Search This Blog

Tuesday, October 11, 2011

குறைந்து வரும் நிலத்தடி நீர் மட்டம்; நெருக்கடியில் நெற்களஞ்சியம்


விவசாயத்திற்குப் பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்தில், கடந்த 10 ஆண்டுகளில், நிலத்தடி நீர் மட்டம் 42 அடி குறைந்துள்ளது. அதைத் தொடர்ந்து, இரண்டே ஆண்டுகளில், தரிசு நிலங்கள் 40 சதவீதம் அதிகரித்துள்ளன. இந்த அபாயப் புள்ளி விவரங்கள், தஞ்சை மாவட்ட விவசாயத்தில் ஏற்பட்டு வரும் விரும்பத்தகாத மாற்றங்களின் சில அறிகுறிகள் தான்.
தண்ணீர் கரை புரண்டோடும் காவிரி நதி நீர் கால்வாய்கள், அவற்றில் குளித்துக் கும்மாளம் போடும் பிள்ளைகள், கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் எனக் காட்சி தரும் வயல்வெளிகள், வயல்வெளிச் சேற்றில் நாற்று நடும் பெண்கள் என, நெஞ்சை அள்ளும் தஞ்சை கிராமங்கள், வளமை போல் இந்த ஆண்டும், சம்பா பருவ நெல் சாகுபடிக்குத் தயாராகி வருகின்றன.அடுத்த ஐந்து ஆண்டுகளில், இதே காட்சிகள் கிடைக்குமா என்ற கேள்வியை, புள்ளி விவரங்கள் பின்னால் சென்ற போது சந்தித்த அசுரர்கள் எழுப்புகின்றனர்.

ஆழ்துளைக் கிணறு என்ற அசுரன்:
மத்திய நீர்வள அமைச்சகம், தஞ்சை மாவட்டத்தில், 26 இடங்களில், 2001-2011 ஆண்டுகளுக்கு இடையே ஏற்பட்டிருக்கும் நிலத்தடி நீர் மாற்றங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதில், நிலத்தடி நீர் மட்டம், சராசரியாக 13.87 மீட்டர், அதாவது 45.5 அடி அளவிற்குக் குறைந்துள்ளது தெரியவந்தது.குறிப்பாக, தஞ்சையின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளில், மருங்குளம், குறுங்குளம், திருவோணம், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட கிராமங்களில், 70 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம், 120 அடிக்கு குறைந்துள்ளது. இதை, பொதுப் பணித் துறை அதிகாரிகளும் ஒப்புக் கொள்கின்றனர்.மேட்டூர் அணை நீர்வரத்து மற்றும் பருவ மழையில் நிலவும் மாறுபாடு, பயிர் சுழற்சி முறை கடைபிடிக்கப்படாதது ஆகியவற்றின் விளைவாக, ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் அதிகரித்துள்ளது.இதன் நேரடி விளைவாக, நிலத்தடி நீரும் வேகமாகக் குறைந்து வருகிறது. இதற்கும் மேல் நிலத்தடி நீர் குறைந்தால், நிலைமை, அபாய கட்டத்தை எட்டும் எனத் தெரிகிறது.

நீடாமங்கலத்தை அடுத்த, பைத்தஞ்சேரியைச் சேர்ந்த விவசாயி குமாரசாமி, ""மேட்டூரை மட்டும் நம்பி, விவசாயம் செய்த காலம் மாறிவிட்டது. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேல், எங்கள் பகுதியில் ஆழ்துளைக் கிணற்றுப் பாசனம் நடந்து வருகிறது. எங்கள் கிராமத்தில் மட்டும், 22 ஆழ்துளைக் கிணறுகள் உள்ளன. இவற்றின் மூலம், விவசாயத்திற்கு நீரை எடுக்க, எடுக்க, நிலத்தடி நீர் மட்டம் நிச்சயம் குறையும்'' எனத் தெரிவித்தார். மேலும், ""இந்நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில், தஞ்சை மாவட்டத்தில் விவசாயம் கேள்விக்குறியாகும் அபாயம் உள்ளது. அதன் அறிகுறியாக, இப்போதே எங்கள் பகுதியில், தண்ணீர் லேசாக உவர்க்கிறது'' என்றார்.

