Search This Blog

Thursday, January 26, 2012

எமனை விரட்ட சித்தர் சொல்லும் வழிகள்



பதினெட்டுச் சித்தர்களில், `தேரையார்'  எமனை விரட்டுவதற்கு சில வழிகளைச் சொல்கிறார். அந்தப்பாடல்களும் பொருளும்:
பாடல் 1

`பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில் குளிப்போம்.
பகல் புணரோம்; பகல் துயிலோம்; பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;
இரண்டடக்கோம்; ஒன்றை விடோம்; இடதுகையிற் படுப்போம்.
மூலஞ்சேர் கறினுகரோம்; மூத்ததயிர் உண்போம்.
முந்நாளில் சமைத்தகறி அமுதெனினும் அருந்தோம்.
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்,
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
பொருள்
பாலுணவை உண்ணுவோம்! எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும், வாசக் குழலினை உடைய பொது மகளிரோடும் உடல் உறவு கொள்ள மாட்டோம்; காலை இளம் வெயிலில் அலைய மாட்டோம். மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம்; படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம். முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்றிருப்பினும், அதனை மறுநாள் உண்ணுதல் செய்ய மாட்டோம்; பசிக்காத போது உணவருந்தி, உலகமே பரிசாகக் கிடைப்பதெனினும் ஏற்க மாட்டோம்; பசித்த பொழுது மட்டும் உண்ணுவோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்;
பாடல் 2
`உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்;
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய காயருந்தல் செய்யோம்;
நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயில்வோம்;
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
பொருள்
ஒரு நாளைக்கு இரண்டு பொழுது மட்டும் உண்போம்; இரவில் நன்றாகத் தூங்குவோம்; பகலில் தூங்க மாட்டோம்.பெண்ணின்பால் உடலுறவை மாதம் ஒரு முறை மட்டும் வைத்துக் கொள்வோம். உணவு உண்ணும் போது தாகம் அதிகம் இருப்பினும் இடையிடையே நீரினைப் பருக மாட்டோம்; வாழைக்காயில் பிஞ்சுக்காய்களையே கறி சமைத்து உண்ணுவோம்; முற்றிய காய்களைக் கறி சமைத்து உண்ண மாட்டோம்; உண்டவுடனேயே சிறிது தூரம் நடத்தலாகிய பயிற்சியைச் செய்வோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்.
பாடல் 3
`ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருக்கால் பேதியுரை நுகர்வோம்;
தேறுமதி ஒன்றரைக்கோர் தரநசியம் பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம் சவலிவிருப் புறுவோம்;
வீறுசதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்;
விழிகளுக் கஞ்சனம்மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியில் முகரோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
பொருள்
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தை உட்கொள்வோம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தை உட்கொள்வோம்; ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய நோய் வராமல் தடுப்போம். வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்; மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இடுவோம்; மணம் வீசும் கந்தம், மலர் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகர்தலைச் செய்ய மாட்டோம். இவ்வாறு மருத்துவ விதிமுறைகளை நாம் மேற்கொண்டொழுகினால் எமன் நம்மை நெருங்க விரும்ப மாட்டான்; நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.

2 comments:

  1. தமிழர்கள் மிகச்சிறந்த வரலாற்றினை கொண்ட்ருக்கிறார்க்ல். பெருமிப்படத்த்க்கது

    ReplyDelete
  2. MIGAVUM NALLA INFORMATION.EPPADI AROKIYAMAGA VALALAM ENPATHU PATRI MIGAVUM ARUMAIYAGA SOLLAI IRUKKIRARGAL SITHTHARKAL

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...