைக்கு அமர்த்தி, மடத்தில் இருந்த தங்கம், வெள்ளி ஆகியவற்றை உருக்கி பல திருவாபரணங்களைச் செய்தார். அவற்றை சிதம்பரம் பெருமானுக்குச் சாத்துவதாக பெரிய, பெரிய விளம்பரங்களைச் செய்தார். இதையடுத்து பணக்காரர்கள் சிலர், தாமும் அந்தத் திருப்பணியில் ஈடுபடுவதாகத் தெரிவித்தார்கள். சிலர் காணிக்கைகளும் தந்தார்கள். திருவிழா வெற்றிகரமாக முடிந்தது. செலவழித்த பணத்தைவிட அதிக பணம், காணிக்கைகளில் கிடைத்தது.

பிறகு இந்தப் பழக்கத்தைத் தொடர ஆரம்பித்தார் புதியவர். ஒரு பணக்காரச் செட்டியாருக்கு கடிதம் அனுப்புவார். சிதம்பரம் பெருமானுக்கு வைரம் பதித்த மோகனமாலை சாத்த வேண்டும். 10 ஆயிரம் ஆகும் என்பார். செட்டியாரம் பணத்தைத் தருவார். மடத்தின் பட்டறையிலேயே நகை செய்யப்பட்டு, குறிப்பிட்ட நாளில் பெருமானுக்கு செட்டியார் முன்னிலையில் சாத்தப்படும். அன்று திருமுழுக்கும் நடைபெறும். அதற்கும் செட்டியாரிடம் பணம் வாங்கப்படும்.

இந்த நகை இருக்கிறதே, அது செய்யப்படும்போது சுத்த தங்கத்தில் செட்டியார் முன்பு செய்யப்படும் என்பது உண்மைதான். ஆனால், கோவில் சாற்றப்படுவது அந்த நகைதானா என்பதை யார் சோதிப்பது? இப்படியாக, கோலாகலமாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார் புதியவர்.

இப்படியிருக்கும்போது, ஒரு நாள் கரு. பெரு. அரு. சாமிச் செட்டியார் என்பவர் பெருமானுக்கு மாலை சாற்றுவதாக வேண்டிக்கொண்டு, மடத்திற்குச் சொல்லி அனுப்பினார். நகை செய்ய வழக்கம்போல பத்தாயிரம் ஆகும் என்று மடத்திலிருந்து தெரிவிக்கப்பட்டது. செட்டியாரும் பணத்தைக் கொடுத்துவிட்டார்.

பிறகு, செட்டியாருக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதனால், தனக்காக செய்யப்பட்ட நகையை தான் பார்ப்பதற்காக, தன் வேலைக்காரனிடம் கொடுத்தனுப்பும்படி மடாதிபதியிடம் கேட்டுக்கொண்டார். மடாதிபதியும் அங்கிருந்த ஒரு பெரிய தங்க மாலையை எடுத்து, நன்றாக மெருகேற்றி வேலைக்காரனிடம் கொடுத்தனுப்பினார். செட்டியாருக்கு ஒரே மகிழ்ச்சி, பத்தாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு பெரிய மாலையா என்று குளிர்ந்துபோனார். உடனே தனக்குத் தெரிந்த ஆசாரி ஒருவரை அழைத்து அந்த மாலையில், தன் பெயரை மிகவும் சிறிய எழுத்தில் பொறித்துவிட்டார். பிறகு வேலைக்காரனிடம் நகையைக் கொடுத்து மடத்தில் கொடுக்கும்படி சொல்லிவிட்டார். நகையை திரும்பப் பெற்றுக்கொண்ட மடாதிபதி, செட்டியார் அதில் தன் பெயரைப் பொறித்ததைக் கவனிக்கவில்லை.

செட்டியாருக்கு உடல் நலமானவுடன், பெருமானுக்கு நகை சாற்றுவது தொடர்பாக ஊரெல்லாம் விளம்பரம் செய்யப்பட்டது. இந்த நகைசாற்றும் வைபவம் இருக்கிறதே, அது எப்போதும் இரவு 10 மணிக்கு மேல்தான் நடக்கும். அப்போதுதான் கூட்டம் வராது என்பது புதிய மடாதிபதியின் கணக்கு.