ஊடு பயிர்களை"ஊடு' கட்டிய அசுரன் யார்?
தாளடி, சம்பா நெல் சாகுபடிக்குப் பின், உளுந்து, நிலக்கடலை, பச்சைப்பயறு போன்ற ஊடு பயிர்களைப் போடும் முறை, தஞ்சையில் மெல்ல மெல்ல மறைந்து வருகிறது.இந்தப் பயிர்களில் உள்ள வேர் முடிச்சுகள், இயற்கையாக அமோனியா உரம் தயார் செய்து மண்ணை வளமாக்குகின்றன. மேலும், இந்த வேர்கள் ஆழமாகப் பரவும் தன்மை கொண்டவை என்பதால், மண்ணை மென்மையாக்குகின்றன. இதனால், மண்ணின் மேற்பரப்பு, மழைநீரை உள்வாங்கும் பக்குவத்திற்குத் தயாராகிறது.ஆனால், தற்போது, தஞ்சை விவசாயிகள் ஊடு பயிர்களை புறக்கணித்து விட்டு, நெல் பயிரை மட்டுமே விதைத்து வருகின்றனர்.

இதுகுறித்து, தொப்பன்குடிசையைச் சேர்ந்த, இயற்கை முறை விவசாயி சித்தர், ""ஆழ்துளைக் கிணற்றுப் பாசன முறையால் குறையும் நிலத்தடி நீரை, பயிர் சுழற்சி முறையால் எளிமையாக ஈடுசெய்யலாம். ஆனால், தற்போது பெரும்பாலான விவசாயிகள், ஆண்டு முழுவதும் நெல் பயிரை மட்டுமே விதைக்கின்றனர்'' எனக் கூறினார்.

மேலும், ""இதற்கு இடப்படும் ரசாயன உரங்களும், தன் பங்கிற்கு மண்ணை இறுகச் செய்கின்றன. இதனால், மழைநீர் உறிஞ்சப்படாமல், வீணாகக் கடலில் கலப்பதுடன், நிலத்தின் வளமான மேற்பரப்பு மண்ணும், அடித்துச் செல்லப்படும் அவலம் ஏற்படுகிறது'' என்றார்.

ஆட்களை மாயமாக்கிய அசுரன்:
விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பது, குதிரைக் கொம்பைப் பிடிப்பது போன்ற விஷயமாக தஞ்சையில் மாறிவிட்டதால், தற்போது பெரும்பாலும் இயந்திரங்களே பயன்படுத்தப்படுகின்றன. இயந்திர அறுவடையால், பயிர் சுழற்சி முறையை செயல்படுத்துவதில், நிறைய நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர்.

புன்னைநல்லூர் அடுத்த, மாரியம்மன் கோவில் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மனோகரன், ""தாளடி, சம்பா நெல் அறுவடைக்கு ஒரு வாரம் முன்பே, அதாவது தை முதல் வாரத்தில், வயலின் ஈரப்பதம், ஊடுபயிர் விதைகளை விதைப்பதற்கு ஏற்றதாக இருக்கும். அப்போதே வயலில் பட்டம் பிரித்து, ஊடு பயிர்களுக்கான விதைகளை விதைப்போம்.ஆனால், இயந்திரத்தை வைத்து அறுவடை செய்வதால், வயலை முழுவதும் காயவைத்த பின்தான், இயந்திரத்தைக் கொண்டு அறுவடை செய்ய இயலும். இதனால், ஊடு பயிர்களுக்கான விதைகளை, குறித்த நேரத்தில் விதைக்க முடிவதில்லை. அப்படி விதைத்தாலும், அறுவடை இயந்திரம் அவற்றை நசுக்கிவிடும்'' என்றார்.

தரிசாகும் விவசாய நிலங்கள்:
ஆள், நீர் பற்றாக்குறையால், தஞ்சையில் 2007-08ம் ஆண்டு 10,145 எக்டேராக இருந்த தரிசு நிலங்கள், 2009-10ம் ஆண்டில் 14,229 எக்டேராக அதிகரித்தது. அதாவது, இரண்டு ஆண்டுகளில், தரிசு நிலங்களின் அளவு, 40 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து, தஞ்சை, காட்டுப்பாக்கம் வேளாண் இணை இயக்குனர் அலுவலக அதிகாரி கூறுகையில், ""இன்றைய இளம் தலைமுறையினர், விவசாயம் செய்ய விரும்பவில்லை. பாரம்பரியமாக விவசாயம் செய்வோர் கூட, தங்கள் பிள்ளைகள் சில ஆண்டுகளாவது வெளிநாடு சென்று சம்பாதிப்பதையே விரும்புகின்றனர். இதனால், விவசாயத்திற்குப் பெயர் பெற்ற தஞ்சை மாவட்டத்திலும், தரிசு நிலங்கள் அதிகரித்து வருகின்றன. இவை, நாளடைவில் வீட்டுமனைகளாக மாறிவிடுகின்றன'' என்றார்.மேலும், ""தரிசாகும் விளைநிலங்களால் ஏற்படும் உற்பத்திப் பாதிப்பைச் சரிசெய்ய, நவீன நெல் விதை ரகங்களை, விவசாயிகளுக்குப் பரிந்துரைக்கிறோம். இவற்றால், 15 ஆண்டுகளுக்கு முன், 4,000 கிலோ நெல் அறுவடை செய்யப்பட்ட ஒரு எக்டேர் பரப்பளவில், தற்போது, 6,500 கிலோ முதல் 7,000 கிலோ வரை, அறுவடை செய்ய முடிகிறது'' என தெரிவித்தார்.

