Search This Blog

Thursday, May 03, 2012

மாமனார் இல்லாத புகுந்த வீடு



மாமனார் இல்லாத புகுந்த வீடு, பெரும்பாலும் பாதுகாப்பு இல்லாத வீடாக கருதப்படுகிறது. புதிதாக வாழ வரும் ஒரு மருமகளுக்கு, மாமியாரிடமிருந்து தாயின் நேசம் கிடைக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக மாமனாரிடம் இருந்து ஒரு தந்தையின் நேசம் கிடைக்கும் என்று பெண்கள் நம்புகிறார்கள்.
புரிந்து கொள்ளும் தன்மை, விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை ஆகிய இரண்டும் பெரும்பாலும் மாமனார்களிடம் இருக்கிறது. பிறந்த வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்குள் நுழையும் ஒரு பெண்ணின் மனநிலையை மாமனாரால் புரிந்து கொள்ள முடியும். காரணம் வெளி உலக அனுபவம் மாமியாரைவிட மாமனாருக்கு அதிகம்.
குடும்பத்தை பராமரிப்பது, கணவருக்கு சேவை செய்வது ஆகியவைதான் பெண்களின் கடமை என்று இப்போதும் நினைக்கிறார்கள். கடமைகளை மட்டுமே வாழ்க்கை என்று நினைத்து வாழும் பெண்களுக்கு தங்களுடைய ஆசைகள், லட்சியங்களைப் பற்றி கனவு காணக்கூட உரிமையில்லாத சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படிப்பட்ட பெண்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவர்களுக்காக குரல் கொடுக்க ஒரு ஜீவன் தேவை.
எப்போதும் மகனது தேவைகளை மட்டுமே கருத்தில் கொள்ளும் அம்மாக்களுக்கு மருமகளின் கனவுகள், உரிமைகள் எல்லாம் இரண்டாம் பட்சம்தான். இந்த நிலையில் மாமனார் இல்லாத வீடு பெண்களுக்கு ஒரு குறையுள்ள வீடுதான்.
தவறு செய்யும் நேரத்தில் காப்பாற்ற அக்கறைகொண்ட ஒருவரின் பாதுகாப்பு வேண்டும். பரிந்து பேசவும், அவள் பக்கம் உள்ள நியாயத்தை எடுத்துக் கூறவும், அறிவு முதிர்ச்சியும், அனுபவமும் உள்ள ஒரு நபர் தேவை. இந்த முக்கிய இடத்தை நிரப்புவது மாமனார்தான்.
மகன்- மருமகள் இடையில் ஏற்படும் சிறு பூசல்களுக்கும், மனஸ்தாபங்களுக்கும் மாமனார் தான் மருந்தாக இருப்பார். மகனை கண்டிக்கும் சக்தி மாமனாரைத் தவிர வேறு யாருக்கு இருக்க முடியும்? மண வாழ்க்கையில் ஏற்படும் கசப்புகளை மனம் விட்டு யாரிடமும் சொல்லிவிட முடியாது. சொன்னாலும் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. அப்போதெல்லாம் மாமனார் இல்லாத குறை மருமகளை வாட்டும்.
கணவன்-மனைவிக்குள் ஏற்படும் கருத்து வேறுபாடுகளை பக்குவமாக களைய அனுபவ முதிர்ச்சி தேவை. மருமகள் மீது குறையிருந்தாலும் எப்பாடுபட்டாவது வாக்குவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து இருவரையும் சேர்த்து வைக்கும் உன்னத பணியை மாமனாரால் மட்டுமே செய்ய முடியும் என்பது பல பெண்களின் கருத்து.
மாமியாருக்கும்- மருமகளுக்கும் இடையே ஏற்படும் தகராறுகளை சரிசெய்யவும் மாமனாரால் தான் முடியும். தனது மனைவியை அடக்கும் தைரியம் அவரிடம் மட்டுந்தானே இருக்க முடியும்!
மீனாவுக்கு மாமனார் இல்லை. புகுந்த வீட்டுக்குச் சென்ற புதிதில் அது அவ்வளவு பெரிய குறையாக அவளுக்குத் தெரியவில்லை. தன் தோழியின் வாழ்க்கையில் ஏற்பட்ட பல இடர்பாடுகளை அவளுடைய மாமனாரே தீர்த்து வைத்ததாக அவள் கூறிய போதுதான், மாமனாரின் பெருமை அவளுக்கு புரிந்தது.
அவளுடைய தோழிக்கும் அவள் கணவருக்கும் நடக்க இருந்த விவாகரத்தை போராடி நிறுத்தியது அவளுடைய மாமனார் என்று தெரிந்ததும், மீனாவின் மனதில் ஒரு மெல்லிய ஏக்கம் பிறந்தது. பல நேரங்களில் குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களை யாரிடமும் சொல்லவும் முடியாமல் தீர்வு காணவும் வழி தெரியாமல் கலங்கி நிற்கும்போது அவளுக்கு மாமனாரின் நினைவு வரும்.
அந்த மருமகள், சில வருடங்களில் அம்மா அந்தஸ்தை அடைகிறாள். அவளது குழந்தை களை உலக ஞானத்திற்கு தக்கபடி வளர்க்கவும், அன்பால் அரவணைக்கவும், தேவைப்படும்போது கண்டிக்கவும் ஒரு தாத்தா தேவைப்படுகிறார். அந்த தேவையை நிறைவேற்றவும் ஒரு மாமனார் அவசியப்படுகிறார். வளரும் பிள்ளைகளை செம்மைப்படுத்த நல்ல அறிவுரைகளை கூறி ஒழுக்கத்தை போதிக்க, அவர்களுக்கு ஒரு தாத்தா தேவைப்படுகிறார். ஒரு மனிதரின் அறிவும், ஆழ்ந்த அனுபவமும் அவரது முதுமைப் பருவத்தில்தான் அவரது குடும்பத்தினருக்கு பயன்படுகிறது.
இளமையான அரசனுக்கு முதுமையான அமைச்சர் ஒருவர் இருந்தால் தான் நாடு வளம் பெறும் என்பது முன்னோர் வாக்கு. அப்படி ஒரு குடும்பத்தை வழிநடத்த மாமனாரின் அறிவுரை வேண்டியிருக்கிறது. தன் மகனுக்கு எது தேவை எது தேவையில்லை என்பதில் ஆழ்ந்த அறிவு தந்தைக்குத் தான் அதிகம் இருக்கிறது.
ஒரு நல்ல குடும்பத்தை உருவாக்குவதில் மாமனார் பெரும் பங்கு வகிக்கிறார். குடும்பத்தில் புதிதாய் பிரவேசிக்கும் ஒரு பெண்ணை மற்றவர்கள் புரிந்து கொண்டு நேசிக்கும் மனப்பக்குவம் வரும்வரை அந்தப் பெண்ணை பாதுகாக்கும் பெரும் பொறுப்பு மாமனாருடையது. மாமனார் இல்லாத பல குடும்பங்களில் பெண்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் இருப்பதாக உணர்கிறார்கள். மருமகளுக்கு புகுந்த வீட்டில் மிக முக்கிய நபர் மாமனார். அவர் இல்லாத வீடு காவலாளி இல்லாத தோட்டம் போன்றது.

1 comment:

  1. Good Post boss..
    Though we cannot generalize the nature of humans, it is good to visualize an ideal situation.

    Psychologically, the absence of her husband makes a mother-in-law to be more possessive with her son and this is a major problem in many families..So, a women living with both in-laws are almost in that ideal family.

    Keep going! :-)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...