அதன்படியே நகை சாற்றப்பட்டது. ஆனால், சுவாமியின் திருமேனியில் நகையைப் பார்த்த செட்டியார் திடுக்கிட்டார். இந்த நகை தான் முதலில் பார்த்த நகையைப்போல இல்லையே என்று யோசித்தார். பிறகு அடுத்த நாள் கோவிலுக்கு வந்து, அர்ச்சருக்கு சிறிது பணத்தைக் கொடுத்து, அந்த நகையை தன்னிடம் காட்டச் சொன்னார். அர்ச்சகரும் எடுத்துக்காட்டினார். அதில் தன் பெயரைச் தேடினார் செட்டியார். பெயர் இல்லை. ஏமாற்றப்பட்டதைப் புரிந்துகொண்டார் அவர்.

ஆனால், மனிதர் விடவில்லை. காவல்துறையிடம் புகார் அளித்தார். பெரிய திருட்டு என்பதால், காவல்துறை ஒரு சிறந்த துப்பறியும் நிபுணரை அனுப்பியது. அவரும் சிதம்பரம் வந்து, மடத்தின் மூலமாக நகை சாற்றப்பட்ட கோவில்களுக்கு எல்லாம் சென்று, அந்த நகைகளைச் சோதித்தார். எல்லாம் போலி.

புதிய மடாதிபதியை பிடித்து விசாரிக்க மடத்திற்கு வந்தார் அந்தக் காவல்துறை அதிகாரி. மடத்தின் எல்லாப்புறங்களிலும் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். உள்ளே வந்த அதிகாரி, புதியவரை எங்கே எனக் கேட்டார். அவர் தன் அறையில் பூஜையில் இருப்பதாகவும் யாரும் செல்லக்கூடாது என்றும் சிஷ்யகோடிகள் தெரிவித்தனர். பூஜை நீண்ட நேரம் நீளவே, கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தால் யாரும் இல்லை.

பிறகுதான் அந்த அறையில் இருந்த ரகசியக் கதவு மூலமாக ஆசாமி வெளியேறியிருப்பது தெரியவந்தது. பிறகு அவரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. அன்றோடு இந்தத் திருவாபரணத் திருப்பணி முடிவுக்கு வந்தது.

பகுதி 12 - ஜெயலலிதா காலத்தில் அழிக்கப்பட்ட மகத்தான கோவில் சுவரோவியங்கள்

1995ல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மிகப் பெரிய அளவில் குடமுழுக்கு நடைபெற்றது. இந்தக் குடமுழுக்கு விழா பணிகளின் போது கோவில் மிகப் பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்டது. எனக்கு விவரம் தெரிந்த காலத்திலிருந்து கறுப்பு வெள்ளையாகக் காட்சியளித்த அந்தக் கோவில், 1995க்குப் பிறகுதான் வண்ணமயமாக ஒளிர ஆரம்பித்தது. இதற்கான பணிகள் 1992ல் துவங்கி, 1995ல் முடிவுக்கு வந்தன.

ஜெயலலிதா ஆட்சியின் போது நடந்த இந்த புதுப்பிக்கும் பணிகளின்போது மிகப் பெரிய தவறு ஒன்று நடைபெற்றது. கோவிலில் உள்ள பொற்றாமரைக் குளத்தைச் சுற்றியுள்ள வடக்கு பிரகாரச் சுவற்றிலும் கிழக்கு பிரகாரச் சுவற்றிலும் திருவிளையாடல் புராணக் கதைகலைச் சித்தரிக்கும் ஓவியங்கள் நாயக்கர் காலத்துப் பாணியில் வரையப்பட்டிருந்தன. இந்த ஓவியங்களில் திருவிளையாடல் புராணம் காமிக்ஸ் வடிவில் தொடர் சித்திரங்களாக இடம்பெற்றிருக்கும். மிக மிக அழகாகவும் நுணுக்கமாகவும் வரையப்பட்ட இந்த ஓவியங்கள், நூற்றாண்டுகள் கழித்தும் வண்ணம் மங்காமல் மகிழ்ச்சியளித்துக்கொண்டிருந்தன.