உயர் ரக விதைகளுக்கு, கூடுதல் உரங்களும், பயிர் ஊக்கிகளும் தேவைப்படுகின்றன. இதுவே ஒரு முடியாத வட்டமாக, கூடுதல் உரம், உரத்தினால் மண் இறுக்கம், அதனால் நிலத்தடி நீர் குறைவு என்ற போக்கில், விவசாயத்தை நலிவடையச் செய்யும்.

அசுரர்களை விரட்டுவது தான் எப்படி?
சில அரசுத் திட்டங்களே, விவசாயத்திற்குப் பாதகமாக உள்ளன. குறிப்பாக, நீலத்தடி நீரைப் பாழாக்கும் இலவச மின்சாரம், வேலைக்கு ஆட்கள் கிடைக்காமல் செய்யும் 100 நாள் வேலை திட்டம், விவசாயிகளை சந்தையில் இருந்து விலக்கும், கொள்முதல் விலை நிர்ணயம்.

இதுகுறித்து, இயற்கை விவசாயி சித்தர், ""குழந்தைக்கு பொம்மை வாங்கிக் கொடுத்துவிட்டு, அதன் காது கடுக்கனைக் கழற்றுவதைப் போல, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் தந்துவிட்டு, விளை பொருட்களுக்கு அரசே விலை நிர்ணயம் செய்கிறது. இந்த அணுகுமுறை தவறானது. விவசாய விளைபொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமையை, விவசாயிகளுக்கே வழங்க வேண்டும்'' என்று கூறினார்.

தொடர்ந்து, பசுமையான தஞ்சையின், நெஞ்சை அள்ளும் காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்றால், மேட்டூர் அணைப் பாசனத்தைச் சீர் செய்து, புள்ளி விவரங்களுக்குப் பின்னால் அமர்ந்திருக்கும் அசுரர்களையும் விரட்ட வேண்டும்.

தஞ்சை மாவட்டம்:
தஞ்சை மாவட்டத்தில், தஞ்சை, பூதலூர், திருவையாறு, ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுவாசத்திரம், அம்மாபேட்டை, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஆகிய விவசாய வட்டங்கள் உள்ளன.இவற்றில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் எக்டேர் பரப்பளவில், தற்போது விவசாயம் நடக்கிறது.

தொழிற்துறைக்கும் ஆளில்லை: வர்த்தக கூட்டமைப்பு காட்டம்
"குறைவான வேலைப்பளு மற்றும் அதிக சம்பளம் காரணமாக, பெருமளவு தொழிலாளர்கள், தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் நோக்கி ஈர்க்கப்படுவதால், இதர தொழில்துறைகளில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது' என, இந்திய வர்த்தக கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் விளைவுகள் குறித்து, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சமீபத்தில் ஆய்வு நடத்தியது.

ஆய்வில் பங்கேற்ற பெருமளவு நிறுவனங்கள், "தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் குறைவான வேலைப்பளுவுடன் அதிக சம்பளம் வழங்கப்படுவதால், கனரக தொழிற்சாலைப் பணிகளில் ஈடுபட தொழிலாளர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, ஒப்பந்தப் பணிகளை உரிய காலத்தில் நிறைவேற்ற முடியாத சூழல் நிலவுகிறது. இதில், நாட்டின் தெற்கு மற்றும் மேற்குப் பகுதி மாநிலங்களைச் சேர்ந்த நிறுவனங்கள் தான், பெருமளவு பாதிக்கப்படுகின்றன' என தெரிவித்தன.