கோவிலுக்கான திருப்பணிகளின்போது, இந்த ஓவியங்களின் மீது எவ்வித வரலாற்று உணர்வும் கலை உணர்வுமின்றி சுண்ணாம்பு அடிக்கப்பட்டுவிட்டது. இந்த ஓவியங்களின் காலம்கூட யாருக்கும் சரியாகத் தெரியாது. மதுரை கூடல் அழகர் பெருமாள் கோவிலிலும் அழகர் கோவிலிலும் இதே பாணியிலான 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியங்கள் இருப்பதால், இந்த ஓவியங்களும் அதே காலகட்டத்தில் வரையப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இப்படி சுண்ணாம்பு அடித்து அழிக்கப்பட்ட ஓவியங்கள் போக, தற்போது ஒரே ஒரு ஓவியம் மட்டும் மேற்கு பிரகாரத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு எதில் உள்ள மண்டபத்தின் விதானத்தில் இடம்பெற்றிருக்கிறது. அதில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தை ராணி மங்கம்மாள் கண்டு களிக்கிறார். இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன், ஈசானன், வாயு, குபேரன் போன்ற எண்திசைக் காவலர்களும் மீனாட்சி அம்மனுடன் போரிட்டு தோற்ற காட்சியும் பெருமாள், மீனாட்சியை சுந்தரேஸ்வரருக்கு தாரைவார்த்துக்கொடுக்கும் காட்சியும் மங்கம்மாளுக்கு செங்கோல் வழங்கும் காட்சியும் மிக அழகாகத் தீட்டப்பட்டுள்ளன. இதே ஓவியத்தில் படைத் தளபதி ராமப்பையர், விஜயரங்க சொக்கநாதர், ஆகியோர் அம்மனை வணங்கி நிற்கிறார்கள். கீழே அவர்களுடைய பெயர்கள் தமிழிலும் தெலுங்கிலும் எழுதப்பட்டிருக்கின்றன. எனவே இந்த ஓவியங்கள், ராணி மங்கம்மாள் காலத்தில் (1689-1706) வரையப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

1996ல் கருணாநிதி தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த தமிழ்க் குடிமகன் முயற்சியில், இந்த ஓவியங்களை மீண்டும் வரையும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்றிரண்டு ஓவியங்கள் வரையப்பட்ட நிலையில், அந்த முயற்சி வெற்றிகரமாக தொடரப்படவில்லை.

பல கோவில்களில் இதுபோல, சிற்பங்கள் சிதைக்கப்பட்டன. ஓவியங்கள் பாதுகாப்பில்லாமல் அழிந்தே போயின. ஆனால், இப்போது இந்து அறநிலையத் துறை இம்மாதிரி விஷயங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறது. கோவில் புனரமைப்பு மற்றும் திருப்பணி தொடர்பாக ஆலோசனை வழங்க மத்திய, மாநில தொல்லியல் துறைகளிலிருந்து 22 வல்லுனர்கள் தேர்வுசெய்யப்பட்டு, குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் அறிக்கையின் படியே இப்போது திருப்பணிகள் நடக்கின்றன.

இதேபோல பழமையான சுவரோவியங்கள் உள்ள 50 கோவில்களில் அந்த ஓவியங்களைப் பாதுகாக்கவும் புதுப்பிக்கவும் குழு ஒன்று செயல்பட்டுவருகிறது. சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி திருக்கோவில் ராஜகோபுர சுவரோவியங்கள், திருப்புடைமருதூர் நாறும்பூநாதசுவாமி கோவில் ராஜகோபுர சுவரோவியங்கள், காஞ்சிபுரம் தேவராஜசுவாமி கோவில் வெளிப்பிரகார சுவரோவியங்கள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டுள்ளன. திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில், 2015ல் நடந்த திருப்பணியின்போது, நாயக்கர் கால சுவரோவியம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு, புதுப்பிக்கப்பட்டுவருகிறது.

இந்த அதிர்ஷ்டம் மீனாட்சி அம்மன் கோவில் ஓவியங்களுக்குக் கிடைக்கவில்லை என்பது பெரும் சோகம், இழப்பு.

பகுதி 13 - கோவில் உண்டியல் காணிக்கைகளை அதிகாரிகள் எடுத்துக்கொள்கிறார்களா?

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் செய்தித் தொகுப்பு ஒன்று ஒளிபரப்பானது. அதாவது, ஒரு கோவிலைக் குறிப்பிட்டு அந்தக் கோவிலில் உண்டியலில் காணிக்கையாக விழும் பணத்திற்கு எந்தக் கணக்கும் வைக்கப்படுவதில்லை; விழும் தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை கோவிலின் அதிகாரிகளே எடுத்துக்கொள்கிறார்கள் என்று கூறியது அந்தத் தொகுப்பு. அதற்கு ஆதரவாக, கோவிலுக்குச் சொந்தமான கடையை ஆக்கிரமித்து கடையை வைத்திருப்பவரின் 'பைட்' வேறு. அந்த செய்தித் தொகுப்பை பார்த்த யாரும் அடுத்த முறை கோவிலில் காணிக்கையை செலுத்துவதற்கு முன்பாக ஒரு கணம் யோசிப்பார்கள்.

உண்மையில், கோவிலில் உள்ள உண்டியல் பணத்தை அப்படி கோவிலின் அதிகாரிகளே எடுத்துக்கொள்ள முடியுமா? உண்டியல் காணிக்கைகள் என்ன ஆகின்றன?

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் கோவில்களில் உள்ள உண்டியல்களை எண்ணுவதற்கு பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன.

ஒவ்வொரு கோவிலிலும் உண்டியல்களைத் திறப்பதற்கு பல்வேறு கால அளவுகள் இருக்கின்றன. பெரும்பாலும் மாதம் ஒரு முறை அல்லது உண்டியல் நிறையும் காலத்தைக் கணக்கில்வைத்து உண்டியல்கள் திறக்கப்படும். தவிர, எல்லாக் கோவில்களின் உண்டியல்களும் பசலி ஆண்டின் இறுதியில் அதாவது ஜூன் மாத இறுதியில் கண்டிப்பாக திறக்கப்படும்.

2 லட்ச ரூபாய்கு குறைவாக வருமானம் உள்ள கோவில்கள், அறநிலையத் துறையின் ஆய்வாளர் அல்லது சரக ஆய்வர் முன்னிலையில் திறக்கப்படும். இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள கோவில்கள், அறநிலையத் துறையின் துணை ஆணையர் அல்லது அதற்கு மேற்பட்ட படிநிலையில் உள்ள அதிகாரி அல்லது வேறு பெரிய கோவிலின் இணை ஆணையரின் முன்னிலையில் திறக்கப்படும்.

கோவில் உண்டியல்கள் எல்லாவற்றுக்குமே இரண்டு பூட்டுகள் இருக்கும். ஒன்று அந்த உண்டியலிலேயே அமைந்திருக்கும் பூட்டு. மற்றொன்று வெளியில் பூட்டப்படும் பூட்டு. இவற்றின் சாவியில் ஒன்று கோவிலின் நிர்வாக அதிகாரியிடமும் மற்றொன்று கோவிலின் தக்காரிடம் (Fit person) இருக்கும். அல்லது நிர்வாக அதிகாரி மற்றும் இணை ஆணையரிடம் இருக்கும். அல்லது இணை ஆணையரிடம் மட்டும் இருக்கும். இது கோவிலின் வருவாய், நிர்வாகப்படி நிலை ஆகியவற்றைப் பொறுத்தது.

உண்டியல்களின் பூட்டுகள் எல்லாமே துணியால் சுற்றப்பட்டு, சீல் வைக்கப்பட்டிருக்கும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், இந்த பூட்டுகளுக்கான சாவியும் துணியால் சுற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டிருக்கும். இரு இடங்களிலிருந்து சாவிகள் கொண்டுவரப்பட்டு, எல்லா அதிகாரிகள், அறங்காவலர்கள் முன்னிலையில் அவை பிரிக்கப்படும்.