இந்நிலை மேலும் தொடர்ந்தால், நாடு முழுவதும் திறன் வாய்ந்த பணியாளர்கள் மற்றும் சாதாரண தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும். இந்த நிலையை சரிசெய்ய, கனரக தொழிற்சாலைப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களையும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் சேர்த்துக் கொள்ளலாம் என்ற கோரிக்கையையும், அவை முன்வைத்தன.
விவசாயம் சார்ந்த தொழில்களும், இனி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ் சேர்த்துக் கொள்ளப்படும் என, மத்திய அமைச்சர் சரத் பவார் அறிவித்துள்ளார்.எனவே, இதுபோன்ற உபயோகமான துறைகளிலும், இத்திட்டத்தின் தொழிலாளர்களை ஈடுபடுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறைந்து வரும் மேட்டூர் நீர்
தஞ்சையின் முக்கிய பயிரான நெல், குறுவை, தாளடி, சம்பா என, மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது.இதில், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான குறுவை நெல் சாகுபடிக்கு, இம்மாவட்ட விவசாயிகள் மேட்டூர் அணை நீரையே பெரிதும் நம்பியுள்ளனர்.கடந்த 20 ஆண்டுகளில், 12 ஆண்டுகள், தஞ்சை உட்பட 12 மேட்டூர் அணை பாசன மாவட்டங்களுக்கு, குறுவை நெல் சாகுபடிக்கு பரிந்துரைக்கப்பட்ட 137 டி.எம்.சி., தண்ணீரை விட, குறைவாகவே மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடைத்துள்ளது. தமிழ்நாடு மூத்த வேளாண் வல்லுனர் பேரவையைச் சேர்ந்த, கலைவாணன், ""கடந்த நிதியாண்டில், இப்பருவத்தில், மேட்டூர் அணை பாசனப் பகுதிகளுக்கு, பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர் அளவை விட, 50 சதவீதம் குறைவாகத் தான் கிடைத்தது.இதனால், குறுவை நெல் சாகுபடிக்கு, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் நிலத்தடி நீரை எடுக்கும் அவசியம் ஏற்படுகிறது'' என்றார்.

பருவ மழையும், சம்பா சாகுபடியும்
தஞ்சை மாவட்டத்தில், சம்பா பருவத்தில் தான், அதிகளவு நெல் பயிரிடப்படுகிறது. கடந்த நிதியாண்டில், ஒரு லட்சத்து 22 ஆயிரத்து 459 எக்டேர் பரப்பளவில், சம்பா நெல் பயிரிடப்பட்டது.ஆகஸ்ட் முதல் ஜனவரி வரையிலான இப்பருவத்தில், வட கிழக்குப் பருவ மழை பெய்வதால், இம்மழை நீரைக் கொண்டு, பொதுப் பணித் துறையின் பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், கால்வாய்கள், வாய்க்கால்கள், ஏரிகள் மூலம் பாசனத்திற்குத் தேவையான நீர் கிடைத்து வருகிறது.இந்த காலகட்டத்தில், கடந்த நிதியாண்டில் பரிந்துரைக்கப்பட்ட அளவை விட, 60.87 டி.எம்.சி., தண்ணீர் குறைவாகவே மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டாலும், விவசாயம் பாதிக்கப்படவில்லை.


1 comment:

  1. விவசாய இடுபொருட்களுக்கான விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரி வரும் வேளையில், மன்மோகன் சிங் கும்பல் அக்கோரிக்கையை ஒரு பொருட்டாக மதிக்காமல், தெனாவட்டாக யூரியாவிற்கான மானியத்தை வெட்டியிருக்கிறது. இதுவொருபுறமிருக்க, தேர்ந்தெடுக்கப்பட்ட 50 மாவட்டங்களில் யூரியாவிற்கான மானியத்தை விவசாயிகளுக்கு நேரடியாக வழங்கும் திட்டத்தையும் இந்த பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்நடவடிக்கை, யூரியாவின் விலையை கார்ப்பரேட் முதலாளிகளும் வர்த்தகச் சூதாடிகளும் தீர்மானிக்கும்படி விட்டுவிடும் முன்னோட்டம் தவிர வேறில்லை. அம்மோனியா, பொட்டாசியம் உரங்களுக்கு மானியம் வழங்குவதையும், அவற்றின் விலையைத் தீர்மானிப்பதையும் நேரடியாகக் கைகழுவிய மைய அரசு, யூரியா விசயத்தில் தலையைச் சுற்றி மூக்கைத் தொடும் சதியில் இறங்கியிருக்கிறது. இப்படியொரு நிலை இந்தியா முழுவதும் விரிவாக்கப்படும்பொழுது யூரியாவிற்கு மானியம் வழங்குவது பெயரளவில் மட்டுமே இருக்கும்; அதே சமயம், யூரியாவின் விலையில் பெரும்பகுதி விவசாயிகளின் தலையில் சுமத்தப்படும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...