இதற்குப் பிறகு, முதல் உண்டியல் திறக்கப்பட்டு அவற்றில் இருக்கும் காணிக்கை டிரெங்க் பெட்டி ஒன்றுக்கு மாற்றப்படும். எந்த உண்டியல், எந்த டிரெங்க் பெட்டி, எத்தனை மணிக்கு திறக்கப்பட்டது என்ற விவரங்கள் ஒரு பதிவேட்டில் குறிக்கப்படும். அந்த டிரெங்க் பெட்டி நிறைந்தவுடன் அது பூட்டப்பட்டு, அடுத்த பெட்டி கொண்டுவரப்பட்டு காணிக்கை நிரப்பப்படும். அந்தத் தகவலும் பதிவேட்டில் ஏறும். இப்படியாக ஒரு உண்டியல் காணிக்கை முழுவதும் பெட்டியில் ஏற்றப்பட்டவுடன் அந்த டிரெங்க் பெட்டிகள் காணிக்கை எண்ணும் இடத்திற்குக் கொண்டுசெல்லப்படும். அது பெரும்பாலும் எல்லோரும் பார்க்கக்கூடிய வகையில் அமைந்த மண்டபமாக இருக்கும்.

அந்த மண்டபத்தில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை கொட்டப்படும். அங்கே கோவிலின் அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் (பெரிய கோவிலாக இருந்தால்) இருப்பார்கள். காணிக்கையை எண்ணுவதற்கு தன்னார்வலர்கள், பக்தர்கள் வரவேற்கப்படுவார்கள். அவர்களது விவரங்கள் வாங்கப்பட்டு, காணிக்கையை எண்ணுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். முதலில் நோட்டுகள் தனியாகவும் காசுகள் தனியாகவும் பிரிக்கப்படும். பிறகு அவை எண்ணப்படும்.

ஒவ்வொரு வகை நோட்டும் பிறகு கட்டாக கட்டப்பட்டு, அங்கிருக்கும் வங்கி அதிகாரியிடம் கொடுக்கப்படும். அந்த வங்கி அதிகாரியிடம் எத்தனை கட்டு கொடுக்கப்பட்டது என்ற விவரம்கூட பதிவுசெய்யப்படும். இப்படியாக எல்லாப் பணமும் எண்ணி முடித்த பிறகு, மொத்தப் பணமும் வங்கி அதிகாரிகளிடம் கொடுக்கப்பட்டு, கோவிலின் கணக்கில் வரவுவைக்கப்பட்டதற்கான சலான் கோவிலின் அதிகாரியிடம் அளிக்கப்படும். அந்த சலான் எண் கோவிலின் உண்டியல் பதிவேட்டில் பதிவுசெய்யப்பட்டவுடன் உண்டியல் எண்ணும் நடைமுறைகள் முடிவுக்கு வரும்.

இந்த உண்டியலில் விழுந்த உலோகங்கள் ஒரு நகை ஆசாரியின் மூலம் பிரிக்கப்பட்டு தங்கம், வெள்ளி, தாமிரம் என வகைப்படுத்தப்பட்டு, எலெக்ட்ரானிக் தராசின் மூலம் நிறுத்து கோவிலின் கணக்கில் வைக்கப்படும். நகைகள் விழுந்திருந்தால் அவையும் பதிவுசெய்யப்படும்.

இதற்குப் பிறகு மற்றொரு நாளில் ஆசாரி, கற்களை சோதிக்கும் நிபுணர் ஆகியோர் அழைத்துவரப்பட்டு உலோகத்தின் தரம் சரிபார்க்கப்படும். நகைககளில் உள்ள அரக்கு,மெழுகு போன்றவை நீக்கப்படும். இந்த நகைகளில் உள்ள கற்கள் total internal reflection முறையில் விலை உயர்ந்த கல்லா அல்லது சாதாரண கல்லா என்பது அறியப்பட்டு தரம் பிரிக்கப்படும்.

இவ்வாறு பிரிக்கப்பட்ட தங்கம், ஆகியவை பிறகு மும்பைக்கு பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டு உருக்கி, பிஸ்கட்களாக மாற்றப்படும். அவை கோவில் கணக்கில் வரவில் வைக்கப்படும்.

இந்த விவரங்கள் எல்லாம் உண்டியல் பதிவேடு, காணிக்கைப் பதிவேடு, நகை பதிவேடு என பல்வேறு பதிவேடுகளில் பல்வேறு அதிகாரிகளின் ஒப்புதலுடன் பதிவுசெய்யப்படும். அதேபோல, உண்டியல் பணத்தை எண்ணியவர்களின் கையெழுத்துகளும் வாங்கப்படும்.

இந்த நடைமுறைகள் எல்லாமே வெளிப்படையாக, எல்லோரும் பார்க்கும் வகையிலேயே நடக்கும்.

பெரும்பாலான கோவில்களில், என்றைக்கு உண்டியல் பணம் எண்ணப்படும் என்ற விவரங்கள் முன்கூட்டியே பலகையில் எழுதிவைக்கப்படுவதும் உண்டு. அன்றைக்கு விருப்பமுள்ளவர்கள் சென்று ஆண்டவனின் பணத்தை எண்ணும் திருப்பணியில் ஈடுபடலாம்.

இதைப் படிக்கும்போதே களைப்பு ஏற்படுகிறது அல்லவா? அறநிலையத் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாக் கோவில்களிலும் இதுதான் நடைமுறை. 'திருட்டு' திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் படிப்படியாக ஏற்படுத்தப்பட்ட இந்த விதிமுறைகள்தான் கோவில் காணிக்கை, உடையவருக்குச் சேர்வதை உறுதிசெய்கின்றன.

அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத, சிதம்பரம் நடராஜர் கோவில், சங்கர மடம் ஆகியவற்றில் காணிக்கைகள் எப்படி எண்ணப்படுகின்றன என்பதை விவரம் தெரிந்த யாராவது பதிவிட்டால் நன்றாக இருக்கும்.

பின் குறிப்பு: சிதம்பரம் கோவில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக ஆண்டுக்கு 30 ஆயிரம் ரூபாய் உண்டியல் வருவாய் என்று சொல்லப்பட்டது. கோவில் நிர்வாகம் 2009ல் அறிநிலையத் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டதும் சில மாதங்களிலேயே மாத உண்டியல் வருவாய் 18 லட்சமாக இருந்தது.

அப்படியானால், இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் வந்ததும் பக்தர்கள் அதிக காணிக்கை செலுத்தினார்களா? இல்லை, அவர்கள் எப்போதும் போலவே காணிக்கை செலுத்தினார்கள். என்ன நடந்திருக்கும் என்பதை நாமே யூகித்துக்கொள்ளலாம்.

2014ல் இந்தக் கோவில் இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருந்து நீங்கியது.

பகுதி 14 :மானியங்களுக்காகக் காத்துக்கிடக்கும் கோவில்கள்

இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு தமிழகத்தில் கொண்டுவரப்பட்ட ஜமீன் ஒழிப்புச் சட்டம், தேவதாசி இனாம் ஒழிப்புச் சட்டம், மைனர் இனாம் ஒழிப்புச் சட்டம் ஆகியவை இந்துத் திருக்கோவில்களுக்குப் பெரும் பாதகமாக முடிந்தன. (இது குறித்த எனது முந்தைய பதிவை இந்த லிங்கில் பார்க்கலாம் https://www.facebook.com/tex.willer.581730/posts/1190591197739272) திருக்கோவில்களுக்கும் மடங்களுக்கும் உரிய ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள், அவற்றை அனுபவித்துவந்தவர்களுக்கே உரித்தாக்கப்பட்டன.

கோவில்களுக்கும் மடங்களுக்கும் ஏன் இவ்வளவு நிலங்கள் சொந்தமாக இருக்க வேண்டும், அவற்றை உழுபவர்களுக்கே கொடுப்பதுதானே சரியானது என்ற கேள்வி கேட்கப்படலாம். ஆனால், இந்த நிலங்கள் எல்லாம் யாரோ ஒரு பக்தரால், அரசனால், ஜமீனால் கோவில் பராமரிப்பு செலவுக்காக விடப்பட்டவை. அவற்றை திருக்கோவில்களிடமிருந்து பிடுங்கியது, அவற்றின் வருவாயை வெகுவாகப் பாதித்தது.

இப்படிப் பெருமளவில் நிலங்களை இழந்த கோவில்களுக்கு, அவை இழந்த நிலத்தின் அளவைப் பொறுத்து தஸ்திக், பேரிஜ் (Beriz), மோஹினி என்ற பெயரில் அரசால் மானியங்கள் வழங்கப்படும் அறிவிக்கப்பட்டது. இந்த மானியத் தொகை 1960வாக்கில் நிர்ணயிக்கப்பட்டதால், அவை மிகவும் குறைவானவை. பல கோவில்களுக்கு இந்த தஸ்திக் மானியம் வெறும் 100 ரூபாய் அளவுக்குத்தான் கிடைக்கும். ஒட்டுமொத்தமாக 3007 கோவில்களுக்கு இந்த மானியங்கள் வழங்கப்பட்டுவருகின்றன. இவை பெரும்பாலும் நலிவடைந்த கோவில்கள்.

இந்த நிலையில், 2006-2011 தி.மு.க. ஆட்சியின்போது, அதாவது 2007ல் இந்த மானியத்தை உயர்த்த முடிவுசெய்யப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த 3007 கோவில்களுக்கும் சேர்த்து, 25.94 லட்ச ரூபாய்தான் வழங்கப்பட்டுவந்தது. இதனை பத்து மடங்காக உயர்த்த முடிவுசெய்யப்பட்டது. அதாவது இரண்டரைக் கோடி ரூபாய். இதற்கான அரசாணை 10.6.2008ல் (அரசாணை (ப) எண். 243 வருவாய் நி.அ. 1-2) வெளியிடப்பட்டது.

ஆனால், அந்த அரசாணை வெளியிடப்பட்டது மட்டுமே நடந்தது. பணம் கோவில்களுக்கு வந்து சேரவில்லை. காரணம், இது தொடர்பான கோப்புகள் தொடர்ந்து தமிழக அரசின் நிதித் துறையிடம் ஒப்புதலுக்காகக் காத்துக்கிடப்பதுதான். கிட்டத்தட்ட பத்தாண்டுகள் ஆகிவிட்டன. இன்னமும் கோவில்கள் தங்கள் மானியத்திற்காகக் காத்துக்கிடக்கின்றன.

எடப்பாடி சாமி மனதுவைத்தால், கோவில்களில் இருக்கும் சாமிகள் சற்று பிழைத்துக்கொள்ளும்.

பகுதி 16 : இந்து மத விரோதி கருணாநிதி கோவில்களுக்குச் செய்ததென்ன?

இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை ஒரு கொள்ளைக் கும்பலிடமிருந்து பெரும் அபாயத்தில் சந்திக்கும் நிலையில், மீண்டும் அந்தத் துறை குறித்து எழுதலாம் என்று தோன்றுகிறது.

வழக்கம்போல, திராவிடக் கட்சிகள் கோவில்களுக்கு எதுவுமே செய்யவில்லையென்று வாட்சப்பிலும் ஃபேஸ்புக்கிலும் ஒரு கும்பல் உளர ஆரம்பித்திருக்கி்றது. இதற்குப் பல முறை பதில் சொல்லியாகிவிட்டது. அந்த பதில்களில் சொல்லாத சில சாதனைகளைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. குறிப்பாக மு. கருணாநிதியின் சாதனைகளை.

1967ல் சி.என். அண்ணாதுரை முதலமைச்சராக இருந்தபோது மு. கருணாநிதி பொதுப்பணித் துறை அமைச்சர். சி.என். அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு முதல்வர். இந்த காலகட்டங்களில் கடவுள் நம்பிக்கையில்லாத, இந்து மத வெறுப்பாளரான கருணாநிதி என்ன செய்தார்?

1. பொதுப் பணித் துறை அமைச்சராக கருணாநிதி இருந்தபோது கும்பகோணம் மகாமகம் நடைபெற்றது. அப்போது பல நாட்கள் கும்பகோணத்தில் தங்கியிருந்து, அந்த விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்ததோடு, சுற்றுச் சாலைகள் அனைத்தும் அவர் மேற்பார்வையில் புதுப்பிக்கப்பட்டன.

2. திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் மிகப் பழமையானது. பல ஆண்டுகளாக திருப்பணி நடக்காமல் இருந்த அந்தக் கோவிலுக்கு, தி.மு.க. ஆட்சியில் திருப்பணி செய்யப்பட்டது.

3. கருணாநிதி முதல்வரான பிறகு, இந்து சமய அற நிலையத் துறையின் சார்பில் ஆதரவற்ற சிறார்களுக்கான இல்லங்கள் திறக்கப்பட்டன. "முதல்வர் கலைஞர் செய்யும் இதுபோன்ற நல்ல காரியங்களைப் பார்த்து, நல்ல காரியம் செய்தாரப்பா முதல்வர் என்று எம்பெருமானே மகிழ்வார்" என்று பாராட்டினார் கிருபானந்தவாரியார். ஆலயங்களின் நிதியைக் கொண்டு அனாதைக் குழந்தைகளை வளர்த்துக் கல்வியளிக்க வேண்டுமென்பது 1919ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் பெரியார் கொண்டுவந்த தீர்மானம். அதையே கருணாநிதி விரிவாக செயல்படுத்தினார்.

4. கோவில் அறங்காவலர் குழுக்களில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவர் கட்டாயம் இடம்பெற வேண்டுமென சட்டம் கொண்டுவந்து, 2000க்கும் மேற்பட்ட ஒடுக்கப்பட்டவர்கள் கோவில் நிர்வாகத்தில் பங்கேற்க வழிசெய்யப்பட்டது.

5. ஆலயங்களில் முக்கியஸ்தர்களுக்கு கட்டப்படும் பரிவட்டம், பூரண கும்பம் போன்ற மரியாதைகளைச் செய்யக்கூடாது என சட்டம் கொண்டுவரப்பட்டது.

6. பட்ஜெட் விவாதங்களின்போது அறநிலையத் துறைக்கென தனியாக மானியக் கோரிக்கை விவாதம் நடைபெறாது. 1970ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான் அத்துறைக்கென மானியக் கோரிக்கை விவாதம் தனியாக நடக்க ஆரம்பித்தது.

7. தி.மு.க. ஆட்சிக்கு வந்த 1967ல் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையின் கீழ் 9,600 அறநிலையங்கள் மட்டுமே இருந்தன. 1976க்குள் சுமார் 42,000 அறநிலையங்கள் கண்டறியப்பட்டன. அவற்றுக்குச் சொந்தமான 2 லட்சம் ஏக்கர் நிலங்களும் கண்டறியப்பட்டன. இதில் 1976க்குள் இருபத்தி ஐயாயிரம் அறநிலையங்களும் 65,000 ஏக்கர் நிலங்களும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டன.

8. 1967ல் தமிழகக் கோவில்களின் ஆண்டு வருமானம் 3 கோடி ரூபாய். 1975ல் இந்த வருமானம் 12 கோடி ரூபாய்.

9. திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோவிலின் ஆழித் தேர் தமிழகத்தின் மிகப் பெரிய தேர். இந்தத் தேர் ஒடத் துவங்கினால், நிலைக்குவர பல நாட்களாகும். இழுப்பதற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். வலுக்கட்டாயமாக இழுத்துவரப்படுவார்கள் என பல பிரச்சனைகள். பிறகு பல ஆண்டுகளாக அந்தத் தேர் ஓடாமல் இருந்தது. கருணாநிதி முதல்வாரன பிறகுதான் செப்பனிடப்பட்டு அந்தத் தேர் ஓட ஆரம்பித்தது. எளிதில் இழுப்பதற்கு ஏதுவாக இரும்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்டன. தேர் ஓடுவதற்கு ஏதுவாக சாலைகள் போடப்பட்டன. தேர் ஒடுவதற்காக 2 லட்ச ரூபாய்க்கு சாலைகள் போடப்பட வேண்டுமா என்ற கேள்வியெழுந்தபோது, 'தேர் வருடத்தில் ஒரு நாள்தானே ஒடுகிறது. பிற நாட்களில் மக்கள்தானே பயன்படுத்தப்போகிறார்கள்' என்று பதிலளித்தார் கருணாநிதி.

பிறகு எம்.ஜி.ஆர்.ஆட்சிக் காலத்தில் தேர் மீண்டும் பழுதடைந்து நின்றுவிட்டது. அதனை மீண்டும் பழுதுபார்த்து, 1998ல் ஓடவிட்டது கருணாநிதி அரசு.

மேலே சொன்னவையெல்லாம் 1976வரை தி.மு.க. அரசு கோவில்களில் செய்த பணிகள். பிந்தைய காலங்களில் செய்த பணிகளைத் தனியே பட்டியலிட வேண்டும்.

இப்படி பார்த்துப் பார்த்து சேகரிக்கப்பட்ட, பாதுகாக்கப்பட்ட சொத்துகளை மொத்தமாக பறிக்க முயற்சி நடக்கிறது.

நன்றி Muralidharan Kasi Viswanathan


Related Posts Plugin for WordPress, Blogger...